பெயரில்லா பழங்கள்

‘பதேர் பாஞ்சாலி’ படம் கொய்யாப்பழம் பறித்த சிறுமி துர்காவை நோக்கி ஷிஜோபாபு சத்தமிடுவதிலிருந்து தான் . துவங்குகிறது, சிறுவர்கள் பழம் திருடுவதை குற்றம் என யாரும் சொல்லிவிட முடியாது, அது ஒரு வேடிக்கை, விளையாட்டு, ஆனால் துர்கா கொய்யபழத்தைத் திருடியது இழந்து  போன தங்கள் உரிமையை மீட்பதாகவே ஷிஜோபாபு நினைக்கிறாள், அதனால் தான் அவள் கூச்சலிடுகிறாள்

உண்மையில் ஹரிஹரின் குடும்பத்துக்குச் சொந்தமாக கொய்யாமரங்களும் மாமரங்களும் தென்னைகளும் கொண்ட ஒரு தோப்பு இருந்தது. அது முன்னூறு  ரூபாய் கடன் காரணமாக கைநழுவிப் போய்விடுகிறது, தோப்பை இழந்துபோனது சர்போஜயாவுக்கு மிகுந்த மனவருத்தமளிக்கிறது,

இந்தச் சம்பவங்கள் படத்தில் உரையாடலாக மட்டுமே சொல்லப்படுகின்றன, கடனுக்காகச் சொத்தை இழந்த போன கடந்தகாலம் படத்தின் கதைப்போக்கினை நகர்த்தும் முக்கிய காரணியாகச் செயல்படுகிறது

பதேர் பாஞ்சாலி படம் முழுவதும்  கொய்யாபழம், ஒரு உருவகம் போலவே இடம் பெறுகிறது,, பாட்டி இந்திரா கூட கொய்யாபழம் சாப்பிட ஆசை கொண்டவளாகவே சித்தரிக்கபடுகிறாள்.  துர்கா தனக்காக எதையும் திருடவில்லை. அவள் பாட்டிக்காக தான் திருடுகிறாள். பாட்டிக்கு பழங்கள் மீதான ஆசையை அறிந்து அவள் சாப்பிடுவதற்காகவே கொய்யாபழத்தைத் திருடி வருகிறாள்

பாட்டி இந்திராவிற்கு ஒரு மகளிருந்தாள். அவள் சிறுவயதிலே திருமணம் செய்து தரப்பட்டு எதிர்பாராமல் இறந்தும் போய்விடுகிறாள். அந்த மகளின் ஜாடையில் துர்கா இருப்பதால் தான் பாட்டிக்கும் துர்காவிற்கும் அப்படியொரு நெருக்கமான பந்தமிருக்கிறது என்று பதேர்பாஞ்சாலி நாவல் விவரிக்கிறது. ரே அந்த நிகழ்வுகளை படத்தில் வலியுறுத்துவதில்லை

ருங்கி பானர்ஜி என்ற சிறுமி துர்காவாக நடித்திருக்கிறாள். அவளது துள்ளலான ஒட்டமும் பாட்டி சாப்பிடும் போது அதை அமர்ந்து பார்க்கையில் கண்களில் ஆசையை வெளிப்படுத்தும் விதமும் ஆச்சரியமளிக்க கூடியது. பாட்டி சாப்பிடுவதை துர்கா அவதானித்துக் கொண்டிருக்கும் காட்சியில் அவள் ஒரு தூணில் சாய்ந்தபடியே ஒரு காலை சற்றே தூக்கி மறுகாலை தரையில் தொஙக விட்டு முழங்காலில் இரண்டு கைகளையும் ஒன்றாக மடித்து வைத்து பாட்டியின் முகத்தை பார்த்தபடியே இருக்கும் அந்த காட்சி சினிமாவில் கதாபாத்திரங்களை எப்படி கையாளுவதும் எந்த இடத்தில் எப்படி உட்காரசெய்ய வேண்டும் என்பதற்கான பாலபாடம் என்று சொல்லலாம்.

