பேருரையின் இரண்டாம் நாள்

இன்றைய தினமலர் நாளிதழில் எனது உலகசினிமாப் பேருரை பற்றிய செய்தியும் எனது பேச்சின் சுருக்கமும் வெளியாகி உள்ளது, தினமலர் இதழுக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

•••

பேருரையின் இரண்டாம் நாளிலும் அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள், நேற்றைய உரையில் பிரான்சுவா த்ரூபோ பனிரெண்டு வயதில் வீட்டில் இருந்து  ஒடிப்போனதைப்பற்றி விவரிக்கையில் எனது பால்யமும் வீட்டை விட்டு ஒடிய நினைவுகளும் பீறிட்டன,

பால்ய வயதின் நினைவுகள் திரைப்பட இயக்குனர்களிடம் எப்படி காட்சிகளாக வெளிப்படுகின்றன, குழந்தைகளின் உலகை நாம் புரிந்து கொள்ளத தவறும் போது ஏற்படும் விளைவுகள் எவை, த்ருபோ என்ற ஆளுமையின் கசப்பான பால்யகாலம் எப்படியிருந்தது என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லி அவரது 400 blows  படத்தை விளக்கினேன்,

புத்தகங்களின் முக்கியத்துவத்தை வலிமையாக எடுத்துச் சொல்லும் த்ரூபோவின் பாரன்ஹீட் 451 படம் பற்றிப் பேச முடிந்த்து மகிழ்ச்சி தருவதாக அமைந்தது,

ஒரு தகவலை மேடையில் சொல்லாமல் விட்டுவிட்டேனே என ஆதங்கமும் கூட இருந்தது, அது பாரன்ஹீட் 451 என்பது காகிதம் எரியும் உஷ்ணநிலை, புத்தகங்களை எரிக்கக் கூடிய உஷ்ணத்தைத் தலைப்பாக வைத்துக் கொண்டு புத்தகங்களைக் காப்பதைப் பற்றி த்ரூபோ படம் எடுத்திருக்கிறார்,

இப்படத்தின் கதை ரே பிராட்பரியின் நாவல், புத்தகங்களை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் காணவேண்டிய படமிது

எனது நண்பர் மனுஷ்யபுத்திரன் உலகசினிமாப் பேருரைகள் குறித்த தினசரிப்பதிவுகளை தனது முகநூலில் பதிவு செய்து வருகிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தினமும் உலக சினிமா பேருரைகளில் கலந்து கொள்வதுடன் அதை வாழ்த்தி பேசி. தனது முகநூலில் விழா குறித்து எழுதியுள்ள எனது நண்பரும் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனருமான வசநத்பாலனுக்கும் நன்றி, அவரது குறிப்பு இது

****

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நிகழ்த்தும்
உலக சினிமாவின் ஆளுமைகள் பற்றிய உரை நெகிழ்ச்சியாக உள்ளது.

மீண்டும் குரோசவா,ட்ருபோவின் படங்களை பார்க்க வேண்டும் என்ற பெரிய அவாவை தூண்டிவிட்டபடி உள்ளது.

நண்பர்களே டிசம்பர் 10ம் தேதி வரை மாலையில் நடக்கும் எஸ் ராவின் உரையை தவறவிடாதீர்கள்.

உங்களை ஒரு அங்குலமாவது உலக சினிமாவை நோக்கி
பார்வையை திருப்ப உதவும்

இயக்குனர் வசந்தபாலன்

•••

உலகசினிமா பேருரை பற்றி நண்பர் சுரேஷ்கண்ணன் ஒரு சிறப்பான பதிவிட்டிருக்கிறார், அவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இணைப்பு,

https://pitchaipathiram.blogspot.in/2012/12/blog-post_5.html

••

குங்கும்ம் வார இதழில் உலகசினிமா பேருரைகள் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது, குங்குமம் ஆசிரியர் குழுவினருக்கு எனது நன்றிகள்

•••

0Shares
0