பள்ளித்தமிழ்.


சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவில் ஆசிரியர்கள் யாரையும் தேடிப்போய் பார்ப்பார்கள் என்பது வியப்பானதே. அவர்களை நாம் தான் தேடிப்போய் பாரக்க வேண்டும். இவர் ஆரம்ப பள்ளியில் வேலை செய்கிறார். அவர் என்னைச் சந்திக்க வந்த நோக்கம் எப்படி மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று எழுத்தாளர்களாகிய நாங்கள் நினைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.



மிகுந்த உற்சாகத்துடன் ஒரு நாள் முழுவதும் அவரோடு செலவிட்டேன். அன்றைய உரையாடல் முழுவதும் ஆரம்பப் பள்ளியில் உள்ள கல்விமுறை சார்ந்து இருந்தது. அவரது சந்தேகங்கள், கேள்விகள் மிக நியாயமானவையாக இருந்தன. நானும் அவரிடம் கேள்விகளையே அதிகம் பகிர்ந்து கொண்டேன்.


சென்ற வருடம்  தேவகோட்டையில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் ஒன்றின் திறப்புவிழாவிற்காக சென்றிருந்ததை நினைவுபடுத்தி சொன்னேன்


ஐநூறு மாணவிகளுக்கும் மேலாக படிக்கும் பராம்பரியமான கிறிஸ்துவப் பள்ளியது. அங்கே கணிப்பொறி வசதியுடன் கூடிய புதிய நூலகம் கட்டப்பட்டிருந்தது. நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்ட பெரிய அறை. படிக்க வசதியான இருக்கைகள். இணையவசதி.


இதைக் கட்டித் தந்தவர் அந்தப் பள்ளியில்  முப்பது வருசங்களுக்கு முன்பு படித்த ஒரு மாணவியின் கணவர். தற்போது அமெரிக்காவில் வசிப்பவர் . இறந்து போன தன் மனைவியின் நினைவாக அதிக பொருட்செலவில் அந்த நூலகத்தைக் கட்டி தந்திருக்கிறார். வெறும் நூல் நிலைய கட்டிடம் மட்டுமில்லை. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கபட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்களும் அங்கே இடம்பெற்றிருந்தன.


அதைக் காண்கையில் எனக்குப் பொறாமையாக இருந்தது. நான் படித்த காலத்தில் பள்ளியில் நூலகம் என்று ஒரு அறை மட்டுமே இருக்கும். அதைத் தொலைவிலிருந்து மட்டுமே பார்க்க முடியும். அருகில் செல்ல விடமாட்டார்கள். வருடத்திற்கு ஒரு முறை நூலகப் பதிவேடு நோட்டை எல்லா வகுப்பிற்கும் கொண்டுவருவார்கள். அதில் எல்லோரும் கையெழுத்து போடுவோம். அத்தோடு நூலக நடவடிக்கை முடிந்தது.


கிராம நூலகமோ எப்போதும் மூடியே இருக்கும். எங்கள் ஊரில் நூலகராக இருந்தவர் விவசாயமும் பார்த்து வந்தார். அதனால் மழை பெய்தால் நூலகத்திற்கு விடுப்பு. வயல்வேலைகள் அதிகமிருந்தால் நூலகம் திறக்கமாட்டார். ஆனால் அதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. திறந்திருக்கும் நேரங்களில் அவர் அனுமதியின்றி ஒரு புத்தகம் கூட எடுத்துப் படிக்க முடியாது. யுனெஸ்கோ கூரியர் ஸ்பான் மற்றும் தினமணி இதழ்கள் மட்டுமே மாணவர்கள் படிக்க அனுமதிக்கபடும். மற்றவை கையில் எடுக்க கூட அனுமதியில்லை.


நூலகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயமான சூழல் வந்த போது வீடு தேடிவந்து புதிய உறுப்பினர்களை சேர்த்தார்கள். எங்கள் வீட்டில் ஆறு உறுப்பினர் அட்டைகள் சேர்ந்தோம். ஆறு புத்தகம் எடுத்து படிக்காலாமே என்று பேராசை ஏற்பட்டது. ஆனால் நூலகத்திற்கு சென்றால் நூலகர் முன்பு போலவே சிறுவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் என்று கைகாட்டியதற்கு மேலே எதையும் படிக்க முடியவில்லை.


