கடல் பற்றித் தமிழில் ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கடற்புரத்து வாழ்க்கையைப் பற்றிய சிறுகதைகளும் நாவல்களும் மிகக்குறைவு. தோப்பில் முகமது மீரான், ஜோ டி குரூஸ் இருவரும் மீனவர்களின் வாழ்வியல் குறித்துச் சிறந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள்.
வறீதையா கன்ஸ்தண்டீன் கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து சிறப்பாக எழுதிவருகிறார்
அந்த வரிசையில் குமரிமாவட்ட மீனவர்களின் வாழ்க்கை குறித்துத் துறைவன் என்ற அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார் கிறிஸ்டோபர் ஆன்றணி.
துறைவன் அவரது முதல் நாவல் என்பது வியப்பளிக்கிறது. படகைப் போலவே நாவலுக்கும் இரண்டு துடுப்புகள். ஒன்று மீனவர்களின் வாழ்க்கைபாடுகள் பற்றியது மற்றது அவர்களின் இனவரலாறு. இரண்டும் இணைந்தே நாவலை முன்னகர்த்திச் செல்கின்றன.
மீனவமக்களின் இயல்பான பேச்சுமொழியும் கதை சொல்லும் முறையும் நாவலுக்குள் நம்மை முழுவதுமாக இழுத்துக் கொள்கின்றன. வாசிக்க வாசிக்கக் கடலின் பேரோசை காதில் விழுகிறது. கடல்வாசமும் மீன்மணமும் நாசியில் அடிக்கின்றன. தேவாலயமும் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களும் அவர்களின் கடற்புரத்துகுடியிருப்புகளும் கண்ணில் விரிகின்றன. இப்படி முழுமையாக ஒரு உலகை நாவலில் சித்தரிப்பது அபூர்வம். அதை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஆன்றணி
பதிமூன்றே அத்தியாயங்கள் என்றாலும் கடல் போல முடிவற்று விரிந்து போகிறது இந்நாவல். பேரலை அதைத் தொடர்ந்து வரும் சிற்றலைகள் என ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கமுடியாத அலைகள் போலவே நாவலின் அத்தியாயங்கள் அமைந்துள்ளன.
மீன்பிடித்தல் பராம்பரியத் தொழில். இன்று அது பெரும்வணிகமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பராம்பரிய மீன்பிடிக்கும் முறைகள் உருமாறி இன்று நவீன வலைகளும் இயந்திரப்படகுகளும் பயன்படுத்தபடுகின்றன. ஆனாலும் மீன்பிடிப்பதை மீனவசமுதாயம் மட்டுமே இன்றும் முன்னெடுத்து வருகிறது. வேறு தொழில்களைப் போல இதில் வெளியாட்கள் நுழையவில்லை.
கடலோடு மீனவர்களுக்கு உள்ள உறவு கடவுளோடு உள்ள உறவை போன்றதாகும். எப்போது அள்ளித்தரும் எப்போது காவு கொள்ளும் என எவராலும் முன்னறிய முடியாது.
கடலை தகழியின் செம்மீனில் வரும் மீனவர்கள் கடலம்மா என்றே அழைக்கிறார்கள். மெக்சிகத் திரைப்படம் ஒன்றில் வரும் மீனவனும் கடல் எங்களின் தாய் என்றே கூறுகிறான். தேசங்கள் வேறாக இருந்தாலும் கடலை அன்னையாகக் கருதும் நம்பிக்கை ஒன்று போலதானிருக்கிறது. இந்நாவலிலும் கடல் அன்னையாகவே உருக்கொண்டிருக்கிறது.
கடலோடு உறவு கொண்டவர்கள் என்பதாலே மீனவமக்கள் பெரிதும் உணர்ச்சிபூர்வமானவர்கள். அவர்களுக்குள் வரும் சண்டை சச்சரவுகளுக்கு அதுவே முக்கியக் காரணம்.
