மோபிடிக் எனும் இதிகாசம்.

ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபிடிக் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமான இந்நாவலை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். ஒவ்வொரு முறை வாசித்து முடிக்கும் போதும் மாபெரும் இதிகாசம் ஒன்றை வாசித்து மீண்டது போல வியப்பு மேலிடவே செய்யும். மிகவும் நுட்பமாக, கவித்துவமாக எழுதப்பட்ட அமெரிக்க நாவல். 19ம் நூற்றாண்டில் நடைபெற்ற திமிங்கல வேட்டை பற்றிய ஆவணத்தொகுப்பு போல நாவலில் நுட்பமான விபரங்களை எழுதியிருக்கிறார் மெல்வில்.

மோபிடிக் நாவலை நான்கு முறை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். அத்தோடு காமிக்ஸ் புத்தக வடிவிலும் மோபிடிக் வெளியாகியிருக்கிறது. இன்று மோபிடிக் என்பது ஒரு குறியீடாக மாறிவிட்டிருக்கிறது.

ஏன் மோபிடிக் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடலோடிகள் சார்ந்து நிறையப் புனைவுகள் எழுதப்பட்டிருந்தாலும் அவை வெறும் சாகசத்தை மட்டுமே முதன்மைப்படுத்திய சூழலில் மோபிடிக் வாழ்வின் ஆதாரம் எதுவென ஆராய்கிறது. மனித விதியின் செயல்பாட்டினை கேள்விக்குள்ளாக்குகிறது. நாவலில் இரண்டே பெண் கதாபாத்திரங்கள். அதுவும் சின்னஞ்சிறிய கதாபாத்திரங்கள். மற்றபடி முழு நாவலும் ஆண்களின் உலகமே. அதுவும் எதிரெதிர் மனநிலை கொண்ட ஆண்கள்.  அவர்களின் கனவுகள் மற்றும் கடலோடி வாழ்வின் போராட்டங்கள்.

பேரிலக்கியங்களின் சிறப்பம்சமே அது மனித வாழ்வின் அடிப்படைக் கூறுகளை நுணுக்கமாக ஆராய்வதாகும். விதி என ஒற்றைச் சொல்லில் முடித்துவிடக்கூடியதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் ஏன் விதி இப்படி செயல்படுகிறது என ஆராய்கிறது பேரிலக்கியம்.  காலம் தான் பேரிலக்கியத்தின் முக்கிய சரடு.

மோபிடிக் பழிவாங்குதல் என்பது மனிதனின் தீராத வெறி என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இதை இலியட்டிலும் மகாபாரதத்திலும் நாம் காணமுடியும்.

வரலாற்றின் பக்கங்களில் பழிவாங்குதலின் பொருட்டு நடைபெற்ற கொலைகள். வன்முறைகள் மற்றும் திருப்பங்களை நினைவுபடுத்தினால் மோபிடிக்கில் வரும் பழிவாங்குதல் முற்றிலும் வேறுவிதமானது. ஒருவகையில் கடலும் நிலமும் மோதிக் கொள்கின்றன. நிலத்தின் மனிதன் கடலின் திமிங்கலத்தை வெற்றிக் கொள்ள முனைகிறான். ஆனால் திமிங்கலமோ தன்னை வேட்டையாட முனைந்த கேப்டனையும் அவனது கப்பலையும் சிதறடிக்கிறது.

வெள்ளை திமிங்கலமான மோபிடிக்கால் கேப்டன் ஆகாப் தனது காலை இழக்கிறார். செயற்கை கால் அணிந்துள்ள கேப்டன் மோடிபிக்கை பழிவாங்குவதே தன் வாழ்வின் லட்சியமாகக் கொள்கிறார். தன்னைத் தோற்கடித்த எதிரியை தேடி ஒருவன் மேற்கொள்ளும் பயணம் என்பது வீர சாகசங்களுக்கான கதை. ஆனால் அதை மெல்வில் கேப்டன் ஆகாப்பின் பார்வையில் விவரிக்கவில்லை. கடற்பயணத்தோடு தொடர்பில்லாத இஸ்மேலின் வழியாகவே விவரிக்கிறார்.

ஒருவகையில் இஸ்மேலுக்கு மோபிடிக் என்ற திமிங்கலமும் கேப்டன் ஆகாப் என்ற மனிதனும் புரிந்து கொள்ளப்படாத இரண்டு உருவங்களே. இருவரும் அச்சம் கொள்ள வைக்கிறார்கள். இருவரின் விதியும் ஒரே கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு உருவங்களும் இரண்டு முகமூடிகளே.

