பிரெஞ்சு சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நேற்றிரவு CYCLING WITH MOLIÈRE என்ற பிரெஞ்சுப் படத்தைப் பார்த்தேன். பிலிப் லு குவே இயக்கியது. இரண்டு நடிகர்கள் ஒன்றுகூடி மோலியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றுக்காக ஒத்திகை பார்ப்பது தான் கதை. இதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான படத்தைத் தந்திருக்கிறார்கள்
கார்த்தியே, பிரான்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நடிகன். அவனது Dr. Morange தொலைக்காட்சித் தொடருக்கு பெரும் வரவேற்பு. போகுமிடமெல்லாம் ரசிகர்கள் அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். பாராட்டுகிறார்கள். கையெழுத்து கேட்கிறார்கள்
டாக்டர் மொரேஞ்ச் ஒரு சூறாவளியின் போது காட்டின் நடுவில் ஒரு பிளாஸ்டிக் கரண்டியைக் கொண்டு நோயாளி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்கிறார். இதனால் அந்த பையன் முழுமையாக குணமடைந்தான் என டிவி சீரியல் கதை செல்கிறது. இப்படியான அபத்தங்களையே மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால் மோலியர் போன்ற கிளாசிக்கல் நாடகஆசிரியர்களை மக்கள் பள்ளிபாடமாக படித்ததோடு மறந்துவிட்டார்கள். மக்களின் ரசனை என்பது மலினமாகிவிட்டது. அதை மாற்ற வேண்டும் என்றே கார்த்தியே நினைக்கிறான்.
கார்த்தியே , தனது பழைய நண்பரும் சிறந்த நடிகருமான செர்ஜ் டன்னூரைத் தேடி ஆல்டிரே பகுதிக்கு செல்கிறான். அது அழகான கடற்கரை கொண்ட சுற்றுலா மையம். அங்கே பழைய வீடு ஒன்றில் திரையுலகை விட்டு ஒதுங்கி செர்ஜ் தனியே வசிக்கிறார்.
அவரைத் தேடி வரும் கார்த்தியே தான் மோலியரின் புகழ்பெற்ற மிசாந்த்ரோப் நாடகத்தை நிகழ்த்த விரும்புவதாகக் கூறுகிறான். நடிப்பதில் ஆர்வமில்லை என்று விரட்டியடிக்கும் செர்ஜி மெல்ல நடிப்பதற்கு ஒத்துக் கொள்கிறார். தன் வீட்டிலே அவனை தங்கிக் கொள்ளச் சொல்கிறார். ஆனால் கார்த்தியே ஒரு விடுதியில் தங்கிக் கொள்கிறாள். அந்த விடுதி மேலாளர் அவனது ரசிகை. அவள் நடந்து கொள்ளும் விதம் வேடிக்கையானது.
தினமும் அவர்கள் செர்ஜ் வீட்டில் சந்தித்து நாடக ஒத்திகை பார்க்கிறார்கள். மோலியரின் நாடக வசனங்களை ஆழ்ந்து கற்று மனதில் வைத்திருக்கும் செர்ஜி அதைச் சொந்த உரையாடல் போல அத்தனை அழகாக வெளிப்படுத்துகிறார். இதற்கு மாறாக கார்த்தியே நடிக்க முற்படுகிறான். வசனங்களை அழுத்தி உச்சரிக்கிறான். சில வசனங்களை கவனமின்றி கடந்து போகிறான். இதனால் கோபம் கொள்ளும் செர்ஜ் கிளாசிக்கல் நாடகங்களை எப்படி மேடையேற்ற வேண்டும் என்பதை விளக்குகிறார்.
மோலியரின் The Misanthrope 1666 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட நாடகமாகும், நீதிமன்றத்தின் பாசாங்குத்தனங்கள் குறித்த நையாண்டியை இந்த நாடகம் வெளிப்படுத்துகிறது. நாடகத்தின் மைய பாத்திரம் ஆல்செஸ்டே ‘ஃபிலிண்டே மற்றொரு முக்கிய கதாபாத்திரம்.
இருவரில் யார் ஆல்செஸ்டேயாக நடிப்பது என்று சண்டை வருகிறது நாணயத்தை சுண்டிப் போட்டு முடிவு காணுகிறார்கள்.ஆல்செஸ்டேயாக நடிக்க முயன்று அந்த கதாபாத்திரமாகவே செர்ஜ் மாறிவிடுகிறார்.