நாவலில் குழந்தை பிறந்ததற்கு காலபூர் தர்காவில் சக்கரை ஒத வேண்டும். நல்லவேளை நேற்றிரவு தாயும் பிள்ளையும் பிழைத்து கொண்டார்கள் என்று பக்கத்துவீட்டு பெண் சொல்கிறாள், அந்த வாசகம் கிராமங்களில் அன்று ஊடுருவி இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. சிறு குழந்தைகளுக்காக தர்காவில் போய் ஒதி வருவது தமிழகத்திலும் இன்று வரை நடந்து வரும் ஒரு செயலாகும். வங்காள கிராமங்களில்  இஸ்லாமியர்கள் மிக இணக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமிது. இவற்றை ரே தனது திரைக்கதையின் கட்டுமானத்திற்கு தேவையற்றவை என விலக்கியே படத்தை உருவாக்கியிருக்கிறார்

ஷிஜோபாபுவின் வீட்டிலிருந்த நெக்லஸைக் காணவில்லை என துர்காவை விசாரிக்கும் போது அவள் கையில் எதையோ மறைத்துக் கொண்டு நிற்கிறாள், அது என்னவென்று காண ஷிஜோபாபு  அவள் கையினை திறக்க முயற்சிக்கிறாள், அவளை தடுத்த சர்போஜயா துர்காவின் கைப்பிடிக்குள் என்ன இருக்கிறதென்று தானே பார்க்கிறாள். துர்கா கையில் காய்ந்து உலர்ந்து போன பழங்கள் இருக்கின்றன. அவை தன்னுடைய தோப்பிலிருந்து திருடப்பட்டவை என்று ஷிஜோபாவு திட்டும் போது சர்போஜயா ஆத்திரம் தாளாமல் கேட்கிறாள்:

தோட்டத்தில் உள்ள எல்லாப் பழத்திலும் பேரெழுதி வைத்திருக்கிறதா என்ன?

குழந்தை கொஞ்சம் பழங்களை  எடுத்துக் கொண்டது பெரிய விஷயமா

இந்த கேள்வி ஷிஜோபாபுவை நோக்கி மட்டும் கேட்கப்பட்ட ஒன்றல்ல, அது குழந்தைகள் ஒரு பழம் பறித்துக் கொள்வதை கூட அனுமதிக்காத சமூகம் பற்றியும், சுயநலம் மிக்க உறவுகளை பற்றியும், வீட்டின் இயலாமை பற்றியும் சொல்லும் கேள்வியது,

இந்த கேள்வியில் தாங்கள் இழந்து போன தோப்பின் வலியும், வீணாக உதிரும் பழங்களை கூட குழந்தைகள் எடுத்துக் கொள்ள கூடாது என நினைக்கும் ஷிஜோபாவின் மனநிலையும் காட்சிபடுத்தபடுகிறது

சர்போஜயா திருட்டை நியாயப்படுத்தவில்லை, மாறாக குழந்தைக்கு ஒரு பழம் தரக்கூட ஏன் ஒருவருக்கு மனம் வரவில்லை என ஆதங்கப்படுகிறாள்.

பதேர் பாஞ்சாலியில் வரும் அப்பு ஆசையை அடக்கத் தெரிந்தவன், துர்கா ஆசையை அடக்க தெரியாதவள், அவள் தான் நினைத்தவற்றை எப்படியாவது அடைந்துவிடுகிறாள், அப்பு தான் ஆசைப்பட்டவற்றை விலகி நின்று வேடிக்கை பார்க்கிறான், தயங்கி தயங்கி அவற்றைப் பெறுகிறான், அப்பு பெரியவனாக வளர்ந்த  போதும் அவனது இந்த இயல்பு மாறவேயில்லை

துர்கா  ஒரு அதிசய மலர் போல இருக்கிறாள், அவளிடம் துடிப்பு மிகுந்திருக்கிறது, அவள் பழங்களைத் திருடுவதும், சிறுமிகளை அழைத்து விருந்து சமைத்து விளையாடுவதும், ரயிலை காண ஒடுவதும், மிட்டாய்வாலாவை கண்டதும் வாங்கி சாப்பிட ஆசைப்படுவதும், என வளர்ந்த குழந்தையாக இருக்கிறாள், அப்புவோ வீட்டின் ஏழ்மையை புரிந்து கொண்ட பெரிய மனிதனைப் போல நடந்து கொள்கிறான்,

துர்கா இந்திய சினிமாவின் மகத்தான ஒரு கதாபாத்திரம், கச்சிதமான வார்ப்பு, அவள் மழையில் நனையும் காட்சி போன்ற ஒன்றை இதுவரை நான் இந்திய சினிமாவில்  கண்டதேயில்லை, அவள் விரும்பி சாவை தேடிக் கொள்கிறாள் என்பது போலவே இருக்கிறது,