ஆகாப்பினுள் எரிந்து கொண்டிருக்கும் பழிவாங்கும் தன்மை திமிங்கலத்தை நேர்கண்டதும் உக்கிரமடைகிறது. உண்மையில் அது ஒரு யுத்தம். நிகரற்ற சமர்.

டிரோஜன் யுத்தத்தினை ஹோமர் விவரிப்பதற்கு நிகரானது திமிங்கலத்துடன் மோதும் காட்சி. பல இடங்களில் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டை நினைவுபடுத்துகிறான் ஆகாப். பைபிளில் வரும் மன்னர் ஒருவரின் பெயரே ஆகாப். அந்த மன்னர் மூர்க்கமானவன். அதன் நினைவாகவே இப்பெயரை மெல்வில் வைத்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

ஆகாப் திமிங்கல வேட்டைக்காக நாற்பது ஆண்டுகள் கடலில் சுற்றியலைந்திருக்கிறான். நிலத்தை விடவும் அவனுக்குக் கடலை நன்றாகத் தெரியும். ஆனால் அவனால் வெள்ளை திமிங்கலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்குத் தங்ககாசு தருவதாக ஆகாப் அறிவிக்கிறான். நாவலை வாசிக்கையில் ஆகாப்பின் காலடி ஒசையை நம்மால் கேட்க முடிகிறது.

Call me Ishmael என்ற நாவலின் முதல் வரி மறக்கமுடியாதது. திமிங்கல வேட்டைக்குப் போகும் ஒரு கப்பலில் வேலைக்குச் சேர்ந்த இஸ்மேல் என்ற பள்ளி ஆசிரியரின் குரலது. அவன் வழியாகவே இந்த நாவல் விரிவடைகிறது. நாவலில் தான் எத்தனை மடிப்புகள். எவ்வளவு அபூர்வமான மனிதர்கள். திருப்பங்கள். நாவலை வாசிக்க வாசிக்கச் சீற்றமான கடல் அலைகள் உங்கள் கைகளில் அடிப்பதை உணருவீர்கள்.

திமிங்கல வேட்டை நடக்கும் போது நாமே அதைத் துரத்தும் மனிதராக விடுகிறோம். திமிங்கலத்தின் கண் நம்மைப் பார்ப்பதை உணர முடிகிறது. முடிவற்ற அந்தக் கடற்பயணம் தரும் அனுபவம் நிகரற்றது.

1819-ம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்தவர் ஹெர்மன் மெல்வில். அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அவரது தாத்தா தாமஸ் மெல்வில் இறந்து போய்விட்டார். தான் ஒரு போதும் கண்டிராத தாத்தாவின் நினைவுகளை மெல்வில் தனது படைப்புகளுக்கு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொண்டார். மேஜர் தாமஸ் மெல்வில் (1751-1832) பாஸ்டன் தேநீர் விருந்தில் பங்கேற்றார், என்பதும் சாகசங்கள் நிரம்பிய வாழ்க்கையைக் கொண்டவர் என்பது மெல்விலுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இன்னொரு பக்கம் அவரது மாமா தாமஸ் பாரீஸிற்குச் சென்று அங்குப் புரட்சிகர நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அவரும் மெல்விலின் எழுத்துக்கும் ஆதாரமான மனிதர். இவர்களைப் போலத் தானும் சாகச வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பியே மெல்வில் கடலோடியாகச் செல்ல முனைந்தார்.

1830 ஆண்டு 11 வயதான மெல்விலும் அவரது தந்தை ஆலனும் படகுத்துறை ஒன்றில் வீடு திரும்பக் காத்திருந்தார்கள். எதிர்பாராத சூறைக்காற்றுடன் பெருமழை துவங்கியது. படகு வருமா வராதா என்று தெரியாமல் அவர்கள் படகுத்துறையில் காத்திருந்தார்கள். இடிமின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்தது. அவர்கள் ஒதுங்கியிருந்த இடத்தின் கூரை காற்றின் வேகத்தில் பறந்து போனது. கொட்டும் மழைக்குள் படகிற்காகக் காத்திருந்த அந்த இரவு மெல்வில் வாழ்க்கையில் மறக்க முடியாதது. தந்தையின் நெருக்கத்தை அன்று முழுமையாக உணர்ந்ததாக மெல்வில் குறிப்பிடுகிறார்.

