ருஷ்ய இலக்கியமேதை டால்ஸ்டாயின் கதைகளை வாசிக்கும் போது அவரது குரல் நமக்கு நெருக்கமாக கேட்பது போலவே இருக்கும். பலநேரங்களில் அவர் ஒரு ருஷ்ய எழுத்தாளர் என்பது கூட மறந்துவிடும். குறிப்பாக அன்னாகரீனனா படிக்கும் போது அன்னாவின் பெருமூச்சையும் விம்மலையும் காகிதத்தில் உணர்ந்திருக்கிறேன்.
கசாக்கை வாசிக்கையில் ராணுவவீரனின் தனிமை என் காதில் கிசுகிசுத்த குரலில் கேட்டிருக்கிறது. டால்ஸ்டாயின்குரல் எப்படியிருக்கும் என்று நானே யோசித்து கொண்டிருந்ததுண்டு. ஒரு முறை எனது நண்பர் புகழ்பெற்ற மனிதர்களின் குரல்களின் பதிவு கொண்ட குறுந்தகடு ஒன்றை தந்தார்.
அதில் டால்ஸ்டாய், பாக்னர் ஹெமிங்வே, துவங்கி ஐன்ஸ்டீன், சாப்ளின் காந்தி ஹிட்லர், ஸ்டாலின் லெனின், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, என்று ஐம்பது முக்கிய ஆளுமைகளின் குரல் பதிவுகள் இருந்தன.
அதில் டால்ஸ்டாயின் குரலை முதன்முறையாக கேட்டேன். அவர் குழந்தைகளுக்கு கதை சொல்வதே அந்தக் குரல் பதிவு . டால்ஸ்டாயின் குரலை கேட்டபோது எனக்கு மிகவும் பரிச்சயமான கிராமத்து விவசாயின் குரல்போலவே இருந்தது. கேட்க கேட்க ஆழமான மனஅதிர்வு உண்டானது.
சமீபத்தில் மௌனப்படங்களின் வரலாற்றை ஆழ்ந்து வாசித்து கொண்டிருந்த போது தற்செயலாக ருஷ்ய இணையதளம் ஒன்றில் டால்ஸ்டாயின் எண்பதாவது பிறந்தநாள் காட்சிபதிவாக வெளியாகி உள்ளது என்ற தகவலை அறிந்தேன். அன்றிலிருந்து அந்தப் பதிவு எங்கே காணக்கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருந்தேன். நண்பர்களின் வழியான தேடுதலின் முடிவில் சென்ற வாரத்தில் ஒரு நண்பர் இந்த இணைப்பை அனுப்பி காணும்படியாக சொன்னார்
அது டால்ஸ்டாயின் எண்பதாவது பிறந்தநாள் காட்சி. மௌனப்படங்கள் துவங்கிய காலம் அது. ரஷ்யாவின் ஆரம்ப கால சினிமா முயற்சிகள் உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமானவை. அங்கே மேற்கொள்ளப்பட்ட புதுமைகள் மற்றும் பரிசோதனைகளில் இருந்தே சினிமா என்ற கலைவடிவம் வளர்ந்தது. ஆகவே ருஷ்ய மௌனப்படங்களின் சரித்திரம் மிக முக்கியமானது.
1908 ஆண்டு ஆகஸ்ட்28 ம் தேதி டால்ஸ்டாயின் எண்பதாவது பிறந்தநாள் விழா. அன்று ரஷ்யாவின் மௌனப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அலெக்ஸôண்டர் ஒசிபோவிச் டிராகனேவ் (Aleksandr Osipovich Drankov )தனது உதவியாளர்களான பெர்லோவ், வசிலியோவ் இருவரின் உதவியுடன் டால்ஸ்டாயின் பிறந்தநாளைப் பதிவு செய்திருக்கிறார்.
