ஒரு கொசுவின் கதை

பெர்னாண்டோ ஸோரன்டினோ ஸ்பானிய எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மாயமும் விசித்திரமான நிகழ்வுகளும் கொண்டவை. அன்றாட வாழ்க்கையினை இத்தனை நுட்பமாக, குறிப்பாக அதன் அபத்த நிகழ்வுகளை துல்லியமாக யாரும் எழுதியதில்லை. அவர் கொசுவைப் பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

கொசுவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்று தான் எவருக்கும் தோன்றும். வேறு எவராது இந்தக் கதையை எழுதியிருந்தால் இரண்டு வரிகளுக்கு மேல் எழுத இயலாது. ஆனால் ஸோரன்டினோ எத்தனை அழகாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார். கதையை விவரிப்பவர் ஒரு முதியவர். கதையின் தலைப்பு ஒரு தீர்வுக்கான காத்திருப்பு. இந்தக் கதையை தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் எம்.எஸ். ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்ற நூலில் இந்தக் கதை உள்ளது

நான் ஒரு கொசுவின் அதிகாரத்திற்குப் பட்டிருக்கிறேன் என்று கதை துவங்குகிறான். கொசுவை மிக மரியாதையாக அவர் என்றே கிழவர் அழைக்கிறார். தன் மீது கொசு மிதமான அதிகாரத்தைத் தான் செலுத்துகிறது சட்டப்பூர்வமாக தான் நடந்து கொள்கிறது என்கிறார். இந்தக் கேலியினுள் ஒளிந்திருப்பது இயலாமை. தவிப்பு. தன்னால் ஒரு சிறிய கொசுவை ஒன்றுமே செய்ய இயலவில்லை. அது சுதந்திரமாக தன் வீட்டில் பறந்து திரிகிறது. தன்னைக் கடிக்கிறது. தப்பிப்போய்விடுகிறது. அதை ஒரேயொரு முறை கொல்ல முயன்று கிழவர் தோற்றுப்போயிருக்கிறார். அதன்பிறகு கொசுவுடன் வாழ ஆரம்பித்துவிட்டார்.

அதிகாரத்திற்கு கீழ்படுவது அவருக்கு வழக்கமானது. ஒரு பூனையின் அறிவு கூட இல்லாத பலர் தன்னை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்று அவரே ஒரு வரியில் சொல்கிறார். ஆகவே கொசுவிடம் அடங்கிப் போவது அவருக்கு புதிய விஷயமில்லை.

அந்த வீட்டில் கொசுவிற்கென ஒரு இடமிருக்கிறது. அது சுவரில் தொங்கும் பழைய ஒவியம். அதில் தான்கொசு ஒளிந்து கொண்டிருக்கிறது. ஸோரன்டினோ கொசுவின் பசியினை, அது சாப்பிடும் முறையை, நீங்கள் விரும்பினாலும் மாற்றிக் கொள்ளாத அதன் உணவு முறையை பகடியாக எழுதிப் போகிறார். இதில் அழகான வரியொன்று பளிச்சிடுகிறது

அதிகாரத்திலிருப்பவர்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்வதில் உள்ள த்ரிலே தனி தான்.

இது கொசுவை குறிக்கும் விஷயமில்லை. ஆனால் இந்த ஆர்வம் கொசுவின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீதும் குவிகிறது. கொசு எப்படி உறங்குகிறது. பகலில் என்ன செய்கிறது என்பதை எல்லாம் கிழவர் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறார். கொசுவைப் பற்றி இவ்வளவு தெரிந்த போதும் அதைக் கொல்ல முடியவில்லை.

நம் வீட்டில் நம் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் ஒரு உலகம் இயங்கி வருகிறது. ஒரு எலி உங்கள் பேச்சைக் கேட்பதில்லை. ஒரு கரப்பான பூச்சி உங்களை ஏமாற்றி உங்களுடன் வாழுகிறது. வண்டுகள் தன் இஷ்டம்போல உணவுப்பொருளை சாப்பிடுகின்றன. பூனைக்கு எதையும் திருடிக் கொள்ளும் உரிமையிருக்கிறது.