ஒரு தந்தையும் அவரது 11 வயது மகனும் பெருமழையின் ஊடே நிற்கும் பிம்பம் மெல்வில் மனதிலிருந்து மறையவேயில்லை. அன்று கண்ட சூறைக்காற்றின் நினைவை மோபிடிக் நாவலில் கேப்டன் அஹாப் சொல்லும் ஒரு உரையாடலில் காணமுடிகிறது.

வணிகரான தந்தை இறந்த பிறகு மெல்வில் தந்தை ஈடுபட்ட தோல் மற்றும் உரோம வணிகத்தில் ஈடுபட வேண்டிய சூழல் உருவானது. அப்போது அவருக்கு வயது பதினாறு. ஆனால் மனதில் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பெரிய பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கடன் காரணமாகக் குடும்ப வணிகம் நிறுத்தப்படவே சில காலம் கிராமப்பள்ளி ஒன்றின் ஆசிரியராகப் பணியாற்றினார் மெல்வில்.

அந்தப் பள்ளி நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட்டதால் ஒரு ஆண்டு மெல்வில் வேலையில்லாமல் வீட்டிலே இருந்தார். இந்நிலையில் அவரது அம்மாவிற்குக் கொடுத்த கடனைக் கேட்டு மாமா வற்புறுத்தவே உடனே வேலைக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. மெல்விலின் குடும்பத்தில் கடலோடிகள் இருந்த காரணத்தால் அவரை ஒரு கப்பலில் ஊழியராக வேலைக்குச் சேர்ந்துவிட முனைந்தார் மாமா.

அதன்படி நியூயார்க்கிலிருந்து இங்கிலாந்திற்குப் பருத்தி மூட்டைகள் ஏற்றிச் செல்லும் செயிண்ட் லாரன்ஸ் என்ற கப்பலில் எடுபிடி ஆளாக வேலை கிடைத்தது. அந்தக் கப்பலில் பதினேழு பேர் வேலைக்கு இருந்தார்கள். 27 நாட்கள் பயணம் செய்து அக்கப்பல் இங்கிலாந்தை அடைந்தது. அங்கே ஆறு வாரக் காலம் கப்பல் காத்திருக்க வேண்டிய நிலையில் மெல்வில் லண்டனைச் சுற்றிப் பார்த்தார். தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்

பின்பு அந்தக் கப்பலில் இரும்பு சாமான்கள் ஏற்றப்பட்டன நாற்பத்தியெட்டு நாட்கள் கடலில் பயணம் செய்து அக்கப்பல் மீண்டும் அமெரிக்காவை அடைந்தது.

அந்தக் கடற்பயணம் மெல்விலின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. எதிர்காலம் குறித்த பயத்திலிருந்து அவரை விடுவித்தது. அத்தோடு புதிய உலகைக் காணவும் சாகசத்தைத் தேடிப் பயணிக்கவும் தூண்டியது. அவரது இந்த நினைவுகளே மோபிடிக் நாவலில் வரும் இஸ்மேலின் வழியே வெளிப்படுகிறது.

லாரன்ஸ் கப்பலில் சில காலமே வேலை செய்தார். அதன்பிறகு கடனிலிருந்து குடும்பத்தை மீட்க திமிங்கல வேட்டைக்குச் செல்லும் கப்பல் ஒன்றில் வேலை கிடைத்தது.

ஆழ்கடலில் உள்ள திமிங்கலத்தை வேட்டையாடி அதன் எண்ணெய்யைக் கொண்டு வரும் கப்பல்கள் நிறைய இருந்தன. இந்தக் கப்பல் பயணம் மிகவும் கடினமானது. பெரும்பான்மை கப்பல்கள் கடலில் மூழ்கிப் போயிருக்கின்றன. ஒரு முறை திமிங்கல வேட்டைக்குக் கப்பல் புறப்பட்டால் திரும்பி வர நான்கு ஆண்டுகள் ஆகும். அவ்வளவு காலத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள். வேட்டையாடும் கருவிகள். மருந்துப்பொருட்கள் யாவும் கப்பலில் சேகரித்து வைக்கபட்டிருந்தன.

1841-ம் ஆண்டில் அக்யூஷ்னெட் என்ற திமிங்கில வேட்டைக் கப்பலில் மெல்வில் வேலைக்குச் சேர்ந்தார். மிகக் கடினமாக வேலை. கப்பல் ஊழியர்கள் அவரை அடிமை போலவே நடத்தினார்கள். மோசமான உணவு. சீதோஷ்ணநிலை. கடற்பயணம் அவர் உடலை வாட்டியது.

