குறுங்கதை 64 ரிங் மாஸ்டர்

சர்க்கஸிலிருந்த அந்தச் சிங்கம் மூன்று வேடிக்கைகளைச் செய்தது. முக்காலியில் ஏறி நின்று இரண்டு கால்களைத் தூக்கி சல்யூட் அடிப்பது. கால்பந்து ஒன்றைக் காலால் உதைத்து விளையாடுவது, நெருப்பு வளையம் ஒன்றில் பாய்ந்து தாவுவது என இந்த மூன்றையும் சிங்கம் செய்யும் போது அரங்கம் அதிரும். பார்வையாளர்கள் கூச்சலிடுவார்கள். கைதட்டுவார்கள்.

ரிங் மாஸ்டர் பணிவுடன் தலை வணங்கி அந்தப் பாராட்டினை ஏற்றுக் கொள்வான். பின்பு சிங்கத்தின் பிடரியைத் தடவி விட்டு ஒரு வளர்ப்பு நாயைப் போல கூண்டிற்குக் கூட்டிச்செல்வான்.

காட்டிலிருந்த வரை அந்தச் சிங்கம் சவுக்கை பற்றிக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. ஆனால் பிடிபட்டு சர்க்கஸிற்குக் கொண்டுவரப்பட்ட நாளில் முதல் சவுக்கடி அதன் மீது விழுந்த போது ஆவேசமாகச் சபதமிட்டபடியே பாய்ந்தது. ஆனால் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலி இறுக்கிப் பிடிக்கவே தடுமாறி விழுந்தது. ரிங் மாஸ்டர் மறுபடியும் சவுக்கால் வேகமாக அடித்தான். சவுக்கடி பட்ட வலி சிங்கத்தை மூர்க்கமாக்கியது.

ரிங் மாஸ்டர் சிரித்தபடியே சொன்னான்.

“உன்னை விட நான் பலசாலியில்லை. ஆனால் தந்திரசாலி“

சிங்கம் அவனைப் பாய்ந்து கொல்ல வேண்டும் எனத் துடித்தது. இரண்டு நாட்கள் அவன் சிங்கத்திற்கு உணவளிக்கவில்லை. பசி தாங்க முடியாமல் இரும்பு கம்பிகளைக் கடிக்க முயன்று தோற்றது. மூன்றாம் நாள் அவன் உணவைக் கொண்டு வந்து கூண்டின் வெளியே வைத்து விட்டு சவுக்கோடு நின்றிருந்தான்.

கண்ணெதிரே உணவு தெரிந்தாலும் சிங்கத்தால் சாப்பிட முடியவில்லை. அவன் இப்போது சவுக்கை உயர்த்திச் “சாப்பாடு வேண்டுமென்றால் இந்த முக்காலியின் மீது ஏறி நில்“ என்று சப்தமிட்டான். அவன் உத்தரவிற்குப் பணிந்து சிங்கம் முக்காலி மீது ஏறி நின்றது. அவன் சவுக்கை உயர்த்தியபடியே “கால்களை உயர்த்திச் சல்யூட் அடி“ என்று சப்தமிட்டான். பழக்கமில்லாத சிங்கம் பசியைப் போக்கிக் கொள்ள அவன் சொன்னபடியே செய்தது.

அப்படித்தான் மூன்று வேடிக்கைகளையும் சிங்கம் பழகியது.

சவுக்கும், கூண்டும், பசியும் தான் தன்னை இப்படியாக்கி வைத்திருக்கிறது என உணர்ந்த சிங்கம் அந்த மனிதனை ஏமாற்றுவதற்காகவே அவன் சொல்வதைச் செய்வதாக நம்பியது. சிறிய நடிப்பின் வழியே தேவையான உணவைப் பெற்றுக் கொள்ளலாம் என்றால் அதைச் செய்ய வேண்டியது தானே எனக் கருதியது சிங்கம்

ரிங் மாஸ்டரும் சிங்கத்தைப் போலவே பசியைத் தாங்கிக் கொள்ள முடியாமலே சர்க்கஸில் வேலைக்குச் சேர்ந்தான். சிங்கத்தின் கூண்டினைப் போலவே அவனுக்குச் சர்க்கஸ் கூடாரம். அதை விட்டு வெளியே போக முடியாது. சிங்கத்திற்குச் சவுக்கு என்பது போல அவனுக்கு முதலாளி தரும் சம்பளம். சிங்கத்தைப் போலவே அவனும் முதலாளியை ஏமாற்றுவதற்காகவே நடித்துக் கொண்டிருந்தான்.

