காந்தி வழிகாட்டுகிறார்

2009 ஆண்டு வெளியான ஹிந்திப்படம் Road to Sangam , வழக்கமான பொழுது போக்குப்படங்களுக்கு இடையில் இதன் வருகை கவனிக்கப்படாமலே போய்விட்டது, காந்தி குறித்து இந்தியாவில் எடுக்கபட்ட திரைப்படங்களில் முக்கியமான படமிது

இந்தப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது, ஒன்று, காந்தி குறித்து இன்றைய தலைமுறையினரிடம் உள்ள வெறுப்பை, அதன் பின்னுள்ள அரசியலை, அறியாமையைக் கவனப்படுத்துகிறது, இரண்டாவது இஸ்லாமிய சமூகம் மகாத்மா காந்தியை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது, மூன்றாவது, மதக்கலவரங்கள் உருவாகின்ற சூழலில் காந்தியின் முக்கியத்துவம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்துகிறது

படத்தை இயக்கியிருப்பவர் அமித்ராய், அட்டன்பரோவின் காந்தியைப் போல இது பிரம்மாண்டமான செலவில் உருவாக்கபட்ட படமில்லை, ஆனால் உண்மையான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட யதார்த்தமான படம்.

அலகாபாத்தில் உள்ள கார் மெக்கானிக் ஹஸ்மத் பாய்,  எவ்வளவு மோசமான நிலையில் உள்ள காரின் என்ஜினையும் சரிசெய்து தந்துவிடக்கூடிய திறமைசாலி, வயதான மனிதர், நண்பர்களுடன் தினசரி நடைப்பயிற்சிக்குச் செல்வது அவரது வழக்கம், முதியவர்களின் நடைபயிற்சியைப் பற்றி வேடிக்கையான கிண்டலுடன் துவங்குகிறது படம்

ஒரு நாள் அவரிடம் V8 ford engine  ஒன்று சரிசெய்யப்படுவதற்காகக்  கொண்டு வரப்படுகிறது, அது மிகப்பழைய என்ஜின் என்பதால் சரிசெய்து தருவதற்கு கொஞ்ச கால அவகாசம் வேண்டும் என்று ஹஸ்மத் கேட்கிறார்,

ஒரு வாரத்தில் என்ஜினைச் சரி செய்து தரும்படி அவசரப்படுத்துகிறார்கள், அப்படி என்ன அவசரம் எனக்கேட்டபோது, அந்த என்ஜின் காந்தியின் அஸ்தியைச் சுமந்து சென்ற போர்டுவாகனத்தின் என்ஜின், சரித்திரப் புகழ்பெற்ற அந்த வண்டி மறுபடியும் தேவைப்படுகிறது என்பதால் என்ஜினை உடனே சரி செய்து தரும்படியாக கேட்கிறார்கள், அவரும் ஒத்துக் கொள்கிறார்,

இதற்கிடையில் அலகாபாத் நகரில் எதிர்பாராமல்  குண்டுவெடிப்பு நடைபெறுகிறது, இதில் தொடர்புடையவர்கள் என்று இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை போலீஸ் விசாரணைக்கு அழைத்துப் போகிறது, அவர்கள் அப்பாவிகள் என இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுதிரண்டு  காவல்துறையினரிடம் முறையிடுகிறார்கள்,

ஆனால் காவல்துறை கைது செய்த இளைஞர்களை தீவிரவாதி என்று அடையாளப்படுத்தி, விடுதலை செய்ய மறுக்கிறது, அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் நாளில் இஸ்லாமிய அமைப்புகள் நியாயம் கேட்டுப் போராட்டம் செய்கிறார்கள்,

இந்தப் போராட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தப்படுகிறது, அதன்முடிவில் துப்பாக்கி சூடு நடந்து அப்பாவிகள் பலர் கொல்லப்படுகிறார்கள், இதில் ஒருவர் இஸ்லாமியத் தலைவரின் மகன், இதனால் ஊரே பதற்றமாகிறது

இந்தச் செயலை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் யாவும் ஒன்று சேர்ந்து கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்கிறார்கள், அதன்படி கடை அடைப்பு துவங்குகிறது, இதனால் நகரமே காலியானது போலாகிறது

