திருமண நாடகம்

Marriage Italian Style 1964ம் ஆண்டு வெளியான இத்தாலியத் திரைப்படமாகும்

விட்டோரியோ டி சிகா இயக்கிய இப்படத்தில் சோபியா லோரன் மற்றும், மார்செல்லோ மாஸ்ட்ரோயானி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டிசிகாவின் புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் படம் பெற்ற கவனத்தையும் புகழையும் அவரது பிறபடங்கள் பெறவில்லை. ஆனால் டிசிகாவை ஒரு மாஸ்டராகக் கொண்டாடச் செய்யும் பல படங்கள் இருக்கின்றன. அதில் Marriage Italian Style முக்கியமானது.

படத்தின் துவக்காட்சியில் பேக்கரியில் தடுமாறி விழுந்துவிட்ட பிலுமேனாவை ஒரு காரில் கொண்டு வருகிறார்கள். அவளது குடியிருப்பே பதற்றமடைகிறது. மருத்துவரை அழைத்து வருவதற்காக ஒரு ஆள் ஓடுகிறான். இன்னொரு பக்கம் அவளை வீட்டிற்குள் தூக்கி வந்து படுக்க வைக்கிறார்கள். மரணப்படுக்கையில் கிடக்கிறாள் என்ற செய்தி கேட்டு அண்டை அயலார் வருத்தமடைகிறார்கள்.

மருத்துவரை அழைக்கப் போனவர் பிலுமேனாவின் காதலனும் பேக்கரி முதலாளியுமான டொமினிகோவை தேடிச் சென்று விஷயத்தைச் சொல்கிறான். அவரோ தனது கடை மற்றும் குடியிருப்பினை விற்றுவிட்டு நாட்டைவிட்டே போகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பிலுமேனாவை கடைசியாக ஒருமுறை காணச் செல்கிறார். அவரைக் கண்டவுடன் பாதிரியை அழைத்துவரும்படி சொல்கிறாள் பிலுமேனா. பாவமன்னிப்பு கேட்கப் பாதிரியை வரச்சொல்கிறாள் போலும் என நினைத்து டொமினிகோ பாதிரியை அவசரமாக வரவழைக்கிறார்.

அவளோ தான் இறப்பதற்கு முன்பு அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். சாகப்போகும் பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்றும்படி பாதிரியாரும் சொல்கிறார். வேறுவழியில்லாமல் அவளது படுக்கையின் முன்பாகவே திருமணம் நடக்கிறது. அவர்கள் கணவன் மனைவியாக மாறுகிறார்கள். பாதிரியார் தம்பதிகளை வாழ்த்துகிறார்.

இன்னும் சில மணிநேரத்தில் பிலுமேனா இறந்துவிடுவாள் எனக் காத்திருக்கிறார் டொமினிகோ. ஆனால் இந்தத் திருமண ஏற்பாடு ஒரு நாடகம். அவள் பொய்யாக நடித்து ஏமாற்றித் தன்னைத் திருமணம் செய்து கொண்டுவிட்டாள் என்பதை அறிந்து கொள்கிறார் டொமினிகோ. எதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்தினாள். அவர்களின் காதல் உறவு எப்படித் துவங்கியது என்று பின்னோக்கி கதை செல்கிறது

மரணப்படுக்கையில் கிடப்பது போலப் பிலுமேனா நடிக்கும் காட்சிகள் அபாரம். உண்மை தெரிய வந்தவுடன் அவள் ஸ்டைலாகக் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து தனக்கு வேண்டியதை எடுத்துச் சாப்பிடும் போது டொமினிகோ கோபத்தில் கத்துகிறார். அவள் தான் நினைத்த விஷயத்தைச் சாதித்துவிட்ட சந்தோஷத்தில் இனி கடவுளே வந்தாலும் நம் திருமணத்தைப் பிரிக்கமுடியாது என்கிறாள்.

••

இரண்டாம் உலகப்போரின் போது ஒரு நாள் ரோமில் விமானங்களின் குண்டுவீச்சு நடைபெறுகிறது. அப்போது ஒரு வேசையர் விடுதியிலிருந்த பிலுமேனா பயந்து போய் ஒளிந்து கொள்கிறாள். பிலுமேனாவின் அழகில் மயங்கி அவளுக்கு உதவி செய்ய முன்வருகிறான் டொமினிகோ. பணக்கார இளைஞனாக அவன் ஒரு உல்லாசி.

