காந்தியின் சுயசரிதையில் உள்ள ஒரு சிறு குறிப்பை வைத்துக் கொண்டு இந்த நாவலை கீத் ஹெல்லர் எழுதியிருக்கிறார்.
மார்த்தாவும் அவரது கணவர் சாமுவேலும் பிரிட்டனின் ஹெட்ஜ் எண்ட் கிராமப்புறத்தில் தங்கள் முதுமையைக் கழிக்கிறார்கள். 1948 ஆம் ஆண்டு, காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், மார்த்தாவிற்கு மகாத்மா காந்தியின் மூத்த மகன் ஹரிலாலிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் காந்தியோடு மார்த்தாவிற்கு இருந்த நீண்ட காலக் கடிதத் தொடர்பு குறித்துத் தான் அறிவேன் என்றும் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசநோயாளியாக மருத்துவமனையில் மரணத்தோடு போராடும் ஹரிலாலை போய்ப் பார்க்க வேண்டுமா, இல்லையா என மார்த்தா குழம்பிப் போகிறாள். தனக்கும் காந்திக்குமான நீண்டகாலக் கடிதத் தொடர்பு குறித்துத் தனது கணவரோடும், இரண்டு மகள்களுடனும் விவாதிக்கிறாள் மார்த்தா.
அது அவளின் குடும்ப வாழ்வில் விரிசலை உருவாக்குகிறது.
பெற்றோர் இறந்த பிறகு மார்த்தா ஹுக்டன் இலண்டனிலுள்ள தனது அத்தை வீட்டில் தங்கி வளர்க்கிறாள். 1889ல் இங்கிலாந்திற்குச் சட்டம் பயில வந்திருந்த காந்தியை ஒரு நாள் தற்செயலாகச் சந்திக்கிறாள். சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று உறுதி கொண்டிருந்த அவருக்கு உதவுகிறாள் மார்த்தா..
புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்ட மார்த்தா காந்தியோடு மிகவும் நட்பாகப் பழகுகிறாள். அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். ஆனால் காந்தி தனக்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டதாகச் சொல்லி மன்னிப்பு கேட்கிறார். உண்மையை அறிந்து அவள் அதை ஏற்றுக் கொள்கிறாள். அதன் பிந்திய காலத்தில் மார்த்தாவிற்கும் காந்திக்குமான நட்பு கடிதங்களின் வழியே தொடர்கிறது
1948ல் நடந்த காந்தியின் படுகொலை அவர்களின் நட்பிற்கு முற்றுப் புள்ளியாகிவிடுகிறது.
இந்நிலையில் தான் ஹரிலாலிடமிருந்து அவளுக்கு இப்படி ஒரு கடிதம் வருகிறது. தனது நண்பர் காந்தியின் மகன் ஹரிலாலை மருத்துவமனையில் போய்ப் பார்க்க வேண்டும் என மார்த்தா நினைக்கிறாள். அதற்காக அவள் எதிர்கொள்ளும் குடும்பம் மற்றும் சமூகப்பிரச்சினைகளைச் சுற்றியே நாவல் விரிகிறது.
மகாத்மா காந்தியைக் கதாபாத்திரமாகக் கொண்ட நாவல் என்பதைத் தவிர இதில் வேறு சிறப்புகள் எதுவுமில்லை. மிகவும் மேலோட்டமாக, தட்டையாக எழுதப்பட்ட நாவலிது.
காந்தி குறித்த தமிழ் இலக்கிய ஆக்கங்களைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் நண்பர் சுனில் கிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். இத்தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது. அதில் எனது கதையும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் காந்தி பற்றி எழுதப்பட்ட புனைவுகளோடு ஒப்பிட்டால் இந்த நாவல் வெகு சராசரியே,
••
