சத்யஜித்ரேயின் நூற்றாண்டு

இயக்குநர் சத்யஜித்ரேயின் நூற்றாண்டு இன்று துவங்குகிறது. அவரது திரைப்படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். பதேர் பாஞ்சாலி எனக்கு மிக விருப்பமான படம். அந்தப் படம் குறித்து விரிவான புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை வாசித்துப் பாராட்டிய பாலுமகேந்திரா அது போல ஒரு திரைப்படத்திற்கு விரிவான நூல் வெளியானதில்லை என்று பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

பதேர் பாஞ்சாலியை தற்போது வண்ணமயமாக்கி வருகிறார்கள். அதன் சில காட்சிகளை முன்னோட்டமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. குறிப்பாக அபுவும் துர்காவும் ரயிலைக் காணச் செல்லும் காட்சி வண்ணத்தில் நம்மை மயக்குகிறது. இப்படத்தில் ரவிசங்கரின் இசை உன்னதமானது. பதேர் பாஞ்சாலியின் இசைக்கோர்வைகளைத் தனியே வெளியிட்டிருக்கிறார்கள். அது இணையற்ற திரையிசை வடிவமாகும்

சத்யஜித்ரேயின் முக்கியப் படங்களை யாவையும் 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காகவே சமீபத்தில் அவரது The Apu Trilogy தொகுப்பினை பார்த்தேன். எவ்வளவு நுண்தகவல்கள். கலைநேர்த்தி. ஒரு காட்சியினைக் கூடத் தேவையில்லை என நீக்கிவிட முடியாது.

சத்யஜித்ரே ஒரு ஓவியர் என்பதால் நுணுக்கமான விவரிப்பு மற்றும் துல்லியமான வெளிப்பாட்டினை அவரது படங்களில் காணமுடிகிறது. காசியை இவரைப் போலக் காட்டியவர் எவருமில்லை. எழுத்தாளராகவும் சிறந்த கதைகளை எழுதியிருக்கிறார். முக்கியமான இலக்கிய நாவல்களைப் படமாக்கியிருக்கிறார். வங்கத்தின் கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் யாவும் அவரது படங்களின் வழியே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாகக் கல்கத்தா நகரின் வளர்ச்சியை அவரது படங்களின் வழியாகவே நம்மால் தொகுக்கமுடியும். பெங்காலிகளின் மனநிலையை, ரசனையை, அரசியலை மிகத் துல்லியமாகத் தனது படங்களை வெளிப்படுத்தியவர். அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மறக்கமுடியாதவர்கள். சாருலதாவின் மாதவி முகர்ஜியை யாரால் மறக்கமுடியும் , அபு சன்சாரின் ஷர்மிளா டாகுரின் வசீகரத்திற்கு ஈடு இணை ஏது.

சத்யஜித் ரேயினைப் பற்றி ஒரு ஆவணப்படத்தினை ஷியாம் பெனகல் உருவாக்கியிருக்கிறார். பிலிம் டிவிசன் சார்பில் உருவாக்கபட்ட 14 ரீல் கொண்ட விரிவான ஆவணப்படமது. இணையத்தில் காணக்கிடைக்கிறது

நேற்று அந்த ஆவணப்படத்தினைப் பார்த்தேன். சத்யஜித்ரேயின் படப்பிடிப்பு ஒன்றிலிருந்து அந்த ஆவணப்படம் துவங்குகிறது. ரேயின் பன்முகத்திறமை, தனித்துவத்தை, நிகரற்ற கலை ஆளுமையைப் படம் சிறப்பாக விவரிக்கிறது. படத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியது. படப்பிடிப்பில் சகல வேலைகளையும் சத்யஜித்ரே தான் செய்கிறார். அவரே கேமிராவை இயக்குகிறார். அவரே நடிகருக்கு ஒப்பனை செய்துவிடுகிறார்.

அவரே ப்யானோ இசைக்கிறார். அவரே பிரேமின் எந்த இடத்தின் எந்தப் பொருளை வைக்க வேண்டும் என்று கலை இயக்கம் செய்கிறார். அவரே நடித்துக் காட்டுகிறார். அவரே எடிட் செய்கிறார். அத்தனையிலும் ரசித்து ஈடுபடுகிறார். நூறு சதவீத ஈடுபாடு, அர்ப்பணிப்பு. நேர்த்தியோடு படத்தை உருவாக்குகிறார். இத்தனைக்கும் நடுவில் அவரது உதட்டில் பைப் புகைந்து கொண்டேயிருக்கிறார். புகை நடுவில் தான் அவரது முகம் தெரிகிறது.