இரண்டு நடிகர்கள். இருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். ஆனால் வேறு வேறு பார்வை கொண்டவர்கள். கார்த்தியே பழைய வசனங்களை அப்படியே பேச வேண்டிய அவசியமில்லை. இன்றைய பார்வையாளருக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்கிறான். ஆனால் செர்ஜ் மோலியர் சினிமா திரைக்கதை ஆசிரியரில்லை. புகழ்பெற்ற நாடக ஆசிரியர். அவரது கவித்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் மேடையேற்றுவது முட்டாள்தனம் என்கிறான். இதனால் இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொள்கிறார்கள்.
மோலியரின் இரண்டு கதாபாத்திரங்கள் உயிர்பெற்றுவிட்டது போலவே அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
இதற்கிடையில் கார்த்தியே ஆல்டிரே பகுதியில் சொந்த வீடு ஒன்று வாங்க வேண்டும் என வீடு தேடி அலைகிறான். அப்போது தற்செயலாக இத்தாலியப் பெண் பிரான்செஸ்காவை சந்திக்கிறான். அவள் கணவனைப் பிரிந்து வாழுகிறாள். அவள் நடிகர்கள் அனைவரும் சுயமோகிகள் அவர்களை எனக்குப் பிடிக்காது என்று வெளிப்படையாகக் கூறுகிறாள்.
பிரான்செஸ்காவுடன் மெல்ல நட்பு உருவாகிறது. அவள் ஒருமுறை செர்ஜ் வீட்டிற்கு வந்த போது, அவர் வேண்டுமென்றே கார்த்தியேவை மட்டம் தட்டுகிறார். அவமதிக்கிறார். வெற்றிபெற்ற நடிகன் மீதான பொறாமையது என்று முகத்திற்கு நேராகச் சொல்கிறாள்.
செர்ஜ் அதை ஒத்துக் கொள்கிறார். அவருக்கு ரகசியமாக பிரான்செஸ்கா மீது காதல் பிறக்கிறது. அதை அறிந்து கொண்ட கார்த்தியே அவளைத் தந்திரமாக தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். இது செர்ஜியின் கோபத்தை மிகவும் அதிகமாக்குகிறது.மூவரும் கடற்கரைக்குச் செல்லும் மிக அழகான காட்சியிருக்கிறது. அதில் பிரான்செஸ்கா தன் சொந்தவாழ்வின் வேதனைகளை மறந்து சிறுமியைப் போல துள்ளித்திரிகிறாள்.
வீட்டில் நாடக ஒத்திகை நடக்கும் போது அடிக்கடி செல்போன் பேச கார்த்தியே எழுந்து போகையில் செர்ஜ் கோபம் கொண்டு கத்துகிறார். இதுபோலவே பிரேக் இல்லாத சைக்கிளில் இருவரும் கடற்கரைக்குப் போய் திரும்புகையில் எதிர்பாராமல் கார்த்தியே சாலையை விட்டு விலகி தண்ணீரில் விழுவதும். ஆபாசப் படங்களில் நடிக்கும் ஆசை கொண்ட பெண்ணுடன் அவர்கள் நாடக ஒத்திகை நடத்துவதும் மறக்கமுடியாத காட்சிகள்
மூவரும் சைக்கிளில் உற்சாகமாகச் செல்வது பிரான்சுவா த்ரூபோவின் Jules et Jim படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை நினைவுபடுத்துகிறது.
இரண்டு தளங்களில் இப்படம் முக்கியமாகிறது. ஒன்று மோலியரின் சிறப்பினை நாடக ஒத்திகையின் வழியாக அழகாக வெளிப்படுத்துகிறார்கள். இரண்டாவது நடிகர்களின் மனவுலகம். குடும்ப உறவு. புகழுக்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை இவற்றை மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு புள்ளிகளும் ஒன்று சேர்ந்து படத்தை அழகான கலைப்படைப்பாக்குகிறது.
நாடக ஒத்திகைக் காட்சிகளைக் கூட இவ்வளவு சுவாரஸ்யமாகப் படமாக்க முடியும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.
இரண்டு தலைமுறைகளுக்குள் உள்ள வேறுபாட்டினை, புரிதலை, ரசனையைத் தான் படம் விவரிக்கிறது. அது தான் உண்மையில் மோலியருடன் சைக்கிள் ஒட்டுவதாகும்.


