ஷேக்ஸ்பியர் சினிமா

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ஜோஜி திரைப்படம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை தழுவி உருவாக்கபட்டுள்ளது. இதில் பகத் பாசில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மேக்பெத்தை விடவும் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய இரகள் படத்தினை தான் இப்படம் அதிகம் தழுவியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து திரைப்படங்கள் உலகின் வேறுவேறு மொழிகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி உருவாக்கபடுகின்றன.

உலகிலே ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அதிகம் திரைப்படமாக்கட்டுள்ளது ஷேக்ஸ்பியருக்கு மட்டுமே. பைபிளுக்கு அடுத்து இதுவே அதிகமுறை திரைப்படமாக்கபட்டிருக்கிறது.

இதுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மையமாகக் கொண்டு 410 முழு நீளத்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கின்னஸ் புக் கூறுகிறது. ஆனால் ஐஎம்டிபி பட்டியலில் இன்றுவரை 1140 சிறிய மற்றும் முழு நீளப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் காணப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் பதினாறு ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் வேறு வேறு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் ஒரு செய்தி கூறுகிறது.

ஷேக்ஸ்பியரின் நாடங்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது ஹாம்லெட். 1907ல் முதல் இன்றுவரை 51 முறை படமாக்கப்பட்டுள்ளது. ரோமியோ ஜுலியட் 38 முறையும் மெக்பெத் 34 முறையும் ஒத்தல்லோ 28 முறையும் கிங் லியர் 24 முறை படமாக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

1900ல் பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்ட ஹாம்லெட் படமே முதல் ஷேக்ஸ்பியர் படம் என்கிறார்கள். அதற்கு முன்பாக 1899ல் ஒரு மௌனப்படம் உருவாக்கப்பட்டது என்றும் தற்போது அதன் பிரதி கிடைத்துள்ளதாகவும் பத்திரிக்கைச் செய்தி குறிப்பிடுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஷேக்ஸ்பியரைப் பற்றி அனானிமஸ் Anonymous என்றொரு திரைப்படம் வெளியானது. இதனை இயக்கியவர் ரோலாண்ட் எம்மரிச், அதில் ஷேக்ஸ்பியர் ஒரு போலியான நபராகச் சித்தரிக்கப்பட்டதுடன் அவர் எழுதிய நாடகங்கள் யாவும் உண்மையில் எட்வர்ட் வெரேயால் எழுதப்பட்டதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன, இதில் ஷேக்ஸ்பியர் பெருங்குடிகாரராக வருவதுடன் கொலையும் செய்கிறார்.

இப்படத்தை ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகர்கள் கடுமையாகக் கண்டனம் செய்தார்கள். அதனால் பெரும் சர்ச்சை உருவாகியது. உண்மையில் ஷேக்ஸ்பியர் என்பவர் யார்? அவரது வாழ்வு குறிப்புகள் நிஜமானவையா? நாடகங்களை எழுதியது அவர் தானா என்ற கேள்விகளுக்கு இன்றைக்கும் முடிவான பதிலில்லை என்பதே. சமீபத்தில் ஷேக்ஸ்பியர் என்பது ஒரு பெண். புனைபெயரில் எழுதியிருக்கிறார். அவரது உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் என ஒரு வதந்தி பரவியது. இப்படி ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை குறித்த மர்மம் இன்றும் புதிராகவே உள்ளது.

ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகரான கார்ல் மார்க்ஸ், ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடமாகச் சொல்லக்கூடியவர், வாரந்தோறும் ஞாயிறு அன்று மார்க்ஸின் குடும்பத்தினர் ஒன்று கூடி ஷேக்ஸ்பியர் கவிதைகளை, நாடகங்களை மாறி மாறி சொல்லி விளையாடுவது வழக்கம். அவரையே மூர் என்று தான் வீட்டில் கேலியாக குறிப்பிடுவார்கள்.

