நூறு பொருள்களில் உலக வரலாறு

மனிதகுல வரலாறு குறித்துத் தோழர் எஸ்ஏ பெருமாள் வகுப்பு எடுப்பதில் விற்பன்னர், அவரது உரையில் கற்காலம் துவங்கி இன்றைய இணையம் வரையான மனிதகுல வளர்ச்சி மற்றும் அறிவியலின் வரலாறு. தொழில்நுட்பம் உருவானவிதம், கண்டுபிடிப்புகளின் வரலாறு எனச் சுவைபடக் கூறுவார், முதன்முதலாக ஜார்ஜ் தாம்சனின் மனிதகுல சாரம் நூலைப்பற்றி அவரது உரையில் தான் அறிந்து கொண்டேன்.

ஜார்ஜ் தாம்சன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மார்க்சிய ஆய்வாளர், கிரேக்க மொழியில் தேர்ந்தவர், பண்டை கிரேக்க சமூக உருவாக்கம் குறித்துத் தீவிரஆய்வுகளை மேற்கொண்டவர், மானுட குல வரலாறு குறித்து இவர் எழுதிய நூல் THE HUMAN ESSENCE முக்கிய வழிகாட்டும் நூலாகும்

100 பொருள்களில் உலக வரலாறு (A History of the World in 100 Objects) என்பது, BBC  ரேடியோ,  பிரிட்டீஷ் ம்யூசியம் ஆகியவை இணைந்து செயற்படுத்திய ஒருவானொலித் தொடர் நிகழ்ச்சியாகும். 20 வாரங்கள் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியை வழங்கியவர் நீல் மக்கிரெகர்.

100 பகுதிகளாக ஒலிபரப்பட்ட இந்த நிகழ்ச்சி பிரிட்டீஷ் ம்யூசியத்தில் உள்ள கலைப்பொருட்கள், பராம்பரிய சின்னங்கள், பண்டைய தொழில்நுட்ப கருவிகள், படைக்கலங்கள், அலங்காரப்பொருட்கள் போன்ற அரிய பொருட்களை முன்வைத்து மனித குல வரலாற்றை விளக்கியது

இந்த நிகழ்ச்சியின் உரைவடிவம் 100 பொருள்களில் உலக வரலாறு எனத் தனி நூலாக வெளியாகியுள்ளது, இதையும் நீல் மக்கிரெகரே எழுதியிருக்கிறார்.

பின்நோக்கிச் செல்லும் இந்தக் காலப்பயணத்தின் வழியே மனிதர்களால் உருவாக்கபட்ட கல்லாயுதம் துவங்கி சோலார் மின்னேற்றி வரையான நூறு பொருட்களைக் கொண்டு நாகரீகத்தின் கதையையும் பிரிட்டீஷ் ம்யூசியத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறுகிறார்

சுவாரஸ்யமான இந்த வரலாற்றுத் தொகுப்பு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

இது போலச் சென்னை ம்யூசியத்தில் உள்ள நூறு பொருட்களைக் கொண்டு தமிழர்களின் வரலாற்றை யாராவது எழுதினால் சிறப்பாக இருக்கும்.

வரலாற்றைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும், அதைக் கல்விச்சூழலோடு இணைத்துக் கற்றுத்தரவும் நம்மிடையே விழிப்புணர்வு இல்லை. வரலாற்றைத் திரித்துச் சுயலாபங்களுக்கு ஏற்ப பெருமை பேசவும், மிகைப்படுத்தவுமே முற்படுகிறோம்.

தமிழ்நாட்டில் சென்னை, புதுக்கோட்டை, நெல்லை, திருச்சி, ஈரோடு, கடலூர், தஞ்சை, தரங்கம்பாடி, ஆகியவற்றில் சிறந்த வரலாற்று ம்யூசியங்கள் உள்ளன, மதுரையில் உள்ள காந்தி ம்யூசியம் அவசியம் காண வேண்டிய ஒன்று.

