சார்லி சாப்ளின் தனது படங்களில் தானே கதாநாயகனாக நடிப்பதே வழக்கம். ஆனால் அவர் மார்லன் பிராண்டோவை நாயகனாக நடிக்க வைத்து A Countess from Hong Kong என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டுமே சாப்ளின் நடித்திருக்கிறார்.
நேற்றிரவு A Countess from Hong Kong பார்த்தேன். சாப்ளின் முதன்முறையாக வண்ணத்தில் உருவாக்கிய படம்.
சாப்ளின் இயக்கிய லைம்லைட் படம் வெற்றி பெறவில்லை. அத்தோடு அமெரிக்காவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வாழ்ந்த சாப்ளின் A King in New York படத்தை இயக்கி வெளியிட்ட போதும் அது அமெரிக்காவில் திரையிடப்படவில்லை. அப்படமும் தோல்வியைத் தழுவியது
1965ம் ஆண்டு லண்டனில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதில் தான் நடிக்கவில்லை. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான மார்லன் பிராண்டோ, மற்றும் சோபியா லாரன் இருவரும் நடிக்க இருப்பதாகச் சாப்ளின் தெரிவித்தார்
25ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையைச் சாப்ளின் தனக்காக எழுதியிருந்தார். அதில் சில மாற்றங்களைச் செய்து மார்லன் பிராண்டோவிற்குப் பொருத்தமாக மாற்றினார் சாப்ளின்
சாப்ளின் பாணி திரைப்படங்கள் பிராண்டோவிற்குப் பிடிக்காது. ஆனாலும் சாப்ளின் மீதான மரியாதையால் அவர் கதை சொல்வதைக் கேட்பதற்குப் பிராண்டோ சம்மதித்தார். பாரீஸில் படப்பிடிப்பிலிருந்த பிராண்டோவை சந்தித்துச் சாப்ளின் கதை சொன்னார். பாதிக் கதையிலே பிராண்டோ தூங்கிவிட்டார். இது சாப்ளினை அவமானப்படுத்தியது போலாகியது. சாப்ளின் கோவித்துக் கொண்டு திரும்பிப் போனார்.
யுனிவர்சல் ஸ்டுடியோவின் ஒப்பந்தம் காரணமாகப் படத்தில் நடிக்கப் பிராண்டோ ஒத்துக் கொண்டாலும் அவருக்கும் சாப்ளினுக்கும் நிறைய மோதல்கள். படம் பார்த்தால் தெரியும் மார்லன் பிராண்டோ எந்த விருப்பமும் இன்றி நடித்திருப்பார்.
நடிகர்களைப் பொம்மைகளைப் போலச் சாப்ளின் கையாளக்கூடியவர். அது தான் பிராண்டோவிற்கும் அவருக்குமான முதல் மோதல். அத்தோடு இருவரும் வேறுபட்ட ரசனை கொண்டவர்கள். பிராண்டோவின் பாணி நடிப்பை சாப்ளின் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே படப்பிடிப்பு தளத்திலே அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். படத்திலிருந்து தான் வெளியேறிவிடுவேன் எனப் பிராண்டோ மிரட்டினார். படப்பிடிப்பு பாதியிலே நின்றது. ஸ்டுடியோ தலையிட்டுப் படத்தை முடித்துக் கொடுக்கும்படி செய்தது.
படத்தில் சாப்ளின் என்ன சொன்னாரோ அதை மட்டுமே மார்லன் பிராண்டோ செய்திருப்பார். அது தான் படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம். கேரி கிராண்ட் நடித்திருந்தால் இப்படம் வெற்றிகரமாக ஓடியிருக்கும் என்றார்கள் விமர்சகர்கள்
ரஷ்யப் புரட்சியின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி ஹாங்காங்கில் தஞ்சம் புகுந்த ரஷ்யப் பிரபுக்களின் குடும்பங்கள் வெற்றுப்பெருமை பேசிக் கொண்டு வறுமையான சூழலில் வாழ்ந்தார்கள். பிரபுக்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் நடனவிடுதிகளில் நடனமாடினார்கள், சிலர் பாலியல் தொழிலாளியானார்கள். பிழைப்பிற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் உருவாகியிருந்தது.
