‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை

எளிமையை விரும்புபவர்களும் எளியோரை நேசிக்கத் தெரிந்தவர்களும் நிச்சயமாக வலியோர்தான். எளியோரின் உலகைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக நம்மிடம் வாதாடும் மூத்த வழக்குரைஞராகத்தான் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ஆதலினால்’ என்ற இந்தப் புத்தகத்தின் வழியாக எனக்குத் தெரிகிறார்.

அனைவரையும் தன்னில் ஒருவராகக் காணும் கருணைமிக்கவர்களுக்கே அவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் தகுதியும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை எளியவர்கள்! அத்தனை பேரையும் நாம் ஏதாவது ஒரு வகையில் புறக்கணித்துத்தான் வாழ்கிறோம். ஆனால், இந்த எழுத்தாளர் அத்தனைபேரையும் தன் நெஞ்சில் சுமந்தல்லவா நடமாடுகிறார்!.

இந்த ‘ஆதலினால்’ கட்டுரைத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. இவற்றின் வழியாகத் ஒவ்வொரு தனிமனிதரையும் சுயவிமர்சனம் செய்துகொள்ள வைத்துவிடுகிறார் எழுத்தாளர்.

எறும்புகளின் தனியுலகம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? எறும்பு என்பது நம்மைப் பொறுத்தவரையில் நம்மைவிட அது பலகோடி மடங்கு சிறியதொரு உயிர். அதனாலேயே நாம் அதனைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், அந்த எறும்புகளை உற்றுநோக்கினால் நாம் நமக்குரிய அரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் எழுத்தாளர். 

எறும்புகள் தன்னால் தூக்கிச் செல்ல முடிந்ததைப் போல பல மடங்கு எடையைத்தான் எப்போதும் இழுத்துக்கொண்டு போகின்றன. அது பேராசையல்ல. மாறாக உழைப்பின் மீதான பெரிய நம்பிக்கை. தன்னால் செய்ய இயலும் என்ற உத்வேகம்.

எறும்புகளை முன்வைத்து மனிதர்களின் மனவோட்டத்தையும் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே இட்டுக்கொள்ளும் மனத்தடைகளையும் விளக்கியுள்ளார் எழுத்தாளர்.

எறும்பு தனக்கான பாதையை யாராவது அமைத்துத் தருவார்கள் என்று காத்திருப்பதில்லை. தன் பாதையை தானே உருவாக்கிக் கொள்கிறது. எல்லாத் தடைகளையும் தாண்டி அது தன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது. வேறு எந்த உயிரினத்தையும்விட அதிக உயிரிழப்பைச் சந்திப்பது எறும்புகள்தான்.

பொதுவாகவே எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளில், குறிப்பாகக் கட்டுரைகளில் மனிதர்களைப் பற்றிய மதிப்பீடு இலைமறைகாயாக இருக்கும்.

மனிதர்கள் எப்போதுமே கற்பனையான பயத்திலும் உலகம் தனக்கு மட்டுமேயானது என்று அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களைப் பற்றிய இந்த மதிப்பீடு எழுத்தார் மனிதர்களின் மீதுகொண்ட எள்ளல் அல்ல; இரக்கம்.

பிரச்னைகளும் சிக்கல்களும்தான் எப்போதும் நம் நினைவில் பதிந்து போயிருக்கின்றன. இயல்பாக நடைபெறும் எதையும் நாம் சுலபமாக மறந்து போய்விடுகிறோம்.

இந்தப் புத்தகத்தின் வழியாக நாம் எண்ணற்ற எளிய மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் ஒருவகையில் நமக்கு அரிய மனிதர்கள்தான். ஒவ்வொரு நாளும் நாம் அவர்களைக் கடந்துதான் செல்கிறோம்.

