அப்பாவின் நினைவாக வீட்டிலிருந்தது அந்தக் கால்பந்து. அதில் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் யாவும் கையெழுத்திடப்பட்டிருந்தன. மங்கிய அந்த எழுத்துகளைக் கொண்டு ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே வாசிக்க முடிந்தது.
கால்பந்து விளையாட்டில் அப்பா கோல்கீப்பராக இருந்தார். அப்பா பரிசாகப் பெற்ற சில கோப்பைகள் வீட்டிலிருந்தன. ஆனால் அவர் கால்பந்து விளையாடுவது போல ஒரு புகைப்படம் கூட வீட்டில் இல்லை. எத்தனையோ மேட்ச் விளையாடியிருப்பாரே ஒன்றில் கூடவா புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அந்தப் புகைப்படங்களைத் தொலைத்துவிட்டார்களா ?.
எங்கள் திருமணத்திற்குப் பிறகு உன் அப்பா ஒருமுறை கூடக் கால்பந்து விளையாடியதில்லை. ஆகவே எனக்கும் அவர் எப்படி விளையாடுவார் என்று தெரியாது என்றாள் அம்மா.
திருமணத்தின் போது புகைப்படம் எடுத்திருப்பீர்கள் தானே எனக்கேட்டதற்கு அது ஒரு கதை. உன் அப்பா வீட்டில் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே ரகசியக் கல்யாணம் செய்து கொண்டோம். புகைப்படம் எதையும் எடுக்கவில்லை. நீ பிறந்த மூன்றாம் மாதம் அவர் இறந்துவிட்டார் என்றாள்அம்மா
அதைக் கேட்டு வருத்தமாக இருந்தது.
அப்பாவின் முகம் என்பது வெறும் சொற்களால் உருவாக்கப்பட்டது தானா.
அப்பாவை நினைவு கொள்ளும் அவரது நண்பர்கள் பலரும் அவர் ஒரு சிறந்த கோல்கீப்பர் என்று பெருமையாகப் பேசினார்கள். அவரது முன்கோபம் பற்றி நிறையக் கதை சொன்னார்கள்.
அப்பாவின் புகைப்படத்தைத் தேடி அவன் பல ஆண்டுகளாக அலைந்தான். அந்தக் காலக் கால்பந்தாட்ட குழுக்களிடம் விசாரித்தான். எல்லோருக்கும் அப்பாவின் பெயர் தெரிந்திருந்தது. ஒருவரிடமும் புகைப்படமில்லை.
அப்பா படித்த கல்லூரி மலரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அக் கல்லூரிக்குச் சென்றான். ஆண்டு மலரில் கால்பந்தாட்ட அணியின் புகைப்படமிருந்தது. ஆனால் அதில் அப்பா இல்லை. அந்தப் புகைப்படத்திலிருந்தவர்களின் பெயர் விபரங்களைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டான். இதற்காகவே ஊர் ஊராகச் சுற்றினான். எவரிடமும் புகைப்படமில்லை.
திருச்சியிலுள்ள பழைய ஸ்டுடியோ ஒன்றில் கிடைக்கக் கூடும் என்றார்கள். அந்த ஸ்டுடியோ முதலாளி இருந்த நெகடிவ் எல்லாவற்றையும் எரித்துவிட்டதாகக் கூறினார். ஒரு மனிதன் பத்து ஆண்டுகள் தீவிரமாகக் கால்பந்து விளையாடியிருக்கிறான். ஆனால் அவனது ஒரு புகைப்படம் கூட எவரிடமும் இல்லை.
இந்தத் தேடுதல் வேட்டையில் பல்வேறு கால்பந்தாட்ட அணிகளின் அரிய புகைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்தான். அந்தக் குடும்பங்களுக்கு இந்தப் பழைய புகைப்படத்தை அனுப்பி வைத்தான். தமிழகத்தின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் கூட வாழ்க்கை போராட்டத்தில் தோற்றுப் போய்த் துயரத்தில் வாழ்ந்து முடிந்த கதையை அறிந்து கொண்ட போது வருத்தமாக இருந்தது.
பின்னொரு நாள் ஒரு நண்பன் தொலைபேசியில் அழைத்து உன் அப்பா பெயர் எட்வின் செல்வ நாயகம் தானே எனக்கேட்டான். ஆமாம் என்றான்.
சிமெண்ட் பேக்டரி ஒன்றின் ஆடிட்டிற்காகச் சென்றிருந்தேன். பேக்டரி பொன்விழா மலரில் பழைய புகைப்படங்கள் கிடைத்தன. அதில் ஒன்றில் உன் அப்பா இருக்கிறார். அந்தப் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறேன்.
வாட்ஸ்அப்பில் புகைப்படம் வந்திருந்தது. தெளிவற்ற கறுப்பு வெள்ளை புகைப்படம். மைதானத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீரர்கள் ஒன்று கூடி நிற்கிறார்கள். அப்பா கையில் கால்பந்தை வைத்தபடியே நின்றிருந்தார். அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் நிற்கும் விதமும் பந்தை ஏந்திய நிலையும் அவனைப் பரவசப்படுத்தியது. இருபது வயதில் அவன் இருந்தது போலவேயிருந்தது அப்பாவின் தோற்றம். அதே முகச்சாடை. மூக்கு. கண்கள். சரிந்து விழும் தலைமயிர்.
வேகமாக ஒடி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். அப்பாவைக் காணுவது போலவேயிருந்தது. தன்னை மீறி அவன் சிரித்தான். அப்பாவும் சிரிப்பதாக நினைத்துக் கொண்டான்
••