டிராகனேவ் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞர் அத்துடன் ஒரு நடனப்பள்ளியை நடத்தியிருக்கிறார். சினிமா ருஷ்யவிற்குள் அறிமுகமான காலத்தில் ஒளிப்பதிவளாராக மாறி சிறிய துண்டுபடங்களை எடுத்திருக்கிறார்.
ஒன்றரை நிமிசங்களே ஒடும் இந்த காட்சிபதிவின் மிச்சம் என்னாவனது என்று அறிந்து கொள்ள முடியவில்லை.
மௌனப்படம் என்பதோடு வெளியாகி நூறு வருடங்களுக்கும் மேலாகி விட்டதால் இந்த படத்தின் பிரதி தெளிவற்றதாகவே உள்ளது.
டால்ஸ்டாய் யாஸ்னயா போல்யானா என்ற பண்ணை வீட்டில் குடியிருந்தார். அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக டால்ஸ்டாயின் மூன்றாவது மகள் அலெக்சாண்ட்ரா ஒரு குதிரைவண்டியில் வந்து சேர்கிறாள். பெரிய விவசாயப் பண்ணையை வைத்திருந்தார் டால்ஸ்டாய். ஆகவே அங்கே பணியாற்றுகின்றவர்களுக்கு அளிப்பதற்கான பரிசுகளுடன் அலெக்சாண்ட்ரா வந்து இறங்குகிறாள்.
இன்னொரு பக்கம் டால்ஸ்டாயின் மனைவி சோபியா தோட்டத்தில் உள்ள பூக்களை பறித்து கொண்டிருக்கிறாள். டால்ஸ்டாயின் வளர்ப்பு நாயுடன் அவரது நண்பரான செர்க்தோவ் அறிமுகமாகிறார். டால்ஸ்டாயின் மகன்களும் மற்ற விவசாய குடும்பத்து மனிதர்களும் தோன்றுகிறார்கள்.
தனது வீட்டின் இரண்டாவது தளத்தில் டால்ஸ்டாய் சாய்வுநாற்காலியில் கால்வலி காரணமாக படுத்துகிடக்கிறார். அவர் அருகில் அவரை வாழ்த்த வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காணப்படுகிறார்கள். சோபியா அவர்களுடன் காணப்படுகிறாள். முடிவில் டால்ஸ்டாய் கேமிராவை பார்த்து சிரித்தபடியே கடந்து போகிறார்.
இந்த படம் குறித்து டால்ஸ்டாயின் மகள் அலெக்சாண்ட்ரா தனது நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறாள். அதில்
அன்று அப்பாவின் எண்பதாவது பிறந்தநாள். அவருக்கு காலில் வலி இருந்ததால் நடக்க முடியவில்லை. ஆனால் புகைப்படகலைஞர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். வீடே ஒரே பரபரப்பாக இருந்தது. தனது கால்வலியின் காரணமாக அவர்களை இன்னொரு முறை வைத்து கொள்ளலாமே என்று அப்பா தடுத்தார். அவர்களோ அவரது பிறந்தநாள் விழாவிற்கு எந்த தடையும் இல்லாமல் தாங்கள் பதிவு செய்து கொள்ளவதாக உறுதி தந்து அங்கிருந்த அத்தனை பேர்களையும் படம் எடுத்தார்கள். விவசாயிகளுக்கு ஒரே சந்தோஷம். அம்மாவிற்கு இதில் ஏக பெருமை. , அப்பா ஆனால் அதை விரும்பாதவர் போலவே இருந்தார். இந்த பிறந்தநாளின் பிறகு வீட்டில் அப்பா பிறந்தநாள் கொண்டடவில்லை. இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
டால்ஸ்டாயின் சிறுகதைகள் நாவல்கள் பலமுறை பலமொழிகளில் படமாக்கபட்டுள்ளன. அவரது புகழ்பெற்ற நாவல்கள் ஒவ்வொன்றும் குறைந்தது நாலு முறை வேறுபட்ட இயக்குனர்களால் படமாக்கபட்டுள்ளது.
ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக அதிகமுறை படமாக்கபட்டிருப்பது டால்ஸ்டாயின் படைப்புகளே.
சினிமா என்ற வடிவம் உருவான போது அதை பற்றிய அபிப்ராயங்களை டால்ஸ்டாயிடம் கேட்டார்கள். அதற்கு அவர் இது ஒரு புதிய கலைவடிவம். எதிர்காலத்தில் எழுத்தாளர்களுக்கு இந்த வடிவம் பெரிய நெருக்கடியை உருவாக்க போகிறது. இந்த நிழற்கலைக்கான எழுத்து ஒன்று அவசியமானது. ஆனால் அது இப்போது நம்மிடம் இல்லை. நானே கூட அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மரபான கலைகளுக்கு இந்த புதிய கலைவடிம் பெரிய சவலாக மாறப்போகிறது. காண்கலையில் இது ஒரு புரட்சி என்றே நினைக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்
சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நண்பர் உலகம் முழுவதும் சினிமா பணக்காரர்களிடமும் வணிகர்களிடமும் கைவசமாகி உள்ளது என்று வருத்தபடவே அதற்கு டால்ஸ்டாய் அப்படி ஒரு சூழல் உருவாகுமானால் சினிமா என்பதில் உள்ள கலையம்சம் அழிந்து போக துவங்கிவிடும். ஒரு வகையில் அது கலையின் வீழ்ச்சியே என்று சொல்லிவிட்டு ஒரு கதையை சொல்கிறார்
ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சியொன்று அங்குமிங்கும் தன் அழகுகாட்டியபடியே நீர்நிலை ஒன்றின் மீது பறக்கிறது. பூவில் தேன் குடிக்கிறது. அப்போது ஒரு பருத்த தவளையொன்று அதை பார்த்தபடியே நிற்கிறது. வண்ணத்துபூச்சி சிறகசைத்தபடியே சூரியனை கண்டு துள்ளுகிறது. தவளை தன் வாயை அகலமாக திறந்து வைத்துக் கொண்டது. வண்ணத்துப்பூச்சி தானே பறந்து போய் அந்த வாயினுள் சென்றுவிட்டது. தவளை எதுவும் நடக்காதது போல தன் வாயை மூடிக் கொண்டு வண்ணத்துபூச்சியை விழுங்கிவிட்டது. அப்படி தான் வணிகர்கள் கையில் சிக்கிய சினிமாவும்.
ஆனால் இங்கே இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். வயிற்றில் சிக்கிய வண்ணத்துபூச்சி கழிவாக வெளியேறும். அந்த கழிவிலிருந்த வண்ணத்துபூச்சியின் முட்டையிலிருந்து ஒரு லார்வா பிறக்கும். அது வளர்ந்து வண்ணத்துபூச்சியாகும். மீண்டும் அந்த வண்ணத்துபூச்சி சூரியனுக்கு அழகுகாட்டியபடியே. இன்னொரு தவளை வாய்திறந்து கொண்டு அதற்கும் காத்திருக்கும் என்பதை பற்றிய கவலையின்றி பறக்க துவங்கும்
இப்படி ஒரு அழிவிலிருந்து திரும்பவும் தன்னை உயிர்பித்துக் கொள்வதற்கு கலைவடிவமான சினிமாவிற்கு தெரியும் என்கிறார்.
டால்ஸ்டாயின் எண்ணங்கள் நிதர்சனமான உண்மை. இதை நூறு வருடங்களுக்கு முன்பாகவே அறிந்து சொல்ல முடிந்திருக்கிறது என்பதாலயே அவர் உன்னத கலைஞராக திகழ்கிறார்.
இந்த வீடியோவை காணவிரும்புகின்றவர்களுக்கான இணைப்பு
https://www.youtube.com/watch?v=E8_Th7UdsBw