ஆனால் இது போன்ற ம்யூசியங்களுக்கு ஒரு நாளைக்கு மிக்குறைவான பார்வையாளர்களே வருகிறார்கள். முறையான பராமரிப்புக் கிடையாது, அடிப்படைத் தகவல்கள் கொண்ட கையேடுகள் கூடக் கிடைப்பதில்லை, பல ம்யூசியங்களில் எந்த நூலும் அச்சில் இல்லை என்றே கூறுகிறார்கள், கம்ப்யூட்டர் வசதி வந்துவிட்ட இந்தச் சூழலிலும் ஒரு ம்யூசியத்தைக் கூட நாம் இணையதளம் வழியாகப் பார்வையிட வசதியில்லை

இதை விடக் கொடுமை இங்கே பணியாற்றுகிறவர்களின் செயல்பாடு, ஒருவருக்கும் ஒரு வரலாற்று தகவலும் தெரிவதில்லை, தூசியும் குப்பையுமாக உள்ளே கால் வைக்கமுடியாத நிலையில் தான் ம்யூசியங்கள் இருக்கின்றன.

இதைச் சிறப்பாக நடத்துவதற்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் தினம் ஒரு வகுப்பு மாணவர்களை ம்யூசியத்தைப் பார்வையிடச் செய்ய வேண்டும் என்று ஆணையிடலாம் தானே, இதனால் மாணவர்கள் பயன் அடைவதுடன் ம்யூசியமும் பயன்படுமே.

ம்யூசியத்தில் என்ன பொருட்கள் இருக்கின்றன, அதன் முக்கியத்துவம் என்னவென்று எந்த ம்யூசியத்திலும் யாரும் விளக்குவதில்லை, இதற்கான சிறப்புக்கூட்டங்களை கலைவிமர்சகர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்களைக் கொண்டு நடத்தலாம்.

அது போலவே ம்யூசியங்களில் சிறப்பு விழா கொண்டாடப்படுவதும், பிரத்யேக கண்காட்சிகள் நடைபெறுவதும் மிகக் குறைவாகவே உள்ளது. ம்யூசியம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் உருவாகச் சிறப்பு நிகழ்ச்சிகள் அவசியம் நடத்தப்பட வேண்டும்

ராபர்ட் புரூஸ் பூட் என்ற தொல்லியல் ஆய்வாளர் சென்னையை அடுத்தப் பல்லாவரம் பகுதியில், கண்டுபிடித்த அரிய கற்கோடாரி சென்னையை அடுத்த பூண்டி தொல்லியல் துறையின் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது, கற்காலப்பொருட்களின் காப்பகமாக உள்ள இந்த ம்யூசியத்திற்கும் பார்வையாளர்கள் குறைவே.

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை , நினைவில் உள்ள பொருட்களை மறுஉருவாக்கம் செய்து வைத்துக் கொள்வது வழக்கம் என்பார் சிந்துசமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்.

நூறு பொருட்களின் வழியான இந்த உலக வரலாற்றை வாசிக்கும் போது மனிதகுலம் எப்படித் தனது கலை வெளிப்பாட்டினையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறது என்பது பெரும் வியப்பாகவே இருக்கிறது.

ஓர்னெட்யித்தெஃப் என்பவரின் மம்மியை பற்றித் துவங்குகிறது முதல் நிகழ்வு, இவர் கிமு 246-222ல் பண்டைய எகிப்தின் மூன்றாம் தொலமி ஆட்சிக் காலத்தில் கர்னாக்கில் இருந்த மதகுரு. இவரது மம்மி உள்ள சவப்பெட்டியில் சொர்க்கத்திலிருந்து  திரும்பி மறுஉயிர்ப்பு கொண்டுவிடுவார் என்ற நம்பிக்கையில் நட்சத்திர வரைபடங்கள், குறீயீடுகள் ஆகியவை சித்திரமாக வரையப்பட்டுள்ளன, காலம் இவரது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.

