தங்கப் பறவையைத் தேடி

ஹாலிவுட் சினிமாவில் film noir என்ற திரைப்பட வகைக் குற்றவுலகையும் அதைக் கண்டறியும் காவல்துறை மற்றும் புலனாய்வாளர்களையும் முதன்மைப்படுத்தியதாகும். கறுப்பு வெள்ளையில் வெளியான film noir படங்கள் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டவை. இந்தச் சினிமா வகையில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு படம் The Maltese Falcon.

டேஷியல் ஹம்மெட்டின் The Maltese Falcon நாவலை ஜான் ஹுஸ்டன் திரைப்படமாக இயக்கியுள்ளார். இது அவரது முதற்படம். ஹம்ப்ரி போகர்ட் துப்பறியும் நிபுணர் சாம் ஸ்பேடாக நடித்திருக்கிறார்.

1941 இல் சான் பிரான்சிஸ்கோவில், துப்பறியும் நிபுணர் சாம் ஸ்பேட் மற்றும் மைல்ஸ் ஆர்ச்சர் தனது அலுவலகத்தில் ரூத் வொண்டர்லி என்ற பெண்ணைச் சந்திக்கிறார்கள். அவள் தனது காணாமல் போன தங்கையைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறாள் . அவள் சந்தேகப்படும் ஃபிலாய்ட் என்ற நபரை தாங்கள் கண்காணிப்பதாக ஒத்துக் கொள்கிறார் சாம் அதன்படியே இந்தப் பொறுப்பினை ஆர்ச்சர் முன்னெடுக்கிறார். .

நள்ளிரவில் ஸ்பேடிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் ஆர்ச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைக்கிறது. ஏன் ஆர்ச்சர் கொல்லப்படடார் என்று புரியாமல் திகைத்துப் போய்க் கொலை நடந்த இடத்திற்குச் செல்கிறார் சாம்.

தனது கூட்டாளி ஆர்ச்சரை சாமே கொலை செய்திருக்கக் கூடும், காரணம் அவரது மனைவி இவாவோடு சாமிற்குக் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று காவல்துறை நினைக்கிறது. ஆகவே சாமைக் கடுமையாக விசாரணை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கிடையில் சாமை தேடி கெய்ரோ என்ற இளைஞன் அலுவலகத்திற்கு வருகிறான். அவன் துப்பாக்கி முனையில் சாமை மிரட்டித் தான் ஒரு அரிய கலைப்பொருளைத் தேடி வந்ததாகச் சொல்கிறான். சாம் அவனை அடித்துப் போடுகிறான்.

Maltese Falcon என்ற அரிய கலைப்பொருளைத் தான் தேடி வந்ததாகச் சொல்லி அதைக் கண்டுபிடித்துத் தந்தால் ஐந்தாயிரம் டாலர் பணம் தருவதாகச் சொல்கிறான் கெய்ரோ.

ஆர்ச்சர் கொலைக்கும் இந்தக் கலைப்பொருளுக்கும் என்ன தொடர்பு எனச் சாம் விசாரணை மேற்கொள்ள ஆரம்பிக்கிறான்.

இந்நிலையில் பணக்கார குட்மன் அவரைச் சந்திக்க விரும்புகிறார். அவரும் Maltese Falconயைத் தேடி வருவது தெரிகிறது. அவர் 25 ஆயிரம் டாலர் தருவதாகப் பேரம் பேசுகிறார்.

இதற்கிடையில் வில்மர் என்ற ஆள் சாமை நிழல்போலப் பின்தொடருகிறான். அவன் யாருடைய ஆள். எதற்காகப் பின்தொடருகிறான் எனக் கண்டறிய முயல்கிறான் சாம்.

இளம்பெண் பிரிஜிட் ஓ ஷாக்னெஸ்ஸியோடு காதல் வசப்படுவதும் அவளுக்கும் நடந்த குற்றத்திற்கும் தொடர்புள்ளது என அறிந்து அவளது முகத்திற்கு நேராகச் சாம் “I hope they don’t hang you, precious, by that sweet neck. . . The chances are you’ll get off with life. That means if you’re a good girl, you’ll be out in 20 years. I’ll be waiting for you. If they hang you, I’ll always remember you.” எனச் சொல்வது முக்கியமான காட்சி.

Maltese Falcon யாரிடமிருக்கிறது. அதை ஏன் தேடுகிறார்கள். இதற்காக நடந்த குற்றங்கள் எவை என்பதை மிக அழகாக, பரபரப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பணக்கார குட்மனும் சாமும் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிக நேர்த்தியானது. தனது கோபத்தைக் காட்டும் சாம் வெளியே வந்து நடுங்கும் கைகளை மறைத்துக் கொள்வது அற்புதம்.

வழக்கமான துப்பறியும் நிபுணரைப் போலின்றி சாம் கறுப்பும் வெள்ளையும் கலந்த மனிதர். அவருக்கும் மறுபக்கமிருக்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அதே நேரம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்தால் அதற்காக எந்த நிலைக்கும் போகக்கூடியவர். படத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரிகளிடம் ஹம்ப்ரி போகர்ட் கோபத்துடன் பேசும் காட்சி மிகச்சிறப்பானது.

ஒளிப்பதிவு இயக்குநர் ஆர்தர் எடிசன் கதாபாத்திரங்களின் தன்மை மற்றும் அவற்றின் செயல்களை முதன்மைப்படுத்தும் விதமாக ஒளியமைப்புச் செய்திருக்கிறார். குறிப்பாக மாறுபட்ட காட்சிக்கோணங்கள் படத்தின் தனிச்சிறப்பு.

PRIVATE INVESTIGATOR என்ற கதாபாத்திரம் திரையுலகில் பிரபலமானது இந்தத் திரைப்படத்தின் மூலம் தான். ஆகவே இன்றும் ஹாலிவுட் சினிமாவின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படுகிறது “தி மால்டிஸ் பால்கான். ”

••

0Shares
0