வீட்டில் நிறைய புத்தகம் இருந்த போதும் நூலகத்தில் உள்ள பழைய புத்தகங்களை தேடிப் படிக்க ஆசைபட்டுக் கொண்டேயிருந்தேன். அது நிறைவேற புதிய நூலகர் வந்து சேரும் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது


பொதுவில் இன்று வரை பள்ளி நூலகங்கள் பெயரளவில் மட்டுமே உள்ளன. அரிதாக ஒன்றிரண்டு பள்ளிகளில் மாணவர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். கதைகள் கவிதைகள் படிப்பது மாணவர்களை கெடுத்துவிடும் என்ற உயர்வான நம்பிக்கை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதை பல பெற்றோர்களும் கொண்டிருக்கிறார்கள். அது பெரிய அபத்தம்.


பாடப்புத்தங்களுக்கு வெளியில் உலகமில்லை என்ற பொய்தோற்றம் தான் மாணவனை கெடுக்கும் மிக முக்கிய செயல்பாடு. மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஒரு பக்கம் என்றால் நான் அறிந்தவரை ஆசிரியர்கள் பயன்படுத்துவது அதை விட அபூர்வம்.  வேலைக்கு சேர்ந்த நாளோடு படிக்க வேண்டிய பணி முடிந்துவிட்டது என்று பெரும்பான்மை ஆசிரியர்கள் நம்புகிறார்கள். கற்றுக் கொள்ளல் வாழ்நாள் முழுவதும் பின்பற்றபட வேண்டிய செயல். அதற்கு வயதோ அனுபவமோ தடையில்லை.


ஒவ்வொரு ஆண்டும் வகுப்பில் சிறந்து வருபவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக கொடுப்பார்கள். நிறைய புத்தகங்கள் பரிசாக வாங்கியிருக்கிறேன். அப்படி பரிசாக வந்த புத்தகம் ஒன்று கூட படிக்க சுவாரஸ்யமானதில்லை. பெரும்பாலும் ஆங்கில அகராதி மற்றும் இலக்கண நூல்கள், சுதந்திர செம்மல்கள் போன்ற புத்தகங்கள். திருக்குறள் பாரதியார் கவிதைகள் இரண்டு புத்தகங்களும் பரிசாக மட்டும் நாற்பது முறைகளுக்கு மேலாக பெற்றிருக்கிறேன். அதற்கு வெளியில் நல்ல புத்தகங்களே இல்லையா என்ன? ஆனால் ஒரு போதும் மறந்தும் சிறந்த புத்தகத்தை மாணவன் படித்துவிடக்கூடாது என்று ஆசிரியர்கள் சபதம் ஏற்றிருப்பார்கள் போலும்.


ஒருமுறை கூட்டுறவு சங்கம் சார்பில் நடத்தபட்ட கட்டுரை போட்டி ஒன்றின் பரிசாக தமிழ் அகராதி ஒன்றை தந்தார்கள். என்னால் நம்பவேமுடியவில்லை. வீட்டிற்கு வந்து அதில் உள்ள தமிழ் சொற்களை புரட்டி புரட்டி பார்த்துக் கொண்டேயிருந்தேன்


ஆங்கிலத்தில் அகராதி இருப்பது தெரிந்திருந்தது.ஆனால் தமிழில் அகராதி என்ற ஒன்று உள்ளது. அதில் எண்ணிக்கையற்ற சொற்கள் உள்ளன என்பதைக் கூட பள்ளி எனக்கு அறிமுகம் செய்யவேயில்லை.