அப்படியான ரஷ்ய பிரபு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் நடாஷா. ஹாங்காங்கிற்கு வருகை தரும் சவுதி-அரேபியாவிற்கான அமெரிக்கத் தூதரான ஆக்டன் மியர்ஸைச் சந்திக்கிறார். ஒன்றாக விருந்திற்குப் போகிறார்கள். அன்றிரவு கப்பலில் நாடு திரும்புகிறார் ஆக்டன் மியர்ஸ். அவரது அறையில் ஒளிந்து கொண்டு ரகசியமாக அமெரிக்கச் செல்ல முற்படுகிறாள் நடாஷா முறையான பயணச் சீட்டோ, பாஸ்போர்டோ, இன்றிப் பயணம் செய்யும் அவளை வெளியே துரத்திவிட முயல்கிறார் பிராண்டோ. அவளோ தன்னை அழைத்து வந்து ஏமாற்றிக் கெடுத்துவிட்டதாகப் புகார் சொல்வேன் என்று மிரட்டுகிறாள். வேறுவழியின்றி அவளுக்கு உதவி செய்வதாக ஒத்துக் கொள்கிறார் ஆக்டன்.
கப்பலின் உயர் வகுப்பு அறையில் ஒரு இளம் பெண்ணை ஒளித்து வைக்க ஆக்டன் என்ன பாடு படுகிறார். அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு எப்படி உருவாகிறது. அவளுக்காகப் பிராண்டோ என்னவெல்லாம் செய்கிறார் என்பதை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இது சாப்ளினுக்குப் பொருத்தமான கதை. ஆனால் பிராண்டோவிற்குப் பொருந்தவேயில்லை. குறிப்பாகக் காதல் காட்சிகளில் பிராண்டோ சாவி கொடுக்கப்பட்ட இயந்திர பொம்மை போலவே நடந்து கொள்கிறார். கப்பல் ஊழியர்கள் திடீரென அறைக்கதவைத் தட்டும் போது அவரும் லோரனும் ஒடி ஒளிவது அப்பட்டமான சாப்ளின் நடிப்பு. வழக்கமான சாப்ளின் படங்களில் காணப்படும் நகைச்சுவை துணுக்குக் காட்சிகள் இதிலும் நிறைய உள்ளன. படத்தைக் காப்பாற்றுவது சோபியா லாரன் மட்டுமே. தனக்குப் பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து கொண்டு அவர் நடப்பதும். புத்தகம் படித்தபடியே ஒரக்கண்ணால் பிராண்டோவை ரசிப்பதும், கடல் கொந்தளிப்பில் வாந்தி வரும் போது தொப்பியில் வாந்தி எடுக்க முற்படுவதும் குளியலறையில் ஒடியோடி மறைவதும் என அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தொலைக்காட்சி நாடகம் போலவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கப்பல் என்பதால் ஒரே அறை. ஒன்றிரண்டு காட்சிகள் கப்பலின் மேற்தளம் மற்றும் நடன அரங்கு, உணவகம் எனப் படமாக்கியிருக்கிறார்கள்.
மறக்க முடியாத கதாபாத்திரம் ஹட்சன். கட்டாயத் திருமணம் செய்து கொண்ட இரவில் அவர் செய்யும் வேடிக்கை காட்சிகள் வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை. இது போலவே சாப்ளின் மகன் சிட்னி சாப்ளின் இதில் ஒரு முக்கிய வேஷத்தில் நடித்திருக்கிறார்.
பிரான்சில் சாப்ளின் சந்தித்த மசியா சோட்ஸ்காயா என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை யை சாப்ளின் உருவாக்கியுள்ளார். 1922 ஆம் சாப்ளின் ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அவள் ஒரு ரஷ்யப்பாடகி மற்றும் நடனக்கலைஞர். பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்த அவளுக்குச் சாப்ளின் உதவியிருக்கிறார். அந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையிலே இக்கதையைச் சாப்ளின் எழுதியிருக்கிறார்
பிரெஞ்சு இயக்குனரான பிரான்சுவா த்ரூபோ இப்படம் சாப்ளினின் மிகச்சிறந்த படம் என்று கொண்டாடுகிறார். ஆனால் அமெரிக்கப் பார்வையாளர்கள் படத்தை விரும்பவில்லை. படம் பெருந்தோல்வியைத் தழுவியது. இதுவே சாப்ளின் இயக்கிய கடைசித் திரைப்படம்.