சொர்க்கத்திற்குப் போய்ச் சேருவதற்குப் பதிலாகத் தற்போது பிரிட்டீஷ் ம்யூசியத்தின் காட்சிப்பொருளாக மாறியிருக்கிறார். இது தான் காலம் கற்றுத்தரும்பாடம், எவ்வளவு பணம், பெயர். அதிகாரம் கொண்டிருந்தாலும் ஒருவனுக்கு ஒரு வாழ்க்கை மட்டுமே சாத்தியம். மனிதனின் பேராசைகள் காலத்தால் கண்டுகொள்ளப்படமால் தூக்கி எறியப்பட்டுவிடும் என்பதே உண்மை

இது போன்ற அடுத்த அரிய பொருள், வெட்டும் கற்கோடாரி. ஆப்ரிக்காவில் கற்கால மனிதர்கள் வேட்டையாடும் போது கொன்ற விலங்குகளின் சதையைக் கிழித்து எடுக்கப் பயன்படுத்திய முதற்கருவி.

இக் கைக்கோடாரியை பிடித்து இறந்த உடலைக் கிழிப்பது எளிதானதில்லை, உடல்வலிமையும் தேர்ச்சியும் அவசியம். பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்திய கைக்கோடாரியிது. எப்படி இதை உருவாக்கியிருப்பார்கள், யார் இதைச் செய்தது என வியப்பாக இருக்கிறது.

இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லும் போது ஆப்ரிக்க மக்கள் இந்தக் கைக்கோடாரியை தங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறார்கள், இது போன்ற கற்கோடாரியில் ஒன்று தான் பல்லாவரத்தில் கண்டு எடுக்கபட்டிருக்கிறது.

காலத்தின் குரல் எப்படியிருக்கும், என்றும் மாறாத காலத்தின் குரலாகக் காற்றும் கடலும்,நெருப்பும் நீரும் ஒலித்துக் கொண்டு தானேயிருக்கிறது. வரலாறு மிக அமைதியானது, அதன் நிசப்தம் ஒரு புதிர்.

பதிமூன்றாயிரம் வருஷங்களுக்கு முன்பாக ஒரு மனிதனின் கற்பனைத்திறன் அவனை ஒரு கலைப்பொருளை செய்யத் தூண்டியிருக்கிறது, அப்படி உருவாக்கபட்டது தான் நீந்தும் கலைமான் .

இன்றுள்ள கலை வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இது எளிய கலைப்படைப்பாகத் தோன்றக்கூடும், ஆனால் பத்தாயிரம் வருஷங்களுக்கு முன்பாக ஒருவன் நீந்தும் இரண்டு மான்களை யானை தந்தம் ஒன்றில் சிற்பமாக வடிப்பது என்பது பெரும்சவால்.

கலை இப்படித்தான் உருவாகியிருக்கிறது.இது வெறும் கலைப்படைப்பு மட்டும் தானா, இல்லை வழிபாட்டிற்கானதா என்பது குறித்துத் தெரியவில்லை, ஆனால் கலையும் சமயமும் பிரிக்கமுடியாதபடி இணைந்தவை என்பதால் அதற்கான சாத்தியங்களும் இருந்திருக்ககூடும்

காலம் காலமாக மனிதனின் முக்கியப் பிரச்சனையாக இருப்பது பசியும் காமமும், பசியைப் போக்கி கொள்ளச் சமைக்கத் துவங்கிய நாட்களில் சமையல் பாத்திரங்கள், சுடுகருவிகள், திரிகை, உலுக்கை போன்ற உபகரணங்கள் உருவாக்கபட்டன.

இப்படி ஆதிகாலத்து மனிதர்கள் உருவாக்கிய சமையல் உபகரணங்களில் முக்கியமானது  உலக்கை, பப்புவா நியூகினியாவில் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகப் பயன்படுத்தபட்ட ‘ பறவை வடிவிலான உலக்கை ,நம் ஊரின் உலக்கையைப் போலின்றி அளவில் மிகச் சிறியதாக உள்ளது, அதன் பறவை வடிவம் தான் இதன் கலைநேர்த்தி,

11,000 ஆண்டுகள் பழமையான எய்ன் சக்ரி காதலர் சிற்பம் பெத்லகேம் அருகில் கிடைத்திருக்கிறது, தழுவி கொண்டிருக்கும் காதலர்களின் நெருக்கமும் உடல்நளினமும் ரோடின் சிற்பத்தில் காணும் அழகிற்கு ஒப்பிடக்கூடியது, எய்ன் சக்ரி குகையின் அருகில் கிடைத்த சிலைகள் என்பதால் அதன் பெயரிலே அழைக்கபடுகின்றன.