நம்மில் ஆங்கில அகராதி வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறோம். ஆனால் எத்தனை வீடுகளில் தமிழ் அகராதியிருக்கிறது. தமிழ் அகராதி தேவையில்லை என்று ஏன் நினைக்கிறோம். தமிழ் நமது தாய்மொழியாக இருந்தாலும் அதிலுள்ள சில ஆயிரம் சொற்களுக்கு மேல் நாம் அறிந்து வைத்திருக்கிவில்லை. அதிலும் நுற்றுக்கும் குறைவான சொற்களை மட்டுமே அன்றாட வழக்கில் பயன்படுத்துகிறோம்


தமிழ் அகராதியியல் மிக பழமையானது. தொல்காப்பியத்திலிருந்தே இதற்கான அடிப்படைகள் வரையறை காணப்படுகின்றன


எட்டாம் நுற்றாண்டிலே தமிழில் திவாகரம் போன்ற நிகண்டுகள் உருவாகியிருக்கின்றன. இதில்  9500 சொற்களுக்கு பொருள் கூறப்படுகிறது. இதுபோலவே தமிழின் மிக முக்கியமான இன்னொரு அகராதியான சூடாமணி நிகண்டு பதினோறாம் நுற்றாண்டில் உருவாக்கபட்டது. ஒரு எழுத்து ஒரு பொருள் அகராதி என்பது போன்ற சிறப்பு அகராதிகளும் தமிழில் இடம் பெற்றிருக்கின்றன.


சென்னை பல்கலைகழகம் தமிழ் லெக்சிகன் எனப்படும் வேர்சொல் அகராதி ஒன்றை பல்வேறு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. கதிர்வேல்பிள்ளை அகராதி, கழக அகராதி, சதுரகராதி, க்ரியா தற்கால தமிழ்அகராதி , வட்டார வழக்கு சொல் அகராதி என்று பல்வேறுவகையான தமிழ் அகராதிகள் இன்று விற்பனைக்கு கிடைக்கின்றன. 


ஆனால் ஒரு தமிழ் அகராதியை எப்படி பயன்படுத்துவது என்பதை கூட நாம்  அறிந்திருக்கவில்லை. மருத்துவ சொற்கள், விஞ்ஞான சொற்கள், வழக்குசொற்கள் என ஒவ்வொன்றிற்கும் தமிழில் தனி அகராதிகள் உள்ளன. ஆனால் அதை பயன்படுத்துகின்றவர்கள் மிக குறைவு.


வின்ஸ்லோ என்ற மதபோதகர் தமிழ் சொற்களுக்கு நிகரான ஆங்கில சொற்கள் கொண்ட தமிழ் ஆங்கில அகராதி ஒன்றை 1862 ல் உருவாக்கியிருக்கிறார். இதைத் தவிர கடந்த நுறு வருசத்தில் சிறப்பான வேறு தமிழ் ஆங்கில அகராதியை எவரும் உருவாக்கவேயில்லை என்பது கவலை தரக்கூடிய செய்தி.


நான் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு விஞ்ஞான வகுப்பு நடத்துவதற்காக ஒரு எலும்பு கூடு ஒன்றை கண்ணாடியில் பொருத்தி வைத்திருப்பார்கள். விஞ்ஞான வகுப்பு நடக்கும் போது அந்த கண்ணாடிப் பெட்டகம் ஒவ்வொரு வகுப்பிற்காக வந்து சேரும். ஆசிரியர் ஒவ்வொரு எலும்பின் பெயரையும் சொல்லி விளக்கம் தருவார்.


அப்போது என் மனதில் அறிவியல் தொடர்பான கேள்விகள் எதுவும் தோன்றாது. மாறாக  என் கண்முன்னே எலும்புக் கூடாக நிற்கும் இந்த மனிதன் யார். இவன் ஆணா பெண்ணா? என்ன பெயர் கொண்டவன். அவன் பள்ளிக் கூடங்களில் படித்திருக்கிறானா? தான் ஒரு காலத்தில் இப்படி எலும்புக் கூடாகி பள்ளியின் வகுப்பறை தோறும் அலைந்து திரியப்போகிறோம் என்று இந்த மனிதன் அறிந்திருப்பானா என்று என் மனது அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும்.


ஒரு நாள் ஆவல் தாங்கமுடியாமல் ஆசிரியரிடமே அதைப் பற்றி கேட்டுவிட்டேன். என் சந்தேங்களுக்கு பதிலாக கிடைத்தது இரண்டு அறை. கோபத்துடன் என் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் புத்தி போகுது பாரு என்று என்னை வகுப்பின் வெளியில் நிற்க வைத்தார். அப்போதும் என் மனதில் நான் அந்த மனிதனைப் பார்க்கிறேன். ஆனால் அவன் என்னைப் பார்த்ததில்லை என்ன விசித்திரமில்லையா என்று தான் தோன்றிக் கொண்டிருந்தது.


