மக்கத்துச் சால்வை

ஈழப்படைப்பாளிகளில் எஸ்.எல்.எம். ஹனீபா முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஹனீபாவின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. இலங்கை சென்ற போது ஓட்டமாவடியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அழகான வீடு. நிறையப் பழமரங்கள்.

கிழக்கிலங்கை படைப்பாளிகள் பலருக்கும் அவர் தான் ஞானத்தந்தை. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமியின் கதைமரபில் வரக்கூடியவர். அவரது மக்கத்துச் சால்வை முக்கியமான சிறுகதைத் தொகுப்பு

தேர்ந்த ஓவியர் போலவே ஹனீபா காட்சிகளைக் கண்முன்னே தீட்டிக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் நம் முன்னே நடமாடுகிறார்கள். கிழக்கிலங்கை இஸ்லாமியப் பண்பாட்டை மிகவும் நுட்பமாகக் கதைகளில் பதிவு செய்திருக்கிறார். இயல்பான பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாடு, வாழ்க்கை நெருக்கடிகளை அழுத்தமாக எழுதிச் செல்லும் விதம் என அவரது கதைசொல்லும் பாணி தனித்துவமிக்கது.

ஹனீபாவிடம் லாசரா கதை சொல்வது போன்று தனித்தனி வாக்கியங்களின் தெறிப்பின் மூலம் கதையை முன்னெடுத்துச் செல்லும் பாணியிருக்கிறது. அவருக்கு லாசராவை ரொம்பவும் பிடிக்கும் என்பதோடு சென்னைக்கு வந்து லாசராவை சந்தித்தும் உரையாடியிருக்கிறார். அதைப் பற்றி எழுதியுமிருக்கிறார்.

மக்கத்துச்சால்வை என்ற சிறுகதை இலங்கையின் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எத்தனை அழகான சிறுகதை. சிலம்பு போட்டி பற்றித் தமிழ்நாட்டில் யாரும் இப்படி எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. உண்மையில் இக்கதை ஒரு திரைப்படத்திற்கானது.

ஹஜ் பெருமாளை முன்னிட்டுச் சிலம்பு போட்டி நடக்கிறது. அந்தச் சிலம்புப்போட்டியில் நூருத்தம்பி வாத்தியாரோடு போட்டியிட்டு யாரும் வெல்லமுடியாது. அவ்வளவு திறமைசாலி. கையில் கம்பு எடுத்தால் மின்னல் போலத் தெறிக்கும். அந்தப் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு மக்கத்துச்சால்வையும் பறங்கி வாழைப்பழமும் பரிசாக அறிவிக்கப்படுகிறது. சிலம்பு போட்டி நடக்கும் இடம். பார்வையாளர்களின் ஆர்வம். பெருநாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி ஆகியவற்றை ஹனீபா துல்லியமாக எழுதியிருக்கிறார்.

••

பெருநாளின் மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

பொழுது விடிந்தால் பெருநாள். பையென்னா ஹோட்டெல் ‘கலகல’த்தது. கண்ணாடி ‘ஷோட்கேஸ்’ இரண்டும் ‘பளிச்’ சென்று – உள்ளெ தின்பண்டங்கள் கண் சிமிட்டும். பசு நெய்யில் பையென்னாவின் கைபட்டுப் பக்குவப்பட்ட ‘மஸ்கெற்’ வாசம். ஒரு துண்டின் விலை இருபது சதம். ‘ரீ’ ஒன்று பத்துச் சதம். அதுவும் பையென்னாடெ கையால் ‘நோனா மார்க்’ கட்டிப் பாலில் ரீ போட்டால் தனிச் சுவைதான். இறுகிய சாயமும் கட்டிப்பாலும் அவர் கைபட்டுச் சுவை கூட்டும் வித்தை

••

சிலம்பு போட்டிக்காக வாத்தியார் நூகுத்தம்பி வருவதும் அவர் சிலம்பாடுவதும் திரைப்படத்தின் எடிட்டிங் போல அத்தனை கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

நூகுத்தம்பிதான் வந்துகொண்டிருந்தார். வந்த வேகத்திலேயே அவரின் சைக்கிள் இன்னொருவரின் கைக்கு மாறியது. அடுத்தக் கணமே அவர், விளையாட்டு நடைபெறும் வீதியின் மையத்தில் பாய்ந்து நின்றார். கருங்காலி போன்ற உடல்வாகு. வீச்சுத் தொழிலில் உரம் ஏறிப்போன விசைகொண்ட கைகளும் கால்களும். கட்டுக்டங்காத காளையின் தோற்றம்.