அவரது ஆரம்பக் காலப்படங்களில் மட்டுமே சுபத்ரோ மித்ரா போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர் படமாக்கியிருக்கிறார். சாருலதாவிற்குப் பின்பு கேமிராவை சத்யஜித்ரேயே கையாளத் துவங்கினார். ஒளிப்பதிவாளரின் வேலை ஒளியமைப்புச் செய்வது, ரேயிற்கு உதவி செய்வது மட்டுமே. காட்சிகளை அவர் துல்லியமாகத் திட்டமிடுகிறார். நடிகர்களின் முகபாவங்களை. உடல்மொழிகளைச் சரியாக அறிந்து வைத்திருக்கிறார். மிகை உணர்ச்சிகளுக்கு இடமே கிடையாது. தனக்கான சினிமா மொழியை அவர் எவ்வாறு உருவாகிக் கொண்டார் என்பதை ஷியாம் பெனகலுடன் உரையாடும் போது தெரிவிக்கிறார். இதை Our Films and Their films என்ற நூலிலும் விளக்கியிருக்கிறார்

சத்யஜித்ரேயின் தாத்தா, உபேந்திரகிஷோர் ரே, ஒரு எழுத்தாளர், ஒவியர் குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதியவர் சொந்தமாக ஒரு அச்சகம் வைத்திருந்தார். பிரம்ம சமாஜதத்தின் தலைவராக இருந்தார். இந்த அச்சகம் ரேயின் நினைவில் அழியாத காட்சியாகப் பதிந்துள்ளது. ஆகவே தான் அவரது படங்களிலும் அச்சகப்பணி மற்றும் பத்திரிக்கைகள் வெளியிடுவது. அச்சகத்தில் நடைபெறும் பல்வேறு வேலைகள் குறித்த காட்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாகச் சாருலதாவைக் காணும் போது அதில் வரும் அச்சகம் அவரது பால்ய நினைவின் வெளிப்பாடாகவே காணப்படுகிறது.

சத்யஜித் ரேயிற்கு மூன்று வயதாக இருந்தபோது அவரது தந்தை சுகுமார் இறந்தார், கல்கத்தாவின் பாலிகுங் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரே பயின்றார் பின்பு கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. படித்தார். ஓவியம் மற்றும் இசையின் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் தாகூரின் சாந்தி நிகேதனிற்குச் சென்று ஒவியம் கற்றுக் கொண்டார். மேற்கத்திய மற்றும் இந்திய ஒவியமரபினை ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இசையிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றார். சாந்தி நிகேதன் அவரது ஆளுமையை மாற்றியது,

விளம்பர நிறுவனத்தில் பணியாற்றத்துவங்கி பத்திரிக்கை ஒவியம் மற்றும் அட்டை வடிவமைப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் ரே. அவர் வடிவமைத்த நூல்களின் அட்டைகளைப் படத்தில் காட்டுகிறார்கள். மிக அழகான வடிவமைப்பு. ஐரோப்பிய பாணியில் அவர் அட்டைகளை உருவாக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி எழுத்துருக்களையும் அவர் வடிவமைத்திருக்கிறார்

படத்தின் ஒரு அங்கத்தில் ஷியாம் பெனகல் அவர் பதேர் பாஞ்சாலி பற்றிக் கேட்டபோது அதில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். சிரமங்களைப் பற்றிப் புலம்பாமல் படம் முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. நிறையப் பிரச்சனைகள். தடைகள் என்று எளிதாகக் கடந்து போகிறார். அந்தப் படத்திற்குத் தான் விபூதி பூஷண் நாவலில் வரும் துல்லியமான விவரிப்பினை எப்படிப் பயன்படுத்திக் கொண்டேன். கதாபாத்திரங்களின் உரையாடலில் துவங்கி உடைகள் வரை நாவலுக்கு நூறு சதவீதம் தான் உண்மையாக நடந்து கொண்டதைக் கூறுகிறார். விபூதி பூஷணின் சொந்த வாழ்க்கையின் நினைவுகளிலிருந்தே அவரது பதேர் பாஞ்சாலி நாவல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலும் இந்த நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. குறைவானவர்களே அதை வாசித்திருக்கிறார். பதேர்பாஞ்சாலி படத்தின் திரைக்கதை தனி நூலாக வெளியாகியுள்ளது. இரண்டினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரேயின் தனித்துவத்தையும் சிறப்பினையும் அறிந்து கொள்ள முடியும்

திரைப்பட உலகம் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது. அதற்கு மாற்றுசினிமாவை உருவாக்க ரே போராடிய விதத்தைப் படத்தில் குறிப்பிடுகிறார். குறிப்பாக அபராஜிதோ படம் ஓடவில்லை. ஆகவே இனி எது போன்ற படங்களை எடுப்பது என்ற குழப்பம் அவருக்குள் உருவாகிறது. அதை வெளிப்படையாகச் சொல்கிறார்.

சர்வதேச திரைப்படங்கள், சதுரங்கம் மற்றும் மேற்கத்தியப் பாரம்பரிய இசை ,வை மூன்றுமே அவரது பொழுதுபோக்குகள். மேற்கத்திய இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரே சிறப்பாக ப்யானோ வாசிக்கக் கூடியவர். தனது படத்திற்கான இசைக்குறிப்புகளை அவரே எழுதுகிறார். அவரே படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். குறிப்பாக அவர் Shakespeare Wallah படத்திற்கு ஆகச்சிறந்த இசையை உருவாக்கியிருக்கிறார்.

