குறுங்கதை 65 கர்னலின் நாற்காலி.

அந்த மரநாற்காலி கர்னல் ஜேம்ஸ் ஃபார்லாங்கிற்காகவே செய்யப்பட்டது. அவர் ஆறடிக்கும் அதிகமான உயரம் என்பதால் அவரது உடலமைப்பிற்கு ஏற்ப தேக்கு மரத்தில் நாற்காலி செய்து கொடுத்தார் பெருமாள் ஆசாரி. 19வது படைப்பிரிவின் தலைவராகவும் நிலக்காட்சி ஓவியராகவும் இருந்த ஜேம்ஸ் ஃபார்லாங் தான் பயணம் செய்யும் இடங்களுக்கெல்லாம் அந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வருவதற்காகவே சவரிமுத்துவை நியமித்திருந்தார்கள்.

அவன் நாற்காலியின் இருபக்கமும் கயிறுகள் போட்டு அதை முதுகில் சுமந்தபடியே வருவான். ஏற முடியாத மலைப்பகுதியாக இருந்தால் நாற்காலியில் ஜேம்ஸ் ஃபார்லாங்கை உட்கார வைத்துத் தானே சுமந்து கொண்டு மலையேறுவான். ஜேம்ஸ் தவிர வேறு எவரும் அந்த நாற்காலியில் உட்காருவதற்கு அனுமதி கிடையாது. இரவில் அந்த நாற்காலியை பட்டு துணி சுற்றி தனியே பாதுகாத்து வைத்திருப்பது வழக்கம்.

கர்னல் ஜேம்ஸ் ஃபார்லாங் பயங்கர முன்கோபி. ஆத்திரம் வந்தால் வெள்ளிப்பூண் போட்ட பிரம்பால் அடி பிய்த்து எடுப்பது வழக்கம். சவரிமுத்துவும் நிறைய முறை அடிவாங்கியிருக்கிறான். அடிவாங்கியவர்கள் வலியில் சப்தமிட்டால் மேலும் அடி விழும். ஆகவே யாரும் கத்தமாட்டார்கள்.

படைப்பிரிவு ஓரிடம் விட்டு மற்றோரு இடம் போகையில் ஜேம்ஸ் தனது கறுப்புக் குதிரையின் முன்னால் செல்வார். சவரி முத்துவும் பணியாளர்களும் சோல்ஜர்களின் பின்னால் நடந்து வருவார்கள். எங்காவது ஜேம்ஸ் தனது குதிரையை நிறுத்தினால் மறு நிமிஷம் சேர் என்று உரத்துச் சப்தம் எழுப்புவார். அந்தச் சப்தம் கேட்டவுடன் சவரி நாற்காலியோடு ஓடுவான். எவ்வளவு வேகமாக ஒடி அவர் முன்னே நாற்காலியைப் போட்டாலும் அவர் கோபத்தில் திட்டுவதே வழக்கம். சில நேரம் நாற்காலி தரையில் சரியாக நிற்கவில்லை என்றாலும் அவனுக்குத் தான் அடிவிழும். ஒருமுறை அவன் நாற்காலியைச் சேற்றில் போட்டுவிட்டதாக முப்பது கசையடி பெற்றதும் உண்டு.

ஓவியம் வரையும் போது ஜேம்ஸ் ஃபார்லாங்கின் இயல்பு மாறிவிடும். ஆழ்ந்த தியானத்தில் இருப்பவன் போலத் தூரத்து மலையைப் பார்த்தபடியே இருப்பான். ஒரு முறை குன்றின் உச்சியில் நாற்காலியைப் போடச்சொல்லி அந்தச்சூரியனைப் பார்த்தபடியே இருந்தான்.

முகாமிட்ட நாட்களில் கூடச் சவரிக்கு ஓய்வு கிடையாது. திடீரென நள்ளிரவில் ஜேம்ஸ் ஃபார்லாங் குதிரையில் கிளம்பிவிடுவான். அப்போது இருட்டில் நாற்காலியைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். ஒருமுறை ஜேம்ஸ் நோயுற்ற போது சவரி மூன்று நாட்கள் நாற்காலியைத் தொடவேயில்லை. பகலும் இரவும் உறங்கினான். அவனது கனவில் கூட ஜேம்ஸ் ஃபார்லாங் சேர் என்று கத்துவது கேட்டது.

