Good Morning என்ற ஜப்பானியத் திரைப்படத்தைப் பார்த்தேன். யசுஜிரோ ஓசு இயக்கியது.கூழாங்கற்கள் அளவில் சிறியதென்றாலும் தனித்துவமான அழகு கொண்டவை. ஓசுவின் படங்களும் அப்படியானதே, அவரது பிரதான கதைக்களம் குடும்பம். ஜப்பானியக் குடும்ப உறவின் பல்வேறு தளங்களை விவரிப்பதே அவரது படங்கள். அது போலவே காலமாற்றம் ஜப்பானிய வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அவரது படங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். ரயில் பாதைகளும் ரயிலும் யசுஜிரோ ஓசுவிற்கு மிகவும் விருப்பமானவை. அவற்றைக் குறியீடுகள் போலவே பயன்படுத்துகிறார்
இப்படத்தில் 1950களில் ஜப்பானிய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நடுத்தரக் குடும்பங்களின் வழியே அடையாளப்படுத்தியிருக்கிறார். உண்மையில் இக்கதை சிறார்களின் ஆசைகளையும் கனவுகளையும் பற்றியது. படத்தின் துவக்கக் காட்சியிலே பள்ளி செல்லும் சிறுவர்கள் வழியில் விளையாடுகிறார்கள். அந்த வீட்டில் சேர்த்துக் கொள்ளப்படாத ஒருவன் வருத்தமடைகிறான்.
சிறுவர்கள் ஆங்கிலம் பயிலுகிறார்கள். ஆங்கிலம் படித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கிய காலமது. கதையில் ஒரு மொழிபெயர்ப்பாளர் வருகிறார். அவரே இதன் சரியான அடையாளம்.
கதை டோக்கியோவின் புறநகரில் நடைபெறுகிறது, ஒரு நவீன குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு கதாபாத்திரங்கள் தான் கதையின் முக்கிய மனிதர்கள். அந்தக் குடியிருப்பிலுள்ள பெண்கள் மகளிர் சங்கம் ஒன்றை நடத்துகிறார்கள். அதற்கு ஒரு பெண் நிர்வாகியாக உள்ளார். சங்கத்திற்கு மாத வசூல் செய்வது முக்கியமான பொறுப்பு
பெண்கள் ஒன்று கூடி அடுத்தவீட்டு விவகாரங்களை வம்பு பேசுவதும் புதிதாக யார் வீட்டில் என்ன பொருள் வாங்கியிருக்கிறார்கள் என்று புறணி பேசிக் கொள்வதும் யதார்த்தமான சித்தரிக்கபட்டுள்ளது.
இன்னொரு பக்கம் அந்தக் குடியிருப்பிலுள்ள சிறுவர்கள் ஆங்கிலம் படிக்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு டிவி பார்ப்பதற்காக பக்கத்து வீட்டிற்குப் போகிறார்கள். டிவியில் ஒளிபரப்பாகும் சுமோக்களின் மல்யுத்த போட்டியை ரசித்துப் பார்க்கிறார்கள்.
தங்கள் வீட்டிலும் இது போல ஒரு தொலைக்காட்சி வாங்க வேண்டும் என்று மினோரு மற்றும் இசாமு என்ற சிறுவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் தாய் ஹயாஷி டிவியின் விலை அதிகம் என்று வாங்க மறுக்கிறார். பிள்ளைகளின் ஆசையைப் பற்றி அறிந்த போதும் தனக்குப் போதுமான வருமானமில்லை என்று தந்தையும் பிள்ளைகளைக் கண்டிக்கிறார். இதனால் இரண்டு பிள்ளைகளும் பெற்றோருடன் பேசக்கூடாது என்று முடிவு செய்கிறார்கள். அவர்கள் பிடிவாதம் என்னவானது. அவர்கள் வீட்டிற்கு டிவி வந்ததா, அந்தச் சிறுவர்கள் என்னவானார்கள் என்பதே படத்தின் பிற்பகுதி கதை
சிறுவர்களை மிகச் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் ஓசு.
ஒரு காட்சியில் பென்சில், ரப்பர் பற்பசை விற்கும் ஒரு விற்பனையாளன் அந்தக் குடியிருப்பிற்கு வருகிறான்.அவன் வீடு வீடாகக் கதவை தட்டி பொருளை விற்பனை செய்ய முயல்கிறான். அவனை ஒரு பாட்டி படுத்தும் பாடு ரசிக்கும்படியாக உள்ளது.