இயந்திரப்படகுகளின் வருகை கடற்புரத்துவாழ்க்கையின் இயல்பை முற்றிலும் உருமாற்றியது. பேராசை கொண்ட வணிகர்கள் உருவானர்கள். ஏற்றுமதிக்கான வணிகப்பொருட்களில் ஒன்றாகிப் போது மீன். இதனால் மீன்பிடிக்கும் உரிமையில் சிக்கல்கள் உருவாகின. போட்டியும் பொறாமையும் வன்முறையும் வளர்ந்தன. அமைதியாக வாழ்ந்த மீனவ மக்களை மதமும் அரசியலும் தங்களின் கைப்பாவைகளாக்கிக் கொண்டன. இதன்காரணமாக மீனவ கிராமத்தின் அமைதி குலைந்து தேவையற்ற சண்டையும் மோதல்களும் பெருகின. இந்த உண்மைகளின் பின்புலத்தில் நாம் நாவலை வாசிக்கும் போது இவை எப்படி யாரால் உருவாக்கபட்டன. எவ்வாறு மீனவர்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஆன்றணி நமக்கு அடையாளம் காட்டுகிறார்
இதற்குச் சிறிய உதாரணம் இந்தப் பத்தி.
விசைப்படகு ஐம்பத்தைந்து அடி நீளமுடையது. ஒருமாதத்தொழிலுக்குக் குறைந்தது ஐந்தாயிரத்திலிருந்து ஆறாயிரம் லிட்டர் டீசல் செலவாகும். ஒரு லிட்டர் டீசல் நாற்பது ரூபாய். பதினைந்து டன் ஐஸ், ஐந்தாயிரம் லிட்டர் தண்ணீர். மளிகை சாமன்களுக்கு மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் ஒரு மாதச்செலவு. ஆக, ஒரு மாத தொழிலில் குறைந்தது மூன்று லட்ச ரூபாய் கிடைத்தால் மட்டுமே கடனில்லாமலிருக்கும். அதற்கு அதிகமாகக்கிடைப்பதில் பாதிப் படகு உரிமையாளருக்கு. மீதி பாதியை பத்து பேரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். ஐந்து லட்ச ரூபாய்க்கு மீன்கிடைத்தால், ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். பண்டாரிக்கு அரைப்பங்கு. நல்ல படகு உரிமையாளர் என்றால், அவரது பங்கிலிருந்து பதினைந்திலிருந்து இருபது சதமானத்தை அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ப பகிர்ந்துகொடுப்பார்
இடைப்பாடு என்ற தென்கோடி மீனவ கிராமத்தில் பர்த்லோமி என்ற மீனவர் வீட்டில் நாவல் துவங்குகிறது. அவரது மனைவி சிசெலி முட்டை கலந்த பாலை அவருக்குக் குடிக்கத் தருகிறாள். மீன்பிடித்தலுக்கு உடல் உறுதியே ஆதாரம். பர்த்லோமியின் வழியே நாவல் முன்னும் பின்னும் நகர்கிறது.
ஆனி துவங்கி ஆவணி முடிய கடற்கரைகளில் பஞ்சகாலம். எனவே கடலில் வேலைக்குச் செல்லாமலிருக்க முடியாது. பர்த்லோமி தன் கட்டுமரத்தைகட்டுமரத்தை கடலில் இறக்கி, அதனைக் கவிழ்த்து அலையடிக்கும் பகுதிநோக்கி கொண்டுசென்றனர். பர்த்லோமியும் அடிமையும் கடைமர கடியாலை பிடித்திருந்தனர். லார்சன் அணியக்கடியாலில் கட்டிய பத்தடி கயிற்றைப்பிடித்துக் கட்டுமரத்திற்கு முன் நீந்தி இழுத்துச்சென்றார். மீதி
இருவரும் முன் பக்க கடியாலை பிடித்திருந்தனர்.போ… போ…எனக் கரையிலிருந்து அனைவரும் ஒரே கூப்பாடு. எப்போதுகட்டுமரத்தை மலத்தி அதன் மீதேறி துளந்துசெல்லவேண்டுமென்பதை கரையிலிருப்பவர்கள் சொல்லிவிடுவார்கள்.
இப்படிக் கடலுக்குள் புறப்படுகிறது பர்த்லோமியின் படகு.
