சிரிக்க மறந்த ஜோஹன்.

1967ம் ஆண்டு வெளியான The 25th Hour என்ற படத்தினைப் பார்த்தேன். ஹென்றி வெர்னுவில் இயக்கிய படம்.

ருமேனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் தேவாலயத்தில் ஜோஹன் மோரிட்ஸின் குழந்தைக்கு ஞானஸ்நானம்  செய்து வைக்கப்படுகிறது. தம்பதிகள் குழந்தையோடு வீடு திரும்புகிறார்கள்.

வீட்டின் வெளியே விருந்து நடக்கிறது. ரேடியோவில் இனிமையான சங்கீதம் கேட்டபடியே குழந்தை தொட்டிலில் உறங்குகிறது. திடீரென ரேடியோவில் ஹிட்லர் பேசத்துவங்குகிறார். குழந்தை திடுக்கிட்டு அழுது கத்துகிறது. அப்போது தான் ஜோஹன் முதன்முறையாக ஹிட்லரின் பேச்சைக் கேட்கிறான். அவனுக்கு அந்த அதிகாரக் குரலைப் பிடிக்கவில்லை. ஆனால் பாதிரியார் எதிர்காலம் மிக மோசமாக இருக்கப்போகிறது என்று முன்னறிவிப்பு செய்கிறார். அது போலவே நடப்பது தான் கதை

ஜோஹனின் மனைவி மீது ஆசை கொண்ட உள்ளூர் காவல்துறை அதிகாரி டோப்ரெஸ்கோ பொய்யாக ஜோஹன் ஒரு யூதன் என்று சான்று அளித்து அவனைக் கைது செய்து தண்டனை முகாமிற்கு அனுப்பிவிடுகிறான். ஜோஹன் தான் யூதனில்லை என்று நிரூபிக்கப் பல்வேறு விதங்களில் முயல்கிறான் அது முடியவேயில்லை.

இன்னொரு பக்கம் ஜோஹனின் மனைவி நீதி கேட்டு அதிகார மையங்களை அணுகுகிறாள். அலைக்கழிக்கப்படுகிறாள்.  ஒரு காட்சியில் அவள் மந்திரியின் அறைக்குப் போய்ப் புகார் தெரிவிக்கிறாள். புகாரைக் கேட்பது போல நடித்தபடியே படம் வரைந்து கொண்டிருக்கிறான் அதிகாரி. அங்கேயும் அவளுக்கு நீதி கிடைக்கவில்லை

தான் யூதனில்லை என்று தொடர்ந்து முறையிடுகிறான் ஜோஹன். இதனால் அவனது பூர்வீகம் குறித்து விசாரித்துத் தகவல் அனுப்பி வைக்கும்படி ராணுவ அதிகாரி உத்தரவிடுகிறான்.  பதில் வருகிறது

அந்த காட்சியில் ஜோஹன் ராணுவ உயரதிகாரியை சந்திக்க மிக மகிழ்ச்சியோடு செல்கிறான். அது தான் படத்தில் அவன் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ஒரே காட்சி.

அவனது மனைவி சூசன்னா அவனொரு யூதன் என அறிந்து விவாகரத்து செய்துவிட்டாள் என்று டோப்ரெஸ்கோ புதிய பொய்ச் சாட்சியம் ஒன்றினை தயாரித்துப் பதிலாக அனுப்பி வைக்கிறான்

ஜோஹன் கால்வாய் அமைக்கும் வேலையில் அடிமை போல உழைக்கிறான். ஒரு நாள் நான்கு யூதர்கள் அங்கிருந்து தப்பிப் போகிறார்கள். அவர்களுடன் ஜோஹனும் தப்பிப் போகிறான். அவர்கள் ஹங்கேரிக்குப் போய்விடுகிறார்கள். அங்கே அவன் யூதனில்லை என்பதால் உதவி மறுக்கப்படுகிறான். ஒன்றரை வருஷம் நான் யூதனாக இருந்தேன் என்கிறான் ஜோஹன். அதை எவரும் ஏற்கவில்லை

காவல்துறையினரால் மீண்டும் பிடிபடுகிறான். எதிர்பாராமல் அவன் ஒரு ஆரியன் என  எஸ்.எஸ். அதிகாரியால் கண்டுபிடிக்கபட்டு ஜெர்மனிய ராணுவத்தில் வேலை கிடைக்கிறது. ராணுவ வீரனாக மாறுகிறான். ஆனால் போரில் ஹிட்லர் தோற்று ரஷ்யா ஜெயிக்கிறது. மறுபடியும் அவன் பிடிபட்டு ஜெர்மானியன் எனத் தண்டனை முகாமில் அடைக்கப்படுகிறான்

தான் யார்  என்று அவனுக்கே தெரியவில்லை. தண்டனை முகாமிலிருந்து தப்பி வீடு போக முடியாதா, மனைவி பிள்ளைகளைப் பார்க்க முடியாதா என்று அவன் தவிக்கிறான். எப்படி அவன் குடும்பத்துடன் ஒன்று சேருகிறான் என்பதே படத்தின் மீதக்கதை.

