குறுங்கதை 71 வாஸ்கோடகாமாவின் அடிமை.

1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா கோழிக்கோடு துறைமுகத்திற்குக் கப்பலில் வந்திறங்கிய போது அவனுடன் மூர் இனத்தைச் சேர்ந்த சில அடிமைகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான் மிலா. உண்மையில் அது அவனது பெயரில்லை. அவனது விசித்திர உருவத்தைக் கண்ட மக்கள் அவனை மிலா என்று அழைத்தார்கள்.

மன்னரின் விருந்தினராக வாஸ்கோட காமா மூன்று மாதங்கள் தங்கியிருந்த நாட்களில் மிலா சுற்றுப்புறக் கிராமங்களில் அலைந்து திரிந்தான். நீர் நிலைகளும் வானுயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் மிளகுகொடிகளும் பசுக்களும் அழகான கிராமங்களும் அவனைக் கவர்ந்தன. வாஸ்கோடகாமா கப்பலில் தன்னுடைய நாடு திரும்பும் போது மிலா தான் கேரளாவிலே தங்கிக் கொள்வதாகச் சொன்னான்.

அவனை அங்கே தங்க வைத்தது இரண்டு விஷயங்கள் ஒன்று காத்தாயினியின் சிரிப்பு. மற்றொன்று பலாப்பழம். இரண்டும் ஒரே நேரத்தில் தான் அறிமுகமாயின.

பசுமையின் கோப்பை போல அகன்று விரிந்திருந்த நிலப்பரப்பின் ஊடேயிருந்தது அக்கிராமம். தென்புறத்தில் பெருகியோடும் சிறுநதி. அழகான படித்துறைகள். தென்னந்தோப்புகள். வாழைத்தோட்டங்கள். சிவப்பு ஒடு வேய்ந்த வீடுகள்.

மிலா ஒரு இளம்பெண் தன் வீட்டின் முற்றத்தில் பலாப்பழம் ஒன்றை அறுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். காத்தாயினி என்ற அந்தப் பெண்ணிற்குப் பதினைந்து வயதிருக்கக் கூடும். வெண்கலச்சிற்பம் போன்ற உடல். பருத்த மார்புகள், அடர்ந்த கருங்கூந்தல் கொண்டிருந்தாள்.

அவள் மிலாவை பார்த்துச் சிரித்தபடியே பலாச்சுளை வேண்டுமா என்று சைகையிலே கேட்டாள். அந்தப் பெண்ணின் சிரிப்பு மிலாவிற்குக் குளிர்ந்த தண்ணீர் உடலில் பட்டது போலிருந்தது. ஆசையாகக் கையை நீட்டினான். அவள் பெரிய சுளையாக ஒன்றை அவனது கையில் போட்டாள். அப்படியே அதை வாயில் போட்டு அவன் கடித்து மெல்ல ஆரம்பித்தபோது அவள் சிரித்தபடியே அப்படியே சாப்பிடக்கூடாது. கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும் என்று செய்து காட்டினாள்.

மிலா மறுபடியும் கையை நீட்டினான். இந்த முறை அவளே கொட்டையை நீக்கி கொடுத்தாள். மிலா அதை வாயிலிட்டு மென்றான். இத்தனை இனிப்பான பழத்தை அவன் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. அவன் கை தானே அவள் முன்னே நீண்டது. அவள் இன்னொரு சுளையை அவன் கையில் வைத்தபடியே அவ்வளவு தான் என்று தலையை ஆட்டினாள். பலாச்சுளைகளைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆசை மிலாவிற்கு வந்தது.

அந்த ஊரிலே தங்கிவிட்டான். யார் வீட்டில் சக்கை அறுத்தாலும் அங்கே மிலா சென்று கையை நீட்டியபடியே நின்றிருப்பான். அத்தோடு பலாப்பழத்தைச் சுமந்து கொண்டு வருவதற்கும், மரத்திலிருந்து பறிப்பதற்கும் உதவியாக இருந்தான். கிராமவாசிகள் கோவிலுக்குக் காணிக்கை செலுத்துவது போல மிலாவிற்குப் பலாச்சுளைகளைக் கொடுத்தார்கள்.

சில நாட்கள் அவனைக் கோவிலடிக்கு அழைத்து வந்து ஒரு வேடிக்கை காட்டுவார்கள். அதாவது ஒரு முழுப்பலாப்பழத்தை அவன் ஒருவனே சாப்பிட்டுக் காட்டுவான். அவன் பீமசேனன், அவனுக்கு வயிற்றுநோவு வரவே வராது என்றார் ஒரு கிழவர்.