நாவலின் இறுதியில்
லூக்கா தன் உடைந்த விசைப்படகை ஓட்டிக்கொண்டிருந்தான். லூக்காவை தங்கள் விசைப்படகில் ஏற்றுவதற்காகப் பர்த்லோமி லூக்காவைத்தேடி விசைப்படகை ஓட்டினார். பாராச்சூட் விசைப்படகை பின்னோக்கி இழுத்தது. விசைப்படகின் அதிகபட்ச விசையுடன் ஓட்டியபோது திடீரென்று பாராசூட்டின் ஒரு கண்ணி அறுந்தது. சுழல்காற்று மெதுவாக விசைப்படகை குறுக்காகக் கொண்டுசென்றது. விசைப்படகு திசைமாறியதும் விசைப்படகை ஓட்டிக்கொண்டிருந்த பர்த்லோமியால் விசைப்படகை கட்டுப்படுத்த முடியவில்லை. ஸ்டீரிங்ஙை ஒருதிசையில் பலமுள்ளமட்டும் திருப்பியபோது, ஸ்டீரிங் மறுதிசையில் திருப்பியடித்தது. பர்த்லோமி பலகையோடு சேர்ந்து கீழே விழுந்தார். காற்று விசைப்படகை தூக்கியெடுத்துச்சென்று மறித்தது. விசைப்படகின் அடிப்பாகம் பச்சைப்பாசிபிடித்திருந்தது. அதில் ஏராளம்சிப்பிகள் ஒட்டியிருந்தது. அப்போது வந்த மிகப்பெரிய அலை ஒன்று துறைவன் விசைப்படகின் மீது விழுந்தது. ஒரு பெரிய யானை கடலில் மூழ்குவதுபோல் துறைவன் விசைப்படகு கடலில் மூழ்கிச்சென்றது. ஒருசில விநாடிகளில் துறைவன் விசைப்படகு இருந்ததன் தடயமே இருக்கவில்லை.
விசைப்படகுஎன்னும் கல்லறை கடலின் ஆழத்தில் மூழ்கிச்சென்றது.
லார்சன் பர்த்லோமியின் கையைப்பிடிக்கப்போனபோது வேண்டாமென்று தடுத்தார். மழைநீர் மிகுந்த சத்தத்தோடுபர்த்லோமியின் தலையில் விழுந்துகொண்டிருந்தது. அவர் வலியை பொருட்படுத்தவில்லை.
என நிறைவுபெறுகிறது.
இந்த இரண்டு பத்திகளுக்குள் நாவலின் ஒட்டுமொத்த சாரமும் அடங்கியிருக்கிறது என்பதே ஆண்றனி எழுத்து வல்லமைக்குச் சான்று.
கடலுக்குச் சென்று மீன்பிடிப்பது இணைந்து கூட்டாகச் செய்யும் வேலை. நாவலும் பர்த்லோமியின் கதையைச் சொல்லத்துவங்கி ஆரோன். ஈசாக்கு கெடின், லார்சன், லூக்கா, சோபியா, ராயப்பன், அல்கந்தர், ஸ்டீபன், ஆரோன், சிறியபுஷ்பம், தாசையா, அடிமை எனப் பலரது கதைகளையும் நினைவுகளையும் விவரிக்கிறது. கடல்வாழ்க்கை குறித்துச் சொல்லித்தீராத தகவல்கள், நினைவுகள், கதைகள் கொண்டவராகவே ஆண்றனியிருக்கிறார்.
கடற்புரத்து வாழ்க்கையின் தினப்பொழுது, உணவுமுறை. நம்பிக்கைகள், கேலியும் கிண்டலுமான பேச்சுகள், கடற்கரையில் திரியும் நாய், பூனைகள். கடற்பறவைகள், கரமடிவலை, நீள்வலை, பட்டுநூல் வலை எனப் பல்வேறுவிதமான வலைகள் அதன்பயன்பாடுகள்; மாறுபட்ட மீன்பிடி முறைகள், இயந்திரப்படகுகளின் வகைகள், அவைகளைப் பராமரிக்கும் விதம்; ஜி.பி.எஸ் தொழில்நுட்பம். மீனவகிராமங்களுக்குக் கிரிக்கெட் வந்தது வரை நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது. அவ்வகையில் மீனவ வாழ்க்கை குறித்த பெரும் ஆவணம் போலவே நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
கரமடி வலையைப் பற்றி விவரிப்பைப் பாருங்கள். இப்படிப் பலநூறு விஷயங்கள் நாவலில் எழுதப்பட்டிருக்கின்றன.