ஆன்டனி குயின் ஜோஹனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தண்டனை முகாமிலிருந்தபடியே தனது மனைவிக்குக் கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுகிறார். அந்தக் கடிதம் கிழித்தெறியப்பட்டுக் குப்பைத் தொட்டியில் போடப்படுகிறது. ஆத்திரத்துடன் அதை எடுத்துக் கொண்டு நீதி கேட்டு வாதிடுகிறார். அந்தக் காட்சியில் அவரது நிர்கதியும் மன்றாடலும் மனதைத் தொடும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

ஜோஹனின் மனைவி உள்ளூர் பாதிரியோடு மறுபடியும் அமைச்சரைச் சந்தித்துத் தன் கணவர் தவறுதலாகப் பிடித்துக் கொண்டுபோகப்பட்டார் என்று முறையிடுகிறாள். அப்போது மந்திரியின் உதவியாளர் பாதிரிகள் இது போன்ற அரசாங்க விஷயத்தில் தலையிடுவதில் முறையில்லை என்று கண்டிக்கிறான். நீதி கேட்பதும் பாதிரியின் வேலை தானே என்று அவர் பதில் சொல்கிறார். இல்லை இது ராஜத்துரோகத்திற்குத் துணை செய்யும் பணி. என்று அவரை மிரட்டி அனுப்பி வைக்கிறான். கதவு வரை சென்ற பாதிரியார் உங்கள் அதிகாரத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள் என்று அறிவுரை கூறிச் செல்கிறார்

ஜோஹனுக்கு உதவி செய்யும் மருத்துவர் ஒரு சிறந்த கதாபாத்திரம். அவர் ஜோஹனுக்கு பல்வேறு விதங்களில் உதவி செய்ய முற்படுகிறார். ஆனால் சூழல் ஜோஹனை மறுபடியும் கைதியாக்குகிறது. முகாமிற்கு அனுப்பி வைக்கிறது.

கான்ஸ்டன்டின் விர்ஜில் ஜியோர்கியு எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது படம்.

ஒரு எளிய ருமேனிய விவசாயியின் வாழ்க்கையை யுத்தம் எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை மிக அழகாக விவரித்துள்ளார்கள். ஜோஹனின் மனைவி சுசன்னாவாக விர்னா லிசி நடித்திருக்கிறார். உள்ளூர் காவல்துறை அதிகாரி நிக்கோலாய் டோப்ரெஸ்கோயினைச் சமாளிக்கும் விதம் மற்றும் பாதிரியோடு நீதிகேட்டுக் காத்திருக்கும் தருணம் என மிக அழகாக நடித்திருக்கிறார் விர்னா லிசி.

உள்ளூர் பாதிரியின் மகன் ஒரு எழுத்தாளர். அவர் முதற்காட்சியிலே வருங்காலம் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கிறார். கடைசியில் அவரும் கைதியாகி முகாமில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவரது மனைவி ஒரு யூதப்பெண்.

கடைசியில் புகைப்படக்கலைஞர் ஒருவன் குடும்பத்துடன் இருக்கும் ஜோஹனை சிரிக்கச் சொல்கிறார். அவனால் சிரிக்க முடியவில்லை. அழுகையை அடக்கிக் கொண்டிருக்கிறான். அவன் மட்டுமின்றி அவன் மனைவியும் அழுகையோடு தானிருக்கிறாள். சந்தோஷமாக ஆடிப்பாடி மகிழ்ந்த ஒரு குடும்பம் சிரிக்க மறந்த நிலையில் நிற்பது மறக்கமுடியாத காட்சி.

படத்தில் ஹிட்லர் காட்டப்படுவதில்லை. ராணுவத்தின் பலம் பெரிதாக காட்டப்படுவதில்லை. ஆனால் ராணுவத்தின் அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை துல்லியமாக காட்டிவிடுகிறார்கள்

எதிர்பாரத வீழ்ச்சி ஜோஹனை நிலை குலையச் செய்கிறது. அவன் பெயர் படம் முழுவதும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதை எப்படி உச்சரிப்பது என்று ஒரு காட்சியில் கேட்கிறார்கள். இன்னொரு காட்சியில் அவன் யூதனா என்பதற்கு அவனது ஆணுறுப்பு சோதித்து பார்க்கபடுகிறது. அந்தக் காட்சி சதன் ஹசன் மண்டோவின் ஒரு கதையினை நினைவுபடுத்தியது.

நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு தருணத்தில் யூதன் தான் என்று ஒரு கதாபாத்திரம் படத்தில் சொல்கிறது. யூதர்களின் இந்தக் குரல் நம் மனசாட்சியைத் தொடுவதாகவே உள்ளது.

••

0Shares
0