மாயன் இனத்தவரின் உலகில் நிறையக் கடவுளர்கள் இருந்தார்கள், அதில் ஒருவர் தான் சோளத்தின் கடவுள், மாயன் சோளக் கடவுள் சிலை மூடிய கண்களுடன் காணப்படுகிறது.  சோளவிளைச்சலிற்குக் காரணமாக உள்ள இக்கடவுள் தோன்றிய விதம் பற்றி மக்கிரெகர் சிறப்பாக விவரித்துக் கூறுகிறார்

உலகில் எந்த நாட்டில் முதன்முதலாகப் பானை செய்யப்பட்டது,  யார் இந்த வடிவத்தை உருவாக்கியது, களிமண்ணைக் கொண்டு எப்படிப் பானை செய்யப்பட்டது என்பதற்கு இன்னமும் விடைகிடைக்கவில்லை,

ஆனால் ஜப்பானில் ஏறத்தாழ கிமு 5000ல் காணப்படும் பானை சிறிய பூந்தொட்டி வடிவில் உருவாக்கபட்டிருக்கிறது, ஜப்பானில் தான் முதன்முதலாகப் பானை வனைதல் துவங்கியிருக்கக் கூடும் என்கிறார்கள்.

மனித குல வரலாற்றின் முக்கியத் தடயங்கள் பானைகளில் தான் சித்திரங்களாக, எழுத்துகளாகப் பொறிக்கபட்டிருக்கின்றன, சீனாவில் உள்ள பீங்கான் பாத்திரங்களில் காணப்படும் ஒவியங்களும் கிரேக்க, ரோம கிண்ணங்களில் காணப்படும் சித்திரங்களும், ஆப்பிரிக்க ஜாடிகளில் காணப்படும் உருவங்களும் வரலாற்றின் அழியாத சாட்சிகள்.

மானுடவரலாற்றில் சிந்துசமவெளி முத்திரைகள் முக்கியமான வரலாற்றுச்சான்றாக அடையாளப்படுத்தபடுகின்றன. கிமு 4000 காலகட்டத்தைச் சேர்ந்த முத்திரையாக அறியப்படும் இதன் குறியீடுகள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை .

1850களில் இந்த முத்திரைகள் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கண்டு எடுக்கப்பட்டு இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.  சிந்துசமவெளி ஆய்வின் வழியாகவே இந்திய வரலாறு மீள்உருவாக்கம் செய்யப்பட்டது, அதன் நினைவாக உள்ள இம்முத்திரைகள் அழிந்த நாகரீகத்தின் அழியாதச் சான்றுகளாக உள்ளன.

எழுத்து அறிமுகமாகாமல் போயிருந்தால் மனிதகுலம் இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கமுடியாது, மனித கண்டுபிடிப்புகளில் மகத்தானது எழுத்து,

கிமு 3100 காலகட்டத்தைச் சேர்ந்த தொடக்ககால எழுது பலகை ஒன்றை ஈராக்கில் கண்டெடுத்திருக்கிறார்கள், அது பிரிட்டீஷ் ம்யூசியத்தில் உள்ளது. இது போன்ற எழுத்துப் பலகையில் இருந்தே கல்வெட்டுகள், பட்டயங்கள் பின்னாளில் தோன்றியிருக்கின்றன,

வாய்மொழியாக இருந்த சொல்லிற்கு எழுத்து வடிவம் கொடுத்து இப்படி ஒரு எழுதுபலகையில் பதித்தது மனிதனின் அரிய சாதனை,  ஈராக்கிய இந்த எழுதுபலகையில் யாருக்கு எவ்வளவு பியர் குடிப்பதற்குத் தரப்பட வேண்டும் என்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்,

நீல் மக்கிரெகர் நிகழ்ச்சியில் குமார குப்தனின் தங்க நாணயம், அசோகர் தூண், மற்றும் காந்தார புத்தர் சிலை, ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது, இந்தச் சிலை கிபி நூறு முதல் 300க்கு இடைப்பட்டதாகும்.

