லியோனார்டு மைக்கேல்ஸ் என்ற அமெரிக்கச் சிறுகதையாசிரியர் எழுதிய குரங்கு வளர்க்கும் பெண் சிறுகதையைக் கவிஞர் க. மோகனரங்கன் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
தமிழினி வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு கதைகளின் தொகுப்பாகிய குரங்கு வளர்க்கும் பெண் சென்ற ஆண்டு வெளியானது.
மிகச் செறிவாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறுகதைகள் கொண்ட தொகுப்பிது.
குரங்கு வளர்க்கும் பெண் கதையில் பியர்டு என்பவன் இங்கர் என்ற விலைப்பெண்ணை ஜெர்மனியில் சந்திக்கிறான். அவள் மீது தீராத ஆசை கொள்கிறான்.
அவளோ பியர்டினை இன்னொரு வாடிக்கையாளன் போலவே நடத்துகிறாள். அவள் மீதான காதலால் தனது தொடர் பயணத்தைப் பியர்டு துண்டித்துக் கொள்கிறான். அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. தான் வளர்க்கும் குரங்கு போல ஒருவன் இருந்தால் போதும் என நினைக்கிறாள்.
இங்கருக்காக நகைக்கடை ஒன்றில் பியர்டு விலைமதிப்பு மிக்க நகை ஒன்றை வாங்குகிறான். அதை வாங்கக் கையில் போதுமான பணமில்லை என்ற போது ஏற்படும் பதற்றம். குழப்பம் கதையில் மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. முடிவில் காதலே வெற்றி பெறுகிறது. கடன் அட்டையைக் கொடுத்து அந்த நகையை வாங்குகிறான். அதை இங்கர் பெற்றுக் கொண்டாளா என்பதே கதை.
கதை முழுவதும் இங்கர் வளர்க்கும் குரங்கு பற்றி பேசப்படுகிறது. ஆனால் அது காட்சிப்படுத்தப்படவில்லை. எதற்காகத் தனியே வசிக்கும் இங்கர் குரங்கு வளர்க்கிறாள். அதற்கு உணவு தருகிறாள். அவள் குடியிருக்கும் வீட்டுப் பெண் கூட அதை ஒரு குற்றமாகக் கருதுகிறாள். அந்தக் குரங்கு பாவமானது என்கிறாள் வீட்டு உரிமையாளர்
காமம் தான் அவள் வளர்க்கும் குரங்கா. இல்லை காமத்தின் குறியீடு தான் அக்குரங்கா.
இங்கர் கதையில் பியர்டினை ஏமாற்றவிரும்பவில்லை. அவள் குரங்கின் மீது காட்டும் பரிவை பியர்டின் மீதும் காட்டுகிறாள். குரங்கின் மூர்க்கம் போல தான் பியர்டு நடந்து கொள்கிறான். ஒரு ஆண் தனக்கு விருப்பமான பெண்ணிற்காக எதையும் செய்வான் என்பதை இக்கதை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.
உண்மையில் பியர்டு தன்னை இழக்க விரும்புகிறான். அதற்கு இங்கர் துணை நிற்கிறாள். இங்கரின் கடந்தகாலம் கதையில் விரிவாகச் சொல்லப்படுவதில்லை. ஆனால் கோட்டுச்சித்திரம் போல சில தீற்றல்கள் வழியாகவே காட்சிப்படுத்தபடுகிறது
கதையில் வரும் நகைவிற்பனை செய்யும் ஒன்றிரண்டு வரிகளில் மிக அழகாக தீட்டப்பட்டிருக்கிறாள்
ஒரு சிறுகதை வாசிப்பவன் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்த வேண்டும். அதை சிறப்பாகவே இக்கதை செய்கிறது.
இங்கர் குரங்கிடமிருந்து எதையோ பெற்றிருக்கிறாள். குரங்கை விடவும் சிக்கலானவர்கள் அவளைத் தேடி வரும் வாடிக்கையாளர்கள் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது.
கதையில் மிக அழகாக, உணர்வுப்பூர்வமாக்க இருவரின் உறவும் பிரிவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இக்கதையை வாசிப்பில் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரிய பணி.
க. மோகனரங்கன் தனது கவிதைகள் மூலமாகவும் மொழிபெயர்ப்பின் வழியாகவும் தனித்த ஆளுமையாக அறியப்படுகிறார்.
அவருக்கு என் நல்வாழ்த்துகள்.
••