மீண்டும் கைதட்டல்கள் சீழ்க்கை ஒலிகள் – உடுத்தியிருந்த பழைய ‘கார்ட்’ சாரணை களைந்தார். கையிலிருந்த சாரன் பறந்துபோய்ப் பூவரச மரத்தில் ஒட்டிக் கொண்டது. உள்ளெ முழங்கால் மறைந்த சிறுவாலும் கைவைத்த பனியனும்…

விம்மிப்புடைத்த நெஞ்சிலிருந்து வெட்டுவாளாகக் கரங்களிரண்டும் வெளிக்கிளம்பியது. நின்ற நிலையிலேயே கரங்களிரண்டையும் சுற்றி – அந்தரத்தில் பாய்ந்து – திடீரெனக் குனிந்து பூமியைத் தொட்டு முத்தமிட்டு – ஒப்புதல் எடுத்துச் சலாம் வரிசை போட்டார். மகிழ்ச்சிப் பிரவாகம் கடல்போல் கொந்தளித்து அடங்கியது.

அண்ணாவியார் நூகுத்தம்பியோடு போட்டியிடும் சித்தரிப்பும் அபாரம்.

ஒருபக்கம் அகமதுலெவ்வை அண்ணாவியார். மறுபக்கம் நூகுத்தம்பி வாத்தியார்

சுற்றிச்சுற்றி – அந்தரத்தில் கிளம்பி – நான்கு கைகளும் அரிவாள்போன்று மின்னல் வெட்டி…. உருவங்கள் இரண்டு பம்பரம்போல் சுழல்வது மட்டுமே கண்களுக்குப் புலனாகின. சலாம் வரிசை எடுத்ததும் மீண்டும் அவரவரின் மூலைக்குள் போய் நின்று கொண்டார்கள். அகமதுலெவ்வை அண்ணாயாருக்கு வெலிகாமத்து மவுலானா வாப்பாதான் குரு. மவுலானா வாப்பாவின் கையால் தொட்டு வாங்கிய தடியை, அவரின் மகன் தொட்டுக்கொடுக்க மிகவும் பாந்தமாகப் பற்றிக்கொண்டார்.

சிலம்பு சுற்றப்படும் காட்சியை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் பாருங்கள்.

இரு கைகளின் விரல்களுக்கிடையில் நின்று – அக்கம்பு “ங்ய்…ய்” ஊதி நர்த்தனமாடியது. ஒரு தடி, நான்காகி, பதினாறாகிப் பல்கிப்பெருகி கண்களுக்குள் மாயாஜால வித்தை காட்டிற்று.

எதிர்த்திசையில் நூகுத்தம்பி வாத்தியார். தனது குருவான இந்தியக்கார நானாவின் கையால் வாங்கிய பிரம்புடன் நின்றுகொண்டிருந்தார்.

இரு விளிம்புகளிலும் வெள்ளிப் பூண்களால் மோதிரம் போடப்பட்ட மூங்கில் பிரம்பைத் தனது வலது கையால் மட்டுமே எடுத்துச் சுற்றிச் சுழற்றினார். இடக்கை அசையாமலிருக்க வலக்கை மட்டும் சுற்றிச் சுழன்றது. அந்த நுட்பம், லாவகம் அவருக்கே கைவந்த வித்துவம். ஒரு வெள்ளிப் பறவை தனது பரிவாரங்களுடன் தாளலயம் தப்பாது – சிறகடித்துப் பறந்து பறந்து மாயுமே, அவ்வாறு நூகுத்தம்பியின் கையிலிருந்த வெள்ளிப்பூண் பிரம்பு பறந்தலைந்தது.

சிலம்பு போட்டில் அநியாயமாக நூகுத்தம்பி தோற்கடிக்கப்படுகிறார். அண்ணாவியார் ஜெயித்து மக்கத்துச்சால்வை பெறுகிறார். தன்னை ஏமாற்றி ஜெயித்துவிட்டார்கள் என்ற வேதனை நூகுத்தம்பியிடம் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிழவராக ஊர் திரும்பும் நூகுத்தம்பி தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மறுபடியும் சிலம்பு சண்டைக்கு அண்ணாவியாரை அழைக்கிறார். இரண்டு கிழவர்கள் மறுபடியும் மோதிக் கொள்கிறார்கள். முடிவை நீங்களே வாசித்துப் பாருங்கள்

ஹெமிங்வேயின் சிறுகதைகளை வாசிக்கையில் அடையும் மன எழுச்சியை, பரவசத்தை ஹனீபா காக்காவின் கதையில் அடைந்தேன். நாம் கொண்டாட வேண்டிய பெருங்கலைஞன் எஸ்.எல்.எம் ஹனீபா. எத்தனை அழகான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. வாசிப்பில் அவை மிகுந்த மனநெருக்கம் தருகின்றன.

மக்கத்துச்சால்வை தொகுப்பு இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

0Shares
0