இதமான காற்றில் குளத்தில் சிற்றலைகள் உருவாகின்றன. நீர் மட்டத்தில் படர்ந்திருந்த இலைகள் அசைகின்றன. நீர்பூச்சிகள்  ஊர்ந்து கடந்து போகின்றன.  இடி இடித்துக் கொண்டிருக்கும் வானத்தின் கீழே அப்பு வேகமாக வந்து கொண்டிருக்கிறான். உயர்ந்த பனைமரங்கள் கூட காற்றில் அசைகின்றன. வானம் இருண்டு இடிக்கத் துவங்குகிறது. அப்பு ஒடத்துவங்குகிறான்.  துர்கா ஏதோ பிரார்த்தனை செய்தபடியே இருக்கிறாள். அவளுக்கும் இடியோசை கேட்கிறது. காற்று பலமாக அடிக்கிறது.

சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தின் வழுக்கை தலையின் மீது முதல் மழைத்துளி விழுகிறது.  அவர் ஒரு கையில் தூண்டிலை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் குடையைத் தலைக்கு மேலாக விரிக்கிறார்.  குளத்து நீரில் மழைத் துளிகள் பட்டுத் தெறிக்கின்றன. மழை வலுத்துப் பெய்யத் துவங்குகின்றது. அப்பு நனைந்தபடியே ஒரு மரத்தின் அடியில் போய் ஒண்டி நின்று கொள்கிறான். துர்கா மழையில் நனைந்தபடியே காற்றில் சுழலும் கேசத்துடன் ஆடிக் கொண்டிருக்கிறாள். ஆவேசத்துடன் அவள் மழையில் நனைகிறாள். மழையின் வேகம் அதிகமாகிறது.

துர்கா மிகுந்த சந்தோஷம் கொண்டவள் போல வேண்டுமென்றே முழுவதுமாக நனைகிறாள். மரத்தடியிலிருந்தபடியே மழை உதட்டில் வழிய அப்பு சிரிக்கிறான். ஈரத்தில் நனைந்து ஒடுங்கியவளாக துர்கா அருகில் வந்து மரத்தடியில் ஒண்டி நிற்கும் அப்புவின் மீது தனது சேலையின் முந்தானையால் போர்த்திவிடுகிறாள். அந்த நெருக்கத்தில் அவனது முகம் மலர்கிறது. மழையை மந்திரம் மூலம் நிறுத்திவிட முடியும் என்ற பழைய நம்பிக்கையை கொண்டிருப்பவள் போல ஒரு மழைப்பாட்டை பாடத் துவங்குகிறாள்.

இன்னொருபக்கம் துர்காவின் அம்மா மழைக்குள்ளாகவே நடந்து வருகிறாள். ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் உதிர்ந்து  விழுந்து கிடக்கிறது. யாரும் அறியாமல் அதை எடுத்து மறைத்துக் கொண்டு வேகவேகமாக தனது வீட்டை நோக்கி போகிறாள். மரம் காற்றில் அலைபடுகிறது. துர்கா மழைப்பாட்டை பாடிக் கொண்டேயிருக்கிறாள்.

மழை அதுவரை அவள் மனதில் படிந்திருந்த அத்தனை வேதனைகளையும் கழுவி துடைத்து விட்டது போன்ற சந்தோஷம் அவளது முகத்தில் உருவாகிறது. துர்கா தன்னை மழையில் கரைந்து கொண்டுவிட முயற்சிக்கிறாள். வயதும் வறுமையும் கடந்து  தான் இயற்கையோடு ஒன்று விட வேண்டும் என்ற ஆவேசம் அவளிடம் காணப்படுகிறது. இன்னொரு புறம் தன்னை ஒத்த வயதுடைய சிறுமி திருமணம் ஆகி போகும் போது தனது எதிர்காலம் என்னவாகும் என்று அவள் மனதில் ஆசையும் மழையால்  பெருகுகிறது

அப்பு எப்போதும்  போலவே அமைதியாக துர்காவை வியப்போடு பார்த்தபடியிருக்கிறான். அவள் யாரோ வானிலிருந்து இறங்கி வந்து நடனமாடும் தேவதையை போல அவன் கண்களுக்கு தெரிகிறாள். மழை அந்த ஊரை வளைந்து பெய்கிறது.  வாழ்வின் உச்ச நிலையை அடைந்து விட்டவளை போல அன்று துர்கா நடனமாடுகிறாள்.

