இலக்கற்ற பயணம்

 ‘தேசாந்திரி’ வாசிப்பனுபவம்

முனைவர் . சரவணன், மதுரை

வீட்டின் சாளரங்களின் (ஜன்னல்களின்) வழியாக நிலாவைப் பார்ப்பதற்கும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அல்லது வீட்டின் தோட்டத்தில், முற்றத்தில் நின்று நிலாவைப் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. சாளரங்கள் நம் பார்வைக் கோணத்தைக் கட்டுப்படுத்தும்; நமது சுதந்திரத்தைத் தடுக்கும். ஆனால், மொட்டை மாடியும் தோட்டமும் முற்றமும் நமக்கு அனைத்துச் சுதந்திரத்தையும் கொடுக்கும்; எல்லாக் கோணத்திலும் நிலாவைப் பார்க்க நம்மை அனுமதிக்கும்.

பயணங்கள் சுதந்திரமானவை. அவை தரும் காட்சிப் பதிவுகள் பல வகைப்பட்ட கோணத்தில் அமையும். அதனால், அது நமக்குத் தரும் ரசனை இன்பம் அளவற்றது. நல்ல ரசிகர்கள் பயணத்தையும் பயணம் சார்ந்த புத்தகங்களையும் விரும்புவர். படிப்பதையே ஒரு பயண அனுபவமாக மாற்றிவிடும் தகுதி படைத்தவை பயண இலக்கியங்கள்.

தமிழ் இலக்கிய மரபில் பயண இலக்கியத்திற்குத் தனி இடம் உண்டு. சங்க இலக்கியத்தில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் அனைத்துமே ஒருவகையில் பயண இலக்கியங்கள்தான்.

“செங்கோன் தரைச்செலவு” தமிழில் பயண இலக்கியத்திற்கு முன்னோடியான நூல் என்று கருதப்படுகிறது. அடுத்து  “தகடூர்யாத்திரை” என்றொரு பயண நூல் இருந்ததாகத் தெரிகிறது. ‘வழிநடைச் சிந்து’வும் இந்த வகைப்பாட்டில்தான் அடங்கும். கி.பி. 19, 20 நூற்றாண்டுகளைப் ‘பயண இலக்கியத்தின் பொற்காலம்’ என்றே கூறலாம்.

சில எழுத்தாளர்கள் பயணம் இலக்கியம் எழுதுவதற்காகவே பயணம் மேற்கொள்வார்கள். சில எழுத்தாளர்கள் தாம் பயணத்தின் வழியாகப் பெற்ற அரிய அனுபவங்களைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பயண இலக்கியத்தை எழுதுவார்கள். இரண்டுக்கும் வேறுபாடு அதில் உள்ள உண்மைத் தன்மையிலும் புனைவுத் தன்மையிலும் அடங்கியிருக்கும். இருப்பினும் இரண்டுமே படிப்பதற்கு ஏற்றவையே.

என் கணிப்பில், ஏ.கே. செட்டியார், சோமலெ, சிட்டி, தி. ஜானகிராமன் மற்றும் சிட்டி, சாமிநாத சர்மா, பிலோ இருதயநாத், பால்தெரோ, பிகோ ஐயர், ஜூல்ஸ் வெர்ன், ஹீத் வுட், மோனிஷா ராஜேஷ், பியர் லோட்டி போன்றோரின் பயணம் சார்ந்த நூல்கள் இலக்கியமாக மலர்ந்தவை. 

1988 முதல் 2018 வரையிலான காலப் பகுதியில் தமிழில் ஏறத்தாழ 900 பயண நூல்கள் வெளிவந்துள்ளன. பயண இலக்கியங்களின் வழியாக ஓர் இடத்தின் புவியியல் அமைப்பு, மக்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம், நம்பிக்கைகள், விழாக்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அவை நமக்குப் பயண வழிகாட்டிகளாகவும் விளங்கும்.

‘பயண இலக்கியங்கள்’ என்பன, ஊர் சுற்றியதை விவரிக்கும் புத்தகங்கள் அல்ல. ஊர்சுற்றியபோது, மனத்துக்குள் பதிந்த நிலக்காட்சிகள், விலங்குகள், பறவைகள், நமக்கும் பிறருக்கும் ஏற்பட்ட நிகழ்வுகள், பாதைகள், ஊர்திகள், ஒலிகள், ஒளிகள், மனித முக அசைவுகள், பேச்சுகள், சைகைகள், தடுமாற்றங்கள், உடைகள், கடைகள், அலங்காரங்கள் என அனைத்தையும் மீண்டும் நினைவூட்டி, மனம் அசைபோட்டு அசைபோட்டு மனத்துக்குள் விரியும் வண்ணப் படங்களைச் சொற்களாக மாற்றி, பிறருக்குச் சொல்லத் துடிக்கும் முயற்சிகள்தான் பயண இலக்கியங்கள்.

