பத்துவயதின் பாடல்

திங்கள்கிழமை

திருடன் வந்தான்.

செவ்வாய்க்கிழமை
ஜெயிலுக்குப் போனான்.
புதன்கிழமை
புத்தி வந்தது.
வியாழக்கிழமை
விடுதலை ஆனான்.
வெள்ளிக்கிழமை
வீட்டுக்கு வந்தான்.
சனிக்கிழமை
சாப்பிட்டுப் படுத்தான்.
அப்புறம் நடந்தது

யாருக்குத் தெரியும்?

சிறுவயதில் கேட்ட இந்தப் பாடலை தற்செயலாக ஒரு வாரஇதழில் வாசிக்க நேர்ந்தது, படித்தவுடனே இந்தப் பாடலைப்பாடி எவ்வளவு நாட்களாகிவிட்டது என்று தோன்றியது.

என் பள்ளிவயதில் இதைப் பாடிக்கொண்டே இரவில் கிறுகிறுவானம் சுற்றியிருக்கிறேன் , தலைசுற்றியதும் நண்பர்களுடன் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அரைத்திருடன் முக்கால்திருடன், முழுத்திருடன் கதையைச் சொல்லி விளையாடுவோம், திருடர்களைப் பற்றிய கதை அறியாத சிறுவர்களே இந்த உலகில் இல்லை என்று தான் சொல்வேன்.

இந்தப் பாடல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவிதமாகப் பாடப்பட்டிருக்ககூடும், இன்றைய சிறுவர்களுக்கு இப் பாடல் நிச்சயம் தெரிந்திருக்காது,

பாடலைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்,

இப்பாடலில் வரும் திங்கள் செவ்வாய், புதன், வியாழன். வெள்ளி சனி நாட்களை ஏன் அடுத்தடுத்து வரும் தொடர்ச்சியான நாட்கள் என்று எண்ணிக் கொள்கிறோம் என்று தோன்றியது,

திருடன் திருடிய திங்களுக்கும் ஜெயிலுக்குப் போன செவ்வாய்க்கும் இடைவெளி இருக்கலாம் இல்லையா,

இப்படி அவன் வாழ்வின் வேறுவேறு ஏழுநாட்களைப் பற்றிய பாடலாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது,

இந்த இடைவெளி உருவானதும் மனது தானே கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுகிறது, இந்த இடைவெளியை நமது மரபுக்கதைகளில் எளிதாகப் பார்க்க முடிகிறது,

கடவுள் ஆறு நாள் சிருஷடி செய்து உலகைப் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஒய்வு எடுத்தார் என்கிறது பைபிள், ஒருவேளை அதனால் தான் திருடனின் ஏழாம் நாளான ஞாயிற்றுகிழமை விடுபட்டுப் போயிருக்கிறதா,

என்றால் இந்தத் தமிழ்பாடலை உருவாக்கியது கிறிஸ்துவ போதகர்களில் ஒருவரா.

பாடலில் திருடன் உருமாறிக் கொண்டேயிருக்கிறான்,  ஒரு நாளில் அவன் ஒருசெயல் தான் செய்கிறான், யார் அந்தத் திருடன், அவனது உருச்சித்திரம் எப்படியிருக்கும், ஒருவேளை காலம் தான் திருடனாக உருமாறி வந்திருக்கிறதா, சிறுவயதில் இந்தப் பாடலை பாடுகையில் உள்ளுரில் இருந்த திருடனின் முகம் தான் நினைவிற்கு வந்து போகும், அவன் இப்போது என்னவாகியிருப்பான்,

சாலமன் கிரண்டி என்ற ஆங்கிலப் பாடல் தான் திருடனின் பாடலாக உருமாறியிருக்கிறது என்கிறார்கள்

Solomon Grundy,
Born on Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday:
This is the end
Of Solomon Grundy.

சாலமன் கிரண்டி என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்த்தால் அது ஒரு உணவின் பெயர்.