மகப்பேறு பார்க்கும் செவிலியர்கள், உணவகத்தின் சமையலறையில் இருக்கும் சமையற்காரர்கள், டீக்கடையில் இருக்கும் டீமாஸ்டர்கள், இரவுநேரத்தில் நகரைக் காவல்காக்கும் கூர்க்காக்கள், சிற்பிகள், இந்தியாவுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழும் கிராமத்து மக்கள், மூத்த யாசகர்கள், உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத சிறுகொடைஞர்கள், எல்லோராலும் கைவிடப்பட்டு இரவில் தூங்க இடமற்று நகரில் அலையும் எளியோர், பொதுநலத்துக்காக மட்டுமே வாதாடும் மூத்த வழக்குரைஞர், இயற்கை உபாதையைக் கழிக்கத் தடுமாறும் மாற்றுத்திறனாளர்கள், முடித்திருத்துநர்கள், கல்லறைகளைப் பராமரிப்பவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புத் தேடும் குழந்தை நட்சத்திரம், நகரில் உள்ள தென்னைமரங்களை விரும்பிப் பேணும் கிராமத்தார்கள், திரையிசைப்பாடல்களுக்குப் பின்னணி இசையை மட்டும் வாசிக்கும் இசைஞர்கள், புகைப்படத்தொழிலாளர்கள், குடியை மறக்க முடியாத குடியர்கள், புத்தகங்களைச் சேமிப்பர்கள், சாலைப் பணியாளர்கள், பூக்களையும் பறவைகளையும் ரசிக்கத் தெரியாத ரசனையற்ற மனிதக் கூட்டங்கள் இவர்களைப் பற்றியும் இவர்களோடு தொடர்புடையவர்களைக் குறித்தும்தான் இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர். 

நெடுவழிப்பயணத்திலோ அல்லது பகட்டுக்காகவோ நாம் உணவகங்களுக்குச் செல்ல நேர்கிறது. அங்கு நமக்கு வழங்கப்படும் உணவின் சுவையை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். ஆனால், அந்த உணவைச் சமைத்துத் தந்தவர்களைப் பற்றி நாம் எந்த வகையிலும் சிந்திப்பதே இல்லை.  

உணவகங்களோடு நமக்குள்ள உறவு உணவருந்தும் மேஜையோடு முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னால் உள்ள சமையல் அறையும் அதன் உள்ளே இயங்கும் மனிதர்களும் அவர்களின் சுகதுக்கங்களும் ஒருபோதும் நாம் அறியாதவை.

சுவையான உணவினைத் தந்த அவர்களை நாம் ஒருமுறையும் பாராட்டியதே இல்லை. ஆனால், அந்த உணவில் சிறிதேனும் சுவை மாறுபட்டாலோ அல்லது குன்றினாலோ நாம் அதைச் சமைத்தவர்களையும் அந்த உணவகத்தையும் நேரடியாகவோ அல்லது நம் மனத்திற்குள்ளாகவோ திட்டித் தீர்த்துவிடுகிறோம்.

ஹோட்டல்களில் உள்ள பெயர்ப் பலகையில் இட்லி, தோசை, சப்பாத்தி என்று நூற்றுக்கணக்கான உணவின் பெயர்கள்  இடம்பெறுகின்றன. ஆனால், அதன் ஒரு மூலையில்கூட அந்த உணவைச் சமைக்கின்றவரின் பெயர் இடம் பெறுவதில்லை. ஏன் இந்த ஓர வஞ்சகம்? பிரபலமான நட்சத்திர உணவங்கள் தங்களின் சமையற்காரர் யார் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கின்றன. அதே ருசியோடு உணவு தயாரிக்கும் நமது சமையற்கலைஞர்கள் எவருக்கும் ஏன் அந்த மரியாதைகள் கிடைப்பதில்லை. நியாயமாக அவர்களுக்குக் கிடைக்க  வேண்டிய சிறிய அங்கீகாரம் அது. அதைத் தருவதற்குக்கூட எதற்காக மறுக்கிறார்கள். உணவை ருசித்துவிட்டு, ‘நன்றாக இருக்கிறது என்று பாராட்ட நாம் முன்வருவதில்லை. அதே நேரம் சற்றே சுவை மாறியிருந்தாலும் நமது கோபம் தலைக்கேறிவிடுகிறது. ஏன் இப்படி நம்மைப் பழக்கி வைத்திருக்கிறோம்?.