வெறும் பயணிகளால் பயண இலக்கியத்தைப் படைக்கவே முடியாது. திறந்த மனத்தோடு இயற்கையையும் செயற்கையையும் பார்த்து, அவற்றைச் சொற்கலாக மாற்றும் எழுத்தாற்றல் மிக்க பயணிகளாலேயே அதைச் சாதிக்க இயலும்.

பொதுவாகவே, வெகுஜன வாசகர்களால் பயண இலக்கியங்களை விரும்பிப் படிப்பர். அதற்குக் காரணமாக, தங்களின் கால்படாத நிலங்களில் கால்பதித்துத் திரும்பியவர்களின் அக அனுபவங்களை எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சிதான்.

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் பயணத்தின் வாசனை நிறைந்திருக்கும். குறிப்பாக, அவரின் பயண வாசனை அடர்த்தியாக அடைத்து வைக்கப்பட்ட நூலாக ‘தேசாந்திரி’ திகழ்கிறது.

இந்தத் ‘தேசாந்திரி’ நூலுக்கு இரண்டு சிறப்புகள் உள்ளன. ஒன்று, கட்டற்ற பயணத்தின் வழியாகத் தான் கண்டடைந்த அனுபவங்களை எழுத்தாளர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். தன்னுடைய ‘கட்டற்ற பயணம்’ குறித்து எழுத்தாளரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மரத்தைத் தவிர மேல் வீழ்த்தும் நிழலைப் போல, வீட்டின் கட்டுப்பாடுகளை என் காலடியில் வீழ்த்திவிட்டு வெளியேறிச் சென்றுவிட முடியும் என்று நம்பினேன். உறக்கத்தின்போதே ஒரு பட்டாம்பூச்சி என்னைத் தன் கால்களால் தூக்கிக்கொண்டு போய் ஏதாவது ஒரு மலையின் மீதோ, பாலைவனத்தின் மீதோ போட்டுவிடாதா என்று கனவு காணத் துவங்கினேன். நடுநிலைப் பள்ளி முடிப்பதற்குள் உலகின் கதவுகள் திறந்து கொண்டுவிட்டன.”

இரண்டு, இந்தப் புத்தகத்தில் உள்ள 41 கட்டுரைகளும் வெகுஜன இதழில் வெளிவந்திருந்தாலும்கூட எழுத்தாளர் அந்த வாசகருக்காகத் தன்னுடைய எழுத்துநடையை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருவகையில் வெகுஜன வாசகருக்கும் நவீன எழுத்து நடையை அறிமுகம் செய்யும் வகையில்தான் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

சான்றுகள் –

“உப்பு, தண்ணீரில் கரைந்துபோவது போல சாரநாத்தின் பழைமையில் என்னைக் கரையவிட்டிருந்தேன். உடம்பில் வெய்யில் ஏறுவதுபோல காலத்தின் சாறு என் மீது படர்ந்துகொண்டு இருந்தது.”

“மழையை வேடிக்கை பார்க்கத் துவங்கியதிலிருந்து மனம் மெல்ல தன் எடையை இழப்பதையும் ஈரம் உறிஞ்சும் காகிதத்தைப் போல நான் மழையை உறிஞ்சிக்கொண்டு இருப்பது போலவும் தோன்றியது.”

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் பொதுவாகவே செடி, மண், மரம் என இயற்கையியல் சார்ந்த அனைத்தும் இடம்பெற்றுவிடும். இயற்கையைவிட்டு விலகாத எழுத்து அவருடையது என்று துணிந்து கூறலாம். இயற்கையை நேசிக்கத் தெரிந்தவரே மனிதனுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறத் தகுதியுடையவர்.

அந்த வகையில் இந்தத் ‘தேசாந்திரி’ புத்தகத்தின் வழியாக எண்ணற்ற அறவுரைகளைத் தன்னுடைய நேசமான சொற்களால் நமக்கு அளித்துள்ளார். அவற்றுள் மூன்றினை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.

“அலங்காரத்துக்காக ஒரு மனிதனை வளர்ப்பது என்று முடிவுசெய்தால் அது எவ்வளவு அபத்தமோ, அத்தகையதுதான் செடிகளை வெறும் அலங்காரத்துக்காக மட்டுமே வளர்ப்பதும்.”

“பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எந்தப் பறவையும் தன் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்துக்கொள்ளதில்லை. அலைந்து திரிய அலுத்துக்கொள்வதும் இல்லை. பறவை, வாழ்வை ஒவ்வொரு நாளும் புதிதாகச் சந்திக்கிறது.”

