ஓவியம் வரையப்பட்ட கடிதம்.

ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்கும் தாமஸ் மானிற்கும் இடையில் எழுதப்பட்ட கடிதங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள்.

ஹெஸ்ஸே ஒரு ஓவியர் என்பதால் அவரது கடிதங்களின் ஒரங்களிலும் தலைப்பிலும் தான் விரும்பியதை வரைந்து அனுப்பியிருக்கிறார்.

அழகான நீர்வண்ண ஓவியங்களுடன் எழுதப்பட்ட கடிதங்களை மான் வியந்து பாராட்டுகிறார். அவர்களுக்குள் இருந்த நட்புறவும் பரஸ்பர மரியாதையும் ஒருவருக்கொருவர் உதவிய விதமும் கடிதங்களில் வெளிப்படுகிறது. ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்குப் பல்வேறு விதங்களில் தாமஸ் மான் உதவி செய்திருக்கிறார். அது போலவே மானின் கட்டுரைகளை ஹெஸ்ஸேயும் அவரது மனைவியும் சேர்ந்து படித்துப் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். குறிப்பாகக் கதே மற்றும் டால்ஸ்டாய் குறித்த தாமஸ் மானின் கட்டுரையை ஹெஸ்ஸே வெகுவாகப் பாராட்டுகிறார்.

இரண்டு மகத்தான படைப்பாளிகளுக்குள் இருந்த அன்பும் நட்பும் இன்று நாம் காண முடியாதது. ஹெஸ்ஸேயின் நார்சிசஸ் அண்ட் கோல்ட்மென் நாவலை தாமஸ் மான் வியந்து எழுதுகிறார். அதன் அமெரிக்கப் பதிப்பிற்கு வெளியான பத்திரிக்கை விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

தாமஸ் மான் தனது கடிதம் ஒன்றில் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறார்

“கடந்த கோடையில், கோனிக்ஸ்பெர்க்கைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஹிட்லரைப் பற்றி நான் இழிவாகப் பேசியதாகக் கூறி, எனது Buddenbrooks நாவலை தீயிட்டு கருக்கி அந்தப் பிரதியை அனுப்பி வைத்திருந்தார். அந்த நாவலை நானே தீ வைத்து எரிக்க வேண்டும் என அந்த இளைஞர் விரும்பினார். நான் அப்படி எதையும் செய்யவில்லை. எரிந்த பிரதியை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டேன். 1932-ஆம் ஆண்டில் ஜெர்மானிய மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதற்கு அந்தத் தீவைக்கப்பட்ட பிரதி சான்றாக அமையும் என நினைத்தேன்.. இன்றைய சூழ்நிலை மிக மோசமாகிக் கொண்டே போகிறது. உங்கள் அழைப்பிற்கு நன்றி. மலைப்பகுதியில் தங்குவது எனது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. என் நரம்புகள் மிகவும் தளர்ந்துபோய்விட்டன—எனது சக்திக்கு மீறிய உழைப்பே இதற்குக் காரணம் என்று நான் நம்புகிறேன்

உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, உங்கள் அழகான இல்லத்தில் உங்களுடன் மகிழ்ச்சியான விடுமுறையைக் கழிக்கவும் விரும்புகிறோம். “ என்று குறிப்பிடுகிறார்.

தாமஸ் மான் எழுதிய கதேயும் டால்ஸ்டாயும் ஆய்வுகட்டுரை மிக முக்கியமானது. அதில் கதே மற்றும் டால்ஸ்டாயின் ஆளுமை மற்றும் படைப்பின் அடுக்குகள் குறித்து விரிவான ஆய்வுரையை மான் மேற்கொண்டிருக்கிறார்

“பாரிஸில் இருந்தபடி துர்கனேவ் தனது மரணப் படுக்கையில் டால்ஸ்டாய்க்கு எழுதிய தனது கடைசிக் கடிதத்தில், தனது நண்பரை இலக்கியத்திற்குத் திரும்புமாறும், இறையியல் கதைகளால் தன்னைத் துன்புறுத்துவதை நிறுத்துமாறும் குறிப்பிடுகிறார். அந்தக் கடிதத்தில், டால்ஸ்டாய்க்கு “ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர்” என்ற பட்டத்தை அவரே வழங்குகிறார். அந்தப் பட்டமே பின்னாளில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தனது படைப்புகள் பற்றி டால்ஸ்டாய் மிக உயர்வான மதிப்பீடு கொண்டிருந்தார். தனது போரும் அமைதியும் நாவலும் இலியட்டிற்கு நிகரானது என்று அவரே குறிப்பிடுகிறார். அது போலவே முப்பத்தேழு வயதிலேயே, தன் நாட்குறிப்பில், எழுதி முடித்த மற்றும் இன்னும் எழுத வேண்டிய தன் படைப்புகளை உலகின் மாபெரும் இலக்கியங்களுக்கு இணையாகத் தரவரிசைப்படுத்தியிருந்தார் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாயின் மரணத்திற்குப் பிறகு, மாக்சிம் கோர்க்கி தனது நினைவுக் குறிப்புகள் அடங்கிய ஒரு சிறிய புத்தகத்தை வெளியிட்டார்; கார்க்கி எழுதிய புத்தகங்களிலேயே அதுதான் மிகச் சிறந்த புத்தகம். அதில் “கடவுளை நம்பாத நான், அவரைத் தயக்கத்துடன் பார்த்தேன்; ‘இந்த மனிதர் கடவுளைப் போன்றவர்’ என்று நினைத்தேன். என்று குறிப்பிடுகிறார்.

