குறுங்கதை 42 கடைசிப் பரிட்சை

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அவனுக்கு ஒரு கடிதம் வரும். அந்தக் கடிதத்தில் அவன் எழுத வேண்டிய பரிட்சை பற்றியும் அதற்கான நாள் மற்றும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட நாளில் அந்த இடத்திற்குத் தேடிப் போய்ப் பார்த்தால் அப்படியொரு பரிட்சை மையமேயிருக்காது. அவனைப் போல வேறு யாராவது பரிட்சை எழுத தேடி வந்திருப்பார்களா எனத்தேடிப் பார்ப்பான். ஆனால் வேறு எவருக்கும் அப்படி ஒரு கடிதம் வந்திருக்காது.

கல்லூரி நாட்களில் அவன் M.A பிலாசபி படித்தான். அதில் ஒரு பரிட்சை எழுதவில்லை. எழுதி முடித்துப் பட்டம் பெற அவன் விரும்பவில்லை என்பதே உண்மையான காரணம்.

ஆகவே பரிட்சை நாளுக்கு ஒரு வாரம் முன்பு அவன் காசிக்குக் கிளம்பிப் போய்விட்டான். நாடோடியாக அலைந்து பின்பு ஊர் திரும்ப ஆறுமாதமானது. அப்பா கோவித்துக் கொண்டார். தத்துவம் படிப்பதை அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டான். அப்பாவின் ரைஸ்மில்லை கவனிக்கத் துவங்கினான். திருமணம் செய்து கொண்டான்.

அவனுக்குத் திருமணமான ஆண்டிலிருந்து தான் அந்தக் கடிதம் வருவது துவங்கியது. முதலில் ஆச்சரியமாக இருந்தது. யார் அப்படி ஒரு கடிதத்தைத் தனது வீட்டு முகவரி தேடி அனுப்பியது எனப் பார்த்தபடியே இருந்தான். அதில் பல்கலைக்கழக முத்திரையிருந்தது. அவன் எழுத வேண்டிய பேப்பரின் பெயரும் அதற்கான பரிட்சை நாள். இடம் குறிப்பிடப்பட்டிருந்தது.

சரி அதை எழுதி முடித்துவிடுவோமே என நினைத்துப் பரிட்சை நடக்கும் இடத்திற்குப் போனான். அது ஒரு ஓலைச்சுவடிகள் காப்பகம். அங்கே அப்படி எந்தத் தேர்வும் நடைபெறவில்லை என்று காவலாளி விரட்டியனுப்பினான். பரிட்சை இடம் மாற்றப்பட்டதா எனத் தெரியவில்லை. எரிச்சலோடு வீடு திரும்பினான்.

அடுத்த ஆண்டும் அதே போல ஒரு கடிதம் வந்தது. முதல்நாளே அந்த இடத்திற்குப் போனான். அப்போதே அது தவறான முகவரி என்று தெரிந்துவிட்டது. யார் அவனோடு விளையாடுகிறார்கள். எதற்காக ஆண்டில் ஒரு முறை இப்படிக் கடிதம் வருகிறது..

ஆத்திரத்துடன் அவன் பல்கலைக்கழகத்திற்கே சென்று முறையிட்டான். யாரும் அப்படிக் கடிதம் எதையும் அனுப்பி வைக்கவில்லை என்று பதில் தந்தார்கள். உங்கள் முத்திரையோடு கடிதம் வருகிறதே எனக்கேட்டதற்கு அது தகவல் அனுப்பும் இயந்திரத்தில் ஏற்பட்ட குழப்பமாக இருக்ககூடும என்று பதில் தந்தார்கள். என்ன செய்வது என அவனுக்குத் தெரியவில்லை.

அடுத்த ஆண்டு கடிதம் வந்த போது அதைப் பிரிக்காமலே கிழித்துப் போட்டான். ஆனால் அதன் அடுத்த வருஷம் நிச்சயம் பரிட்சை நடக்காது. வெறுமனே தேடிப்போகிறோம் என்ற நினைப்போடு சென்றான். அந்தப் பயணம் மகிழ்ச்சி தருவதாகவே இருந்தது.

அடுத்த ஆண்டு முதல் அந்தப் பரிட்சைக்குப் போய்ச் சும்மா திரும்பி வருவது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆகவே ஒவ்வொரு ஆண்டும் அவன் அக்கடிதம் வந்தவுடன் ரகசிய யாத்திரை போவது போல மனதளவில் தயார் ஆகிவிடுவான்.

குறிப்பிட்ட நாளில் மகிழ்ச்சியாக அந்த முகவரிக்குப் போவான். பரிட்சை நடக்கவில்லை என்று யாரோ சொல்லும் போதும் அவனுக்குக் கோபம் வராது. தெரிந்த விஷயம் தானே என்பது போலச் சந்தோஷமாக அங்கிருந்து திரும்பி நடப்பான்.  இல்லாத விஷயத்தைத் தேடிச் செல்வது பிடித்தேயிருந்தது.

அந்தக் கடிதம் தவறுதலாக அனுப்பப் படுகிறதா. அல்லது ஏதோ ரகசிய விதியின் செயல்பாடா என அவனுக்குப் புரியவில்லை.  ஆனால் ஒரேயொரு விஷயம் அவனுக்குப் புரிந்தது.

ரசிக்கத் துவங்கியவுடன் தவறுகள் விருப்பமாக மாறிவிடுகிறது. அத்தோடு அவன் தத்துவப் படிப்பிலிருந்து இன்னமும் மீளவில்லை. அதில் முழு ஈடுபாடு இருக்கவே செய்கிறது. அதன் அடையாளம் தான் இப்படி நடக்காத பரிட்சையைத் தேடி அலைவது.

இதைப்பற்றி நினைக்கும் போது மட்டும் அவன் தனக்குதானே சிரித்துக் கொண்டான்.

••

0Shares
0