ஏறத்தாழப் பதினெட்டு மாத காலம் நீண்ட அக்யூஷ்னெட் கப்பல் வாழ்க்கையினைத் தாங்க முடியாமல் ஒருமுறை கப்பலிலிருந்து தப்பி, ‘மார்க்யூஸ்ட்’ என்ற தீவைச் சென்றடைந்தார். அங்கே காட்டுமிராண்டிகளிடம் சிக்கிக் கொண்டார்.

தன்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்றே மெல்வில் நம்பினார். ஆனால் எப்படியோ தப்பிப்பிழைத்து ஆஸ்திரேலியக் கப்பல் ஒன்றில் அடைக்கலமானார். தீவிலிருந்த நாட்களில் அவரது காலில் ஒரு காயம் ஏற்பட்டது. ஆறாத காயம் காரணமாக அவரது வலது காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று கப்பல் மருத்துவர் முடிவு செய்தார்.. ஆனால் தொடர்சிகிட்சையிலே அவரது கால் குணமாகியது. இந்த நினைவாகவே கேப்டன் அகாப்பிற்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டது போல மெல்வில் நாவலில் எழுதியிருக்கிறார்.

நான்கு ஆண்டுகள் திமிங்கல வேட்டைக்குச் செல்லும் கப்பலில் கடற்பயணம் மேற்கொண்ட மெல்வில் கடல்வாழ்க்கையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கடல் பற்றிய அவரது அவதானிப்பு மோபிடிக்கில் மிக துல்லியமாக வெளிப்பட்டுள்ளது

Why did the old Persians hold the sea holy? Why did the Greeks give it a separate deity, and own brother of Jove? Surely all this is not without meaning. And still deeper the meaning of that story of Narcissus, who because he could not grasp the tormenting, mild image he saw in the fountain, plunged into it and was drowned. But that same image, we ourselves see in all rivers and oceans. It is the image of the ungraspable phantom of life; and this is the key to it all.

காற்றின் வேகம் மற்றும் அலைகளின் சீற்றம். கப்பல் செல்லும் தொலைவு. திமிங்கல வேட்டைக்காரர்களின் இயல்பு  மற்றும் வரைபடங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார். இந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டதால் தான் மோபிடிக் உலகின் தலை சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

தனது கடற்பயணத்தில் பாலீனிசியத் தீவிலிருந்து வந்த திமிங்கல வேட்டைக்காரன் ஒருவனுடன் மெல்வில் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அந்த மனிதனின் நினைவாகவே மோபிடிக் நாவலில் கியூகெக் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.

வணிகக் கப்பல்கள், திமிங்கில வேட்டைக் கப்பல் என்று மாறி மாறி 21 ஆண்டுகள் கடலில் தன் வாழ்க்கையைக் கழித்தார் பின்பு தனது கடற்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பாஸ்டன் திரும்பினார். அவரது முதல்நாவல் டைப்பி இங்கிலாந்தில் வெளியானது. அதுவும் தற்செயலானதே. மெல்விலின் சகோதரன் மூலம் இந்த அதிர்ஷடம் கிடைத்தது. இங்கிலாந்தில் டைப்பி நாவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகவே முழுநேர எழுத்தாளராக வாழ்வது என மெல்வில் முடிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக ஒமோ என்ற நாவலை எழுதினார். கடலோடிகளைப் பற்றிய கட்டுரைகளை நாளிதழ்களுக்காக எழுதி வரத் துவங்கினார்.

பாஸ்டனின் புகழ்பெற்ற நீதிபதியின் மகள் எலிசபெத்தைத் திருமணம் செய்து கொண்டார் மெல்வில். சில ஆண்டுகளில் இந்தத் திருமண உறவு கசப்பாக மாறியது. மனவேறுபாடு கொண்ட அவரது மனைவி சேர்ந்து வாழ முடியாது எனப் பிரிந்து போனாள். மூத்தமகன் தற்கொலை செய்து கொண்டான். இளையமகனுக்கோ காசநோய்.

