குறுங்கதை 55 கணிதப்புதிர்

கணிதப்புதிர் ஒன்றிற்குத் தீர்வு காணுவதற்காக ஆர் எஸ் சர்மா தனது வாழ்நாளில் எழுபது ஆண்டுகளைக் கழித்திருந்தார். அவரது பதினாறாவது வயதில் ஒரு நாள் பள்ளி ஆசிரியரும் வானவியல் அறிஞருமான அவரது தந்தை அழைத்து அந்தக் கணிதப்புதிரைப் பற்றிச் சொன்னார்.

இதுவரை உலகில் எவராலும் அந்தக் கணிதப்புதிர் தீர்த்துவைக்கப்படவில்லை. ஆகவே அதைச் சர்மா தீர்த்துவிட்டால் உலகின் கவனம் அவர் மீது விழும். கணிதமேதையாகக் கொண்டாடப்படுவார் என்று சொன்னார் தந்தை.

சர்மா தந்தையிடமிருந்தே கணிதம் கற்றுக் கொண்டார். ஒன்பது வயதிற்குள் அவர் முக்கியமான கணித நூல்களைக் கற்று விற்பன்னராகியிருந்தார். தந்தையால் கூடத் தீர்க்கமுடியாத கணிதப்புதிர்களைத் தீர்வு கண்டு சொன்னார் சர்மா. அதன் காரணமாகக் கிராமமே அவரைக் கணிதமேதை என்று கொண்டாடியது.

தந்தை கொடுத்த அந்தக் கணிதப் புதிருக்குத் தீர்வு காணச் சர்மா பகலிரவாக முயன்று கொண்டிருந்தார். படித்து முடித்தவுடன் வேறு ஊருக்கு வேலைக்குப் போனால் கவனம் சிதறிவிடும் என்பதால் உள்ளூர் ஆரம்பப் பள்ளியிலே ஆசிரியராக வேலை செய்தார். அவர்கள் வீடிருந்த வீதியில் வசித்த ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.

பள்ளி விட்டு வீடு திரும்பியதும் தனது அறைக்குப் போய்விடுவார். சில நாட்கள் பின்னிரவு வரை விழித்துக் கணித ஆய்வில் மூழ்கியிருப்பதுண்டு. சர்மாவிற்கு நான்கு பெண்பிள்ளைகள் பிறந்தார்கள். வீட்டுக்கஷ்டங்கள் எதுவும் அவருக்குத் தெரியாது. எந்த நல்ல காரியத்திற்கும் போய் வர மாட்டார். உள்ளூரில் நண்பர்கள் எவரும் கிடையாது. கோவிலுக்குக் கூடப் போய்வருவதில்லை

சர்மாவிற்குக் கணித ஆய்வைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடில்லை.. சில நேரம் அவரைத் தேடி நகரிலிருந்து யாராவது வருவார்கள், அவர்களுடன் கணிதம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். இரண்டு முறை தனது ஆய்விற்காகக் கல்கத்தா போய் வந்தார் சர்மா.

அவரது மரபீரோ முழுவதும் கணித நோட்டுகள் இருந்தன. வெயிலும் மழையும் கடந்து போயின. காலம் கண்முன்னே ஒடி மறைந்தது. தனது ஐம்பது வயதிற்குள்ளாகச் சர்மா கணித புதிரைத் தீர்த்துவிட்டதாக நம்பினார். அதை நிரூபணம் செய்ய வேண்டி பல்வேறு ஆய்வாளர்களுக்கும் கணித சபைகளுக்கும் கடிதம் அனுப்பிக் கொண்டேயிருந்தார். லண்டனுக்கும் அமெரிக்காவிற்கும் கூடத் தனது கணித ஆய்வு முடிவினை அனுப்பி வைத்திருந்தார் சர்மா. எவரிடமிருந்தும் ஒரு பதிலும் வரவில்லை.

தான் ஐரோப்பாவில் பிறந்திருந்தால் தன்னைக் கொண்டாடியிருப்பார்கள் என்று நம்பினார் சர்மா. அவரது கோபத்தை வீட்டோரிடம் காட்டினார். ஆனால். உலகம் தனது ஆய்வினை என்றாவது ஏற்றுக் கொள்ளும் என முழுமையாக நம்பினார்

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். சர்மாவின் மனைவியே தனது உறவு வழியாக மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைத்தாள். எந்த மருமகனையும் சர்மாவிற்குப் பிடிக்கவில்லை. மகளோடு போய்க் கொஞ்சக் காலம் இருக்கிறேன் எனச் சர்மாவின் மனைவி டெல்லி போன போதும் அவர் கிராமத்திலே தங்கிவிட்டார். உலகம் அவரை மறந்து தன்போக்கில் போய்க் கொண்டிருந்தது.

முதுமையின் சோர்வும் தள்ளாட்டமும் அவரைச் சாய்வு நாற்காலியில் முடக்கிப் போட்டது. அப்படியும் காலையிலிருந்து மாலை வரை தனது கணித ஆய்விலே இருந்தார். உலகம் ஏன் தன்னைப் போல ஒரு சாமானிய மனிதனை ஏற்க மறுக்கிறது எனக் கோபப்பட்டார்.

ஒரு மழைக்காலத்தில் அவருக்குக் குளிர்சுரம் வந்தது. அதில் மீளமுடியாமல் இறந்து போனார். சர்மாவின் அறையை அப்படியே பூட்டிவிட்டார்கள். அந்தக் கணித ஆய்வுகள் கண்டுகொள்ளப்படவேயில்லை

சர்மா இறந்த பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பேரன் தாத்தாவின் கணித ஆய்வுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைக் காணக் கிராமத்திற்கு வந்தான். மர அலமாரியிலிருந்த கணிதப் புதிர் பற்றிய ஆய்வுக் குறிப்புகளை வாசித்தான்.

பிறகு தனது அம்மாவிடம் போன் பண்ணிச் சொன்னான்

“இந்தப் புதிரை 1946லே தீர்த்துவிட்டார்கள். அதுவும் பதினாறு வயதான ஒரு ஜெர்மன் மாணவன் தீர்த்துவிட்டான். அதை அறியாமல் தன் வாழ்நாள் முழுவதையும் இதற்காகச் செலவழித்திருக்கிறார். அதுவும் தாத்தா போல இத்தனை படிநிலைகள் இல்லாமலே அந்தப் பையன் புதிரைத் தீர்த்து வைத்துவிட்டான். என்றோ முடிந்து போன ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளாமல் தாத்தா நாட்களை வீணடித்திருக்கிறார்.“

அதைக்கேட்ட சர்மாவின் மகள் வருத்தமான குரலில் கேட்டாள்

“நிஜமாவா சொல்றே. நாளும் பொழுதும் ஆராய்ச்சி பண்ணிகிட்டே இருந்தாரே. ஒரு வாய்ச் சந்தோஷமாகச் சாப்பிட்டதில்லையே. எதையும் அனுபவித்ததில்லையே. அத்தனையும் வீண் தானா.“

பேரன் சொன்னான்

“ஒருவேளை யாராவது இந்த உண்மையைச் சொல்லியிருந்தாலும் தாத்தா ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். கணிதம் ஒரு பித்து அம்மா. அதிலிருந்து எளிதாக விடுபடமுடியாது. பாவம் தாத்தா.“

மறுமுனையில் சர்மாவின் மகள் பேச்சற்று அழும் குரல் கேட்டது.

•••

22.4.20

0Shares
0