இரவில் நமது தூக்கம் களையாத வகையில் நமது உடைமைகளையும் உயிரையும் பாதுகாக்கும் இரவுக்காவலர்களையும் கூர்க்காக்களையும் நாம் என்றேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? கூர்க்காவுக்கு மாதந்தோறும் நாம் பணத்தரும்போது நமது மனநிலை எத்தகையதாக இருக்கிறது? முழுமனத்தோடுதான் அந்த இருபது ரூபாயை நாம் அவர்களுக்குத் தருகிறோமோ?

இன்றைக்கும் பின்னிரவில் தெருவில் நடந்துசெல்லும் கூர்க்காவின் ஓசை கேட்கிறது. குளிருக்குத் தலையில் மஃப்ளர் அணிந்தபடியே அதே மனிதன் சாலையில் சென்றுகொண்டிருக்கிறான். மழையோ, குளிரோ, அவன் கால்கள் முடிவற்று அலைந்து கொண்டேயிருக்கின்றன. அவன் விசில் சப்தம், ‘உறக்கமற்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. அவன் விழிப்பு என் உறக்கத்திற்குத் துணையாகப் பாதுகாப்பையும் நிம்மதியையும் தருகிறது.

மாற்றுத்திறனாளர்களுக்கு நாம் செய்யும் சேவைதான் என்ன? நாம் அவர்களுக்குத் தரும் மரியாதை என்ன? எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட உயிரினமா மாற்றுத்திறனாளர்கள்?

ஸ்டீவ் ஒண்டர் என்ற பிரபலமான மேற்கத்திய இசைப்பாடகர் இருக்கிறார். அவர் பார்வையற்றவர். அவரிடம், இவ்வளவு பிரம்மாண்டமான உலகைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, அவர் எனக்கு இடி, மின்னல், மழை, வெள்ளம், பூகம்பம் என எதைப் பற்றியும் பயமில்லை. ஆனால், என அடுத்த வீட்டில் வசித்துக்கொண்டு இதுவரை என்னை ஒருமுறைகூட அறிமுகம் செய்துகொள்ளாமல் வசிக்கிறானே அந்த மனிதனைக் கண்டுதான் நான் அதிகம் பயப்படுகிறேன் என்று சொன்னார். அதுதான் இன்றைய நிஜம்.

‘புத்தகங்களை ஆயுதங்கள்’ என்று கூறுகிறார்கள். அதனால்தானோ என்னவோ புத்தகங்களைக் கையில் வைத்திருப்போரையும் புத்தகங்களைச் சேமிப்போரையும் கண்டு இந்தச் சமுதாயம் அச்சம் கொள்கிறதோ? அவர்களிடமிருந்து புத்தகங்களை அகற்றுவதன் வழியாகவே இந்தச் சமுதாயம் தன்னுடைய பாதுகாப்பை உறுதிசெய்துகொள்கிறதோ?

 “புத்தகங்களோடு உள்ள உறவு மிக அந்தரங்கமானது. அது காரணம் சொல்லிப் புரியவைக்க முடியாதது. மீன் தொட்டிக்குள் நிசப்தமாக நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைப் போலச் சொற்கள் புத்தகங்களுக்குள் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதன் இயக்கம் நம் கண்கள் அறிவதில்லை. மாறாக மனத்தால் உணரப்படக்கூடியது. வாசிக்கத் துவங்கும் வரை புத்தகம் சலனமற்றது. ஆனால், புத்தகத்தினுள் பிரவேசித்த பிறகு அது பெரும் ஆரண்யம் என விரிந்து செல்லத் துவங்குகிறது.

