குறுங்கதை 62 சிறியதே அழகு

பிரம்மாண்டமான மலையின் அருகில் அமைந்திருந்தது அந்தப் பௌத்த மடாலயம். அதில் இளந்துறவிகள் நிறைய இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு புதுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அன்றைய நாளின் பயிற்சியாகப் பிக்கு தரசக் எதிரேயுள்ள மலையைச் சிறியதாக்கும்படி கட்டளையிட்டார். இவ்வளவு பெரிய மலையை எப்படிச் சிறியதாக்குவது என இளந்துறவிகளுக்குத் தெரியவில்லை. அவர்கள் மலையின் அருகே சென்று கண்மூடி தியானம் செய்தார்கள். சிலர் மந்திரம் சொன்னால் சிறியதாகிவிடும் என நினைத்து உச்சாடனம் செய்தார்கள். ஒருவராலும் மலையைச் சிறியதாக்க முடியவில்லை.
மாலை நேரம் பிக்கு தரசக் அங்கே வந்து எளிய விஷயத்தைக் கூட ஏன் செய்ய இயலவில்லை என்று சிரித்தபடியே ஒரு கலயத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தார்.
சில நிமிஷங்களில் சலனமற்ற தண்ணீரில் மலையின் தோற்றம் தெரிய ஆரம்பித்தது.
பிக்கு தசரக் மென்மையான குரலில் சொன்னார்
“இதோ மலை சிறியதாகிவிட்டது. எல்லாப் பெரிய பொருட்களும் ஏதோவொரு இடத்தில் சிறியதாவது தான் இயற்கை. சிறியதே அழகு. சிறிய குவளை பெரும் ஆற்றின் நீரை ஏந்திக் கொள்வதில்லையா. குவளைக்குப் பானைத் தண்ணீரும் ஒன்று தான். சுழித்தோடும் ஆறும் ஒன்று தான். நீங்கள் குவளையாக இருங்கள்.“
அன்றைக்கு இளந்துறவிகள் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்
••
0Shares
0