அந்த ஊரின் சிறந்த சமையற்காரர்களாக இருந்த எவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதிலும் துரையப்பா, சாமியார் போலச் சாயவேஷ்டி தான் கட்டிக் கொள்வார். சமைக்கிறவன் துறவியாக இருக்க வேண்டும் என்பது போலிருக்கும் அவரது தோற்றம்.
கல்யாண வீடுகளில் துரையப்பா சமையல் என்றால் தனி விசேசம். எல்லாத் திருமண வீடுகளுக்கும் சமைக்க அவர் ஒத்துக் கொள்வதில்லை. துரையப்பாவை கட்டாயப்படுத்தி எவரும் சமைக்க வைத்துவிட முடியவே முடியாது. அவரது சம்பளம் 1001 ரூபாய். அதில் பாதியைக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார்
கல்யாண வீட்டில் அவர் தான் பலசரக்குச் சாமான்கள் வாங்குவார். அவர் தான் என்ன சமைக்க வேண்டும் என்று முடிவு செய்வார். அதில் திருமண வீட்டார் தலையிடக்கூடாது. எரியும் அடுப்பிலிருந்து அரைக்கும் தேங்காய் வரை அவர் கண்முன்னே நடக்க வேண்டும். சமையற்பணியாளர்களை ஒரு போதும் கடிந்து கொள்ளமாட்டார். சமைக்கிறவன் கோபப்பட்டால் சமையல் விளங்காது என்பது அவரது நம்பிக்கை
துரையப்பா ஒரு டம்ளர் தண்ணீரில் விரலை நனைத்துக் கொடுத்தால் போதும் அதுவே ருசிமிக்க ரசமாகிவிடும் என்பார்கள். அவரது கைப்பக்குவம் அப்படி.
பச்சைப் பாம்பை உருவிவிட்டுத் தான் இந்த ருசி கைகூடியது என்று பெண்கள் பேசிக் கொள்வார்கள். சிலர் பிறவியிலே பெற்ற அதிர்ஷ்டம் என்பார்கள்
துரையப்பா திருமண வீடுகளுக்குச் சமைக்கப் போகாத நாட்களில் தனக்கெனச் சமைத்துக் கொள்வதில்லை. அரைமூடி தேங்காய். ஒரு வாழைப்பழம். சில நேரம் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதுண்டு. யார் வீட்டுக்காவது சாப்பிடக் கூப்பிட்டாலும் போகமாட்டார்..
திருமண வீட்டில் துரையப்பா சமையலைச் சாப்பிட்ட பெண்கள் அவர் மீது பொறாமைப்படுவார்கள். இப்படி ஒரு அவியல் தங்களால் வைக்க முடியவில்லையே என்று அவரிடம் பக்குவம் கேட்பார்கள். அவர் சிரித்தபடியே “அதுல என்ன பக்குவம் இருக்கு. எல்லாத்தையும் ஒண்ணா போட்டு வேகவைக்க வேண்டியது தானே“ என்பார். “ரகசியத்தைச் சொல்ல மாட்டாரு“ என்று சலித்துக் கொள்ளும் பெண்களிடம் துரையப்பா சொல்வார்
“கைப்பக்குவம் என்ன இருக்கு. மனப்பக்குவம் தான்மா சமையலுக்கு ருசி. சமையற்காரன் அவசரப்படக்கூடாது. கோபதாபம் இருக்கக் கூடாது. படிப்பாளி சரஸ்வதி தேவியைக் கும்பிடுகிற மாதிரி நாம அடுப்பில் வாழுற அன்னபூரணியைக் கும்பிடணும். சமையல் தானா கைகூடவேண்டும். நம்ம கையில் ஒண்ணுமில்லை.“
துரையப்பா சிறுவயதில் மிகுந்த வறுமையில் கஷ்டப்பட்டார். பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் அவரைப் பாட்டி வீட்டில் வளர்க்க விட்டுப்போனார்கள். பெரும்பாலும் இரவு வேளைகளில் சாப்பிட எதுவும் கிடைக்காது. பட்டினி தான். வெறும் வயிற்றோடு தான் படுத்து கிடப்பார்.