எட்டு ஆண்டுகள் அந்தச் சர்க்கஸ் இந்தியா முழுவதும் சுற்றி வந்தது. எல்லா நாளும் சிங்கம் இந்த மூன்று வேடிக்கைகளைச் செய்து கைதட்டு வாங்கியது. மற்ற நேரங்களில் அது கூண்டிற்குள் படுத்துகிடந்தது. தேவையான இறைச்சியை இரும்பு வாளியில் கொண்டு வந்து போடுவார்கள். மழைக்கால இரவில் திடீரென வானில் இடி இடிக்கும் போது அதற்குக் காடு நினைவிற்கு வரும். அப்போது சிலிர்த்து எழுந்து கொள்ளும். ஆனால் கூண்டினை விட்டு வெளியே போக முடியாது என்ற நிஜம் அதை மறுபடி முடக்கிவிடும்.

எப்போதாவது சில வேளை கூண்டினை சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சிகளைக் காணும் போது யாரும் சவுக்கால் அடித்து வண்ணத்துப்பூச்சிகளை வேடிக்கை செய்யச் சொல்வதில்லை எனப் பொறாமையாக இருக்கும்.

சிங்கத்தின் மனதில் என்றாவது ஒரு நாள் அந்த ரிங் மாஸ்டரை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற கோபம் ஒளிந்திருந்தது.

ஒரு குறிப்பிட்ட நாளில் அவன் சிங்கத்தைச் சர்க்கஸ் அரங்கிற்குக் கொண்டு வந்த போது சவுக்கை கொண்டுவரவில்லை. கலையாத போதையில் நடந்து வந்தவன் சிங்கத்தை முக்காலியில் உட்காரும்படி உத்தரவிட்டான்

எப்போதும் போல நடந்து முக்காலி மீது ஏறி நின்ற சிங்கம் ரிங் மாஸ்டரை வெறித்துப் பார்த்து. இது தான் சந்தர்ப்பம். ஒரே அடி. இத்தனை ஆயிரம் மக்கள் முன்னால் அவனை அடித்துக் கொல்ல வேண்டும். சிங்கத்தின் கண்கள் உக்கிரமாகின. அவன் சிங்கத்தை அடுத்த விளையாட்டிற்கு அழைப்பதற்காகக் கைகளை உயர்த்தினான்

சிங்கம் அவனை நேர்கொண்டு பார்த்தது. அவனும் பார்த்தான். அந்தக் கண்களிலிருந்த வெறி அவன் உடலை அதிரச் செய்தது. தன் கையில் சவுக்கில்லை என்று அறிந்தவுடன் பயத்தை மறைத்துக் கொண்டு கீழே இறங்கி பந்தை எடு என உக்கிரமாகக் கத்தினான்

அவன் மீது பாய்ந்து தாக்கச் சிங்கம் தாவியது, பார்வையாளர்கள் பயத்தில் கத்தினார்கள்.

ரிங் மாஸ்டர் முகத்தில் மரணபயம் பீறிட்டது

சிங்கம் ரிங் மாஸ்டர் மீது பாயாமல் தாவி பந்தின் அருகில் வந்து அதை உதைத்து விளையாட ஆரம்பித்தது. பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தார்கள்

ரிங் மாஸ்டர் சிங்கத்தைத் தடவிக் கொடுத்தான். ஒரு நிமிஷம் அவன் மனதில் அது சிங்கம் என்ற உண்மை தோன்றி மறைந்தது.

சிங்கம் எதுவும் நடக்காதது போன்ற பாவனையில் வளர்ப்பு நாயைப் போல அவன் பின்னால் நடந்தது.

எட்டு வருஷப் பழக்கம் என்பது சாதாரண விஷயமா என்ன.

***

.

0Shares
0