ஒரு நாள் மகிழ்ச்சி

The Girl from Dak Lak என்ற வியட்நாம் திரைப்படத்தைப் பார்த்தேன். 2022ல் வெளியான இப்படத்தைப் பெட்ரோ ரோமன் சி மாய் இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.

வியட்நாமின் கிராமப்புறத்தைச் சேர்ந்த சுயோங் என்ற இளம் பெண் தனது வீட்டில் சமையல் செய்வதில் படம் துவங்குகிறது. உடல்நலமற்ற தந்தைக்கு அவளே உணவு புகட்டிவிடுகிறாள். அம்மாவும் பக்கத்துவீட்டுப் பெண்களும் சுயோட் வீட்டின் பொருளாதார நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். வேலை தேடி நகருக்குப் போகலாம் என்று சுயோங் நினைக்கிறாள்

தோழி ஒருத்தியின் முகவரியைப் பெற்றுக் கொண்டு அவள் சைகோன் நகருக்குப் பயணம் செய்கிறாள். புதிய நகரம். முதல்முறையாகப் பயணம் செய்கிறாள். அந்தத் தவிப்பை அவள் தேடலில் காணமுடிகிறது.

சைகோன் நகரில் அவள் தேடிச் சென்ற தோழி அந்த இடத்தில் வேலையில் இல்லை. அவளைக் கண்டறிய முடியவில்லை. போக்கிடமின்றி அலைந்து திரிந்து வேலை கேட்கிறாள். அறை எடுத்துத் தங்கக் கையில் போதுமான பணமில்லை. அடைத்துச் சாத்தப்பட்ட கடை ஒன்றின் முன்பாக உறங்க முயலுகிறாள். கடைப்பெண் அவள் மீது பரிதாபம் கொண்டு தங்களுடன் ஒரு இரவு தங்கிக் கொள்வதற்கு அனுமதிக்கிறாள்.

நூடுல்ஸ் மற்றும் துரித உணவு வகைகள் விற்கும் அந்தக் கடையினை இரண்டு பெண்கள் நடத்துகிறார்கள் உரிமையாளர் வேறு ஒரு பெண்.. அவர்களுடன் இணைந்து உணவகத்தில் பார்சல் போடும் வேலை மற்றும் துப்பரவு பணிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறாள் சுயோங்

நகரம் மெல்லப் பழக ஆரம்பிக்கிறது. மாநகரில் தனித்து வாழும் பெண்களுக்கு ஒரே துணை செல்போன் மட்டுமே.. அதற்குள்ளாகவே இரவெல்லாம் சஞ்சரிக்கிறார்கள். முகநூல் வழியாக நட்பைத் தேடிக் கொள்கிறார்கள். புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

படத்தில் சிறந்த காட்சி கூகிள் மேப் வழியாக எப்படி வாடிக்கையாளர்களின் முகவரியை அறிந்து கொள்வது என்பதைச் சியோங் கற்றுக் கொள்வதாகும் இதன் பிறகு அவள் சைக்கிளில் உணவு விநியோகத்துக்காக நகரைச் சுற்ற ஆரம்பிக்கிறாள்.

வார விடுமுறை நாளில் மூன்று பெண்களும் ஒன்றாக நகரில் சுற்றியலைகிறார்கள். அது தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே நாள். அன்று அழகாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள். சியோங் புதிய ஆடை அணிந்து கொள்கிறாள். அவளுக்கு நவீன ஒப்பனைகளைச் செய்துவிடுகிறார்கள். அவள் உருவமே மாறிவிடுகிறது. ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். ஆண் நண்பர்களுடன் நடனமாடுகிறார்கள். ஒன்றாகக் குடிக்கிறார்கள். புதிய வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக் கொள்கிறாள் சுயோங்

போதுமான வருமானமில்லை. பணிச்சுமை அதிகம். வயதின் ஆசைகள், ஊரின் மீதான ஏக்கம் என யாவும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. அவளால் ஊருக்குத் திரும்பி போகவும் முடியவில்லை. நகரில் ஆனந்தமாக வாழவும் வழியில்லை. ஆகவே குழப்பத்திற்குள் சிக்கித் தவிக்கிறாள்

மழைக்காலத்தில் அவர்களின் உணவகம் நீரில் மிதக்கிறது. இரவெல்லாம் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். அதிகச் சம்பளம் தரும் வேறு வேலையைத் தேடுகிறாள் சுயோங். அது எளிதாகயில்லை. அவளிடம் புகைப்படம் முறையான அத்தாட்சி என எதுவுமில்லை.

இந்நிலையில் உணவகத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அவளே காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார்கள். வேறு வேலைக்குப் போக வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. அறுபட்ட பட்டம் போலவே தன்னை உணருகிறாள்.

சொந்த ஊருக்கே திரும்பிப் போய்விடலாம் என்ற முடிவுடன் பேருந்து நிலையம் செல்கிறாள் சுயோங். ஆனால் கடைசி நிமிஷம் முடிவை மாற்றிக் கொள்கிறாள். புதிய வேலை தேடி நகருக்குள் செல்ல ஆரம்பிக்கிறாள்

கிராமப்புறத்திலிருந்து வேலை தேடி மாநகருக்கு வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக, உண்மையாகச் சித்தரித்திருக்கிறார்கள். உணவகத்தில் பெண்களுக்குள் ஏற்படும் தோழமை. பார்சல் கொடுக்கப் போன இடத்தில் ஏற்படும் புது உறவு. விடுமுறை நாளில் அறிமுகமான இளைஞனின் நட்பு என்று அவளது உலகம் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

அம்மாவிடம் அவள் தொலைபேசியில் பேசும்போது தான் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள முயலுகிறாள். ஆனால் அவளால் முடியவில்லை. அம்மா ஊர் திரும்பிவந்துவிடு என்று வற்புறுத்துகிறாள். அவளுக்குத் தோற்றுப் போக ஊர் திரும்ப விருப்பமில்லை

நான்கே கதாபாத்திரங்கள். அவர்களுக்குள் விரியும் நட்பு. போட்டி. ஏமாற்றம் கவலைகள் எனச் சிறுகதை போலக் கச்சிதமாக நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. படுக்கையில் கிடக்கும் அப்பாவின் மீதான அவளது அன்பு குறைவான காட்சிகளில் அழுத்தமாக காட்டப்படுகிறது

இது போலவே உணவகம் இயங்கும் முறை. அதன் பணிச்சுமை, அங்கு வேலை செய்பவர்களின் நெருக்கடிகளை ஆவணப்படம் போல நிஜமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

சந்தோஷமான எளிய வாழ்க்கையிலிருந்து கவலைகளும் நெருக்கடிகளும் நிரம்பிய பெருநகர வாழ்க்கைக்குள் சிக்கிக் கொண்ட இளம்பெண்ணின் கதையைப் படம் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. இதன் காரணமாகவே சர்வதேச திரைப்படவிழாக்களில் தனித்துக் கவனம் பெற்று வருகிறது.

0Shares
0