1998ல் John Madden இயக்கிய ஷேக்ஸ்பியர் இன் லவ் (Shakespeare in Love ) திரைப்படம் வெளியானது. இப்படம் ஷேக்ஸ்பியரின் காதலைக் கொண்டாடியது. படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் விருதுகளையும் வாறிக் குவித்தது.

அனானிமஸ், ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கற்பனையான திரைக்கதைகளே. இரண்டிலும் உண்மை மிகக்குறைவு. நூறு வருஷங்களுக்கும் மேலாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியது கிறிஸ்தோபர் மார்லோ, இல்லை எட்வர்ட் வெரே, அவருமில்லை வில்லியம் ஸ்டேன்லி, மேரி சிட்னி ஹேபர்ட், ரோஜர் மேனர்ஸ் எனப் பல எழுத்தாளர்களின் பெயர்கள் இச் சர்ச்சையில் இடம் பெற்று வருகின்றன,

ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்த ஒரே ஆவணப்பதிவு தேவாலயத்தில் உள்ள பதிவேடுகள் மட்டுமே. அந்தப் பதிவேட்டில் அவரது திருமண நாள் மற்றும் அவரது மகன் இறந்து போன தேதி மற்றும் அவர் இறந்து போன தேதி மட்டுமே பதிவாகி உள்ளது. அவரது நாடகங்களின் கையெழுத்துப்பிரதிகள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியர் இறந்து ஏழு ஆண்டுகள் கழித்தே அவரது நாடகங்கள் அச்சில் வெளியாகின. அதுவும் அவரது கால நாடக நடிகர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த வரிகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டதே.

ஷேக்ஸ்பியரின் உருவமும் கூடப் பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் வரையப்பட்டதே அன்றி அது துல்லியமானதில்லை. எல்லாச் சித்திரங்களிலும் ஷேக்ஸ்பியர் நடுத்தர வயதுக்காரராகவே சித்தரிக்கபடுகிறார்

இதுவரை நான்கு விதமான ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று அவரது மேடைநாடகத்தை அப்படியே திரைப்படமாக எடுப்பது. இரண்டாவது ஷேக்ஸ்பியரின் நாடகத்தை மையக்கதையாகக் கொண்டு பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து உருவாக்குவது (Shakespeare adaptations) மூன்றாவது ஷேக்ஸ்பியர் நாடகத்தின் தொலைக்காட்சி வடிவங்கள். (Shakespeare TV Series )நான்காவது ஷேக்ஸ்பியர் நாடகங்களை அனிமேஷன் திரைப்படமாக உருவாக்குவது (animated Shakespeare films). இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரும்பான்மை ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் கால இடச் சூழல் மாறுபாட்டிற்கு ஏற்ப ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தழுவி உருவாக்கப்பட்டதே.

தொடர்ந்து இன்றுவரை ஷேக்ஸ்பியர் நாடகங்கள் படமாக்கப்படுவதற்கு முக்கியக் காரணிகளாக இருப்பது அதன் அழுத்தமான, தனித்துவமான கதாபாத்திரங்கள். சிக்கலான கதைமுடிச்சு, எதிர்பாராத திருப்பம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள். சிறந்த வசனங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த ஆழ்ந்த பார்வையாகும்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தழுவி திரைப்படத்தை எடுப்பது எளிதானதில்லை. ஆனால் வெற்றிகரமான ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் அதன் சிறந்த திரைக்கதையின் காரணமாகவே சிறப்பாகப் பேசப்படுகின்றன. திரைக்கு ஏற்ப ஷேக்ஸ்பியரை உருமாற்றும் போது கதாபாத்திரங்களை அப்படியே வைத்துக் கொண்டு அவர்களின் பின்புலத்தையும் பண்பாட்டுச் சூழலையும், காலத்தையும் மட்டுமே முதன்மையாக மாற்றுகிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சவால் என்பதால் பிரபலமான திரைப்பட நடிகர்கள் பலரும் ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டார்கள். இதன் காரணமாகவே ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பல மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டன.