சாலமன் மீனும் இறைச்சியும் பழங்களும் வாசனை பொருட்களும் ஒன்று சேர்ந்து தயாரிக்கபடும் உணவின் பெயர் Salmagundi அது உருமாறி சாலமன் கிரண்டியாகிவிட்டது என்கிறார்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு நாட்டுப்புற பாடலான இதை ஜேம்ஸ் ஆர்சட் பிலிப்ஸ் 1842ல் அச்சேற்றியிருக்கிறார்

இரண்டு பாடல்களுக்கும் அதன் தொனியும் மையமும் மாறியிருக்கிறது, திருடனும் சாலமன் கிரண்டியும் வேறுவேறு மனிதர்கள், ஆகவே அவர்கள் வாழ்வு நாம் அறியாத மர்மத்தோடு ஆனால் சிக்கல் இல்லாத எளிமையோடு இருக்கிறது, சாலமன் கிரண்டி மனித வாழ்வின் ஏழு நிலைகளை விளக்குவதற்காக உருவாக்கபட்டிருக்கிறான் என்று விளக்கம் தருபவர்களும் இருக்கிறார்கள், ஷேக்ஸ்பியர் கூட மனிதனின் ஏழுநிலைகளை 1) infancy  2)  boyhood 3)  lover 4)  soldier 5)  justice  6) pantaloon 7) second childishness  என்று  குறிப்பிடுகிறார், அதைத்தான் இப்பாடல் வெளிப்படுத்துகிறது என்கிறார்கள்

இன்னொரு நிலையில் இரண்டு பாடல்களும் ஆழ்ந்த தத்துவார்த்தப் பாடலாக ஒலிக்கின்றன, மனிதவாழ்வின் அர்த்தமின்மையைச் சொல்லுவதற்காக இவை பாடப்பட்டனவோ என்றும் தோன்றுகிறது,

Unknown ஐ எளிதாக அடையாளப்படுத்துவதற்கு எப்போதுமே திருடன் என்ற பாத்திரமே முதன்மைப்படுத்தபடுகிறது, அதனால் தானோ என்னவோ திருடனைப்பற்றி நிறையக் கதைகளும் பாடல்களும் நம்மிடையே இருக்கின்றன,

ஆனால் சாலமன் கிரண்டி திருடனில்லை, அவன் வெறும் பெயராக மட்டுமே வாழ்கிறான், அவனது வாழ்வில் எந்த விந்தைகளும் இல்லை, எளிமையான சராசரியான வாழ்க்கை போலவே சித்தரிக்கபடுகிறது, மாறாக திருடன் சுவாரஸ்யமாக இருக்கிறான், எதைத் திருடினான், எப்படிப் பிடிப்பட்டான், எதற்காக மனம் திருந்தினான், யார் அவனுக்காகச் சமைத்த்து என்று மனம் எதைஎதையோ பின்னிக் கொண்டிருக்கிறது

இரண்டு பாடல்களிலும் ஒரு வாரமென்பது திங்கள்கிழமையில் துவங்கி ஞாயிற்றுகிழமையில் முடிகிறது, இது வழக்கமான கிரேக்கோ ரோமன் முறையிலான ஞாயிறு துவங்கி சனியில் முடியும் வாரக் கணக்கிலிருந்து மாறுபட்டிருக்கிறது,  கிழமைகளை நினைவில் வைத்துக் கொள்வதற்காக இந்த பாடல்கள் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டன என்றபோதும் அவற்றின் ஊடாக செயல்படும்புனைவும், அது தரும் கற்பனைகளுமே முக்கியமானதாகப்படுகிறது

சாலமன் கிரண்டி பிறந்து ஒருவாரத்திற்குள் இறந்து போய்விட்டது இங்கிலாந்தில் பிளேக் நோய் தாக்கி இறந்து போன பழைய நினைவில் இருந்து எழுதப்பட்ட பாடலோ என்னவோ.

சாலமன் கிரண்டி பாடல் ஒரு நான்லீனியர் கதை, அதன் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு ஒரு குறும்படம் வீதம் ஏழு குறும்படங்களை உருவாக்கி கொண்டிருக்கிறார் மேட்சன் டோம்லின் என்ற இளம் இயக்குனர்,

காலத்தில் மறந்து போன பாடல்களில் ஒன்றை மறுபடி வாசித்தது சந்தோஷம் தருவதாக இருந்தது,

திருடன் ஒவ்வொரு நாளாக தாவித்தாவிக் குதித்துக் கொண்டேயிருக்கிறான்,

அவனை இன்றைக்கும் பிடித்தேயிருக்கிறது

•••

0Shares
0