இன்னொரு பக்கம் மகாத்மா காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி கரைக்கப்படாமலே ஒரிசாவில் ஒரு கலயத்தில் பாதுகாத்து வைக்கபட்டிருப்பதாக அறிந்து அதை நீதிமன்றம் வழியாக மீட்டு, அலகாபாத்தின்  திரிவேணி சங்கமத்தில் கரைப்பதற்காக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார்காந்தி ஒரு ஊர்வலம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன

காந்தியின் அஸ்திக் கலசத்தைத் தாங்கிச் செல்வதற்காகவே மீண்டும் அந்த வேன் தேவைப்படுகிறது என  காந்தி ஆசிர நிர்வாகிகள் அவசரப்படுகிறார்கள், சூழ்நிலையின் தீவிரம்  ஹஸ்மத்திற்குப் புரிகிறது,

ஆனால் தொடர்ந்த கடையடைப்பு காரணமாக அவரால் மெக்கானிக் ஷாப்பைத் திறந்து வேலை செய்யமுடியவில்லை, ஆகவே தன்னால் என்ஜினைச் சரி செய்யமுடியாது என்பதைச் சொல்லிவிடுவதற்காக காந்தி கமிட்டி தலைவரைப் பார்க்க  போகிறார் ஹஸ்மத்

தலைவர் வெளியே போயிருப்பதால் அவர் வரும்வரை அங்கிருந்த காந்தி ம்யூசியத்தைப் பார்வையிடுகிறார், ஆசிரமத்திலிருந்த காந்தியின் புகைப்படங்களையும் கடிதங்களையும் வாசிக்க வாசிக்க காந்தியின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், அவரது உயிர்தியாகம் யாவும் அவருக்குள் ஆழமான பாதிப்பை உருவாக்கிவிடுகிறது,

காந்தி போன்ற மகத்தான ஆளுமைக்குத் தன்னால் முடிந்த சிறிய உதவி என்று அந்தப் பணியை முடித்துத் தருவதாக உறுதி தருகிறார், ஆனால் கடையடைப்பை மீறி எப்படி வேலை செய்வது எனத்தெரியவில்லை, இதனால் இஸ்லாமிய அமைப்பின் தலைவரைச் சந்தித்து நடந்த விஷயங்களைச் சொல்லி தனக்குக் கடை திறக்க அனுமதி கேட்கிறார்,

மதத்தலைவரான ஒம்பூரி, காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர், அவருக்காக நீங்கள் கடைதிறக்ககூடாது என்று கோபப்படுகிறார். இல்லை அவர் இந்துகளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்று தான் கோட்ஸே காந்தியைச் சுட்டிருக்கிறான், நாம் அவரது உயிர்தியாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஹஸ்மத்,

தங்களது கட்டுபாட்டினை மீறி ஹஸ்மத் கடையைத் திறந்தால் மதவிலக்கம் செய்யப்படுவார் என்று ஒம்பூரி அவரைக் கண்டிக்கிறார்.

ஹஸ்ரத் அமைதியான குரலில், தான் கடையைத் திறக்கப்போவதாகச் சொல்லி கிளம்புகிறார், ஹஸ்மத்தின் குடும்பம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, அவர் உறுதியான நம்பிக்கையுடன் கடைச்சாவியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார், நகரவணிகர்கள் யாவரும் ஒன்று திரண்டுவந்து அவரை வழிமறித்து கடையைத் திறக்க கூடாது எனத்தடுக்கிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மத்துரோகி என திட்டுகிறார்கள், ஹஸ்மத் பாய் அமைதியாக தனது தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்கிறார், இதில் ஆத்திரமாகி ஒருவன் அவரிடமிருந்த கடைச்சாவியைப் பறித்துக் கொள்கிறான்

தனது கடைச்சாவியைப் பறித்தவன் தானே முன்வந்து கடையைத் திறக்க வேண்டும் என்று அந்த இடத்திலே உண்ணாவிரதம் இருக்கத் துவங்குகிறார், அப்படியே கிடந்து சாகட்டும் என்று அவரை கைவிட்டு ஊரார் போய்விடுகிறார்கள்,