இது போலவே மாத தவணைக்குப் பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அண்டை வீட்டுக்காரன் தனது நிறுவனப்பொருட்களைக் காட்டி தனக்காக எதையாவது வாங்கிக் கொள்ளும்படி ஹயாஷி வீட்டில் நிர்ப்பந்தம் செய்வது அழகான காட்சி.
பசி தாங்கமுடியாத சிறுவர்கள் வீட்டிலிருந்து உணவைத் திருடிக் கொண்டு போய் வெளியே வைத்துச் சாப்பிடுவதும், சின்னப்பையன் கையில் தேநீரை வாங்கிக் குடிப்பதும், போலீஸை கண்டதும் பயந்தோடி வருவதும் சிறுவர்களின் மனவுலகம் எப்படிப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள்.
சிறுவர்கள் ஒரு புறம் இப்படி ஏக்கத்துடன் காத்திருக்கும் அதே சூழலில் அந்தக் குடியிருப்பிலுள்ள ஆண்கள் மதுவிடுதியில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒன்றாகக் குடிக்கிறார்கள். தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வேலை கிடைக்க என்ன செய்வது என யோசிக்கிறார்கள்.
அந்தக் குடியிருப்பில் உள்ள ஹராகுச்சி என்ற பெண் ஹயாஷி தன்னை பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாள் என நினைத்துச் சண்டை போடுவதும் பின்பு தவறு தன்னுடையது என அறிந்து மன்னிப்பு கேட்பதும் ஒரு சிறுகதை போலவேயுள்ளது,
திருடன் நுழைந்துவிட்டால் ஒலி எழுப்பும் அலாரம் விற்க வரும் விற்பனையாளன், ஆங்கில ஆசிரியர். அவரைத் தேடி வரும் நிறுவனப் பெண், அடிக்கடி கூப்பிட்டீர்களா என கணவனிடம் கேட்கும் பெண் என எத்தனை அழகான கதாபாத்திரங்கள்.
ஓசுவின் படத்தில் வரும் சிறுவனைப் போலத் தான் நானுமிருந்தேன். எங்கள் வீட்டில் டிவி வாங்குவதற்கு முன்பு ஒரு நண்பனின் வீட்டில் போய்த் தான் டிவி பார்ப்பேன். தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் சித்ரகார் நிகழ்ச்சி பார்ப்பதற்கு அவ்வளவு கூட்டம் திரண்டிருக்கும். சில நேரம் உள்ளே விடமாட்டார்கள்.
கிராமத்தில் எங்கள் வீட்டிற்கு முதன்முறையாக கறுப்பு வெள்ளை டிவி வந்தபோது இத்தனை தொலைக்காட்சிகள் தோன்றியிருக்கவில்லை. தூர்தர்ஷன் தான் பிரதான சேனல். அதை விட்டால் இலங்கையின் ரூபவாகினி தெரியும். ஆனால் அதற்கு மாடியில் ஏறி ஆன்டெனாவை சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.
படத்தில் சிறுவர்கள் தங்களின் சந்தோஷத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்களுக்கான விளையாட்டுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் எல்லாப் பெற்றோர்களும் பிள்ளைகள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
டோக்கியோவின் புறநகரிலுள்ள வீடுகள் தோற்ற அளவில் ஒன்று போலிருக்கின்றன. ஆனால் அதில் வசிக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனி ரகம். ஓசு தனது திரைக்கதையில் பெரிய திருப்பங்களை உருவாக்குபவரில்லை. ஆனால் அழுத்தமாக உணர்வுகளைத் திரையில் உருவாக்கிக் காட்டுகிறார். குறிப்பாக மறக்கமுடியாத பெண் கதாபாத்திரங்களைத் திரையில் படைக்கிறார். இப்படத்திலும் ஹயாஷியை என்னால் மறக்க முடியவில்லை. அது போலவே. மினோருவும் இசாமுவும் சந்தோஷத்தில் ஒருவரையொருவர் கட்டிப்புரண்டு ஆடும் போது நாமும் கூடவே சந்தோசப்படுகிறோம்.
பால்ய நதியின் படித்துறைக்கு நம்மை மீண்டும் அழைத்துக் கொண்டு போகிறார் ஓசு. வயது வந்தோரின் உலகினை சிறார்களின் வழியே கேலி செய்கிறார். அது தான் இப்படத்தின் தனித்துவம்.
••
25.4.20