அதே நேரம் கடவுளைப் போன்றவர். அசாதாரணமானவர். என்று எவரும் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிச் சொன்னதோ நினைத்ததோ இல்லை; யாரும் அப்படி நினைத்திருக்கவோ சொல்லியிருக்கவோ கூட முடியாது. அவரை ஒரு சிலர் புனிதர் என்று மட்டுமே கருதினார்கள்.

டால்ஸ்டாயின் வாழ்க்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. அவர் முற்றிலும் அதன் மைந்தனாக ஒரு கலைஞராக, அதன் அனைத்து குணாதிசயங்களையும், வெளிப்படுத்துகிறார்

கோத்தேவைப் பொறுத்தவரை, பதினெட்டாம் நூற்றாண்டு தான் அவரை உருவாக்கியது, கோத்தேவின் பதினெட்டாம் நூற்றாண்டின் அம்சங்கள் டால்ஸ்டாயிடம் எந்த அளவிற்கு நிலைத்திருந்தனவோ, அதே அளவிற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அம்சங்கள் கோத்தேவிடம் ஏற்கனவே பிறந்திருந்தன என்றும் கூறலாம். என்கிறார் தாமஸ்மான்

நான் ரூசோவின் படைப்புகள் அனைத்தையும், இசை அகராதி உட்பட அந்த இருபது தொகுதிகளையும் முழுமையாகப் படித்திருக்கிறேன். அவர் மீது நான் கொண்டிருந்தது வெறும் பேரார்வம் மட்டுமல்ல; அது ஒரு வகை வழிபாடு. பதினைந்து வயதில், வழக்கமான சிலுவைக்குப் பதிலாக, ரூசோவின் படம் பொறிக்கப்பட்ட ஒரு பதக்கத்தை என் கழுத்தில் அணிந்திருந்தேன். அவரது படைப்புகளில் உள்ள சில பகுதிகள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை; அவற்றை நானே எழுதியது போல உணர்கிறேன். என்று டால்ஸ்டாய் தனது நூலில் பதிவு செய்திருப்பதை மான் சுட்டிக்காட்டுகிறார்.

ரூசோவிடமிருந்து டால்ஸ்டாய் எப்படித் தோன்றினார் என்பதையும் இந்த ஆய்வுரையில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

மாபெரும் ரஷ்ய விமர்சகரான மெரெஷ்கோவ்ஸ்கி சொல்கிறார்: “லியோ டால்ஸ்டாயின் படைப்புகள் என்பது அடிப்படையில், ஐம்பது ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்குறிப்பு, ஒரு முடிவற்ற, வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

டால்ஸ்டாயை ஆழ்ந்த வாசித்த எவராலும் இந்த உண்மையை நன்றாகவே உணர முடியும்,.

“உலகம் முழுவதாலும் அறியப்படவும் நேசிக்கப்படவும் வேண்டும் என்ற தேவையை உணர்ந்தேன்; உலகம் எனது பெயரைச் சொல்ல வேண்டும் , அந்தப் பெயர் அனைவரையும் கவர வேண்டும், அதனால் அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு ஏதேனும் ஒரு விஷயத்திற்காக எனக்கு நிச்சயம் நன்றி சொல்வார்கள்…” என்று டால்ஸ்டாய் தனது இளமைக் காலத்தைப் பற்றிய சுயசரிதையில் எழுதுகிறார்.

இளம் டால்ஸ்டாயின் புகழ்க்கனவும், அறியப்படவும் நேசிக்கப்படவும் அவர் கொண்டிருந்த தாகமும் முக்கியமானது

கதேயும் டால்ஸ்டாயும் இயற்கையின் மீது ஏக்கம் கொள்ள அரிதாகவே சந்தர்ப்பம் ஏற்பட்டது; அவர்களே இயற்கையாக இருந்தனர்.