ஷியாம் பெனகலுடன் ரே உரையாடும் அவரது அறை முழுவதும் புத்தகங்கள் பெரிய ப்யானோ, ஒரு பக்கம் அவரது படத்தின் திரைக்கதைபிரதிகள் கொண்ட கோப்புகள். வார மாத இதழ்கள், இசைத்தட்டுகள். ஓவியங்கள். சத்யஜித்ரே மிக உயரமானவர். நாற்காலியில் அமர்ந்துள்ள விதமும் பேசும் முறையும் அலாதியாக இருக்கிறது.

தான் திரைப்படத்தின் வடிவம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. படத்தின் கதை மற்றும் அதற்குப் பொருத்தமான நடிகர்கள். மிகையற்ற் நடிப்பு. கவித்துவமான கலை இயக்கம் நேர்த்தியான இசை இவற்றைத் தான் அதிகம் நம்புகிறேன். ஒரு சில படங்களில் கதை தான் அதன் இறுதி வடிவத்தை முடிவு செய்திருக்கிறது. சிறார்களுக்காகத் தான் இயக்கிய படங்களிலும் கூடப் பெரியவர்கள் தான் முக்கியக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்தை மீள் உருவாக்கம் செய்வதில் தான் அதிகம் கவனம் கொண்டவன். ஆகவே தான் தாகூரின் கதையைத் தேர்வு செய்து படமாக்கினேன். அந்தக் கதைகளின் வழியே தாகூரின் காலமும் நினைவுகளும் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றன என்கிறார் சத்யஜித்ரே

சர்வதேச திரைப்பட உலகில் தனிக்கவனமும் நிறைய விருதுகளும் பெற்றதன் காரணமாக அவரது கவனமும் ஈடுபாடும் தீவிரமடைந்தது 1960களில் இயக்கிய தேவி மிக முக்கியமான திரைப்படம். தன் மருமகளை தெய்வமாக எண்ணி மாமனார் வழிபடும் காட்சியினைக் குறித்து ஷியாம் பெனகல் கேட்கும் போது இந்திய சமூகம் பெண்களை இப்படித் தெய்வமாக அல்லது அடிமைகளாகத் தானே நடத்தியது என்று சொல்லும் சத்யஜித்ரே இந்திய பெண்ணின் உண்மையான மனக்குழப்பத்தை, போராட்டத்தைத் தான் முன்னெடுக்க விரும்பியதாகக் கூறுகிறார்

1964 ஆம் ஆண்டில், ரே இயக்கிய சாருலதா அவரது காவியம் என்றே சொல்வேன். ஒளிப்பதிவில் இந்தப் படம் புதிய அழகியலை உருவாக்கியது. ரேயிற்கு மிகவும் விருப்பமான படங்களில் இதுவும் ஒன்று. தாகூரின் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது இப்படம் 15வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான பரிசினை பெற்றுத் தந்தது.

ரே 29 முழுநீள திரைப்படங்களை இயக்கியுள்ளார் அவரது குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களும் சேர்த்தால் முப்பத்தியாறு படங்கள். இதில் ஆறு திரைக்கதைகள் மட்டுமே அவருடையது. மற்றவை வங்க இலக்கியத்தின் முக்கியமான நாவல்கள். சிறுகதைகளைத் தழுவியே படங்களை உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் இந்திய இலக்கியத்தினைச் சிறப்பான திரைப்படமாக உருவாக்கியதில் ரே முன்னோடியாவார்.

ஒரு கட்டுரையில் ரே தனது ஒளிப்பதிவு பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்

“Subroto, my cameraman, has evolved, elaborated and perfected a system of diffused lighting whereby natural daylight can be simulated to a remarkable degree. This results in a photographic style which is truthful, unobtrusive and modern. I have no doubt that for films in the realistic genre, this is a most admirable system.”

சத்யஜித்ரேயின் படங்களைப் பற்றி மட்டுமின்றி அவரது உலகச் சினிமா குறித்த பார்வைகள். இந்தியச் சமூகம் பற்றிய அவரது மதிப்பீடு. சமகால இந்திய சினிமாவின் போக்குகள். அவரது கலைவெளிப்பாட்டு முறைகள். இசை குறித்த புரிதல் என ரேயின் பன்முகத்தன்மையை ஷியாம்பெனகல் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்

சத்யஜித்ரேயின் நூற்றாண்டினை முன்னிட்டு எனது பதேர்பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் நூல் புதிய கட்டுரைகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகிறது. தேசாந்தி பதிப்பகம் இதனைச் சிறப்புப் பதிப்பாகக் கொண்டு வருகிறது

ஆவணப்படத்தின் இணைப்பு

https://youtu.be/d5PopLgKlG0

••

0Shares
0