ஆனால் விடாப்பிடியான உறுதியோடு அவர் பட்டறையின் முன்பாக இரவில் தனியே உட்கார்ந்திருக்கிறார், அவரிடமிருந்து சாவியைப் பறித்து சென்றவன் தனது தவறை உணர்கிறான், தானே சாவியைத் திரும்ப கொண்டுவந்து பட்டறையைத் திறந்துவிடுகிறான்

துருப்பிடித்துப் போன பழைய என்ஜினை சரிசெய்ய ஹஸ்மத் தனது நண்பர்களுடன் போராடுகிறார், முடிவில் வண்டி தயார் ஆகிறது, காந்தியின் அஸ்தி ஊர்வலம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன,

ஹஸ்மத், தனது பணிக்குக் கைமாறாக, காந்தியின் அஸ்தி தங்களது வீதியின் வழியாக கடந்து போக வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் வைக்கிறார், ஏற்கனவே மதக்கலவரமாக உள்ளது, இந்தச் சூழலில் அது தேவையற்ற பிரச்சனையை உண்டாக்கிவிடும் என கமிட்டியினர் பயப்படுகிறார்கள், அப்படி எதுவும் நடக்காது என்று ஹஸ்மத் பாய் உறுதி தருகிறார்

காந்தியின் அஸ்தி ஊர்வலமாக இஸ்லாமியக்குடியிருப்பு பகுதிக்குள் வரும்போது அதை வரவேற்க கூடாது என எதிர்ப்புக்குரல் வலுக்கிறது, ஆனால் காந்தியை நாம் முறையாக வரவேற்க வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிற்கும்  கடிதம் எழுதுகிறார் ஹஸ்மத்

முடிவில் காந்தி ஊர்வலம் வருகிறது, எங்கே கலவரம் மூண்டுவிடுமோ என்ற சூழலில் இஸ்லாமியக் குடியிருப்பு பகுதியில் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு காந்தியின் அஸ்தியை வரவேற்று மரியாதை செய்து அதை உற்சாகமாகக் கொண்டு செல்கிறார்கள்,

காந்தியின் அஸ்தி அந்த நகரில் அதுவரையிருந்த கசப்புணர்வை அழித்துவிடுகிறது, யாவரும் ஒன்று திரண்டு திரிவேணி சங்கமத்தில் காந்தியின் அஸ்தியை கரைக்கப்போகிறார்கள்

காந்தியின் கொள்ளுப்பேரன் அஸ்திக்கலசத்தை கையில் ஏந்தி ஒரு படகில் சென்று சாம்பலை ஆற்றில் கரைக்கிறான், முடிவில்லாமல் ஒடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரில் காந்தியின் சாம்பல் கரைகிறது, கலயத்திலிருந்த மலர்கள் ஆற்றில் மிதந்து போகின்றன, துஷார் காந்தி கைகூப்பி வணங்குகிறார்

காந்தியின் புன்னகையைப் போல ஒளிர்கிறது ஆற்றின் தண்ணீர், இந்தியர்களின் மனதில் காந்தி என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார் என்ற நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது படம்

ஹஸ்மத் பாய் எப்படி காந்திய அறங்களை கைக்கொள்கிறார், அது எவ்வாறு அவர் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர், அது படம் பார்க்கின்றவர்களின் மனசாட்சியைத் தொடுகிறது

மிகவும் இயல்பான, சீரான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரங்கள், குறுங்கவிதைகள் போல ஒளிரும் காட்சிகள் இவையே படத்தின் பலம், பரேஷ் ரவால், ஒம்பூரி முக்கியக் கதாபத்திரங்களில் நடித்திருக்கிறார்கள், பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்,

புதிய இசையமைப்பில் வைஷ்ணவ ஜனதோ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது, படம் முடிந்தபிறகும் அப்பாடல் நம் மனதில் ஒலித்துக் கொண்டேயிருப்பது அதன் சிறப்பு.

காந்திய அறத்தின் முக்கியத்துவம் இன்றுள்ள சூழலில் எவ்வளவு அவசியம் என்பதை அழுத்தமாக படம் வலியுறுத்துகிறது, இதற்காக அவசியம் அனைவரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பேன்

•••

0Shares
0