நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. பூவும் பொட்டும் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கோவர்த்தனம். பாடல் படமாக்கப்பட்டவிதம் அத்தனை சிறப்பாகயில்லை. படமும் சுமாரே. கண்ணதாசன் எழுதிய பாடல் TMS மற்றும் P.சுசிலா இனிமையான குரல் கொடுத்துப் பாடியிருக்கிறார்கள். 1968-இல் பூவும் பொட்டும் வெளிவந்தது
இந்தப் பாடல் ரேடியோவில் கேட்டுக் கேட்டு மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது.
எப்போதும் இந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினாலும் மறுநிமிசம் மனது பின்னோக்கிப் போய்விடுகிறது. இளமையின் படிக்கட்டுகளில் இறங்கத் துவங்கி விடுகிறேன்.
1993ல் ஒரு நாள் இரவு எங்கே போய்த் தங்குவது எனத்தெரியாமல் கே.கே.நகரிலிருந்த நண்பனின் அறைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தேன். ரேஷன் கடையை ஒட்டிய வீடு ஒன்றிலிருந்து இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ரேடியோவிலா, டிவியிலா எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு அடி முன்னால் எடுத்து நடக்க முடியவில்லை. அப்படியே அந்த வீட்டின் முன்பாகவே பாடல் முடியும் வரை நின்றிருந்தேன்
ஏன் என்று அறியாதபடி கண்கள் கசிந்தன. பாடல் முடிந்தபோதும் அதே இடத்தில் நின்றபடியே இருந்தேன். நண்பனின் அறைக்குப் போகவில்லை. மாறாகச் சைதாப்பேட்டைக்குப் பஸ் பிடித்துச் சென்று இரவு மதுரை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன். மனதில் அந்தப்பாடல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எதற்காக ஊருக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறேன் என்று காரணமே புரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் என் வீட்டிற்கு என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தது.
இது நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் ஒரு பிள்ளையார் கோவில் முன்பாக நடைபெற்ற ஒரு மெல்லிசைக் கச்சேரியில் இந்தப் பாடலை ஒரு பெண் பாடிக் கொண்டிருந்தார். சாப்பிடுவதற்காகப் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சட்டென நண்பன் பைக்கை நிறுத்திப் பாடலை கேட்டுவிட்டுப் போவோம் என்றான். இருவரும் அப்படியே பைக்கை நிறுத்திவிட்டுப் பாடலைக் கேட்டோம்.
பாடல் முடிந்த போது சபாஷ் ஒன்ஸ்மோர் என்றொரு உரத்த சப்தம் கேட்டது. ரிக்சா ஒட்டும் கிழவர் கைதட்டியபடியே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சுடிதார் அணிந்த அந்தப் பாடகியும் வெள்ளை சட்டை அணிந்த டிஎம்எஸ் குரலில் பாடும் உயரமான ஆணும் கூச்சத்துடன் அந்த நன்றியை ஏற்றுக் கொண்டார்கள்.
இசைக்குழு மறுபடியும் நாதஸ்வர ஒசையிலே பாடத் துவங்கியிருந்தார்கள்
••
நாதஸ்வர ஓசையிலே
••