ஜாந்திபி

அமெரிக்க மேடைநாடகமான Maxwell Anderson’s Barefoot in Athens யை வாசித்துக் கொண்டிருந்தேன், அதில் சாக்ரடீஸீன் மனைவி ஜாந்திபி (Xanthippe) அவரைப்புரிந்து கொண்ட சரியான வாழ்க்கைத்துணையாகச் சித்தரிக்கப்படுகிறாள், சாக்ரடீஸின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாடகம் தொலைக்காட்சிக்கான படமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது,

கிறிஸ்து பிறப்பதற்கு 469 ஆண்டுகளுக்கு முன்னால் கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரத்தில் பிறந்தவர் சாக்ரடீஸ். கல்தச்சரின் மகன், போர்வீரனாக இருந்திருக்கிறார்,  தன் தத்துவங்களையும், சிந்தனைகளையும் சாக்ரடீஸ் தானே எழுதவில்லை. பிளாட்டோவின் மூலமே சாக்ரடீசின் வரலாறு உலகத்திற்கு தெரிய வந்தது.

ஒரு நாள் தனது பேச்சைக் கேட்காத சாக்ரடீஸின் தலையில் கோபத்தில் ஒரு வாளி தண்ணீரை தூக்கி ஊற்றினாள் ஜாந்திபி, முன்பு இடி இடித்தது தற்போது மழை பெய்கிறது என்று சாக்ரடீஸ் அதைப் பற்றி சொன்னதாக ஒரு கட்டுக்கதை நெடுங்காலமாகவே இருந்துவருகிறது, எதற்காக அந்தச் சண்டை வந்தது என்று எந்த வரலாற்று புத்தகத்திலும் குறிப்புகளில்லை

இப்படி பலநூறு வருசமாகவே ஜாந்திபியைப் பற்றி நிறைய தவறான தகவல்கள். அவதூறுகள் உலவுகின்றன, அவை நிஜம் என்று மெய்பிக்க ஒரு சாட்சியுமில்லை, அந்த வம்புக் கதைகளின் வழியே உலகின் மோசமான மனைவிகளின் பட்டியலில் ஜாந்திபி எப்போதுமிருக்கிறாள்,

சாக்ரடீஸ் போன்ற மேதையைப் புரிந்து கொள்ளாமல் அவரைத் திட்டியும் அடித்தும் ஆவேசமாகச் சண்டையிட்டும் கொடுமைப்படுத்திய மனைவி என்றே அவளைப்பற்றிய சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது, டால்ஸ்டாயின் மனைவியை பற்றியும் இதே குற்றசாட்டுகள் இருக்கின்றன, லிங்கனின் மனைவி மேரிடாட் மீதும் இதே புகார்கள் உருவாகி முடிவில் அவள் மனநலக் காப்பகத்திற்கு அனுப்ப பட்டார்,

பேரடைஸ் லாஸ்ட் என்று இழந்த சுவர்க்கம் காவியம் படைத்த மில்டன், தனது முப்பத்திஐந்தாவது வயதில் மேரி பாவல் என்ற அரசக் குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ஆனால் மனைவியின் கடுமையான நடத்தையால் அவமானம் அடைந்து துயருற்றார். மில்டன் தனது இறப்புவரை தான் இழந்த சுவர்க்கத்தை மீண்டும் பெறவே இல்லை என்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்

இப்படி மோசமான மனைவிகள் பற்றியும் கொடுமைக்காரக் கணவனைப்பற்றியும் நிறைய மேற்கோள்கள் இருக்கின்றன, அவை முழுஉண்மையும் இல்லை முழுப்பொய்யுமில்லை, மாறாக உறவின் கசப்பிற்கு என்ன காரணம், எப்படி உருவாகிறது என்பதையே நாம் ஆராய வேண்டியிருக்கிறது

உண்மையில் ஜாந்திபி கொடுமைக்காரி தானா, ஏன் அவள் மேல் இவ்வளவு குற்றச்சாட்டுகள், கேலி கிண்டல்கள் என்று யோசனையாக இருந்தது, ஜாந்திபியைப் பற்றி தேடிவாசிக்கத் துவங்கினேன்,

