பாடிப் பரிசல் பெறுவதற்காக வந்த அவர் மூன்று நாட்களாகக் காத்திருந்தார். கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் என்பது அவரது பெயர்
மலைநாட்டில் பௌர்ணமி தோறும் நிலா வட்டம் கூடுவது வழக்கம். ஊர் கிழார் பாணர்களையும் பாடினிகளையும் வரவேற்று கௌரவிப்பார். பரிசல் தந்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அவர் பாணன் ஒருவனுக்குப் புள்ளிமான் ஒன்றைப் பரிசாக அளித்து அனுப்பினார் என்றார்கள். புள்ளிமானுடன் ஒரு பாணன் நெடுந்தொலைவு நடந்து செல்லும் காட்சி நற்சேந்தனார் மனதில் வந்து போனது.
ஊர் கிழாரின் குடும்பத்தில் ஏதோ பிணக்கு. ஆகவே அவர் வெளியே வரமாட்டார் என்றார்கள். அவரை நாடி பலகாத தூரம் நடந்து வந்த நற்சேந்தனாருக்கு வேறு போக்கிடமில்லை. அவராக அழைக்கும் வரை தான் காத்திருப்பதாகச் சொன்னார்.
நிலா நாளின் இரவுகளில் ஊர்முற்றத்தில் கிழாரும் அவரது உற்றாரும் ஒன்று கூடுவார்கள். கள்ளும் சுட்ட இறைச்சியும் பரிமாறப்படும். துடி இசைத்துப் பாடல் பாடுவதும் கூத்தாடுவதும் நடக்கும். பாணன் தான் புனைந்த பாடலைப் பாடுவான். பின்பு பொருள் கூறுமாறு விளிப்பார் கிழார். பாணன் அப்பாடலின் நயத்தை எடுத்துச் சொல்வான். சில வேளைகளில் கிழாரே பொருள் சொல்வதும் நடக்கும். நிலா வெளிச்சத்தில் கவிதை கேட்கையில் சொற்களும் ஒளிரத்துவங்கிவிடுகின்றன.
ஏடும் எழுத்தாணியும் இல்லாமல் மனதிலிருந்தே பாணன் கவிதையைப் பாடுவான். கேட்பவரும் மனதிலே கவிதையை ஏற்றிக் கொள்வார்கள். பாணன் சென்றபிறகு கிழாரே சில நேரம் கேட்ட பாடலை நினைவிலிருந்து திரும்பச் சொல்லி இன்புறுவதுண்டு.
கவிதையின் வழியே இயற்கை பிரகாசமடைவதைக் கிழார் உணர்ந்திருந்தார். நாரையும் குரங்கும் நிலவும் சூரியனும் காற்றும் மழையும் கவிதையில் இடம்பெற்றவுடன் அபூர்வமான தோற்றம் கொண்டுவிடுகின்றன. பூவிற்குள் தேனிருப்பது போலப் பாடலுக்குள் ஒரு இனிமையிருக்கிறது. அதை ருசிக்கவே கிழார் பாணர்களை வரவேற்றார்
நற்சேந்தனாரைப் போலவே வேறு சில பாணர்களும் அந்த நிலா வட்டத்தில் பாடி பரிசல் பெறக் கிழாரின் முற்றம் நாடி வந்திருந்தார்கள். கிழார் அவர்களைக் காண மாட்டார் என்ற செய்தி அவர்களை வேதனைப்படுத்தியது. காத்திருக்க மனதின்றி அவர்கள் வேறு புரவலரை நாடி நடந்தார்கள். ஆனால் நற்சேந்தனார் புறப்படவில்லை. பாலை நிலம் மழைக்குக் காத்திருப்பது போலக் காத்திருந்தார்..
நிலா நாளில் முற்றம் கூடவில்லை. கிழாரைக் காணவும் முடியவில்லை. புறப்படும் வேளை வந்தது. நற்சேந்தன் கரடுமுரடான மலைப்பாதையில் ஒற்றை ஆளாக நடந்து திரும்பத் துவங்கினார்.
வீட்டில் காத்திருக்கும் கிழத்தியின் முகம். பசி கொண்ட பிள்ளைகளின் கண்கள். ஒடுங்கிய உடலுடன் படுக்கையிலிருக்கும் தந்தையின் உருவம் யாவும் நற்சேந்தன் மனதில் வந்து போனது.
யாரைக் கோவித்துக் கொள்வது. பரிசல் பெற்று வாழ்வதன் கொடுமையை இனி எத்தனை காலம் நீடிப்பது. ஏன் மனது இப்படிக் கவிதையில் கிடந்து உழறுகிறது. சொற்களால் வயிற்றுப்பசியைப் போக்க முடியுமா. நற்சேந்தனின் மனது கொந்தளித்தது. வெறும் கையோடு வீடு திரும்பும் மனிதன் அச்சு முறிந்த தேர் போலாகிவிடுகிறான். தன் மீதே கோபம் கொள்கிறான். இயலாமை அவன் மீது சவாரி செய்ய ஆரம்பிக்கிறது.
நடக்க நடக்க நற்சேந்தனின் மனதில் ஒரு பாடல் உருவாகத்துவங்கியது. கானல் நீரை மெய்யென நம்பி ஒரு யானை தன் தும்பிக்கையை நீட்டி அகன்ற வாய் திறந்து குடிக்க முயன்றது. அது தண்ணீரில்லை. கானல். பேய்த்தேர் என்பார்களே அந்தத் தோற்ற மயக்கம். பாவம் அந்த யானை நீர் கிடைக்காமல் வருந்தி நிலத்தை விட்டு விலகியோடியது. அந்த யானையாகத் தன்னையே நினைத்துக் கொண்டார்
மனதில் நீர்தேடி ஒடும் யானையின் உருவம் தோன்றி மறைந்தது. உலகம் வியக்கும் யானையாக இருந்தாலும் பசியை வெல்ல முடியாது. பசி யானையை மண்டியிடச் செய்யும். அலைக்கழிக்கும். தோற்கடிக்கும். மலை பாதையில் நடந்தபடியே மனதில் ஒவ்வொரு சொல்லாக அடுக்கி ஒரு பாடலை உருவாக்கினார் “விண் தோய் சிமைய விறல்வரை கவாஅன் , வெண்தேர் ஓடுங் கடங்காய் மருங்கில்“ என நீளும் அப்பாடல் பசியின் அடையாளமேயில்லாமல் காதலின் துயரமாக உருமாறியது. அது தான் கவி செய்யும் மாயம்
••