காதலின் இரவுகள்

ஜப்பானின் ஓனோ நோ கோமாச்சி மற்றும் இசுமி ஷிகிபு என்ற இரண்டு பெண் கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு நூல் The Ink Dark Moon: Love Poems by Ono no Komachi and Izumi Shikibu அவர்களின் கவிதைகள் பொதுவாக டாங்கா என்ற கவிதை வடிவத்தினைச் சார்ந்தவை.

ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியினைச் சேர்ந்தவர் ஓனோ நோ கோமாச்சி. இவரது காதல் உறவு பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. அதில் ஒன்றில் இவர் பேரரசரிற்காகக் காத்திருந்த பெண் என்று கூறப்படுகிறது. தன்னை விரும்பிய ஒரு காதலனிடம் அவன் நூறு இரவுகள் தொடர்ந்து தவறாமல் சந்தித்தால், அவனைக் காதலிப்பதாக உறுதியளித்தாள் கோமாச்சி.

அவனும் வானிலையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு இரவும் அவளைத் தேடி வந்து சந்தித்தான்.. ஆனால் கடும் மழையில் மாட்டிக் கொண்டு உடல்நலமற்றுப் போய்த் தொண்ணூற்றொன்பதாம் இரவில் அந்தக் காதலன் இறந்து போனான் என்றொரு கதையும் கூறப்படுகிறது.

தமிழ்ச் சங்க கவிதைகளில் இடம்பெற்றுள்ள பெண்கவிகளைப் போலவே காதலின் துயரை மிக அழகாகக் கவிதையாக்கியிருக்கிறார்கள். தமிழ் செவ்வியல் கவிதைகளுக்கும் சீனாவின் செவ்வியல் கவிதைகளுக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன. இயற்கையை முதன்மைப்படுத்திப் பாடுவதில் இரண்டுமே ஒன்று போல உள்ளன.

தமிழ்க் கவிதைகளில் உணர்ச்சி வெளிப்பாடு துல்லியமானது. காத்திரமானது. பல நேரங்களில் வெளிப்படையாக உணர்ச்சிக் கொந்தளிப்பு முன்வைக்கப்படுகிறது. ஆனால் சீன ஜப்பானியக் கவிதைகளில் பிரிவைப் பாடும் பெண் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு இயற்கைக் காட்சிகளை மட்டுமே அடையாளப்படுத்துகிறாள். சில கவிதைகளில் தனது உணர்ச்சிகளை ரகசியமாக வெளிப்படுத்துகிறாள். அப்போதும் கூடத் தணிவான குரலில் ஒடுக்கப்பட்ட உணர்வு போலவே வெளிப்படுத்துகிறாள்.

வெள்ளிவீதியாரின் கவிதையில் காமம் பேசப்படுவது போல அரிதாகவே சீன கவிதைகளில் பேசப்படுகிறது. .

காதலன் கட்டியணைத்திருக்கிறான். கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறான். ஏன் அந்தக் கைகள்  தற்போது அந்த நினைவேயில்லாமல் இருக்கின்றன. மனது தானே அதை நினைவு வைத்துக் கொள்கிறது எனக்கேட்கிறாள்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பாடலில்

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி

எனக் கண்ணதாசன் எழுதியிருப்பார். கிட்டதட்ட இதே அனுபவத்தைத் தான் ஓனோ நோ கோமாச்சி ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார். கனவில் தான் காதலன் வருகிறான் என்பதால் கனவிலிருந்து விழித்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறாள். இருண்ட இரவில் அவனைக்காணமுடியாது என்ற ஏக்கத்தில் தன்னைத் தானே வருத்திக் கொள்கிறாள்.

காதலுள்ள பெண்ணிற்கு இரவின் அமைதியும் நிலவின் ஒளியும் தொந்தரவு செய்கின்றன. உலகமே சாந்தி கொள்ளும் போது தான் மட்டும் ஏன் இப்படி எரிந்து கொண்டிருக்கிறேன் என்று தவிக்கிறாள்.

சில்வண்டுகள் இரவெல்லாம் சபதமிட்டுக் கொண்டிருப்பதைப் போலவே அவளுக்குள் காதலனின் நினைவுகள் பீரிட்டுக் கொண்டிருக்கின்றன. இரண்டு மூன்று காட்டுத்துண்டுகளின் வழியே அவள் தனது மனநிலையைத் துல்லியமாகக் கவிதையில் வெளிப்படுத்திவிடுகிறாள். ஓவியம் போலவே கவிதையும் அனுபவத்தின் உறைநிலையாக மாறுகிறது.

When my desire

grows too fierce

I wear my bed clothes

inside out,

dark as the night’s rough husk

– Ono no Komachi

••

This body

grown fragile, floating,

a reed cut from its roots…

If a stream would ask me

to follow, I’d go, I think.

– Ono no Komachi

••

Remembering you…

The fireflies of this marsh

seem like sparks

that rise

from my body’s longing.

– Izumi Shikibu

••

In this world

love has no color —

yet how deeply

my body

is stained by yours.

••

This pine tree by the rock

must have its memories too:

after a thousand years,

see how its branches

lean towards the ground

– Izumi Shikibu

0Shares
0