காத்தாயினி வீட்டின் திண்ணையில் தான் மிலா எப்போதுமிருப்பான். மழைநாளில் கூட வீட்டிற்குள் வர மாட்டான். காத்தாயினிக்காக விறகு வெட்டி தருவான். சில நேரம் அவளது பசுவை மேய்ச்சலுக்கு அழைத்துப் போய் வருவான். காத்தாயினி அவனை வாரம் ஒருமுறை மலைக்கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போய்வருவாள். அவளது சிரிப்பு தான் அவனைக் கட்டிப்போட்டிருந்தது.

ஆறுமாதங்களில் அவன் மலையாளம் பேசக்கற்றிருந்தான். கொச்சையான அவனது பேச்சை காத்தாயினி ரசித்தாள். அவனையே திருமணமும் செய்து கொண்டாள். அப்போதும் அவன் வீட்டுத்திண்ணையை விட்டு உள்ளே வரமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தான். பின்னிரவில் காத்தாயினி திண்ணைக்கு வந்து அவனுடன் படுத்து சுகங்காணுவாள், சந்தைக்கும் போகும் நாட்களில் மிலா ஒரு சிறுமியைத் தோளில் உட்கார வைத்துத் தூக்கிப் போவது போலக் காத்தாயினியை தூக்கிக் கொண்டு நடப்பான். இப்படி ஒரு கணவன் யாருக்குக் கிடைப்பார்கள் என்று ஊர்மக்கள் கேலி செய்வார்கள்.

மிலா அவர்களில் ஒருவனாகியிருந்தான். சந்தையில் சக்கைப்பழம் வாங்க வருபவர்கள் அவனைத் துணைக்கு அழைப்பார்கள். கண்பார்வையிலே அது நல்ல பலாப்பழம் தானா என்று சொல்லிவிடுவான். நோக்குகூலியாக ஒரு நாளைக்கு ஒரு பலாப்பழத்தை அவனுக்குத் தந்தார்கள்.

மிலா அதைச் சுமந்து கொண்டு வரும் அத்தனை சந்தோஷமாக இருப்பான். எப்போதாவது காத்தாயினி அவனது சொந்த ஊரைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விசாரிப்பாள். அவன் பதில் சொல்லவே மாட்டான். கப்பலேறி ஊருக்குத் திரும்பிப் போய்விடுவாயா என்று கவலையாகக் கேட்கும் போது ஒரு போதும் திரும்பிப் போக மாட்டேன் என்பான்.

சில நாட்கள் காத்தாயினி கோபத்தில் சண்டையிடுவாள். அவன் மீது எச்சில் தண்ணீரை ஊற்றித் திட்டுவாள். அப்போதும் பலாமரத்தின் அடியில் போய் உட்கார்ந்து கொள்ளுவான்.

பெரு மழைக்காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் போனது. குடிசைகள் காற்றில் வீழ்ந்தன. மிலா முதன்முறையாக நோயுற்றான். குளிர்காய்ச்சல். திண்ணையில் படுத்துகிடந்த அவன் உடல் கொதித்தது. வைத்தியர் அவனுக்குக் குளிகைகள் தந்து கசாயம் வைத்துத் தரச் சொன்னார். மழை நின்றபோதும் அவன் நோயிலிருந்து மீளவில்லை. ஒரு நாளிரவு அவன் காத்தாயினியினை அழைத்துச் சொன்னான்

“நான் இறந்து போனால் என்னை அந்தப் பலாமரத்தின் அடியில் புதைத்துவிடு“.

அதைக்கேட்டு காத்தாயினி அழுதாள். ஆனால் இரண்டாம் நாளில் மிலா இறந்து போனான். ஊரே திரண்டு வந்து அவனைப் பலாமரத்தின் அடியில் புதைத்தார்கள். அதன் பிறகான நாட்களில் காத்தாயினி வீட்டுப் பலாமரத்தில் பறிக்கப்பட்ட பழங்களின் சுளைகள் கறுப்பு நிறமாக இருந்தன. அதன் சுவை தேனில் ஊறியது போல அமிர்தமாகயிருந்தது. ஊரே கூடி அதைத் தெய்வத்திற்கான மரமாக முடிவு செய்தார்கள். இன்றைக்கும் அந்த மரம் காத்தாயினி வீட்டின் முன் நிற்கிறது. அதன் பழங்கள் கடவுளுக்கு மட்டுமே காணிக்கையாகத் தரப்படுகின்றன.

**

08/05/20

0Shares
0