பகலிலும் பாட்டி சமைக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்வாள். பாட்டிக்கு உதவி செய்வதற்காகவே அவர் சமையல் கற்றுக் கொண்டார். பாட்டி இறந்த பிறகு தான் சமையல் வேலைக்குச் சென்றார்.
அந்த நாட்களில் அடுப்பிலிருந்து வரும் வாசனையை வைத்தே அவர் அந்த உணவு என்ன பக்குவத்திலிருக்கிறது என்பதை அறிந்து சொல்லத் துவங்கினார். அந்தத் திறமை தான் அவரைச் சமையற்காரனாக மாற்றியது. பின்பு அவர் சமைக்காத பெரிய திருமணங்களே இல்லை. துரையப்பா வைக்கும் அவியலுக்கும், சாம்பாருக்கும் பால் பாயாசத்திற்கும் அடிமை என்றே ஊர்மக்கள் சொல்வார்கள். இத்தனை பேரும் புகழும் இருந்த போதும் துரையப்பாவிடம் ஒரு விசித்திரமான பழக்கமிருந்தது.
மாதம் ஒரு நாள் புளியந்தோப்பிற்கு வருவார். அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அழைத்துக் கூட்டாஞ்சோறு சமைக்கலாம் என்பார். சிறுவர்கள் ஆசையாக வீட்டிற்கு ஒடி ஆளுக்கு ஒரு கை அரிசி கொண்டு வருவார்கள். சிலர் காய்கறிகள். உப்பு புளி மிளகாய்க் கொண்டு வருவார்கள். ராக்கு தன் வீட்டிலிருந்த பெரிய மண்பானையைக் கொண்டு வருவான்.
கல் அடுப்பு மூட்டி துரையப்பா புளியந்தோப்பிலே சமைக்க ஆரம்பிப்பார். சிறுவர்கள் அவர் சமைப்பதை ஏதோ மாயாஜால காட்சி பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சோற்றோடு காய்கறிகளை வெட்டிப்போட்டு அவர் கூட்டாஞ்சோறு சமைப்பார். இதற்குள் ஒரு பையன் வாழை இலை வெட்டிக் கொண்டு வந்திருப்பான்.
புளியந்தோப்பிற்குள் உட்கார வைத்து சிறுவர்களுக்கு அவரே பரிமாறுவார். பெரிய அகப்பையில் அள்ளி அள்ளி இலையில் வைப்பார். ஆஹா. அப்படியொரு ருசி. நாக்குக் குதியாளம் போடும். சாப்பிடும் சிறுவர்களின் கண்களில் அந்தச் சந்தோஷம் பீறிடும். சிறுவர்கள் சாப்பிட்ட கையை நாக்கால் நக்கி நக்கி ருசிப்பதைக் கண்டு சிரித்துக் கொள்வார்.
கூட்டாஞ்சோறு இரண்டு கை அளவு மட்டுமே பானையில் மிச்சமிருக்கும். அதில் தான் ஒரு கை எடுத்து இலையில் வைத்துச் சாப்பிடுவார். அப்போது மட்டுமே அவர் தன் சமையலைப் புகழ்ந்து கொள்வார். மீதமான ஒரு கை கூட்டாஞ்சோற்றைப் பூமித்தாயிற்குப் படையல் என்று சொல்லி மண்ணில் சிறிய குழி தோண்டி அந்தச் சோற்றைப் போட்டு மூடிவிடுவார். பின்பு கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல நின்றிருப்பார். சில நேரம் அவரது கண்கள் கசிந்து போயிருக்கும். சிறார்கள் மீண்டும் விளையாட ஆரம்பிப்பார்கள். துரையப்பா தன் வீடு நோக்கித் திரும்பிப் போவார்.
ஆயிரம் திருமண வீடுகளில் சமைத்திருந்தாலும் அந்தக் கூட்டாஞ்சோறு தான் அவருக்குப் பிடித்தமான சமையல்.
ருசி நாக்கில் படிந்தவுடன் அது நினைவாகிவிடுகிறது. நல்ல நினைவுகள் ஒரு நாளும் அழிவதேயில்லை. எத்தனை வயதானாலும் நல்ல சாப்பாட்டிற்கு ஏங்குவது அந்த நினைவால் தான்.
பசியைக் கடந்து செல்பவர்களின் கைகளுக்குத் தான் ருசி சாத்தியப்படும் போலும்.
••