புகழ்பெற்ற ஒவியர்கள் மற்றும் கலைஞர்களின் மனைவிகள் என்று இரண்டு தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது, அதில் ஜாந்திபியைப் பற்றி இதே செய்திகளே இடம்பெற்றுள்ளன,

பிளேட்டாவின் நூல்களில் சாக்ரடீஸின் மனைவி என்று குறிப்பிடப்படுகின்றதேயன்றி அவளைப்பற்றி மேலதிகமாக எந்தத் தகவலும் இல்லை, ஒரு இடத்தில் சாக்ரடீஸ் திருமணம் செய்து கொள்வது பற்றி தன்னிடம் யோசனை கேட்கவருபவனுக்குச் சொல்லும் போது முரட்டுக்குதிரையை அடக்கி ஆள்வது சிலருக்குப் பிடித்தமானது, அது போன்றது தான் திமிரான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது என்று சொல்கிறார், அது அவரது வாழ்வனுபவத்திலிருந்து உருவானது என்று சீடர்கள் குறிப்பிடுகிறார்கள்

சாக்ரடீஸ் பற்றி தமிழில் விரிவான நூல் எதுவுமில்லை,  அச்சில் உள்ள சிறிய புத்தகங்கள் அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தையே தருகின்றன, பெரும்பான்மை மொழிபெயர்ப்புகளில் விடுபடல்களும் தவறான புரிதல்களுமே இருக்கின்றன,

தமிழில் சாமிநாத சர்மா தான் கிரேக்கத்தையும் கிரேக்க இலக்கியங்களையும் அறிமுகப்படுத்துவதில் முன்னோடி, அவரது கிரீஸ் வாழ்ந்த வரலாறு. பிளேட்டோவின் அரசியல். பிளேட்டோவின் கடிதங்கள். போன்றவை மிக முக்கியமான நூல்கள்.

புதுமைபித்தனுக்கும் கிரேக்க இலக்கியங்கள் மீது அதிகமான ஈடுபாடு இருந்திருக்கிறது. சிற்பியின் நரகம் சிறுகதை இதற்கு ஒரு நல்ல உதாரணம்

கோவை வானொலி நிலையத்தில் உயரதிகாரியாக பணியாற்றிவரும் எனது நண்பர் ஸ்டாலின் கிரேக்க நாடகாசிரியர்களான ஈஸ்கிலஸின் ஏழு நாடகங்களையும், சோபக்ளிஸின் ஏழு நாடகங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அண்மையில், யூரிபிடிஸின் ‘பேக்கி’ என்ற நாடகத்தை மொழியாக்கம் செய்துள்ளதோடு கிரேக்கச் சிந்தனை மரபு என்று தனிநூல் ஒன்றினையும்  வெளியிட்டிருக்கிறார்.

பல ஆண்டுகாலம் கிரேக்க இலக்கியங்களை ஆழ்ந்து பயின்று கிரேக்க இலக்கியங்களின் விற்பன்னராக இருப்பவர் ஸ்டாலின்.   பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பு நோக்கி கிரேக்க நாடகங்களை அவர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இந்த நாடகங்கள் ஒரே தொகை நூலாகவும்  வெளியாகி உள்ளது.

ஹோமரின் இலியட் காவியம் நாகூர் ரூமியால் செம்மையாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, முன்னதாக  இலியது  என்று சென்னைப் பல்கலைகழக பதிப்பாக வேறு மொழிபெயர்ப்பிலும் வெளியாகியிருக்கிறது, கிரேக்க தத்துவஙகளை பாடநூல்கழகமே முன்பு சிறுநூல்களாக வெளியிட்டுள்ளது, சாகித்ய அகாதமி நான்கு கிரேக்க நாடகங்கள். என்ற நூலை வெளியிட்டிருக்கிறது,  தமிழாக்கம் செய்திருப்பவர் கே.எஸ். வேங்கடராமன், கிரேக்க தொன்மவியலைப் பற்றிய அண்ணாவின் ரோமபுரி ராணிகள் புத்தகம் ஜனரஞ்சகமானது, இப்படி நினைவில் வந்த சிலவற்றைத் தவிர கிரேக்க இலக்கியங்களின் முக்கியப் படைப்புகள் தமிழில் இன்னமும் வெளியாகவேயில்லை