இங்கிலாந்தின் லாரன்ஸ் ஒலிவர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு மேடையிலும் திரையிலும் உயிர் கொடுத்த மகத்தான கலைஞன். லாரன்ஸ் ஒலிவர் நடித்துத் தயாரித்த ஹாம்லெட் 1948ல் வெளியானது. நாடகப்பிரதியிலிருந்து பாதியை வெட்டி எறிந்துவிட்டு தேவையான காட்சிகளை மட்டுமே திரைக்கதையாக உருவாக்கினார் ஒலிவர். இப்படம் ஆஸ்கார் விருது பெற்றதுடன் சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு. இசை இயக்கம் என இன்றுவரை ஒரு காவியமாகவே விளங்குகிறது.

ரஷ்ய இயக்குனராகக் கிரிகோரி கோஜின்செவ் (Grigori Kozintsev )இயக்கிய ஹாம்லெட் மற்றும் கிங் லியர் இரண்டும் மகத்தான திரைப்படங்கள். 1964ல் கிரிகோரி இயக்கிய ஹாம்லெட் வெளியானது. போரிஸ் பாஸ்டர்நாக் மொழியாக்கம் செய்த நாடகப்பிரதியை மையமாகக் கொண்டு இதனைக் கிரிகோரி உருவாக்கினார். கேமிராக்கோணங்களும் நீண்ட காட்சிகளும் இப்படத்தின் சிறப்பம்சம். நவீன நாடகபாணியில் உருவான நடிப்பு. அரங்க அமைப்பு மற்றும் இசை இப்படத்தை வியக்க வைக்கிறது.

அகிரா குரசேவா ஷேக்ஸ்பியரின் மெக்பெத், கிங்லியர் ஆகிய இரண்டு நாடகங்களைப் படமாக்கியிருக்கிறார். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தழுவலாக இருந்தபோதிலும், இந்தத் திரைப்படங்கள் ஜப்பானின் சரித்திர நிகழ்வுகளோடு இசைந்து சொல்லப்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மெக்பெத்திற்கான திரைக்கதையமைப்பில் மைய நிகழ்வுகளை அப்படியே வைத்துக் கொண்டு அதில் ஜப்பானிய காலச்சார ஊடு இழைகளைப் பின்னியிருக்கிறார் குரசோவா.. குறிப்பாக மூன்று மாயக்காரிகள் தோன்றி மெக்பெத்திற்கு எதிர்காலம் பற்றிய ஆருடம் சொல்வதை முழுமையானதொரு ஜப்பானிய ஆவியுலகச் சடங்கின் தோற்றத்திலே மேற்கொண்டுள்ளார். இத்தோடு நோ நாடகத்தின் உடல் மொழியைப் படத்திற்கான வெளிப்பாட்டு முறையாகவும் கைக் கொண்டுள்ளார்.

கிங் லியர் நாடகத்தைப் பீட்டர் புரூக் இயக்கி ஆர்சன் வெல்ஸ் நடித்துள்ளார், தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட இப்படம் ஷேக்ஸ்பியரின் மூலப்பிரதியை அப்படியே கையாண்டுள்ளது. ஆனால் இதே கிங் லியர் நாடகத்தை 1987ல் கோடார்ட் பிரெஞ்சில் படமாக்கினார். நாடகத்தின் வரலாற்றுப்பின்புலத்தை நீக்கிவிட்டுச் சமகாலத்தில் உலவும் நகர மனிதராக லியரை அவர் உருவாக்கியுள்ளார். லியர் பேசும் வசனங்களும் அவரது செயல்களும் இன்றைய பிரெஞ்சு பிரஜைகளில் ஒருவரைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் பீட்டர் செல்லர்ஸ்.

ஆனால் இதே கிங் லியர் படத்தை ரான் என்ற பெயரில் அகிரா குரசோவா இயக்கிய போது லியரின் மூன்று மகள்களுக்கும் பதிலாக மூன்று மகன்களாக உருமாற்றிவிட்டார் , ஜப்பானிய வரலாற்றுப்பின்புலத்தில் நடைபெறுவதாகவும் திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தார்.