பல்வேறுபட்ட புத்தபிரதிமைகள் காந்தாரக்கலை மரபில் தான் உருவாக்கபட்டன, புத்தரின் உருவம் அமர்ந்த கோலத்தில் இருப்பது, சயன கோலத்தில் படுத்திருப்பது போன்றவை காந்தார கலைகளின் வெளிப்பாடே.

இதன்முன்பு வரை புத்தரின் பாதங்கள் மட்டுமே புனிதமாகக் கருதி வழிபடப்பட்டன,  புத்த சிலைகளை வழிபடுவதன் வழியே மனதிற்குள் புத்த உருவம் நிலைபெறும் என்பதே மரபான நம்பிக்கை.

இந்த நிகழ்வின் 68வது பகுதியில் ஒரிசாவில் இருந்து கொண்டுபோகப்பட்ட சிவ பார்வதி சிலையைப் பற்றிக் குறிப்பிடும் நீல் மக்கிரெகர் ஒரு சம்பவத்தைக் விவரிக்கிறார்.

ம்யூசியத்தினைப் பார்வையிட வந்த யாரோ ஒரு இந்தியர்  சிவ பார்வதி சிலைக்குப் பூக்களையும் பழங்களையும் காணிக்கை செலுத்தி போயிருந்தார், எத்தனை நூற்றாண்டுகள் கடந்து போனாலும் கடவுள் சிலைகள் அதன் புனித தன்மையை இழப்பதில்லை என்பதன் அடையாளமாக இதைக்கருதுகிறேன் என்கிறார் நீல்.

பெரும்பான்மை இந்தியக்கடவுள் சந்தோஷத்தை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள், அவர்களின் உடல்மொழியில் துயரத்தின் சாயல் இல்லை என்கிறார் நீல் மக்கிரெகர்

கிபி 1100–1300 சேர்ந்த இச் சிலை ஒரிசாவின் எந்தக் கோவிலில் இருந்து இங்கிலாந்திற்குப் போயிருக்கிறது எனத்தெரியவில்லை

நூறு பொருட்களின் பட்டியலில் எகிப்திய மறை எழுத்துக்களைக் கண்டுபிடிக்க உதவிய ரொசட்டா கல். ஓக்சுனே மிளகுக் குடுவை, சுட்டன் ஊ தலைக்கவசம், இலங்கையைச் சேர்ந்த தாராவின் சிலை. ஜப்பானிய வெண்கலக் கண்ணாடி, மிங் வங்கிப் பணத்தாள், யேட் டிராகன் கிண்ணம், டியூரரின் காண்டாமிருகம் பற்றிய சித்திரம், இரட்டைத்தலைப் பாம்பு, முகலாயஇளவரசரின் நுண்ணோவியம்

மெக்சிக நிலவரைபடம், ஹவாய் இறகுத் தொப்பி. பீகிள் கப்பலின் காலமானி. ஹொக்குசாய் வரைந்த ‘பேரலை’ ஒவியம், ஒல்மெக் கல்முகமூடி, எனப் பல்வேறு பொருட்களின் வழியே மனிதகுலம் வளர்ந்த விதம் சுவாரஸயமாக விளக்கபட்டிருக்கிறது.