ஆனால் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன, ஆண்டுதோறும் புதிய பதிப்புகள் வந்தபடியே இருக்கின்றன, PLATO’S BIOGRAPHY OF SOCRATES., SOCRATES: A VERY SHORT INTRODUCTION,  SOCRATES BY VOLTAIRE, COMPANION TO SOCRATES என நாலைந்து புத்தகங்களைப் புரட்டியபோது ஜாந்திபி பற்றிய சில புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது

ஜாந்திபி என்றால்  தங்கநிற முடி கொண்ட குதிரை என்று  அர்த்தம், கிரேக்கத்தில் குதிரையின் குணாம்சத்தைக்கொண்டு பெயர் வைப்பது இயல்பு, ஜாந்திபி கடுமையான உழைப்பாளி, நல்ல உடற்கட்டு கொண்டவள்.

சாக்ரடீஸ் ஜாந்திபியை திருமணம் செய்து கொள்ளும் போது அவரது வயது 50, ஜாந்திபிக்கோ இருபது வயது, முப்பது வயது இடைவெளி இருவருக்கும், சாக்ரடீஸ் சதா சர்வகாலமும் இளைஞர்களோடு த்த்துவ விசாரத்தில் ஈடுபடுகின்றவர், வெறும்காலோடு நாள்முழுவதும் ஏதென்ஸை சுற்றியலைவது அவரது வழக்கம், படிப்பு சொல்லிக் கொடுக்க காசு வாங்கின்றவர்களை எதிர்ப்பதே அவரது பிரதான வேலை, ஆகவே அவர் தன்னிடம் தத்துவம் கற்க வரும் எவரிடமும் பணம் வாங்குவதில்லை, சாக்ரடீஸின் அப்பா ஒரு கல்தச்சன், சிற்பி பரம்பரையைச் சேர்ந்தவர்கள், ஆகவே பாரம்பரியச் சொத்தும் கிடையாது,

சாக்ரடீஸிற்கு காதலிகள் இருந்தார்கள், அவர் மித்ரோ என்ற பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்தார், அவளைத் திருமணம் செய்து கொள்ளுமளவு பணவசதியில்லை என்று ஒதுங்கிவிட்டார் என்றெல்லாம் கதைகள் இருக்கின்றன,

மத்திய வயதில் எந்தச் சூழலில் ஜாந்திபியைத் திருமணம் செய்து கொண்டார் என்று தெரியவில்லை, ஆனால் அவளது அப்பா லம்பிரசெல்ஸ் சாக்ரடீஸின் அப்பாவை விட பெரிய ஆள் என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.  கிரேக்கத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு தாத்தா பெயரிடுவதே மரபு, ஜாந்திபி தனது அப்பாவின் பெயரைத் தன் மகனுக்கு வைத்திருக்கிறாள் , அதிலேயே அவளது கையில் தான் வீட்டின் அதிகாரம் இருந்த்து தெரியவருகிறது என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்

அது உண்மையில்லை ஜாந்திபி வறுமையின் காரணமாகச் சாக்ரடீஸைத் திருமணம் செய்து கொண்டார் என்ற மாறுபட்ட கருத்துமிருக்கிறது,  குடியும், கூத்தும், பெண்களுடன் பாலியல் தொடர்புகளிலும் இருந்த கிரீஸ் நாட்டு ஆண்களைப் போலவே சாக்ரடீஸ் நடந்து கொண்டார் என்பதால் தான் அவர்களுக்குள் சண்டை என்றும் ஒரு தரப்பு வாதிடுகிறது

ஜாந்திபி சாக்ரடீஸோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள், மூத்தவன் லம்பிரசெல்ஸ் இரண்டாமவன் சோபர்னிக்ஸ் மூன்றாவது மென்ஜினஸ், மரணதண்டனை விதிக்கப்பட்ட சாக்ரடீஸைப் பார்க்க சிறைக்கு வரும் போது மூன்றாவது கைக்குழந்தையோடு ஜாந்திபி வந்திருந்தாள் என்று குறிப்பிடப்படுகிறது, சாக்ரடீஸ் சாகும்போது அவருக்கு 71 வயது,