ஷில்லருக்கும் தஸ்தயெவ்ஸ்கிக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கவில்லை. அவர்கள் ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே இறந்து போய்விட்டனர். இருவரும் நோயுற்ற மனிதர்கள்; ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டவர், மற்றவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவர்களுடைய நோய், அவர்கள் இருவரின் இயல்பிலேயே ஆழமாக வேரூன்றியிருந்தது, அதுவே அவர்களை இயக்க செய்தது. தனித்துவமாக்கியது.

அன்னாகரீனினா பற்றிய தஸ்தாயெவ்ஸ்கியின் விமர்சனம் முக்கியமானது. அதை டால்ஸ்டாய் ஒருவேளை படித்திருக்கவே மாட்டார் (அவர் தனது படைப்புகளின் விமர்சனங்களை ஒருபோதும் படித்ததில்லை). தஸ்தயெவ்ஸ்கியின் எந்தவொரு படைப்பிற்கும் விமர்சனங்கள் எழுத வேண்டும் என்ற உந்துதலை டால்ஸ்டாய் ஒருபோதும் உணர்ந்ததில்லை தஸ்தாயெவ்ஸ்கி இறந்த போது டால்ஸ்டாய், “நான் அந்த மனிதரை மிகவும் நேசித்தேன்” என்று அஞ்சலிக் குறிப்பை எழுதினார். அது சற்றுத் தாமதமாக உணர்ந்த உண்மை

தஸ்தாயெவ்ஸ்கி உயிருடன் இருந்தபோது டால்ஸ்டாய் அவரைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை; ஆனால் வீட்டிலிருந்து டால்ஸ்டாய் வெளியேறிய பயணத்தின் போது அவரது கையில் இருந்தது தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலே.

ஒரு நாள் மாக்சிம் கார்க்கி , வயதான டால்ஸ்டாய் கடலோரத்தில் தனியாக அமர்ந்திருப்பதைக் காண்கிறார், அந்தக் காட்சி அவருக்குப் பரவசமளிக்கிறது

டால்ஸ்டாய் தன் கைகளைத் தாடையில் தாங்கியபடி அமர்ந்திருந்தார்; காற்று அவரது தாடியின் வெள்ளி நிற முடிகளைப் பறக்கவிட்டது. அவர் கடலுக்கு அப்பால் வெகுதூரம் பார்த்துக் கொண்டிருந்தார், சிறிய அலைகள் பணிவுடன் அவரது பாதங்களை நோக்கி உருண்டு வந்து, தங்களைப் பற்றி அந்த வயதான மந்திரவாதியிடம் ஏதோ சொல்ல விரும்புவது போல வருடின. அவர், உயிர்பெற்ற ஒரு பழங்காலக் கல்லைப் போலத் தோன்றமளித்தார்; அக்கல் எல்லாவற்றின் தொடக்கத்தையும் முடிவையும் அறிந்து, அதைப் பற்றிச் சிந்திப்பது போலருந்தது.; சூரியன் முதல் மணல் துகள் வரையிலான முழுப் பிரபஞ்சத்தின் இயக்கம் மற்றும் முடிவு என்னவாகவும் எப்படி இருக்கும் என்றும் அக்கல் சிந்தித்தது. மேலும், கடல் அவரது ஆன்மாவின் ஒரு பகுதியாகும், அவரைச் சுற்றியுள்ள அனைத்தும் அவரிடமிருந்தே வெளிவருகின்றன. அந்த முதியவரின் ஆழ்ந்த சிந்தனையில் அமைதியில், நிகரற்ற மாயாஜாலத்தையும் உணர்ந்தேன். அப்போது என் இதயத்தில் மகிழ்ச்சியும் பயமும் ஒருங்கே எழுந்தன., பின்னர் அனைத்தும் ஒரே பேரின்ப உணர்வில் கரைந்தன எனக் கார்க்கி குறிப்பிட்டுள்ளதை தாமஸ் மான் நினைவு கொள்கிறார்

டால்ஸ்டாயின் சுயசரிதை மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ளது. அதை நான் வாசித்திருக்கிறேன். தாமஸ் மான் அந்தச் சுயசரிதையின் வழியாக டால்ஸ்டாய் எப்படி படைப்பாளியாக உருவாகினார் என்பதை ஆழ்ந்து அறிந்து வெளிப்படுத்துகிறார். குறிப்பாக இயற்கை குறித்த டால்ஸ்டாயின் புரிதல், தனது உடல் குறித்த டால்ஸ்டாயின் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள். தனது படைப்புகள் மீதான அவரது மதிப்பீடு குறித்து மான் குறிப்பிடுவது மீண்டும் டால்ஸ்டாயின் சுயசரிதையை வாசிக்கத் தூண்டுகிறது

••

.

.

0Shares
0