N பிரசன்ன குமார்
••
நாவல் தொடங்கும் முதல் வார்த்தையில் தொடங்கி நாவல் முழுதும் ஒரு ஜீவன் பயணிக்கிறது. கதை மாந்தர்களான பக்கிரி, ரத்தினம் ஆகியோரது வாழ்வு நிலை, அவர்தம் குடும்பங்களின் நிலை அவர்களுடைய எண்ண ஓட்டங்களின் மூலம் நாயனர்களின் தற்கால வாழ்வியல் முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.
நாவல் சொல்லப்பட்டுள்ள விதம், கதை விரியும் தன்மை ஆகியவை இந்நாவலை வாசகனின் பார்வையில் விலக்காமல், ஒருங்கே நாவல் உடன் பயணிக்க வைக்கிறது.
ஒவ்வொரு கதையின் பின் புலத்திலும் ஒருவர் எவ்வாறு நாதஸ்வரம் வாசிக்கக் கற்று கொள்கிறார், அவருடைய சாதியானது எங்கனம் இக்கலைக்கு எதிரியாக இருக்கின்றது என்பதனை சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அபு இப்ராஹிம், தன்னாசி கதாப்பாத்திரங்கள் மூலம் இக்கலையில் மேன்மையுற்றவர்கள் காண்பிக்கப்படும் அதே வேளையில், ஒருவன் இக்கலையின் அருள் இருந்தும் சாதி என்ற ஒற்றைக் காரணத்தினால் அவனுக்குத் தண்ணீர் கொடுக்காத ஊர் மக்களும் இருந்தார்கள் என நாயணர்களின் துயரையும் சொல்கிறது இந் நாவல்
நாவலின் ஒரு இடத்தில் வழி தவறி வேறொரு கிராமத்திற்குப் பக்கிரி மற்றும் அவன் ஆட்கள் சென்று விடுவார்கள். சாப்பிட ஹோட்டல் எதுவும் அங்கு இருக்காது. அதனால் அவர்கள் பசிக்கு ஏதேனும் சாப்பிட கொடுத்தால் புண்ணியமாகப் போகும் என்பார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். என்ன சாதி என்று கேட்டு சாப்பாடு போடாமல் நிறுத்தி விடுவார்களோ என்று பயப்படுவார்கள். ஆனால் எந்த வீட்டிலும் யாரும் அவர்களிடம் சாதி கேட்கவில்லை. இந்தச் சூழல் உணர்த்தும் வலியை உணர முடிந்தது, அதன் வலி பெரியது.
நாவலில் வரும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஒவ்வொன்றும் தனிதன்மையுடையுது. கரகாட்டகாரிகள், பக்கிரியின் சிறு வயது நண்பன் குமார், சரசு, தன்னாசி, ஹாக்கின்ஸ், ராகவயா, ஊமை ஐயர். அதுவும் ஊமை ஐயர் கதாபாத்திரம் அவர் நாதசுரம் கேட்கும் பொழுது எந்த வேலை இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு நாதசுரத்தை கேட்கச் சென்று விடுவார். நன்றாக இருந்தால் கற்கண்டு கொடுப்பார், இல்லை என்றால் வெளியே போய் விடுவார், அவர் முகம் கோனி விடும் என்ற அமைப்பும் கதாபாத்திரதிற்குப் பலம். மேலும் ஊமை ஐயர், ANS ற்கு கழுதை விட்டை தரும் இடம், வேறொரு ரகம்.
நாவலில் ஒரு கதை வருகிறது. கொக்கு போன்ற சில பறவைகள் ஒரு ஊருக்குச் செல்கிறது. அவை வந்து சென்றவுடன் மழை, காலத்தே பெய்கிறது. ஒரு கட்டத்தில் அவ்வூரில் வாழும் மக்கள் மணம் மாற்றம் அடைகிறது. மழை பெய்யவில்லை சில வருடங்களாக, மறுபடியும் அப் பறவைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். ஒரு பறவை மட்டும் வருகிறது. அது சிந்தும் ஒரு சொட்டுக் கண்ணீரினால் வேம்பு துளிர்க்கிறது. அதன் காரணமாக அந்த ஊருக்கு மழை பெய்கிறது.பறவைகள் அங்குள்ள மக்களிடம் கேட்கிறது. மண்ணு வேணுமா? பொண்ணு வேணுமா? என்று. மனித மனங்களின் மாற்றத்தை காட்சிப்படுத்திய பதிவு.
தன்னாசியின் சிறு பிராயமும், சரசு இறந்து விட்ட செய்தி கேட்ட பிறகு, தடுமாற்றத்துடன் சரசு, சரசு எனக் கைகளைத் துழாவிய படி அவள் வீட்டை நோக்கி செல்லும் தருணமும், மேற்கொண்டு படிக்க முடியாமல் செய்தது. ஒரு வாழ்வியலை வலியை எழுத்தாளனாக அக்கதாபாத்திரம் மூலம் என்னுள் கடத்தினீர்கள். தன்னாசி சரசுவை எரித்த மயானத்தில் ஆடைகளின்றிச் சாம்பலை பூசி அவள் நினைவால் உக்கிரம் உற்று இருக்கும் தருணமும், அதனைத் தொடர்ந்து வரும் நாதசுர இசை வரும் திசை நோக்கி கண் இல்லாமல் தடுமாறி தென்பாடியரை சந்திக்கும் தருணம் அவர் மூலம் நாதசுர இசை கற்றுக்கொண்டு பின் பெரிய வித்துவானாகி அவன் கச்சேரிக்கு மக்கள் காத்திருக்கும் தருணம் அபாரமானது. வாழ்வின் எந்தத் துயரில் இருந்தும் அல்லது தோல்வியில் இருந்தாலும் ஒருவன் அதனைக் கடந்து எழுச்சி பெற முடியும் என்ற ஒளியை இந்தத் தருணங்கள் கொடுத்தன.
சொல்ல நினைத்ததில் ஒரு சிறு பகுதி மட்டுமே வார்த்தை வடிவில் இக் கடிதத்தில் உள்ளது. மீதம் என் நினைவில். நாதசுர கலைஞர்களின் வாழ்வியலை பற்றியும், அக்கலையின் மேன்மையையும் சஞ்சாரம் போல் பிறிதொரு புத்தகம் தருமா என்று எனக்குத் தெரியவில்லை
•••