ரோசி டிசோசா என்ற அந்தப் பெண்ணிற்குக் கடைசிவரை துணையாக இருந்தது அந்த நாய் மட்டுமே. அவள் நோயுற்ற தருணங்களில் கூட அந்நாய் படுக்கையின் அருகிலே இருந்தது. சில நேரம் ரோசி இரவில் நோயின் வேதனை தாங்கமுடியாமல் அழுவாள். அப்போது அந்த நாய் அவளது கைகளை நக்கி தனது அன்பைத் தெரிவிக்கும். அவளை மருத்துவமனையில் அனுமதித்த நாட்களில் நாய் வார்டின் உள்ளே வந்துவிட்டது. மருத்துவமனையினுள் நாயிற்கு அனுமதியில்லை என வெளியே துரத்திவிட்டார்கள். அப்படியும் அந்நாய் மருத்துவமனை வளாகத்தை விட்டுப் போகவேயில்லை.
மனிதர்கள் காட்டாத அபூர்வமான நேசத்தை நாய்கள் காட்டுகின்றன. நாய்களுக்கு அதன் எஜமானர்களின் சுகதுக்கங்கள் நன்றாகத் தெரியும். எஜமானரின் சந்தோஷமே நாய்களின் மகிழ்ச்சி.
ரோசி டிசோசா இறந்த அன்று அந்த நாய் சவ ஊர்வலத்தினைப் பின்தொடர்ந்தது. அவளது கல்லறையை விட்டு அகலவேயில்லை. யாராலும் அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.
ரோசி டிசோசா இறந்த இரண்டாம் நாள் அவளது உயில் பிரிக்கப்பட்டது. அவளது சொத்தின் மதிப்பு ஆறரை கோடிக்கும் அதிகமாகயிருந்தது.
தனதுது சொத்து முழுவதையும் அந்த நாயிற்கே எழுதியிருந்தாள். முன்பு போலவே இனியும் அந்நாய் தனது வீட்டிலே வசிக்க வேண்டும். அதற்கு வேளைக்கு வேளை உணவு தருவதற்காக ஒரு காப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். அந்த நாயைத் தவிர வேறு மனிதர் எவரும் அந்த வீட்டில் வசிக்கக் கூடாது. நாயின் காலத்திற்குப் பிறகு கைவிடப்பட்ட இன்னொரு நாயை அந்த வீட்டில் குடியிருக்கச் செய்ய வேண்டும்.
ஒரு வேளை நாய் இறந்து போனால் அதற்கு முறையாக இறுதி ஊர்வலம் நடத்தப்பட வேண்டும். அதற்கும் கல்லறை கட்டப்பட வேண்டும். அதன் உருவச்சிலை வீட்டின் முகப்பில் வைக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதியிருந்தாள். உயிலை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விசித்திரமான அந்த உயிலை நடைமுறைப்படுத்த வேண்டி அந்த நாயை அவளது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
நாயை அந்த வீட்டின் உரிமையாளர் என்று பதிவு செய்து கொடுத்தார். அதற்கான உணவு தர ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மூன்று வேளையும் அந்த வீட்டிற்கு வந்து உணவு கொடுத்துப் போனார். நாயின் பெயருக்கே வரி விதிக்கப்பட்டது. வீட்டின் முகப்பில் நாயின் பெயரே பொறிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் மாலையில் அந்நாய் தனது வீட்டிலிருந்து கிளம்பி ரோசி டிசோசாவின் கல்லறையை நோக்கிச் செல்லும். அக்கல்லறையின் முன்னால் இரவெல்லாம் படுத்துக் கிடக்கும். விடிகாலையில் வாடிய முகத்துடன் மெதுவாக வீடு திரும்பி வரும்.
பின்பு பகல் முழுவதும் ரோசி டிசோசாவின் படுக்கை அறையில் அவளது கட்டிலை ஒட்டி படுத்துக் கிடக்கும். அவள் வழக்கமாகக் காபி தயாரிக்கும் நேரம் வந்தவுடன் அந்நாய் சமையலறையை நோக்கிச் செல்லும். அவள் இல்லாத போதும் அந்நாய் இருப்பதாகவே நம்பியது.
உணவு கொண்டுவருபவர் அந்நாய் கொஞ்சம் கொஞ்சமாக உணவை விலக்கி வருவதை அறிந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் இப்படி வசித்த அந்நாய் பின்பு ஒரு நாள் ரோசி டிசோசா கல்லறையின் முன்பாகவே இறந்து கிடந்தது.
அந்நாய் இறந்து போனது ரோசி டிசோசா இறந்து போன அதே நாள். அதே நேரம் என்பது தான் ஆச்சரியமான ஒற்றுமை.
••
