குறுங்கதை 70 ஒரு சொல்.

ஆம்பலார் என்று அழைக்கப்படும் ஆம்பல் கந்தசாமி கவிராயருக்கும் மேலகரம் கச்சிநாதனுக்கும் இடையில் நன்னூல் சூத்திரம் ஒன்றுக்குப் பொருள் சொல்லுவதில் ஏற்பட்ட கருத்து மோதல் தீராப்பகையாக மாறியது.

ஆம்பலார் தனது கருத்துக்கு ஆதரவாகப் புகழ்பெற்ற தமிழறிஞர் பலரையும் ஒன்று சேர்ந்தார். இது போலவே கச்சிநாதனையும் தமிழ்ப் புலவர்கள் பலரும் ஆதரித்தார்கள்

இந்தக் கருத்துவேறுபாட்டின் காரணமாக ஆம்பலார் கலந்து கொள்ளும் விழா எதிலும் கச்சிநாதன் கலந்து கொள்வதில்லை. கச்சிநாதன் தலைமை பதவி வகித்த பொதிகை தமிழாய்வு மலரில் ஆம்பலாரோ, அவரது மாணாக்கர்களோ கட்டுரை எழுதுவதில்லை என்றானது..

ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் தொல்காப்பியர் விழாவிற்கு ஆம்பலார் வந்த போது கச்சிநாதனின் ஆட்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு அவரை அவமதித்தார்கள். இதற்கு எதிர்வினையாகக் கச்சிநாதன் எழுதிய செந்தமிழ் மணிமாலை நூலைக் கழுதை மீது வைத்து ஊர்வலம் விட்டார்கள் ஆம்பலாரின் மாணாக்கர்கள்.

மகாவித்வான் பட்டுக்கரை சுப்பையா என்ற ஆசிரியரிடம் ஆம்பலாரும் கச்சிநாதனும் ஒன்றாகப் பாடம் கற்றார்கள். ஆம்பலார் வயதில் மூத்தவர். இருவரின் தமிழ் புலமையும் நிகரற்றது. ஆம்பலார் சித்திரகவி எழுதும் திறமை கொண்டவர். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். முன்கோபி. கச்சிநாதனின் தந்தையோ புகழ்பெற்ற வழக்கறிஞர். சைவப்பற்றாளர். தலைமுறையாகத் தமிழ்த் தொண்டு புரியும் குடும்பது.

ஒரேயொரு சொல்லுக்குப் பொருள் கூறுவதில் தான் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். தான் சொல்வதே சரியென இருவரும் வாதிட்டார்கள். சண்டையிட்டார்கள்.

1934ல் கச்சிநாதன் வெளியிட்ட நன்னூல் உரையை தமிழைப் பழிக்கும் செயல் என்று ஆம்பலாரின் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது.

பவணந்தி முனிவர் இயற்றியருளிய நன்னூலைக் காக்கவே வழக்குத் தொடர்ந்ததாக ஆம்பலார் வாதிட்டார்

இருவரும் ஆறு ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்தார்கள். இதனால் ஆம்பலார் தன் சொத்தில் பாதியை இழந்தார். குடியிருந்த வீடு மட்டுமே மிஞ்சியது.

தீர்ப்பு கச்சிநாதனுக்குச் சாதகமாகவே வந்தது. அதன் காரணமாக ஆம்பலாரின் கோபம் மிக அதிகமானது.

கச்சிநாதன் மீதான கோபம் காரணமாக ஆம்பலார் சிவன் கோவிலுக்குப் போவதையே நிறுத்திக் கொண்டுவிட்டார். கச்சிநாதனும் ஆம்பல் என்ற சொல் வரும் பாடல் எதையும் வாசிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார்

முப்பது ஆண்டுகள் தொடர்ந்த இந்தச் சண்டை தமிழ் அறிஞர்களை இரண்டாகப் பிரித்து வைத்திருந்தது.

ஒரு மழைக்காலத்தில் ஆம்பலார் நோயுற்றார். அவரது மாணாக்கர்கள் அன்றாடம் வந்து நலம் விசாரித்துப் போனார்கள். ஒரு நாள் ஆம்பலாரின் கனவில்  இறந்து போன மகா வித்வான் பட்டுக்கரை சுப்பையா தோன்றி நன்னூல் சூத்திரத்திற்குக் கச்சிநாதன் சொன்ன பொருளே சரி என்று சொன்னார். திடுக்கிட்டு எழுந்த ஆம்பலார் விடியும் வரை அதே யோசனையோடு இருந்தார்.

ஆசான் சொல்வது சரி தான். ஏதோ ஒரு வீண் பிடிவாதம் காரணமாகச் சண்டையிட்டுவிட்டோம் என உணர்ந்து உடனடியாக ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி அதைக் கச்சிநாதன் வசம் கொடுக்கும்படி தனது மூத்த மகனை அனுப்பி வைத்தார்

கடிதம் கண்ட கச்சிநாதன் நெகிழ்ந்து போனார். நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் கொடுத்தார்.

அப்படியும் மனது கேளாமல் நாளிதழ் ஒன்றில் தனது மன்னிப்பை ஒரு விளம்பரமாகக் கொடுத்தார் ஆம்பலார். அதை வாசித்த அவரது மாணாக்கர்கள் அனைவரும் தத்தமது சார்பில் கச்சிநாதனுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பி வைத்தார்கள்.

மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாது என நினைத்த ஆம்பலார் கச்சிநாதனுக்கும் அவரது மாணாக்கர்களுக்கும் தன் வீட்டிலே விருந்து தருவதாக அழைப்பு விடுத்தார்.

குறித்த நாளில் கச்சிநாதன் ஆம்பலாரின் வீட்டிற்குத் தன் மாணாக்கர்களுடன் வந்து சேர்ந்தார். ஆம்பாலரின் காலில் விழுந்து வணங்கி “தமிழுக்காகவே வாதிட்டோம்“ என்றார். கைதூக்கிவிட்டபடியே ஆம்பலாரும் “தமிழுக்காகவே மன்னிப்பு கேட்கிறேன்“ என்றார்

ஆம்பலார் தன் கையால் கச்சிநாதனுக்கு அமுது படைத்தார். உண்டு முடித்த கச்சிநாதன் கைகழுவிவிட்டுத் திரும்பும் போது தன் அங்கவஸ்திரத்தைக் கொடுத்துத் துடைத்துக் கொள்ளச் சொன்னார் ஆம்பலார்.

“அய்யா“ எனப் பதறிப்போனார் கச்சிநாதன்.

“மன்னிப்பு கேட்பது இப்போது தான் முழுமையடையும்“ என்றார் ஆம்பலார்.

கச்சிநாதன் தயங்கித் தயங்கி கைதுடைத்துவிட்டுச் சொன்னார்

“தமிழால் இணைந்தோம்.“

••

6.5.20

0Shares
0