பிளாபர்ட்டின் குறிப்புகள்.

“Art is nothing but this strange translation of thought by form.” – Gustave Flaubert

பிரெஞ்சு எழுத்தாளர் குஸ்தாவ் பிளாபர்ட் (Gustave Flaubert)  எழுதிய Intimate Notebook என்ற குறிப்பேட்டினை வாசித்தேன். அவரது மருமகள் கரோலின் மூலம் இந்தக் குறிப்பேடு கண்டறியப்பட்டு வெளியாகியுள்ளது.

1856 ஆம் ஆண்டு பிளாபர்ட் எழுதிய மேடம் பவாரி நாவல்  உலகப்புகழ்பெற்றது. இந்த நாவலின் பாதிப்பிலிருந்தே டால்ஸ்டாய் தனது அன்னாகரீனினா நாவலை எழுதினார். மேடம் பவாரி ஐந்து முறை படமாக்கப்பட்டிருக்கிறது.

பிளாபர்ட் உடலின்பத்தைக் கொண்டாடியவர். மனிதன் சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவன். ஆணோ, பெண்ணோ தனக்கான சுகத்தைத் தேடுவதற்காக எதையும் செய்வார்கள். அதில் எது குற்றம், எது குற்றமில்லை என்று வரையறுக்கவே முடியாது என்கிறார் பிளாபெர்ட்

பிளாபர்ட்டிற்கும் இவான் துர்கனேவிற்கும் இடையில் நெருக்கமான நட்பிருந்தது. அவர்கள் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டார்கள். பிளாபர்ட் ஒரு கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

என் அன்பான துர்கனேவ்,

“நான் நேசித்த அனைவரும் கடந்த மூன்று ஆண்டுகளில் இறந்து விட்டார்கள். நான் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேன். என் வேதனைகள் எவராலும் தீர்க்கமுடியாதவை. என் எழுத்துகள் பற்றியும் என்ன பற்றியுமான பொதுமக்களின் முட்டாள்தனம் என்னை அதிகம் வேதனைப்படுத்துகிறது. . என்னால் கோபப்படாமல் யாருடனும் பேச முடியாது, என்னைச் சுற்றிய சூழல் கோபத்தைத் தூண்டுகிறது. என் தேசம் அழிந்து கொண்டு வருகிறது. அதன் வீழ்ச்சியை நான் கண் எதிரே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். இப்படியே நிலைமை நீண்டால் கழுத்தில் ஒரு கல்லைக் கொண்டு ஆற்றில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பிளாபர்ட்டின் இந்தக் குறிப்பேடு இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கிறது.. 56 பக்கங்களே கொண்ட சிறிய நூல். இதில் பிளாபர்ட் தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் துண்டு துண்டாக எழுதியிருக்கிறார். பெரும்பாலும் நுண்மொழிகளைப் போலவே  எழுதப்பட்டிருக்கின்றன

தனது நாட்குறிப்பு ஒன்றில் பிளாபர்ட் இப்படிக் குறிப்பிடுகிறார்

மனிதர்கள் ஆடைகளை நெய்யத்துவங்குவதற்கு முன்பாகவே கவிதைகள் நெய்யத் துவங்கிவிட்டார்கள். இயந்திரங்கள் உருவாவதற்கு முன்பாகக் கலைகள் வளர்ச்சி அடைந்துவிட்டன. ஆதிகாலம் தொட்டு இன்று வரை மனிதர்கள் கலைகளின் வழியாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்

பெரிய இயந்திரங்களோ, தொழில்நுட்பமோ உருவாவதற்கு முன்பாகவே மிகப்பெரிய பிரமிடு மற்றும் தேவாலயங்களை நிர்மாணம் செய்திருக்கிறார்கள். அது எதைக் காட்டுகிறதென்றால் தினசரி உபயோகத்தினை விடவும் பிரம்மாண்டமான கலையழகு கொண்ட படைப்புகளை நோக்கியே மனித மனம் குவிகிறது என்பதைத் தானே, அழகு தான் கலையின் ஆதாரம். நீங்கள் கடவுளாக விரும்பினால் கவிஞராகி விடுங்கள். என்கிறார்.

இன்னொரு குறிப்பில் இந்தியாவில் ஒரு வாழைமரத்தடி நிழலில் அமர்ந்தபடியே இளம்பெண்களின் நடனத்தை ரசிப்பதாகத் தான் கனவு காண்பதாகக் கூறுகிறார்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான வேறுபாடு என்பது மனிதர்கள் பசியில்லாத போதும் சாப்பிடுவார்கள். தாகம் எடுக்காத போதும் குடிப்பார்கள் என்பதே எனப் போகிற போக்கில் சொல்லிப் போகிறார் பிளாபர்ட்

அழகு தெய்வீகமானது. அருவருப்பானதை எவரும் விரும்புவதில்லை. அழுக்கான கிழிந்த உடை அணிந்த பிச்சைக்காரனைப் பார்த்து நாய்கள் கூடக் குலைக்கின்றன. தேவதைகளைச் சித்தரிக்கும் போது கலைஞர்கள் அதன் உடைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் தருவதில்லை.  உடல் அழகே போதுமானதாக இருக்கிறது.

மற்றொரு குறிப்பில்பிளாபர்ட் சொல்கிறார்

பத்து வயதிலே புகழ்பெற வேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிட்டது. ஒரு பெரிய அரங்கில் என்னைப் பலரும் சூழ்ந்து கொண்டு புகழுவது போன்ற காட்சியைப் பலமுறை கனவில் கண்டிருக்கிறேன். புகழின் உச்சத்தை அடைய விரும்பினேன். அது எளிதானதில்லை என்று அறிந்த போதும் புகழை நாடிச் செல்வதையே விரும்பினேன். புகழ் மனிதர்களைச் சந்தோஷப்படுத்துவது போல வேறு எதுவும் மகிழ்ச்சிப்படுத்துவதில்லை.

சிந்தனையாளர் வால்டேருக்குச் சிரிக்கத் தெரிந்திருந்தது. அதனால் தான் அவர் தனது நூற்றாண்டின் அரசனைப் போல வாழ்ந்தார். சிரிப்பதும் சிரிக்க வைப்பதும் எளிதானதில்லை. அறிவாளிகளால் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. கொஞ்சம் முட்டாள்தனம் வாழ்விற்கு அவசியம்.

இன்றிருக்கும் நிலையிலே சமூகம் தொடர்ந்தால், இரண்டாயிரம் ஆண்டுக்குள் பூமியில் ஒரு புல் பூண்டு இருக்காது. இயற்கையானது முற்றிலும் விழுங்கப்பட்டிருக்கும். இப்போதே உலகம் மிகப்பயங்கரமாகக் காட்சியளிக்கத் துவங்கிவிட்டது என தன் சுற்றுச்சூழலை எண்ணி கவலை கொண்டிருக்கிறார் பிளாபர்ட்.

பிளாபர்ட்டின் குறிப்புகளில் அவர் மனது உடலின்பத்திற்கும் சமூகக் கட்டுபாட்டிற்கும் இடையே தவிப்பதை நன்றாக அறியமுடிகிறது.

•••

27.2.20

0Shares
0