சாட்வினின் நினைவுகள்

NOMAD: IN THE FOOTSTEPS OF BRUCE CHATWIN என்ற வெர்னர் ஹெர்சாக் இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்தேன்.. இதில் ஹெர்சாக் அவரது நண்பரும் நாவலாசிரியருமான புரூஸ் சாட்வின் குறித்த நினைவுகளை அவரது பாதையிலே பயணித்துப் பகிர்ந்து கொள்கிறார்

சார்லஸ் புரூஸ் சாட்வின் பயண எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவரது முதல் புத்தகம், In Patagonia (1977) மிகவும் பிரபலமானது. கதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய சாட்வின் On the Black Hill (1982) நாவலுக்காக ஜேம்ஸ் டைட் பிளாக் மெமோரியல் பரிசை வென்றார், =

இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் பிறந்த சாட்வின். மார்ல்பரோ கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். பின்பு லண்டனிலுள்ள கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாக Sothebyல் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே பணியாற்றிய காலத்தில் கலைப்பொருட்கள் பற்றிய ஆழ்ந்த அறிவினைப் பெற்றார்.

பின்பு அந்த வேலையைக் கைவிட்டு தொல்பொருள் ஆய்வு  குறித்துப் பயிலுவதற்காக எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பின்பு சண்டே டைம்ஸ் இதழில் 1972ல் வேலைக்குச் சேர்ந்த சாட்வின் பல்வேறு நாடுகளுக்கும் பத்திரிக்கை பணி சார்ந்து பயணங்களை மேற்கொண்டார் .

அந்தப் பயணத்தில் கிடைத்த அரிய கலைப்பொருட்களைச் சேகரித்து அதை லண்டனில் விற்பனை செய்து கிடைத்த பணத்தைக் கொண்டு வாழ்க்கையை ஒட்டி வந்தார்.

பின்பு சில ஆண்டுகள் நாடோடி போல இலக்கற்று தனது பயணத்தை மேற்கொண்டார் சாட்வின். இதனால் அவருக்குப் பழங்குடி மக்களுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களின் பண்பாடு பற்றி இசை குறித்து ஆழ்ந்து அறிந்து கொண்டார் சாட்வின். இந்த நாட்களில் சாட்வின் புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவர் எடுத்த பழங்குடி மக்களைப் பற்றிய புகைப்படங்கள் பெரிய அளவில் விற்பனையாகின.

சாட்வினின் கோப்ரா வெர்டே நாவலை ஹெர்சாக் படமாக்கியிருக்கிறார். ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் சாட்வினும் ஹெர்சாக்கும் சந்தித்துக் கொள்கிறார்கள். சந்தித்த நிமிஷம் முதல் பகலிரவாகப் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். சாட்வின் ஒய்வேயில்லாமல் பேசிக் கொண்டேயிருக்கிறார். இலக்கியம் மானுடவியல் கவிதை பழங்குடி மக்கள் வாழ்க்கை சினிமா என இருவரும் நாட்கணக்கில் பேசியதை ஹெர்சாக் நெகிழ்ச்சியோடு நினைவு கொள்ளுகிறார்.

இந்த ஆவணப்படம் எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதில் ஹெர்சாக் சாட்வின் பயணித்த இடங்களுக்கெல்லாம் செல்கிறார். அவர்களின் நட்பு மற்றும் கடந்த கால நினைவுகளை விவரிக்கிறார்

இதில் சாட்வினின் மனைவி எலிசபெத்தின் நேர்காணல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. அதில் சாட்வினுக்குப் பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றிய தேடுதலும் புரிதலும் எப்படி உருவானது என்பது அழகாக விளக்கப்படுகிறது,

Songs and Songlines என்ற புத்தகத்தின் களமாக விளங்கிய மத்திய ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து அங்குள்ள பழங்குடி மக்களை ஹெர்சாக் சந்திக்கிறார். அவர்களின் பாடல் மற்றும் நடனத்தைப் பார்வையிடுகிறார். இதில் மானுடவியலாளர் டெட் ஸ்ட்ரெஹ்லோ மற்றும் ஏஞ்சல்ஸ் பெனாங்கேவுடன் கலந்துரையாடுகிறார்.

The Nomadic Alternative என்ற சாட்வின் முடிவுபெறாத புத்தகம் பற்றியும் சாட்வினின் வரலாற்றை எழுதும் நிக்கோலஸ் ஷேக்ஸ்பியருடன் கலந்துரையாடல் செய்கிறார்.

அடுத்த பகுதியில் சாட்வினின் ஒரு பாலுறவு வேட்கை மற்றும் அவரது திருமணம் மற்றும் நோயில் பாதிக்கப்பட்டு வேதனையில் இறந்து போனது பற்றிப் பேசுகிறார்.

ஒரு நண்பனின் பொருட்டு ஹெர்சாக் பல்வேறு நாடுகளுக்கும் அயராமல் பயணங்களை மேற்கொள்கிறார். சாட்வினின் நினைவினை பின்தொடருவதன் வழியே அவரது ஆளுமையைச் சரியாக அடையாளப்படுத்துகிறார் என்பதாலே இந்த ஆவணப்படம் முக்கியமானதாகிறது.

0Shares
0