‘புத்தகப்புழு’க்களாக வாழும் எத்தனையோ அறிவாளர்களை இந்தச் சமுதாயம் பிழைக்கத் தெரியாதவர்களாகவும் சோம்பேறிகளாகவும்தான் கருதுகிறது. அவர்களுக்கும் அவர்கள் சேமித்த புத்தகங்களுக்குமான உறவை இந்தச் சமுதாயம் ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை.

புத்தகங்கள் வெறும் காகிதங்கள் மட்டுமல்ல. அவை நினைவுகள். வாழ்ந்தும் அறிந்தும் கண்ட நினைவுகள் எழுத்துருவம் கொண்டிருக்கின்றன. எல்லாப் புத்தகங்களும் பேசக்கூடியவை. யாரோடு எப்போது எந்த மனநிலையில் என்பதுதான் சொல்லி விளக்க முடியாதது.

‘நம்மைச் சுற்றித்தான் இந்த உலகம் இருக்கிறது’ என்ற தவறான கண்ணோட்டமே மனிதனை இறுமாப்புக்கொள்ளச் செய்கிறது. ‘இந்தப் பெரிய உலகில் தானும் ஓர் உயிரி’ என்று நினைக்கும் மனிதர்களால்தான் இந்த உலகில் உள்ள எண்ணற்ற உயிரினங்கள் காக்கப்படுகின்றன.

நாம் செய்ய வேண்டியதும் விரும்புவதும் நம் கவனத்தை, நம்மைச் சுற்றிய இயற்கையை சிற்றுயிர்களைக் கவனிப்பதும் வளர்த்து எடுப்பதுமேயாகும். நம்மைச் சுற்றிய வாழ்வு கவனிப்பார் அற்றுக்கிடக்கிறது. நாம் எதிர்காலத்தின் சாலையில் பரபரப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். முரணாக இல்லையா?

நகர்மயமாதலின் பக்கவிளைவுகளுள் ஒன்று குறுக்கப்பட்ட குழந்தைமனம். குழந்தைகளின் உலகத்தைச் சிதைக்கவோ, குறுக்கவோ நமக்கு என்ன உரிமை இருக்கிறது? குழந்தைகளின் உலகம் குறுக குறுக, அவர்களின் ஆளுமையும் குறுகத்தான் செய்யும். 

ஒருவகையில் கண்ணாடித்தொட்டியில் வளர்க்கப்படும் மீன்களைப் போலத்தான் மாநகரத்தில் வளரும் குழந்தைகளும் என்று தோன்றியது. என்ன தெரிந்திருக்கிறது அவர்களுக்கு? பாதுகாப்பான வீடு, உணவு, சிறிய இயக்கம். இதை அன்றி வேறு அவர்கள் என்ன அறிந்திருக்கிறார்கள்?

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தீராத தாகம் கொண்ட பயணி என்பதை யாவரும் அறிவோம். எல்லாவற்றையும் வரையறைகளுக்கும் எல்லைகளுக்கும் உட்பட்ட இந்தச் சிறு வாழ்வினூடாகவே அனுபவித்தறிந்துவிட வேண்டும் என்ற மாறா வேட்கையோடு இந்த உலகில் அலைந்துகொண்டிருக்கும் தனித்துவமான மனிதர்களுள் அவரும் ஒருவர். இத்தகைய பயணிகளுக்குத் தங்குமிடம், உணவு குறித்த கவலையிருந்தால் அது அவர்களின் பயணப்பாதைக்குத் தடையாகவே இருக்கும்.