விசுவாசமான ஊழியனாகவும் அமைதியான மனிதனுமாக இருந்த சவரியை ஒரு முறை கூட ஜேம்ஸ் ஃபார்லாங் பாராட்டவில்லை. சவரி தனது சொந்த ஊருக்குப் போய்த் தந்தை தாயைப் பார்த்து வர அனுமதிக்கவுமில்லை. நாற்காலியைப் போட்டு அமர வசதியற்ற இடங்களில் சவரிமுத்துவை குனிந்து மண்டியிடச் சொல்லி அவன் முதுகில் ஜேம்ஸ் ஃபார்லாங் உட்கார்ந்து கொள்வார். சவரி முத்து ஒரு போதும் கோபம் கொள்ளவேயில்லை.

மஞ்சள் அருவி எனப்படும் பேரருவியைக் காண மலையேறிய போது வழியில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஈரமான காட்டுப்பாதையில் நடக்க முடியவில்லை என்று ஜேம்ஸ் ஃபார்லாங் நாற்காலியில் ஏறி உட்கார்ந்து சுமக்கச் சொன்னார். காற்றோடும் மழையோடும் அவர்கள் நடந்தார்கள். நாற்காலியைச் சுமந்தபடியே நடப்பது சிரமமாக இருந்தது.

ஒரு சரிவில் ஜேம்ஸ் வலப்பக்கம் திரும்பி நடக்கும்படி உத்தரவிட்டார். அந்தப் பாதையில் இறங்கி நடக்கும் போது உடன் வந்த சோல்ஜர்கள் வழிதப்பிப் போய்விட்டதைச் சவரி முத்து உணர்ந்தான். ஜேம்ஸ் அவர்களைப் பற்றித் தனக்குக் கவலையில்லை நீ நட என்று சப்தமிட்டார். திடீரென அந்தக் காட்டில் தானும் ஜேம்ஸ் ஃபார்லாங்கும் மட்டுமே இருப்பதை உணர்ந்தான். பெருமழை அவன் மனதில் ஏதேதோ விபரீத எண்ணங்களை உருவாக்கியது. தொலைவில் மஞ்சள் அருவியின் ஓசை கேட்க ஆரம்பித்தது.

நடக்க நடக்க மழை நின்று போல மாலைவெயில் பரவ ஆரம்பித்தது. அந்த மஞ்சள் வெளிச்சத்தில் அருவி பொன்னிறமாகத் தெரியத் துவங்கியது. ஜேம்ஸ் ஃபார்லாங் வியப்போடு ஒண்டர்புல் என்றபடியே நாற்காலியை உயரமான பாறை ஒன்றின் மீது போடும்படி சொன்னான். சவரி முத்து நாற்காலியைப் பாறையின் மீது போட்டபோது அது சரியாக நிற்கவில்லை. கீழே உட்கார்ந்து நாற்காலியின் காலை பிடித்துக் கொள் என்றான் ஜேம்ஸ் ஃபார்லாங். சவரி முத்து அப்படியே செய்தான்.

ஜேம்ஸ் ஃபார்லாங் தனது சிறிய நோட்டில் அருவியின் தோற்றத்தை பென்சிலால் வரையத் துவங்கியபோது சவரி முத்து ஜேம்ஸை ஏறிட்டுப் பார்த்தான்.

திடீரெனக் காடு அவனிடம் ஏதோ சொல்வது போலத் தோன்றியது. தூரத்து மேகம் கூட அவனிடம் எதையோ சொன்னது.

சவரி முத்து பிறகு ஒரு நிமிஷம் யோசிக்கவில்லை. நாற்காலியோடு ஜேம்ஸை அருவியை நோக்கித் தள்ளினான். பேரருவியினுள் நாற்காலி விழுந்து பாறையில் மோதி சிதறிப்போவது தெரிந்தது. ஜேம்ஸ் ஃபார்லாங் அருவிக்குள் விழுந்து மறைந்து போனான். அதன் பிறகு சவரிமுத்துவை யாரும் காணவேயில்லை. ஜேம்ஸ் ஃபார்லாங்குடன் அவனும் அருவியில் சிக்கி இறந்துவிட்டதாகவே நம்பினார்கள்.

ஆனால் தென்மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமத்தில் சவரி முத்து ஆடு மேய்த்தபடியே எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான். தன் வாழ்க்கையில் ஒருமுறை கூட எந்த நாற்காலியிலும் சவரி முத்து உட்காரவில்லை என்பது தான் வாழ்வின் விசித்திரம்

••

0Shares
0