தீராத துயரத்தால் பீடிக்கப்பட்ட மெல்வில் எழுத்தின் வழியே மீட்சியைத் தேடி இந்நாவலை எழுத ஆரம்பித்தார். பதினெட்டு மாதங்கள் இந்நாவலை எழுதி 1851ல் முடித்தார். நாவல் இங்கிலாந்தில் மூன்று பாகங்களாக வெளியிட்டப்பட்டது. அமெரிக்காவில் வெளியான போது தான் அதன் தலைப்பு மோபிடிக் என்று வைக்கப்பட்டது

நாவல் வெளியான போது பெரிய வரவேற்பு பெறவில்லை.. மெல்விலின் நண்பரும் எழுத்தாளருமான நதானியல் ஹதேர்ன் மட்டுமே இந்நாவல் கொண்டாடப்படும் என்று ஆறுதல் சொல்லி வந்தார். மோபிடிக் நாவலை நதானியல் ஹதேர்னுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார் மெல்வில்.

இங்கிலாந்தில் மொத்தமே முந்நூறு பிரதிகள் தான் நாவல் விற்றது. அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளில் இரண்டாயிரம் பிரதிகள் விற்றிருக்கின்றன. இன்று மோபிடிக் நாவல் சராசரியாக ஆண்டிற்கு இரண்டு லட்சம் பிரதிகள் விற்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

மோபிடிக்கின் நடையைப் பைபிளிலிருந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார் மெல்வில். அசாதாரணமான நடையில் கதை சொல்லப்படுகிறது. மோபிடிக்கை தேடி ஆழ்கடலில் கப்பல் செல்ல செல்ல நாமும் நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு கடலில் மிதக்க ஆரம்பிக்கிறோம்.

நாவலின் சின்னஞ்சிறு கதாபாத்திரங்கள் கூட முழுமையாக உருவாக்கபட்டிருக்கிறார். இஸ்மேலின் கப்பல் தனது பயண வழியில் ஒன்பது வேறுபட்ட கப்பல்களைச் சந்திக்கிறது. அதன் வழியே அன்றிருந்த திமிங்க வேட்டையின் முழு உலகையும் நாம் காணமுடிகிறது.

கிரேக்க நாடகங்களில் வருவது போலக் கேப்டன் ஆகாப்பின் விதி முன்னறிவிக்கபடுகிறது. அது எப்படி நடைபெறுகிறது என்பதைக் காணுவதற்கே நாவலின் இறுதி வரை நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.

தனது எழுத்தின் மூலம் போதுமான வருமானமில்லை என உணர்ந்த மெல்வில் சுங்கத்துறையின் இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்தார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை மேற்கொண்டார். மிதமிஞ்சிய குடி. மற்றும் வாழ்க்கை துயரம் காரணமாக அவரது தோற்றமும் செயல்களும் மூர்க்கமாகின. காரணமில்லாமல் கோபம் கொண்டார். தொடர்ந்து அவரால் எழுத்தில் கவனம் செலுத்த இயலவில்லை.  மெல்வில் இறந்த போது அது முக்கியச் செய்தியாகக் கூட பத்திரிக்கைகளில் வெளியிடப்படவில்லை.

இன்றோ ஆண்டிற்கு நூறு புதிய கட்டுரைகள் மோபிடிக் பற்றி வெளியாகின்றன.

இருபது வயதில் கரிசல் காட்டின் சின்னஞ்சிறிய கிராமமான மல்லாங்கிணற்றின் வேப்ப மரத்தடியில் கட்டிலில் படுத்தபடியே நான் முதன்முறையாக மோபிடிக் வாசித்த போது இஸ்மேலைப் போலவே இருந்தேன்.

மோபிடிக் என்ற திமிங்கலம் மட்டுமில்லை. நாம் அனைவரும் ஆளுக்கு ஒரு மோபிடிக்கை தேடி துரத்திக் கொண்டிருக்கிறோம். மோபிடிக்கை எதிர்கொள்கிறோம். சமர் செய்கிறோம். வெற்றி தோல்வியைத் தாண்டி இந்த முடிவற்ற மோதல் நடந்து கொண்டேதானிருக்கும்.

ஷேக்ஸ்பியர் ஒரு நாவல் எழுதியிருந்தால் இப்படித்தானிருக்கும் என்று மோபிடிக் பற்றி சொல்கிறார் ரே பிராட்பரி. அது உண்மையே.

தமிழில் மோபிடிக்கின் சுருக்கப்பட்ட பதிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. அதுவும் சுமாரான மொழியாக்கம் . முழுமையாக வெளிவர வேண்டிய முக்கியமான நாவலிது

••

06.05.20

0Shares
0