“ஒரு காகிதம் கசக்கி எறியப்படும்போது எங்கோ ஒரு விருட்சத்தின் ஒரு கிளை முறிக்கப்பட்டுதான் அது உருவாகி இருக்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. உலகில் பயன்படுத்தப்பட்ட காகிதங்களைவிடவும் கசக்கி எறியப்பட்டு வீணடிக்கப்பட்ட காதிதங்களின் அளவு அதிகமானது.”

இன்றைய இந்தியாவின் பாதுகாப்பற்ற தன்மையை மிகச்  சரியாக உணர்த்தியுள்ளார் எழுத்தாளர். அதைப் படித்தவுடன், காந்தியடிகள் கண்ட ‘ராமராஜ்யம்’ இனி இந்தியாவில் நிகழ சாத்தியம் இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

“இன்று எவரும் பௌர்ணமி இரவுதானே என்று பின்னிரவில் கடற்கரைக்குப் போய் உலவ முடியாது. வானவில் தெரிகிறதே என்று பெயர் தெரியாத ரயில் நிலையத்தில் இறங்கி நடமாட முடியாது. கோவில்தானே என்று பிரகாரங்களில் படுத்து உறங்க முடியாது. சந்தேகத்தின் நிழல் விழாத இடங்களை இன்று இந்தியாவில் எங்குமே இல்லை. இலவசமாக உணவு அளிக்கப்படும் இடங்களில்கூட சாப்பிடுபவர்களின் முகங்களை உற்று நோக்கிய பிறகுதான் உணவளிக்கிறார்கள்.”

தமிழருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியருக்குமே வரலாற்றின் மீது துளியும் அக்கறை இருப்பதில்லை.

“ஊதியத்துக்காக இந்தியாவுக்குப் பணிபுரிய வந்து வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு போராட்டங்களில் இறந்துபோன வெள்ளைக்காரர்களின் சமாதிகளைப் பாதுகாப்பதற்கு இன்றும்கூட பிரிட்டிஷ் அரசு பண உதவி செய்கிறது. முறையாக அந்தக் கல்லறைத் தோட்டங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்தியச் சுதந்திரத்துக்காகப் போராடி ரத்த பலியானவர்களுள் சிலரைத் தவிர, மற்றவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்ற தகவல்களை அறிந்துகொள்வதுகூட எளிதானதாக இல்லை.”

நமக்காக, நம் நாட்டுக்காக உடல், பொருள், ஆவியை மலர்ந்த முகத்தோடு கையளித்தவர்களை நாம் புறக்கணித்துவிட்டோம். இத்தகைய புறக்கணிப்பே இனிவரும் தலைமுறையினர் நமக்காகவும் நாட்டுக்காகவும் எதையும் தன்னலமின்றிச் செய்ய வாய்ப்பில்லாமல் போகக்கூடும்.

இந்தத் ‘தேசாந்திரி’ நூலின் வழியாக, இந்த எழுத்தாளரின் கால்பதிந்த நிலங்களின் நாம் நம் மனத்தை நடக்கவிட்டு மகிழலாம். நம்மால் ஏன் இவரைப் போலவே பயணம் செய்ய இயலவில்லை? இந்த எழுத்தாளருக்குக் கிடைத்த இத்தகைய பயணம் ஏன் பிறருக்கு அமையவில்லை? ஏன் மிகச் சிலர் மட்டுமே கட்டற்ற பயணத்தை மேற்கொள்கிறார்கள்? ‘பயணம் செய்ய வேண்டும்’ என்பதற்காகவே பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம்தான் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த எழுத்தாளர் மூன்றே வரிகளில் விளக்கமளித்துள்ளார்.

“வாழ்க்கைப் போராட்டம் மனிதனைக் கூண்டுப் புலிகளைப் போல அடக்கி வைத்திருக்கிறது. இல்லாவிட்டால், ஒவ்வொரு மனிதனின் பலமும் விருப்பமும் ஏதேதோ சாதனைகளை உருவாக்கியிருக்கக் கூடும்.”

இந்தத் ‘தேசாந்திரி’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் பொழுதுபோக்குக்காகப் பயணப்பட்டவரின் அனுபவக்குறிப்புகளோ, வாழ வழியின்றிப் பயணப்பட்டவரின் நினைவுப் பதிவுகளோ அல்ல; மானுட வாழ்வின் உண்மை முகத்தைத் தன்னுடைய திறந்த மனத்தால் எதிர்கொள்ள விரும்பிய தனிமனிதரின் பேரன்பிதயக்குறிப்புகளே!.   

 .

– – –

0Shares
0