குறுங்கதை 69- சிண்ட்ரெல்லாவின் நரை.

சிண்ட்ரெல்லாவிற்கு வயதாகியிருந்தது. எள்ளுப்பூவின் வெண்மையிலிருந்தது அவளது தலை. இப்போது அவள் மன்னர் நடத்தும் எந்த விருந்திலும் கலந்து கொள்வதில்லை. நீண்டகாலமாகவே அவளது மாயச்செருப்புகள் பயன்படுத்தப்படாமல் தங்கப்பெட்டியினுள் இருந்தன.

அரண்மனை வாழ்க்கை சிண்ட்ரெல்லாவை மிகவும் மாற்றியிருந்தது. மாற்றாந்தாயின் கொடுமையில் வசித்த நாட்களில் பசித்த வேளைகளில் அவளுக்கு உணவு கிடைக்காது. நல்ல உடைகள் இருக்காது. அலங்காரம் செய்து கொள்ள முடியாது. ஏன் சப்தமாகப் பாட்டுப்பாடக்கூட முடியாது.

ஆனால் இளவரசனைத் திருமணம் செய்து கொண்டபிறகு, போதும், போதும் எனச் சலிக்குமளவு உடைகளும் உணவும் உபசரிப்பும் அடைந்துவிட்டாள்.

இளமை சொல்லித்தராத பாடத்தை முதுமை கற்றுக் கொடுத்துவிடுகிறது. அதுவும் அழகிகளுக்கு முதுமை ஒரு சுமையாக மாறிவிடுகிறது.

சில வேளைகளில் சிண்ட்ரெல்லா கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் போது இவ்வளவு தானா வாழ்க்கை. எத்தனை கனவுகள். எவ்வளவு ஆசைகள், அத்தனையும் வடிந்துவிட்டதே என்று ஏக்கம் கொள்ளுவாள். உலகில் எந்தப் பறவைக்கும் நரைத்துப் போவதில்லையே பின் ஏன் தனக்கு மட்டும் தலைமயிர் நரைத்துவிட்டது எனக்கவலை கொள்வாள்.

எந்த இளவரசன் மீது தீராத ஆசை கொண்டிருந்தாளோ அவரை இப்போது பார்ப்பது கூடச் சலித்துவிட்டது. முதுமை மனிதர்களை விடவும் இயற்கையை அதிகம் நேசிக்க வைக்கிறது.

மாற்றாந்தாயின் பிள்ளைகளுக்கும் வயதாகியது. அவர்கள் இப்போது சிண்ட்ரெல்லாவை முன்பு வெறுத்ததை விடப் பலமடங்கு அதிகமாக வெறுத்தார்கள். அவளைச் சதிகாரி என்றார்கள். மாற்றாந்தாய் இறக்கும் போது தேவதைகளுக்குச் சாபம் கொடுத்தாள்.

ஆண்டிற்கு ஒருமுறை புத்தாண்டு விழாவிற்காக மட்டுமே சிண்ட்ரெல்லா தன்னை முழுமையாக அலங்கரித்துக் கொள்வாள். விருந்து மண்டபத்தில் அவளைச் சந்திக்கும் பலரும் அவள் அணிந்திருப்பது மாயச்செருப்புகள் தானா என்று கேட்பது அவளை எரிச்சல் படுத்தும். மனதின் ஆசைகள் தானே மாயச்செருப்புகளாகின. அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று உள்ளூர கோபம் கொள்ளுவாள். வீடும் செல்வமும் வேலையாட்களும் அதிகாரமும் சந்தோஷத்தைத் தந்துவிடுவதில்லை என்று சிண்ட்ரெல்லா நன்றாக உணர்ந்திருந்தாள். அரண்மனை அவளது தனிமையை அதிகப்படுத்தியது. முதுமை அவளது அழகின் பொன் ரேகைகளை மறையச் செய்து கொண்டிருந்தது.

ஒரு நாள் அவள் மாயச்செருப்புகளை அணிந்து கொண்டு தனது பூர்வீக வீட்டிற்குப் பறந்து சென்றாள். இடிந்துகிடந்த வீட்டின் கிணற்றடி அருகே நின்றாள்..

வீட்டைச்சுற்றியிருந்த பூச்செடிகள் ஒன்றுகூட இல்லை. சுற்றுச்சுவரில் கூட்டமாக வந்தமரும் பறவைகளைக் காணவில்லை. புகைப்போக்கி உடைந்து போயிருந்தது. உடைந்து சிதிலமான சுவர்கள். ஆனால் சிறுமியாக இருந்த நாளிலிருந்து அவள் விளையாடிக் களித்த மரம் அப்படியே இருந்தது. அந்த மரத்தை ஆசையாகத் தொட்டுக் கொண்டாள். பின்பு அதிலொரு ஊஞ்சல் கட்டினாள். அதிலே ஏறிக்கொண்டு முன்பின்னால் அவள் ஆடத்துவங்கிய போது காலத்தின் முன்னும் பின்னுமாக மனது ஊசலாட ஆரம்பித்தது.

ஊஞ்சலின் வேகத்தில் திடீரென அவள் தான் முதுமையானவள் என்பதை உணர்ந்தாள். மனது மிகவும் வருத்தமானது. ஊஞ்சலை விட்டு இறங்கி அவள் தனியே நடக்கத் துவங்கினாள்.

அவளது மாயச்செருப்புகள் கிணற்றடியிலே கிடந்தன. வீங்கிய பாதங்களுடன் புழுதி படிந்த சாலையில் அவள் மிக மெதுவாக நடந்தாள். அவளது அரண்மனையோ மிகவும் தொலைவிலிருந்தது.

**

05/05/20

0Shares
0