இந்தக் கதையில் வரும் கிழவர் கொஞ்சம் கொஞ்சமாக கொசுவோடு இருந்த பகையை விலக்குகிறார். வளர்ப்பு பிராணியைப் போல கொசுவை நடத்துகிறார். அதற்காக உணவு கொண்டு வந்து வைக்கிறார். அது சாப்பிடுவதை ஒளிந்திருந்து பார்க்கிறார். இந்தக் கதையின் வழியே கொசுவைப் பற்றி மட்டுமில்லை. ஒரு கொசுவைப் போல தான் அந்த முதியவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது புலப்படுகிறது. அவருக்கு யாருமில்லை. அவர் நீண்டகாலமாக தனியே வசிக்கிறார். தனிமை உச்சமடையும் போது சிறிய பொருட்கள். சிறிய உயிர்கள் மீது நெருக்கம் உருவாகிவிடுகிறது. ஒருவகையில் அவர் கொசுவைப் பற்றி பேசுவது தன் அலுவலக உயரதிகாரி பற்றி பேசுவது போலவே இருக்கிறது.

அவரது ஒரே நம்பிக்கை கொசு தானே செத்துவிடும் என்று தான். ஆனால் நித்யஜீவி போல அந்தக் கொசு வாழ்ந்தபடியே இருக்கிறது. அப்போது அவருக்கு இரண்டு சந்தேகங்கள் எழுகின்றன. தன் வீட்டில் இருப்பது ஒரு கொசுவல்ல. அது இறந்தவுடன் இன்னொரு கொசு அதன் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. ஆகவே தான் செத்துக்கிடந்த கொசு ஒன்றை ஒரு நாள் காலையில் பார்த்த நினைவு வருகிறது. இரண்டாவது எண்ணம் பலம் பொருத்திய ஒரேயொரு கொசு எப்போதுமிருக்கிறது பலமற்ற கொசுகள் அது போலவே நடித்துக் கொண்டு வாழுகின்றன. இந்த போலிக் கொசுகள் முந்தைய கொசுவினைப் போல தோற்றம் கொண்டிருப்பதால் அதன் இடத்தை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.

இந்த சந்தேகம் அவரைக் குழப்பமடையச் செய்கிறது. ஒரு கொசுவின் அதிகாரத்தின் கீழ் இருந்தபடி ஒரு தீர்விற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கதை முடிகிறது

சிறுகதை எழுதுவதற்கு நிறைய நிகழ்ச்சிகள். அனுபவங்கள் தேவை என்பதிலிருந்து மாறி கதையை ஒரு உருவகம் போலவும் பகடியான சிந்தனைகளின் தொடர்ச்சி போலவும் துண்டிக்கபட்ட நிகழ்வுகள். விநோதமான விவரிப்பு மூலமும் புதிய தளத்திற்கு ஸோரன்டினோ கொண்டு செல்கிறார்.

இதில் என்ன இருக்கிறது என ஒருவாசகர் நினைக்க கூடும். ஆனால் ஸ்பானிய அரசியல் சூழலையும் அதிகாரப் போட்டியினையும் அறிந்து கொள்ளும் போது கதை புதிதாக ஒளிரத் துவங்குகிறது. ஒருவேளை இந்த பின்புலம் தெரியாதவர் கூட கொசு கூட ஒருவரை அதிகாரம் செய்யமுடியும் என்பதை உணர முடியும் தானே.

ஸோரன்டினோ இன்னொரு வரியும் எழுதுகிறார்

தன் மீது கொசு இருபது ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வருகிறது. அந்த கொசுவிற்கு சிரஞ்சீவியாக என்றும் அதிகாரம் தொடர வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. என்கிறார்.

ஒரு கொசுவின் உயிர்வாழ்க்கை ஐந்தாறு நாட்கள் மட்டுமே பெண் கொசுவாக இருந்தால் நூறு நாட்கள் வரை உயிர்வாழும் என்கிறார்கள். ஆனால் இந்தக் கதையில் வரும் கொசு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. சாமானியர்களின் மீது செலுத்தப்படும் அதிகாரத்தினைப் பற்றி பேசுவது போல கதை வளர்கிறது.

கதையை வாசிக்கும் போது செகாவின் பாணியில் அமைந்த கதையிது என்றே தோன்றியது. ஒரே வேறுபாடு செகாவ் இவ்வளவு நுணுக்கங்களை எழுத மாட்டார். நிறைய உரையாடல்கள் இருக்கும்.

இளம் சிறுகதை ஆசிரியருக்கு ஸோரன்டினோவிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது

••

••

0Shares
0