The Story of the Weeping Camel என்ற புகழ்பெற்ற டாகுமெண்டரி படத்தை இயக்கிய பைம்பசுரான் டாவா (Byambasuren Davaa) வின் அடுத்தப் படமான Two Horses of Genghis Khan என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2009ல் வெளியான படமிது. மங்கோலியத் திரைப்பட இயக்குனரான பைம்பசுரான் டாவா ஜெர்மனியில் வசிக்கிறார். சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கியவர் டாவா.
சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் மங்கோலிய மக்களின் மரபும் பண்பாடும் ஒடுக்குமுறைக்கு ஆளானது. மங்கோலிய நாட்டுப்புற இசை மற்றும் பாடல்களைப் பாடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கூடவே அவர்களின் சடங்குகள், வழிபாடுகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.
சீன கலாச்சாரப் புரட்சியின் கொந்தளிப்பான நாட்களில் மங்கோலியப் பெண்ணான தனது பாட்டி 19ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட குதிரை தலை வயலின் ஒன்றை தண்டனைக்குப் பயந்து உடைத்துவிடுகிறார். குதிரை தலை மட்டுமே மிச்சமாகிறது. அந்த வயலினில் “The Two Horses of Genghis Khan”, என்ற பாடலின் வரிகள் எழுதப்பட்டிருந்ததையும் அழித்துவிடுகிறார். என்றாவது ஒரு நாள் அந்த வயலினை திரும்பவும் அதே குதிரை முகத்துடன் இணைத்து அதே பாடல் வரிகளைப் பொறித்துப் புதிய இசைக்கருவியாக உருவாக்க வேண்டும் என்று பாட்டி ஆசைப்படுகிறார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காகப் பேத்தியான மங்கோலிய பாடகியான உர்னா முயற்சிக்கிறார்.
“The Two Horses of Genghis Khan” என்ற பாடலைத் தேடி உர்னா மேற்கொள்ளும் பயணமே இந்த ஆவணப்படம்.
மங்கோலியா முழுவதும் பயணித்த போதும் எவரது நினைவிலும் அந்தப் பாடல் இல்லை. மங்கோலிய நிலப்பரப்பின் ஊடே உர்னா ஒற்றை ஆளாக அலைந்து திரிகிறார். எல்லையற்ற அழகுடன் விரிந்திருக்கும் நிலவெளியும் கூட்டம் கூட்டமாக ஓடித்திரியும் குதிரைகளும் மேய்ச்சல் நிலங்களில் வாழும் மங்கோலியர்களும் அவர்களின் எளிய வாழ்க்கையும் இந்த ஆவணப்படத்தில் வெகு அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உர்னா தனது பாட்டி வைத்திருந்த குதிரைத்தலையைப் புகழ்பெற்ற வயலின் தயாரிப்பாளர் ஹிச்செங்குவிடம் ஒப்படைக்கிறார், அவர் பழைய இசைக்கருவிக்கு ஒரு புதிய உடலை உருவாக்கித் தர ஒத்துக் கொள்கிறார். இந்த வயலினில் பொறிக்கப்பட வேண்டிய பாடலின் வரிகளைத் தேடியே உர்னா பயணம் மேற்கொள்கிறார்..
காலமாற்றத்தில் மங்கோலிய நிலம் உருமாறியிருக்கிறது. தங்க சுரங்களுக்காக அந்த நிலமும் மக்கள் வாழ்க்கையும் சீரழிக்கப்பட்டிருப்பதை உர்னா காணுகிறார். எவருக்கும் தனது பாரம்பரியத்தோடு உறவில்லை.
தனது பயணத்தின் ஊடே ஒரு திருமண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. வயதான பலரும் அதில் கலந்து கொள்கிறார்கள். அவர்களில் எவருக்காவது அந்தப் பாடல் நினைவில் இருக்கிறதா என விசாரிக்கிறார் உர்னா. ஒருவருக்கும் அந்த இசையோ, பாடலோ நினைவில் இல்லை. இதனால் மனம் உடைந்து போகிறார். படம் முழுவதும் உர்னா ஏக்கமும் தீராத துக்கமும் கொண்டவராகவே வருகிறார். முடிவில் தான் அவரது முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது.