எழுத்தாளர் தன்னுடைய பயணத்தின் வழியாகத் தானறிந்த ‘கொடுப்போர்’ பற்றியும் ‘பெறுவோர்’ பற்றியும் சில கட்டுரைகளில் சிறுகுறிப்புகளின் வழியாக நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ஒரு கட்டுரையின் வழியாகக் ‘கொடுப்போர்’, ‘பெறுவோர்’ ஆகிய இருநிலையாளர்களின் மனநிலைகளைத் தன்னனுபவத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

யாசகம் தருவது எளிதானது. ஆனால், யாசகம் கேட்பது எளிதானதில்லை. அதுவும் பசித்த வேளையில் என்ன செய்வது என அறியாமல் தடுமாறும்போது யாசகம் கேட்பதைப் போல நடுக்கமடையும் செயல் வேறு எதுவுமில்லை. ஆனால், என் பயண அனுபவத்தில் நான் கண்டுகொண்டது யாசிப்பதுதான் நம்மைப் பற்றிய அடையாள நீக்கத்திற்கான முதல்படி. நம்மைப் பற்றி நாமாக வளர்த்துக்கொண்டுவிட்ட பிம்பம்தான் எதையும் யாசிக்கத் தடையாக உள்ளது. பிக்குகளும் துறவிகளும் யாசகம் கேட்பதன் வழியே தாங்கள் சுய அகந்தையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொன்று உணவு குறித்த அதீத முக்கியம் அவர்கள் கவனத்தைவிட்டுப் போய்விடுகிறது. எதையும் தனதாக்கிக்கொள்ளும் மனப்பாங்கு விலகிப் போகிறது.

ஒரு தட்டில் சூடான பாலும் கையில் ரொட்டித் துண்டுமாக அந்தப் பரதேசிகளுடன் உட்கார்ந்திருந்தபோது மனம் ஏதோவொரு சுதந்திரத்தை அனுபவித்தது. துறவு வாழ்க்கை என்பத ஆன்மிக அனுபவம் இல்லை. மாறாக இதுவரை நாம் கொண்டிருந்த பற்றில்லாமல் இதே வாழ்வை இன்னும் எளிமையாகவும் முழுமையாகவும் வாமுடியும் என்பதற்கான நிலை என்றே அப்போது புரிந்தது.

பசுமைப்புரட்சிக்கும் நகர்உருவாக்கத்துக்கும் முதற்பலியாவது எளிய கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைதான். அவர்களின் வாழ்க்கை சிதையும் முறைகள் எவையுமே நாமறியாதவைதான்.

அணைக்கட்டுகளில் உள்ள தண்ணீரின் கீழே மூழ்கிப்போன கிராமங்களும் அந்த அணையை உருவாக்குவதில் தன் உயிரை இழந்த மனிதர்களின் துயர வாழ்வும் வேலை செய்து இன்று அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத கிராம மக்களின் அவல நிலையும் காணும்போது பிரம்மாண்டத்தின் பின்னால் யாரோ சில மனிதர்களின் கண்ணீர் கசிந்து கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

பொதுமக்களின் புறப்பார்வையும் அகப்பார்வையும் முழுக்க முழுக்க வணிகநோக்கிலேயே இருப்பதுதான் எல்லாவற்றுக்குமான சிக்கல். எளியவற்றின் மீதான நமது அக்கறையின்மைக்கு அதுவே அடிப்படைக் காரணம்.

எங்காவது சிதறிக்கிடக்கும் வேப்பம்பூவினைக் கையில் எடுத்துப் பாருங்கள். என்ன ஓர் அற்புதம்! என்னவொரு வாசனை! என்று புரியும். ஆனால், ரோஜாவின் முக்கியம் ஏன் வேப்பம்பூ பெறாமல் போனது? ஒரே காரணம் பயன்பாடு மட்டும்தான். நாம் எதையும் பயன்பாட்டின் வழியாக மட்டுமே தீர்மானிக்கிறோம். உடனடியான பயன்பாட்டிற்கு, வணிக முயற்சிகளுக்கு ஒத்துப் போகாத அல்லது முடியாத பொருட்களின் மீது நாம் அக்கறை காட்டுவதேயில்லை. 