கரமடி என்பது சுமார் ஐம்பதடி நீளமும் இருபதடி அகலத்திற்குப் பெட்டிபோல் தலைகீழ் ப வடிவில் பட்டு நூல் அல்லது பஞ்சு நூலால் செய்த வலைப்பின்னல். அதன் வாய்பகுதி மட்டும் திறந்திருக்கும்.‘ அதனுள் ஒரு சிறு சுருக்கும் உண்டு. மடி என்பது ஆயிரம் மனிதர்களை ஒரே நேரம் உண்ணும் திமிங்கலம். சுருக்கு அதன் தொண்டை. அந்தசுருக்கும் தொண்டைவடிவில்தான் இருக்கும். மேல்தொண்டையையும் கீழ்தொண்டையையும் ஒற்றைக்கயிற்றால் இணைத்திருப்பார்கள்.
மடியினுள் செல்லும் மீன்கள் சுருக்குக் காரணமாக வெளியில்வரமுடியாது. மடியின் வாய் பகுதியின் இரண்டு பக்கமும் ஒருகிலோமீட்டர் நீளமுள்ள சிறு நீள்வலையை இணைத்திருப்பார்கள். நீள்வலையின் இடையிடையே மிதப்பானும் சிறு கற்களும்கட்டியிருப்பார்கள்.
கடலில் கிடக்கும் மிதப்பான்கள் முத்துமாலைபோல் வளைந்து கிடக்கும். வலைகளின் மறுமுனையை ஒருகிலோமீட்டர் நீளமுள்ள தேங்காய்நாரிலிருந்து செய்யப்பட்ட கம்பாஎன்று இரண்டு பக்கமும் இணைக்கப்பட்ட நீள்வலை மற்றும் அதனுடன்அதனுடன் இணைக்கப்பட்ட வடமும் ஒரே நீளமுள்ளதாக இருக்கும். கடலில் மீன்மண்டலிடும் தூரத்திற்குத் தகுந்ததுபோல் நீள்வலை மற்றும் வடத்தின்நீளம் மாறுபடும். வலைகளின் நீளத்தைப் பொறுத்து அதைநெடுயவலை அல்லது குறியவலை என்பார்கள்
போர்த்துகீசியர்களால் அறிமுகம் செய்யப்படும் கத்தோலிக்கச் சமயமும் திருச்சபையும் எப்படி மீனவர்கள் வாழ்க்கையைத் தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களின் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறது என்பதை ஆன்றணி தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.
போர்ச்சுக்கல்லுகாறம்மாரு அவனுக வசதிக்கு வேண்டி மொத்தமா கடப்புறத்தில இருந்த எல்லாரையும் ஒரு பேரு வெச்சு முக்குவருண்ணு சொல்லியிருப்பாங்க. மொசாம்பிக்கு நாட்டில முக்குவஜாதி ஆளுங்க பேசுத பாசைக்கப் பேரும் முக்குவா தான். இப்பவும் அந்த முக்குவபாச அந்த நாட்டில இருக்கு. அதனால முக்குவபாசயோட பூர்வீகம் மொசாம்பிக் நாடுதான்
என முக்குவர் என்ற அடையாளம் உருவான விதம் பற்றி நாவலின் ஊடே இடம்பெற்றுள்ள தகவல்கள் வரலாற்று உண்மைகளாகும்
கல்லறை கடலில் நங்கூரமிட்டிருக்கும் படகுபோல் கிடந்தது. அது உயிருக்காகத் தவமிருக்கும் உடல்போல் படுத்திருந்தது.
அலைகள் என்பவை கறுத்த யானைகள். கடலுக்குள் நடக்கும் யானைச்சண்டையில் வென்ற யானைகள் தோல்வியுற்ற யானைகளைக் கடற்கரை நோக்கி வீசி எறிந்துகொண்டிருந்தது.
அலை விழும் இடத்திலிருந்து கடல்விளிம்புவரையுள்ள கடல்நீர் பேரருவி விழுந்து உருவாகும் வெண்பரப்புபோல் நுரைத்துக் கிடந்தது. அது சிறுமியின் கருநீல பட்டுப்பாவாடையின் வெள்ளைவிளிம்புபோல் தரையில் உரசிக் கிடந்தது
என நாவலின் ஊடே தெறிக்கும் கவித்துவமான வர்ணனைகள் ஆண்றனி சிறந்த நாவலாசிரியர் என்பதற்கான சான்றுகள்.