மங்கோலிய தலைநகருக்கு உர்னா வந்து இறங்குவதில் படம் துவங்குகிறது. இசைக்கலைஞர் ஒருவரைச் சந்திக்க உர்னா செல்கிறார். அங்கிருந்து அவரது பயணம் துவங்குகிறது
இந்த ஆவணப்படத்தில் வயலின் செய்யும் ஹிச்செங்கு இசைக்கருவி செய்வதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காண்கிறோம், அந்த மரத்தை வெட்டுவதற்கு முன்பு அவர் பூமியிடம் மன்னிப்பு கேட்கிறார். அவர் இசைக்கருவியைச் செய்யும் முறை மிக நுட்பமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது
இன்னொரு காட்சியில் செல்போன் சிக்னல் கிடைக்காத ஒரு மலையடிவாரத்தில், உர்னா ஒரு குறுஞ்செய்தி அனுப்ப முனைகிறார். ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை. அவருடன் பயணிக்கும் இளைஞன் தனது தொலைபேசியில் அந்தக் குறுஞ்செய்தியை உள்ளீடு செய்து போனை ஆகாசத்தில் தூக்கி எறிகிறான். அந்த நிமிஷத்தில் குறுஞ்செய்தி அனுப்ப சிக்னல் கிடைத்து செய்தி அனுப்பப்பட்டு விடுகிறது.
படத்தின் முடிவில் உர்னா தன் பாட்டியின் வயதை ஒத்த இன்னொரு பாட்டியைச் சந்திக்கிறார். அவர்களுக்குள் வெளிப்படும் அன்பும் நேசமும் நம்மை நெகிழச் செய்கிறது. பாட்டியின் அபூர்வமான குரலை மறக்கமுடியவில்லை.
முன்பின் பழக்கமில்லாத மனிதர்களைச் சந்திக்கும் உர்னா சில நிமிடங்களில் அவர்களுடன் ஒன்று கலந்துவிடுகிறார். மங்கோலிய ஆண்களும் பெண்களும் காலை மடித்து உட்காரும் அழகு அத்தனை வசீகரமாகயிருக்கிறது. ஒரு காட்சியில் குறிசொல்லும் சாமியாடி ஒருவரைத் தேடிச் சென்று சந்திக்கிறார் உர்னா. அவர் இரவில் நெருப்பின் முன்னால் அருள் வந்து ஆடும் காட்சி அபாரம். அது போலவே மேய்ச்சலுக்கு ஒட்டிச்செல்லும் குதிரையொன்றின் வால் ரோமத்தில் ஒரு துண்டினை வெட்டி எடுத்து உர்னாவிற்குப் பரிசளிக்கிறான் ஒரு மங்கோலிய இளைஞன். அதைப் பத்திரமாக அவள் தபாலில் வயலின் செய்கிற ஹிச்செங்குவிற்கு அனுப்பி வைக்கிறார். உர்னாவிற்கு இன்று வழக்கில் உள்ள மங்கோலிய எழுத்துமுறை தெரியவில்லை. அவளுக்காகத் தபால் நிலையப் பெண்ணே உதவி செய்கிறாள். இது போல அவர்கள் பயணம் செய்யும் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்ட போது அதை மீட்க வழியில்லாமல் போராடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்காக உணவு கொண்டு வந்து தருகிறது ஒரு குடும்பம். மனித நேயமும் அன்பும் மங்கோலியா முழுவதும் இருப்பதை உர்னா வழியாக நாமும் உணருகிறோம்.
படத்தின் இறுதிக்காட்சியில் உர்னா தன்னை மறந்து பாடுகிறார். அந்தக் குரல் மிகவும் வசீகரமாகயிருக்கிறது. இழந்து போன மங்கோலியாவின் மரபை மீண்டும் புத்துயிர்ப்பு தருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்த ஆவணப்படம்.
ஒரு சிறந்த ஆவணப்படத்தை அனுபவிக்க விரும்பினால் The Two Horses of Genghis Khan” சரியான தேர்வு என்பேன்..