பள்ளிக்கூடத்தில் உள்ள பெயர் தெரியாத அந்த எலும்புக்கூட்டை போல தான் நாமும் எந்த அடையாளமும் இன்றி வெறும் சுட்டும் பொருளாக, சூளையில் வேகவைத்து வெளியே தள்ளும் செங்கல்களாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம்.


நம் கல்விமுறையின் ஆதார தளங்களில் பிரச்சனை பீடித்திருக்கிறது. கற்று தருவதிலும் விருப்பமில்லை. எளிதாக கற்று தருவதற்கான சாத்தியங்களையும் உருவாக்குவதில்லை என்பது சாபக்கேடு


நம் கல்விமுறையில் ஆரம்ப பள்ளி அளவில் பெரிய மாற்றம் நடைபெற வேண்டும். கற்றுதருதல் மற்றும் கற்று கொள்ளல் இரண்டு முறைகளும் சீரமைக்கபட வேண்டும். யாவையும் தாண்டி பொது பூங்காவிற்கு அழைத்து போவது போல பள்ளிக்கு குழந்தைகளை எளிதாக எவ்விதமான மனத்தடையுமின்றி அழைத்து போய்வருவது சாத்தியமாக வேண்டும். பந்தை கையில் வாங்கிய உடன் குழந்தை கண்ணில் தோன்றும் விளையாட்டிற்கான பரபரப்பு போல புத்தகத்தை கண்ணில் கண்டதும் படிக்க வேண்டும் என்ற பரபரப்பு தோன்றும் அளவு கற்றுதரப்பட வேண்டும்.


ஆரம்ப பள்ளிகளை முழுமையான வணிகமையமாக்கிவிட்ட நமது சூழலில் இது போன்று தனிநபர் தன் மனைவியின் நினைவாக பெண்கள் பள்ளி ஒன்றுக்கு தன் சொந்த பணத்தில் நவீன நூலகம் ஒன்றை கட்டி தந்திருப்பது பெரிய பாராட்டுதலுக்கு உரிய செயல். இது ஒரு முன்னோடி சாதனை.


தர்மபுரியில் உள்ள பரம்வீர் பானாசிங் பள்ளியில் ஆண்டுதோறும் ஒரு எழுத்தாளரை வரவழைத்து அவரோடு ஒரு நாள் முழுவதும் மாணவர்கள் ஒன்றாக பேசி பழகும்படியாக செய்கிறார்கள். எவ்வளவு ஆரோக்கியமான செயல்பாடு. 


திருவண்ணாமலையில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளி இலக்கிய கூட்டங்களுக்கு இலவசமாக இடம் தந்து தங்கள் மாணவர்களையும் பங்கு பெற செய்கிறார்கள். கலை இலக்கிய செயல்பாடுகள் அத்தனைக்கும் துணை நிற்கிறார்கள்.


இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய மாற்றங்களே தமிழகத்தில் நடைபெறுகின்றன. எண்பத்தைந்து சதவீதம் பள்ளிகள் வெறும்வணிக சந்தைகளே.


இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் கற்றுதருதலில் என்ன மாறுதல் செய்துவிட முடியும் என்று சோர்ந்து போகாமல் தேடிவந்து அறிந்து கொள்வதும் அதில் தன்னால் முடிந்த ஒன்றை செயல்படுத்தி பார்ப்பதும் அவசியமானதும் ஆரோக்கியமானதுமாகும்.


பள்ளி என்பது ஆசிரியர்களின் உலகம் மட்டுமில்லை. அது ஒவ்வொரு பெற்றோரும் அக்கறையுடன் கவனிக்கபட வேண்டிய முக்கிய அமைப்பு. ஆனால் அது தன் வணிக முயற்சிகளால் பொதுக்கழிப்பிடத்தை விடவும் நாற்றமடிக்கும் நிலையில் உள்ளது. அதைக் கண்டு கொள்ளாமல் நம் பிள்ளைகளை அதற்குள் தினமும் அனுப்பி வைக்கிறோம். அதை தான் சகித்து கொள்ள முடியவில்லை.


**


 

0Shares
0