நாவலின் ஊடே காமராஜரும் லூர்து சைமனும் எம்.ஜி.ஆரும். சிவாஜியும். ரஜினியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் நேதாஜியும் வந்து போகிறார்கள். இந்நாவலின் கதை எந்த வருஷம் நடைபெறுகிறது என்பதை ஆன்றணி குறிப்பிடவில்லை. நாமாக யூகித்துக் கொள்வதில் 1978ல் நாவல் நடக்கிறது என்று உணரமுடிகிறது. ஆனால் 1978ல் இருந்து பத்தாம் நூற்றாண்டிற்கும், பதினாறாம் நூற்றாண்டிற்கும் 1880-ற்கும் கதை ஊடாடி நகர்கிறது. அலைகளைப் போல நினைவுகள் வருவதும் போவதுமாக இருப்பது இயல்பு தானே
மீனவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் கடற்புரம் பிரிந்து கிடப்பது. விசைப்படகுகளின் வருகை. மீன்பிடிக்கும் உரிமை சார்ந்த சிக்கல்கள். குடி, கல்வி கிடைக்காத சூழல். திருச்சபையின் ஆதிக்கம். அரசியல்வாதிகளின் புறக்கணிப்பு. சமூக அங்கீகாரம் அற்ற நிலை, என மீனவசமுதாயத்தின் இன்றைய நிலைக்கான ஆதாரகாரணங்களை அடையாளப்படுத்தியதோடு இதன் காரணங்களையும் விவாதிப்பதே இந்நாவலின் சிறப்பு
இந்நாவலின் எட்டாம் அத்தியாயமான மீன்குருதியே நாவலின் உச்சம். ஓங்கில் என்னும் டால்ஃபின் மீன்களைப் பிடிக்கச் செல்வதும். பிடிபட்ட ஒங்கிலை மீண்டும் கடலில் விடுவதும் அதற்குச் சொல்லப்படும் காரணமும் உன்னதமான எழுத்தின் சாட்சியம்.
பர்த்லோமி நம்பிக்கையான மனிதனாகவே கடைசிவரையிருக்கிறான். கடல் மீது கொண்ட அன்பும் பற்றும் அவனிடம் உறுதியாக இருக்கிறது. கடலின் கருணைம மட்டுமே தன்னை வாழவைக்கிறது என்பதை அவன் முழுமையாக உணர்ந்திருக்கிறான்
ஆழம் காணமுடியாத கடலை கண்டு அவன் பயப்படவில்லை. ஆனால் கரையும் கரையில் வாழும் மனிதர்களையும் கண்டே பயப்படுகிறான். பர்த்லோமியின் அடுத்தத் தலைமுறை அவனைப்போலில்லை. அவர்கள் கடலை இயந்திரப்படகுகளை வைத்து வாறித்துடைத்துவிட முயற்சிக்கிறார்கள். இந்தத் தலைமுறைக்குக் கடலின் மகத்துவத்தை எப்படிப் புரியவைப்பது எனப் பர்த்லோமிக்குத் தெரியவில்லை. வணிகம் உண்டாக்கிய பேராசை கடலையும் போர்களமாக்கிவிட்டிருப்பதை அறியும் போது தாங்கமுடியாத வேதனையே ஏற்படுகிறது.
“கடலோடிகள் கடலுக்கு முகத்தையும் சமூகத்துக்கு முதுகையும் காட்டிக்கிட்டு தன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே சொரணையில்லாமல் இருக்கிறார்கள், சந்தைப் பொருளாதாரத்தோட தாக்கத்தால் கடல் சூறையாடப்பட்டு வருகிறது “என நேர்காணல் ஒன்றில் வறீதையா கான்ஸ்தந்தின் குறிப்பிடுகிறார். இதைத் தான் துறைவன் நாவலும் அழுத்தமாகக் கூறுகிறது.
தனது முதல் நாவலிலே மிகச்சிறந்த இலக்கியப் படைப்பு ஒன்றை உருவாக்கி சாதனை செய்துள்ள கிறிஸ்டோபர் ஆண்றனி மிகுந்த பாராட்டிற்குரியவர். துறைவன் தமிழின் மகத்தான நாவல்களில் ஒன்றாக என்றுமிருக்கும் என்பதில் ஐயமில்லை.
•••