போர்செலின் என்ற சொல் மார்க்கோ போலோவின் மூலமாகச் சீனாவில் அறிமுகமானது ,சீனர்கள் விரும்பும் நீலநிற வண்ணம் ஈரானிய மரபை சார்ந்தது,  ஜப்பானில் கண்ணாடியின் வழியாகக் கடவுளுடன் பேச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது,  காரணம் கடவுளும் கண்ணாடி பார்க்க விரும்புகிறார் என்பதே,

சூரியன் நமக்கு ஆண், ஜப்பானில் பெண் கடவுள், Amaterasu எனும் பெண்சூரியக்கடவுள் கண்ணாடி வைத்திருக்கிறார், கண்ணாடியை துணியால் மூடி வைக்காவிட்டால் தீய உருவங்கள் அதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை ஜப்பானியர்களுக்கு இருக்கிறது என உரையின் வழியாக அரிய தகவல்களை சொல்லிப்போகிறார் நீல்.

இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கையை மாற்றி அமைத்த முக்கியக் கண்டுபிடிப்பு எதுவெனக் கேட்டால் பலரும் செல்போன், கம்ப்யூட்டர் என்பார்கள், இரண்டினையும் விடக் கிரிடிட் கார்டு எனப்படும கடன் அட்டையே வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றியிருக்கிறது என்கிறார் நீல்.

1950களில் அறிமுகமான இந்தக் கிரிடிட் கார்டுகள் இன்று உலகம் முழுவதும் பரவி விட்டன, கடன் அட்டைகள் பயன்படுத்தப்படாத நாடுகளே இல்லை, கையில் பணத்தை எடுத்துச் செல்லும் பயம் இப்போது இல்லை, எளிதாகப் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதால் கடன் அட்டை 99வது பொருளாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கற்காலத்து வெட்டுக் கருவியில் துவங்கி இன்றுள்ள மின்தட்டுபாட்டிற்கு மாற்றாகச் சூரியசக்தியை பயன்படுத்தி எரியும் சீன விளக்கையும் அதற்கான மின்சேமிப்பு கருவியையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

வரலாற்றுச்சான்றுகள் வழியாக மனித நாகரீகத்தின் வரலாற்றைக் கூறும் மக்கிரெகர் அதன் ஊடாகச் சமகாலச் செய்திகள், அறிஞர்களின் கருத்துரைகள். ஆய்வாளர்கள், எழுததாளர்களைப் பற்றிய குறிப்புகள், ரசனை நுட்பங்கள், அரிய தகவல்கள் என அத்தனையும் ஒன்றிணைத்துத் தருகிறார்,

ஒரு சிறந்த ரேடியோ நிகழ்ச்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம், இந்த நிகழ்வினை தனிநூலாக்கியதன் மூலம் சிறந்த ரேடியோ நிகழ்ச்சிகள் அச்சிடப்பட்டு வாசிப்பதற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது

இந்த நூறு பொருட்களின் தேர்வில் ஏதாவது பொதுமை, கருத்துருவாக்கம் இருக்கிறதா எனப் பார்த்தால் காலவரிசை மட்டுமேயுள்ளது. அத்துடன் இவை பிரிட்டீஷ் ம்யூசியத்தின் சேமிப்புகள் என்பது தான் ஒரே ஒற்றுமை

மற்றபடி மனித குல வரலாற்றின் அழியாத சாட்சியாக உள்ள பல முக்கிய ஆவணங்கள், கலைப்பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், இலக்கியபிரதிகள், புகைப்படங்கள், ஒவியங்கள் பல்வேறு நாடுகளின் காப்பகங்களில் இருக்கின்றன, அவற்றைத் தேர்வு செய்து அடுக்கினால் ஒராயிரம் வந்துவிடும். அதன் வழியே மானுட குல வரலாற்றை எழுதினால் பல தொகுதிகள்  வெளியாக வேண்டியது வரும்.

நூறு பொருட்களின் வரலாற்றில் சொல்லப்படாத சேதி ஒன்று உண்டு, அது இந்தப்பொருட்கள் எப்படிப் பிரிட்டீஷ் ம்யூசியத்திற்கு வந்து சேர்ந்தன, யாரால், எப்படிக் கொண்டுவரப்பட்டது, இதன் பின்னால் உள்ள காலனிய ஆதிக்கச் செயல்பாடு ஏன் இன்று வரை கண்டிக்கபடவில்லை என்பதே

***

0Shares
0