இதன்பிறகு தற்செயலாக அவளை ஒரு பேருந்தில் காணுகிறான். தன்னோடு காரில் அழைத்துக் கொண்டு வருகிறான். அவளைக் காதலிப்பதாகப் பொய் சொல்லுகிறான். அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறான். குதிரைப்பந்தயம் நடக்கும் மைதானத்திற்கு அவளை அழைத்துச் செல்லும் காட்சி படத்தின் தனிச்சிறப்பானது. யாருமற்ற மைதானத்தில் அவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். தனது படுக்கை அறையைக் குதிரைப் பந்தய மைதானத்தில் உருவாக்க வேண்டும் என்கிறான் டொமினிகோ.

ஒருநாள் தன் வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போய் வயதான தாயிற்குப் பணிவிடைகள் செய்யும் வேலைக்காரியாக ஏற்பாடு செய்கிறான்

அவன் தன்னைக் காதலிக்கவில்லை. தனது உடலை மட்டுமே விரும்புகிறான் என்பதைப் பிலுமேனா நன்றாக உணருகிறாள்.அவன் மீது கொண்டிருந்த தீவிரமான காதலால் அவன் சொல்லும் படியெல்லாம் நடக்கிறாள். புதிது புதிதாக இளம்பெண்களைத் தேடி அலையும் டொமினிகோவிற்குப் பிலுமேனா சலித்துப் போய்விடுகிறாள். அவளைத் துரத்திவிட முயல்கிறான். ஆனால் பிலுமேனா முழுமையாக அவனைக் காதலிக்கிறாள்.

அவளுக்கு வாடகைக்கு ஒரு தங்குமிடத்தைக் கொடுத்து தனது பேக்கரியை கவனித்துக் கொள்ளச் செய்கிறான் டொமினிகோ. காரணம் அவன் அடிக்கடி வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்வதே.

பேக்கரியை கவனித்துக் கொண்டு கஷ்டப்படுகிறாள். காலம் மாறுகிறது. தனக்குத் தேவையான போதெல்லாம் அவளைத் தேடிவந்து இன்பம் அனுபவிக்கிறான் டொமினிகோ. இந்நிலையில் அவனது கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள இளம்பெண்ணைக் காதலிப்பதாக நாடகம் ஆடி அவளுடன் அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறான். அதைத் தடுக்கும் விதமாகவே அவள் இந்தத் திருமண நாடகத்தை ஏற்பாடு செய்கிறாள்.

முறையாகப் பதிவு செய்யாத திருமணம் ஆகவே இது செல்லாது எனத் தனது வழக்கறிஞர் மூலம் வாதாடுகிறான் டொமினிகோ. இப்போது அவள் ஒரு உண்மையைச் சொல்கிறாள். தனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை அவனுக்குப் பிறந்தது. அந்தப் பிள்ளைகளுக்குத் தந்தை பெயர் வேண்டும் என்பதற்காகவே அவனைத் திருமணம் செய்து கொண்டேன் என்கிறாள்.

யார் தனது மகன் எனக் கேட்கிறான் டொமினிகோ. அவள் சொல்ல மறுக்கிறாள். தன் மகனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறான் டொமினிகோ. இதற்காக அவள் பிலுமேனாவினை தேடிச்சென்று சந்திக்கும் காட்சி அபாரம். அவள் உன் பிள்ளையை மட்டும் நல்லபடியாகக் கவனிக்கப் பார்க்கிறாய். எனக்கு மூன்று பிள்ளைகளும் ஒன்று தான் என்கிறாள். மூவரில் யார் தனது பையன் எனக் குழம்பிப் போகிறான். இதற்கான விடை எப்படிக் கிடைக்கிறது என்பதே மீதப்படம்

ஒரு பெண் பணம் அந்தஸ்து வசதிகள் எல்லாவற்றையும் விடத் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதியே தனது வாழ்க்கையை நடத்துகிறாள். திட்டமிடுகிறாள். காதலிக்கும் போது ஆசைநாயகியாகத் தெரிந்த பிலுமேனா இப்போது தொல்லை தரும் ராட்சசியாகக் காட்சிதருகிறாள். டொமினிகோ எளிதாக அவளை ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவள் எதிராகச் செயல்படத் துவங்கியதும் கொந்தளிப்பு அடைகிறான். முடிவில் தன் தவறுகளை, இயலாமையை ஒத்துக் கொள்கிறான்.

