கண்மூடிப் பறத்தல்

இயக்குனர் பெர்க்மென் தனது முதிய வயதில் அளித்த ஒரு நேர்காணலில் தான் கண்களை மூடிக் கொண்டால் தலைக்குள் கூட்டம் கூட்டமாக வெண்ணிறமான பறவைகள் பறப்பதாகவும், அவற்றை மனதிற்குள்ளாக எண்ணிக் கொணடிருப்பதே தனது வேலை எனவும், ஒருவேளை பறவைகள் தனது கண்ணில் இருந்து மறைந்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இதை வாசிக்கையில் எனக்கு ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் பறவைகள் கதை நினைவிற்கு வந்து போனது,

இது முதுமையின் பிரச்சனை மட்டுமில்லை, ஆழமான ஒரு ஆன்மீக அனுபவம், முடிவின்மையோடு தன்னை அடையாம் காணும் செயல், வானில் கொக்குகள் ஒன்றாகப் பறப்பதை கண்டால் ராமகிருஷ்ண பரமஹம்சர் பரவசமாகி விடுவார் என்பார்கள், சில சமயம் கொக்கின் தூயவெண்மையைக் கண்டு வியந்து மயங்கியதும் நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்

சலீம் அலியும் இதே போல ஒரு அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், தான் தேடிக்கொண்டிருந்த ஒரு பறவையை நேரில் பார்ப்பதற்கு முன்பு அது தனது கனவில் தோன்றியதாகவும், அதை எந்தக் கிளையில் கனவில் பார்த்தாரோ அதே போல ஒன்றையே தான் நேரில் கண்டதாகக் குறிப்பிடுகிறார்

காண்டவ வனத்தை எரித்த காரணத்தால் பாண்டவர்கள் எங்கே சென்றாலும் அவர்களை பழிவாங்க தலைக்கு மேலே ஐந்து பறவைகள் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறுகிறது மகாபாரதம்

பறவைகள் சார்ந்த பல வியப்பூட்டும் அனுபவங்களை பலரும் எழுதியிருக்கிறார்கள்

ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ்ஸின் கதையை கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்,

•••

பறவைகள்

ஜார்ஜ் லூயி போர்ஹெஸ் (Jorge Luis Borges)

நான் கண்களை மூடிக்கொண்டு ஒரு பறவைக்கூட்டத்தைப் பார்த்தேன். அந்தக் காட்சி ஒரு நொடி நீடித்தது. அல்லது அதற்குக் குறைவாகவும் இருக்கலாம்;கடவுளின் இருப்பு தொடர்பான பிரச்னை இது. கடவுள் இருக்கிறாரெனில், எண்ணிக்கை என்பது நிச்சயமானதாகவே இருக்கும், ஏனெனில் நான் பார்த்த பறவைகளின் எண்ணிக்கை கடவுளுக்குத் தெரியும். கடவுள் இல்லையெனில், அந்த எண்ணிக்கை நிச்சயமற்றதாக இருக்கும், ஏனெனில் எண்ணுவதற்கு யாராலும் முடிந்திருக்காது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை நான் பத்து பறவைகளுக்கும் குறைவாகவும்(அப்படிச் சொல்லலாம்) ஒன்றுக்கு மேற்பட்ட பறவைகளையும் பார்த்தேன், ஆனால் ஒன்பது,எட்டு,ஏழு,ஆறு,ஐந்து,நான்கு,மூன்று அல்லது இரண்டு பறவைகளை பார்க்கவில்லை. நான் பத்துக்கும் ஒன்றுக்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் பார்த்தேன். அது ஒன்பது,எட்டு,ஏழு,ஆறு,ஐந்து,இன்னபிற அல்ல. அந்த முழுஎண்- ஒன்பது அல்ல, எட்டு அல்ல, ஏழு அல்ல, ஆறு அல்ல, ஐந்து அல்ல, இன்னபிற அல்ல- உருவெடுக்காதது. ஆம், கடவுள் இருக்கிறார்.

•••

I close my eyes and see a flock of birds. The vision lasts a second, or perhaps less; I am not sure how many birds I saw. Was the number of birds definite or indefinite? The problem involves the existence of God. If God exists, the number is definite, because God knows how many birds I saw. If God does not exist, the number is indefinite, because no one can have counted. In this case I saw fewer than ten birds (let us say) and more than one, but did not see nine, eight, seven, six, five, four, three, or two birds. I saw a number between ten and one, which was not nine, eight, seven, six, five, etc. That integer–not-nine, not-eight, not-seven, not-six, not-five, etc.–is inconceivable. Ergo, God exists.

–Jorges Luis Borges, “Argumentum Ornithologicum” (in The Aleph and Other Stories, New York: Penguin, 2000)

0Shares
0