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஏறத்தாழ நூறு புத்தகங்கள் எழுதியவர். அவர் தொடாத தளங்களே இல்லை என்று கூறும் அளவுக்குப் பலதரப்பட்டவற்றை எழுத்தாக்கியிருக்கிறார். சொற்பொழிவு, கேட்பொலி, காணொலி எனப் பல ஊடகங்களின் வழியாகத் தன்னுடைய அனுபவங்களை இந்த உலத்துக்குப் பகிர்ந்து வருகிறார். உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

ஏறத்தாழ நாற்பதாண்டுகள் இலக்கியமும் எழுத்துமாக வாழ்ந்துவரும் அவருக்குரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் இந்த ‘வாசகச் சமுதாயம்’ அவருக்கு வழங்கிவருகிறதா? உலக அளவில் இவரைப் போன்று வாழும் எத்தனையோ படைப்பாளருக்கும் இந்த உலகம் உரிய கைம்மாறு செய்துவிட்டதா?

பின்வரும் மூன்று பத்திகளையும் இந்த எழுத்தாளர் வெவ்வேறு சூழலில், பிறிதொன்றை நமக்கு உணர்த்துவதற்காகவே எழுதியிருக்கிறார். ஆனால், இந்த மூன்றுமே அவரது எழுத்துப் பணிக்குப் பொருத்தமாகவே இருக்கிறது.

செய்த வேலைக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காமல் போவதைப் போல வேறு துயரம் என்ன இருக்கிறது? அதை வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாது. அதே நேரம் பரவாயில்லை என்று முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

உண்மையில், தன்னை மற்றவர்கள் அடையாளம் காணவும் அங்கீகாரம் செய்யவுமே மனித உழைப்பின் பெரும்பகுதி செலவிடப்படுகிறது. எல்லாக் கலைகளும் யாரோ ஒருவரின் உற்சாகமான வரவேற்பிற்கும் அங்கீகாரத்திற்கும் புரிந்துகொள்ளலுக்குமே காத்திருக்கிறது. அது கிடைக்காதபோது மிஞ்சுவது கசப்பும் வெறுப்பும் மட்டுமே.

அடையாளம் கண்டு பாராட்டவும்  அங்கீகரிக்கவும் செய்த வேலைக்கு உரிய மரியாதை தருவதையும் கட்டாயம் செய்ய  வேண்டும். காலத்திற்குள்ளாகவும் செய்யவேண்டும். திரையில் காட்சி மாறுவதுபோல அடுத்தவர்கள் வந்துவிடுகிறார்கள். நம்மை அடையாளம் காண வைப்பதும் நிறுத்திக்கொள்வதும் எளிதானதில்லை. அது, நம் செயல்களையும் மனத்தூய்மையையும் தீராத உழைப்பையும் பொறுத்தது என்பதே உண்மை.

‘அவருக்குரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் இந்தச் சமுதாயம் அவருக்கு முழுமையாக வழங்கவில்லை’ என்ற ஆதங்கத்தில்தான், நான் அவரின் படைப்புகளைப் படித்து, சிறு சிறு கட்டுரைகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஓர் எழுத்தாளருக்கு என்னால் இயன்ற மிகச்சிறிய மரியாதை இது.

எழுத்தின் வழியாக இந்தச் சமுதாயத்தை நெறிப்படுத்திக்கொண்டிருக்கும் இவரைப்போன்ற சிறந்த எழுத்தாளர்களுக்கு எளிய வாசகர்கள் இதைவிட என்னதான் செய்துவிட முடியும்?

‘ஆதலினால்’, எந்தவொரு படைப்பைப் (புத்தகம், ஓவியம், சிற்பம், திரைப்படம்) படித்தாலோ, கண்டாலோ, உணர்ந்தாலோ அதை உருவாக்கியவருக்கு உரிய மரியாதையை ஏதாவது ஒருவகையிலாவது செய்துவிடவேண்டும்.

எல்லாவற்றையும் படிப்போம். படித்ததைப் பற்றி அதைப் படைத்தவருக்கு எழுதுவோம். இதைத் தவிர நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு வேறு என்னவாக இருக்கக்கூடும்? இதைத்தவிர அவர்கள் எதைத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்த்துவிடப் போகிறார்கள்?

– – –

0Shares
0