ஒரு வேளை அது தான் அவளது கடைசி நடனம் என்பதால் தான் அவ்வளவு ஆவேசமாக ஆடுகிறாளோ என்னமோ. இதன் தொடர்ச்சியான காட்சியில் நோயுற்று நடுங்கியபடியே அவள் எதையோ முணுமுணுக்கும் போது துர்காவின் முகத்தில் நினைவுகள் கடந்து போய்க் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

கடைசி நிமிசங்களில் அவள் சொல்லமுடியாத வலியை கடந்து செல்கிறாள். அவள் கனவுகளும் ஆசைகளும் அந்த மழையோடு கரைந்து போய்விட்டிருக்க அவள் மழை இரவின் பேய் இரைச்சலில் தன்னை சாவுக்கு ஒப்பு கொடுத்துவிடுகிறாள். மண்சுவர்கள் இடிந்து போய்கிடக்க சாவின் துர்நாற்றத்துடன் அந்த வீடும் தன்னை மழைக்கு ஒப்பு கொடுத்து வீழ்ந்திருப்பதோடு மழைக்காட்சி  முடிவடைகிறது.

துர்காவின் மீது படிந்த எல்லா குற்றசாட்டுகளையும் மழை கழுவி விடுகிறது, அவள் பரிசுத்தமானவள் ஆகிவிடுகிறாள், இனிமேல் அவள் குழந்தையில்லை, கல்யாண ஆசை கொண்ட இளம் பெண் என்பது போன்ற புதிய வெளிச்சம் அவள் மீது விழுகிறது, ஆனால் மழையில் ஏற்பட்ட காய்ச்சலில் அவள் இறந்து போகிறாள்,

அவளது மரணத்தின் பிறகு  அப்பு வெளியே கிளம்புகிறான், மழை பெய்யப்போகிறது என அறிந்து வீட்டிற்கு வந்து குடையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான், இந்த ஒரு காட்சியில் அவன் வளர்ந்த மனிதனாகிவிடுகிறான்

அவனுக்கு மழை என்பது அக்காவின் மரணத்திற்கான காரணம், அவனால் ஒருபோதும் மழையை துர்காவின் நினைவின்றி இனிப் பார்க்கமுடியாது, மழை ஒரு மரண சாட்சி போலாகிவிடுகிறது,

துர்காவின் மரணம் தான் பதேர் பாஞ்சாலி படத்தின் மையப்புள்ளி,  அது தரும் வலிமையான தாக்குதல் பார்வையாளனை உலுக்கிவிடுகிறது

ஆசைப்பட்டதை அடையமுடியாமல் போன குழந்தைபருவம் கொண்டவர்கள் தங்கள் மனதில் அந்த வலியை மறப்பதேயில்லை, அப்பு அதில் ஒருவன்,

இப்படத்தில் ஒரு காட்சியில் பாட்டி கொய்யாபழத்தை முகர்ந்து பார்ப்பாள், துர்கா ஆசையோடு அருகில் அமர்ந்திருப்பாள், பாட்டிக்கும் துர்காவிற்குமான உறவு அந்த பழத்தோடு தொடர்புடையது

கொய்யாபழம் படத்தின் முக்கிய குறியீடு போலவே காட்சிபடுத்தபட்டிருக்கிறது,

தோப்பை இழந்த வலியில் துவங்கும் திரைப்படம், வீட்டை இழந்து வெளியேறுவதில் நிறைவு பெறுகிறது,  அப்புவும் அவனது அப்பா அம்மாவும் ஊரில் இருந்து வெளியேறிப் போகிறார்கள், ஆனால் துர்கா நம் நினைவில் தோப்புகளில், நாணல்படர்ந்த வெளியில், ஒடிக் கொண்டேயிருக்கிறாள், துர்காவின் நினைவு நம்மைத் தூங்க விடுவதில்லை, திரைக்கு வெளியே துர்கா வாழத்துவங்குகிறாள்

பதேர் பாஞ்சாலி இன்றும் அதன் தனித்துவத்துடன் அழகுடன் அப்படியே இருக்கிறது,

•••

0Shares
0