ஒரு காட்சியில் டொமினிகோவின் முன்னால் அவன் கொடுத்த பணத்தை வீசி எறிந்து பிலுமேனா சொல்லும் பதில் அற்புதமானது.

இது போலவே தனது மூன்று பிள்ளைகளையும் அவள் சந்தித்து உரையாடும் காட்சியும் அதில் வெளிப்படும் அவளது தயக்கம், குழப்பம். ஆசை. அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

டிசிகா கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குகிறார். காத்திரமான பெண் கதாபாத்திரங்களே அவரது தனித்தன்மை. அவரது படங்களில் தொடர்ந்து திருமணமும் அதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளும் இடம்பெறுகின்றன. Roof படத்திலும் இது போல இளம் தம்பதிகள் வீடு தேடி அலையும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

படத்தில் வரும் துணை கதாபாத்திரங்கள் மறக்கமுடியாதவர்கள். குறிப்பாகப் பிலுமேனாவின் வேலைக்காரி லூசியா. அவளும் இணைந்தே திருமண நாடகத்தை நடத்துகிறாள். முதன்முறையாக அவள் அறிமுகமாகும் காட்சி துவங்கி கடைசிக் காட்சிவரை அவரின் பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது.

கடைசிக்காட்சியில் பிலுமேனாவின் அழுகிறாள். அந்த அழுகை சந்தோஷத்தின் வெளிப்பாடு. தனக்கு அப்படி அழுவதற்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறாள். தன் வாழ்க்கையினை மட்டுமின்றித் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அவள் சரிவர அமைத்துக் கொண்டதன் அடையாளமாகவே அந்த அழுகை வெளிப்படுகிறது. படத்தில் சோபியா லாரென் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். எட்வர்டோ டி பிலிப்போவின் நாடகத்தினைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது

விருந்திற்கு அழைத்துச் செல்வதற்கு உகந்த ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என டொமினிகோ சொல்வதும் அதற்காக அவனைத் தனது இருப்பிடத்திற்குப் பிலுமேனா அழைத்துப் போவதும் அவனே ஒரு உடையைத் தேர்வு செய்து அணிய வைத்து அவளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போவதும் சிறப்பான காட்சி. அதில் அவனது மனைவியைப் போலவே பிலுமேனா நடந்து கொள்கிறாள்.

திருமணம் செய்து கொள்ளாமலே அவனது மனைவிபோல இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட பிலுமேனா இனியும் பொறுக்கமுடியாது என்ற நிலையில் தான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறாள். அடங்கிப் போகிறவர்கள் ஒரு நாள் கிளர்ந்து எழும்போது எவராலும் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாது.

டொமினிகோவின் அம்மா சில காட்சிகளே வந்த போதும் தனித்துவமானவராக உருவாக்கப்பட்டிருக்கிறார். நினைவு அழிந்த உலகில் வாழும் நோயாளி அவர். தாதி போல உடனிருந்து அவரைக் கவனித்துக் கொள்ளப் பிலுமேனாவை ஏற்பாடு செய்கிறான். அம்மா இறந்த துக்கம் கேட்க வந்தவர்களிடம் பிலுமேனாவை அவன் மறைப்பதும் அவள் வெளியே வரவே கூடாது என்று உத்தரவிடுவதும் அவளை மோசமாகக் காயப்படுத்துகிறது.

பிலுமேனாவின் கடந்தகாலம் அவனை உறுத்துகிறது. ஆனால் வசீகரமான அவளது உடலும் அவள் தரும் சுகமும் அவளைத் தேடிப் போக வைக்கிறது. இந்தப் பலவீனமான மனப்போக்கினை டொமினிகோ அழகாக வெளிப்படுத்துகிறார்.

டிசிகாவின் திரைப்படங்கள் சமகாலப் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசியிருப்பதுடன் சிறந்த கலைப்படைப்பாகவும் விளங்குகின்றன. அவர் தேர்வு செய்யும் கதையும் நடிகர்களும் கதையைச் சிறப்பாகப் படமாக்கும் விதமும் காலம் தாண்டியும் அவரைக் கொண்டாடச் செய்கிறது

••

0Shares
0