வரலாற்று நெடுகிலும் யார் ஜாந்திபியைக் கொடுமைக்காரியாக மாற்றியது, பிளேட்டாவின் குறிப்புகளில் அவள் இயல்பான. அடக்கமான மனைவியாக இருக்கிறாள், ஜெனோபனும் அப்படியே சித்தரிக்கிறார். புளுடார்க்கின் குறிப்பு தான் முதன்முதலாக அவளைப்பற்றிய கடுமையான சித்திரத்தை உருவாக்குகிறது, புளுடார்க் ஒரினச்சேர்க்கையை வெளிப்படையாக ஆதரித்தவர், பிளேட்டாவை போலவே கட்டற்ற பாலுறவு தேவை என்று கூறுபவர், முன்கோபி, எதனால் அவர் ஜாந்திபியை வெறுக்க ஆரம்பித்தார் என்பதற்குக் கற்பனையாக நிறைய காரணங்கள் இருக்கின்றன,

ஆனால் சாக்ரடீஸ் போல உலகமே தனது வீடு என்று இருக்கின்ற ஒருவரை மணந்து கொண்டு மூன்று குழந்தைகளின் தாயாகிய பிறகும் எந்த சமூக அந்தஸ்தும் இன்றி அடிப்படை வசதிகளுக்கே அல்லாடும் நிலையில் ஜாந்திபி அவதிப்பட்டதால் நிச்சயம் அவள் சண்டையிடும் மனநிலைக்கே தள்ளப்பட்டிருப்பாள்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்பட்ட சாக்ரடீஸை கடைசி முறையாக பார்க்க சென்ற ஜாந்திபியோடு பேச மறுத்து அவளை வெளியே அனுப்பிவிட்டு நண்பர்களோடு தத்துவ விசாரம் செய்கிறார் சாக்ரடீஸ், அது ஜாந்திபியை அதிகம் கோபம் கொள்ளச் செய்கிறது, அவளது பிள்ளைகளே அவளைக்குற்றம் சொல்கிறார்கள், புறக்கணிப்பு தான் அவள் மனதை மாற்றியிருக்கிறதோ எனத் தோன்றுகிறது,

ஷேக்ஸ்பியரின் சகோதரி என்று வர்ஜினியா வுல்ப் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாள், இதில் ஷேக்ஸ்பியர் காலத்தில் அவரது சகோதரி எழுதத் துவங்கியிருந்தால் அவளை அன்றைய சமூகம் அங்கீகரித்திருக்காது, பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள போராடிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது, இது தான் வரலாற்று உண்மை என்கிறார்

ஒருமுறை சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாரதிதாசனின் மனைவி நேர்காணல் நிகழ்ச்சியைக் கண்டேன்,  முதிய வயதிலிருந்தவரிடம் உங்களுக்கு மகாகவி பாரதியைத் தெரியுமா என்று நேர்காணல் செய்பவர் கேட்கிறார், அதற்கு பாரதிதாசனின் மனைவி, யாருக்குத் தெரியும், கவிஞர் எப்பவும் திடீர்னு பத்துப் பேரை அழைச்சிட்டு வந்து சாப்பாடு போடச் சொல்வார், உடனே சமைச்சு ஆகணும்,  வீட்ல நிறைய பேர் வந்து சாப்பிட்டு போயிருக்காங்க, வந்தவங்களை நல்லா உபசரிக்கணும்கிறதில ரொம்ப அக்கறையா இருப்பார், எங்களாலே சமையல் வேலை செய்து முடியாது, ரொம்பக் கஷ்டம் , அதனாலே தனியா யாரையும் ஞாபகமில்லை என்று பதில் சொன்னார்.

அதே குரல் தான் பாரதியின் மனைவியிடமும் எதிரொலிக்கிறது.

இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது

சாக்ரடீஸோ, பாரதியோ அல்லது டால்ஸ்டாயோ தனக்கான ஒரு அகவுலகில் வாழ்ந்தவர்கள், தன்னைச் சுற்றி தாங்களாகவே ஒரு தனிமையை ஏற்படுத்திக் கொண்டவர்கள், சராசரி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் அவர்களுக்குக் கிடையாது, ஆகவே தினசரி வாழ்வில் இது போன்ற நெருக்கடிகளைச் சந்திப்பது தவிர்க்கமுடியாதது தான்,

ஆனால் தவறுக்குக் காரணமாக ஆணோ பெண்ணோ ஒருவர் மற்றவரை சுட்டிக்காட்டுவது சரியானதில்லை, எதிலும் விட்டுக் கொடுப்பது தற்காலிகமானது, புரிந்து கொள்வது தான் சரியான தீர்வு, ஆனால் அது எளிதானதில்லை,

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆட்கொணா கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லா பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையாலின்புற உண்பதுதானே

என்று ஔவை குறிப்பிடுகிறார், அது அன்பிலாப் பெண்டிருக்கு மட்டும் சொல்லப்பட்ட ஒன்றில்லை, ஆணுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றே. மோசமான மனைவி. மோசமான கணவன் என்று எவருமில்லை, அப்படி ஆக்கப்படுகிறார்கள், அல்லது அது போன்ற நெருக்கடி புரிந்து கொள்ளாமையால் ஏற்பட்டு விடுகிறது, புரிந்து கொள்வதற்கு பலருக்கு விருப்பமில்லை, சிலர் அப்படி புரிந்து கொள்வதால் தனது மதிப்பு போய்விடும் என்று பொய்யான காரணம் கொண்டிருக்கிறார்கள்,

தன் மனைவி எழுத்தாளர் ஆனதும் கோபம் கொள்ளும் சராசரி ஆண்களைப் போலின்றி வர்ஜினியா வுல்பின் கணவர் லியோனார்ட் தன் மனைவி எழுத்தாளராகப் புகழ்பெற்றதை கண்டு சந்தோஷமடைந்து அவருக்காகவே ஒரு பதிப்பகம் உருவாக்கி தந்ததோடு வர்ஜினியாவின் மனச்சிக்கல்களுக்கு மருத்துவஉதவி செய்து அவரை பராமரித்து உறுதுணையாக இருந்திருக்கிறார், அப்படியும் வர்ஜினியா தற்கொலை செய்து கொண்டுவிட்டார்,

ஜாந்திபியை மோசமான மனைவியின் முன்உதாரணமாக ஷேக்ஸ்பியர் கூட அடையாளம் காட்டுகிறார், அவருக்குச் ஜாந்திபியை அப்படி அடையாளம் காட்டியது புளுடார்க்கே,

அமி லோவாலின் கவிதையொன்றில் ஜாந்திபி இடம் பெற்றிருக்கிறாள், அதில் நாள் எல்லாம் உலகோடு பேசவும் விவாதிக்க முடிந்த ஒருவரால் ஏக்கத்தோடு காத்திருக்கும் எனது மனத்துயரைக் கேட்கவும் ஆறுதல்படுத்திப் பேசவும் முடியவில்லை, அந்த துக்கம் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது என்கிறாள்

சாக்ரடீஸீன் மரணத்திற்குப் பிறகு ஜாந்திபி என்ன செய்திருப்பாள், எப்படி அந்த துக்கத்தை எதிர்கொண்டாள், அதன் பிறகு எவ்வளவு நாட்கள் வாழ்ந்தாள், என்ன நினைவுகளை அவளுக்குள் சாக்ரடீஸ் விட்டுச்சென்றிருக்கிறார், சாக்ரடீஸின் மனைவி என்பது சுமையா அல்லது பெருமையா என நிறையக் கேள்விகள் பதிலற்று இருக்கின்றன.

சாக்ரடீஸ் விரும்பி விஷக்கோப்பையை தானே வாங்கி அருந்தியது போல வாழ்வின் கசப்புகளைத் தானே தேடிக் கொண்டு அருந்தியது தான் ஜாந்திபியின் விதியா

குடும்பத்தை நாம் புறக்கணித்தால் இயற்கையால் நாம் புறக்கணிக்கப்படுவோம் என்று ஒரு பைபிள் வாசகமிருக்கிறது, அது உண்மை தானோ.

ஜாந்திபியின் மௌனம் நூற்றாண்டுகாலமாக உறைந்து போயிருக்கிறது, அவள் தனியான பெண் இல்லை, அவளைப்போல உலகில் பலர் இருக்கிறார்கள், அவர்களின் அகக்குரல் இன்னமும் வெளியே கேட்கவேயில்லை

•••

0Shares
0