அது குறித்து ஒரு பத்திரிக்கையாளர் கேட்டபோது எனக்கான ஷேக்ஸ்பியரை நான் உருவாக்குகிறேன். ஷேக்ஸ்பியரிலிருந்து ஒரு புதிய படைப்பை உருவாக்குவதே எனது விருப்பம். ஜப்பானிய வரலாற்றுடன் ஷேக்ஸ்பியரை இணைத்து எனக்கான திரைக்கதையை உருவாக்கிக் கொண்டேன் என்றார் குரசேவா.

அகிரா குரசேவாவின் ரான். த்ரோன் ஆ பிளட் இரண்டு படங்களும் ஷேக்ஸ்பியரை எப்படி உருமாற்றிக் கொள்வது என்பதற்கான சிறந்த உதாரணங்கள்.

பிபிசியின் ஷேக்ஸ்பியர் தொலைக்காட்சி வரிசை இப்போது பாக்ஸ் வடிவில் டிவிடியாக வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக இவை திரையிட்டுக் காட்டப்படுகின்றன, ஹாலிவுட்டில் குழந்தைகள் ரசித்துப் பார்க்கும்படியாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனிமேஷன் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

1982ல் குல்சார் இயக்கி சஞ்சீவ் குமார் நடித்த Angoor, The Comedy of Errors. நாடகத்தை மையமாகக் கொண்டது. விஷால் பரத்வாஜ் ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகர், அவர் ஒத்தெல்லோவை ஓம்காரா என்ற பெயரிலும், மெக்பத்தை மக்பூல் என்ற பெயரிலும் ஹாம்லெட்டை ஹைதர் என்ற பெயரிலும் இந்தியச் சூழலுக்கு ஏற்ப படமாக்கியுள்ளார். இதுவன்றி 10 ml Love என்ற ஹிந்திபடம் A Midsummer Night’s Dream. நாடகத்தைத் தழுவியதே. ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட்டின் தழுவல் தான் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “ராம்-லீலா, இது போலவே மலையாளத்தில் ஜெயராஜ் இயக்கிய களியாட்டம், வி.கே. பிரகாஷ் இயக்கிய கர்மயோகி, கன்னடத்தில் என் எஸ் சங்கர் இயக்கிய Ulta Palta போன்றவை ஷேக்ஸ்பியர் நாடகங்களை மையமாகக் கொண்டதே.

தமிழில் கன்னியின் காதலி, மனோகரா, குணசுந்தரி, சொல்லு தம்பி சொல்லு அறிவாளி போன்றவை ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடுகிறார்கள்.

சிவாஜி ரத்த திலகம் திரைப்படத்தில் ஒத்தெல்லோவாக நடித்திருப்பதும், எம்.ஜி.ஆர் ஹாம்லெட்டை தழுவி புதுமைப்பித்தன் என்ற திரைப்படத்தை உருவாக்கியதையும் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து உருவான படங்களாகக் குறிப்பிடுகிறார்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நிறையவே இந்திய மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் ஷேக்ஸ்பியர் படங்களை மட்டுமே பார்ப்பது என முடிவு செய்தால் கூட ஒராண்டு செலவாகும் என்றொரு குறிப்பைப் படித்தேன். திரைப்படமாக மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர், இணையத் தொடர் என்று வற்றாத கதை ஊற்றாக ஷேக்ஸ்பியர் இருக்கிறார்.

இதுவரை வெளியான ஷேக்ஸ்பியர் திரைப்படங்களில் எனக்குப் பிடித்தமானவை.

1) Lawrence Olivier- Hamlet.

2) Kurosawa -Throne of blood. Ran

3) Grigori Kozintsev – Hamlet, King Lear

4) Orson Welles- Othello

5) Derek Jarman – Tempest

6) Zeffirelli- Romeo and Juliet

7) Polanski- Macbeth

8) Trevor Nunn- Twelfth Night

9) Kenneth Branagh – Hamlet

10) Vishal Bhardwaj -Maqbool . Omkara

11)Joseph L. Mankiewicz- Julius Caesar
​12) Ralph Fiennes- Coriolanus

0Shares
0