குறுங்கதை 68 முற்றுப் பெறாத ஓவியம்

தான் திருடிய வீடுகளில் படம் வரைந்து விட்டுச் செல்லும் ஒரு திருடன் இருந்தான். இவ்வளவு அருமையாக ஓவியம் வரையத் தெரிந்தவன் ஏன் திருடன் ஆனான் என்று திருட்டுக் கொடுத்த வீட்டோர் நினைக்குமளவு அவனிருந்தான்

திருட வந்த தனக்கு ஒரு பயமும் இல்லை என்பதன் அடையாளம் போலவே அவன் ஓவியம் வரைந்து போனான் என்றார்கள் சிலர்.

ஆனால் வேறு சிலரோ அவன் திருடிய பொருளுக்கு இணையாக இப்படி ஒரு ஓவியத்தை வரைந்து போயிருக்கிறான் என்றார்கள்.

காவல்துறை அதிகாரிகளோ அவன் தான் சாதாரணத் திருடனில்லை என்று காட்டுவதற்காக வரைகிறான். இது ஒரு சவால் என்றார்கள்.

எது எப்படியோ அவன் வரைந்த சித்திரங்களைக் கண்ட எவரும் அதிலிருந்து விடுபட முடியவேயில்லை.  குழந்தைகளையும் பெண்களையும் அது மிகவும் வசீகரித்தது.  மகிழ்ச்சிப்படுத்தியது. பெரும்பாலும் அவன் மலர்களையும் முகமற்ற மனிதர்களையுமே வரைந்தான். அதுவும் சில வீட்டுச் சுவர் முழுவதும் ஓவியம் வரைந்திருந்தான்.

அந்தச் சித்திரங்களைக் கண்ட ஒரு பெண் சொன்னாள்.

“அவன் திருடி விட்டுச் செல்லும் போது குற்றவுணர்வு கொள்ளாமல் இருக்கவே ஒவியம் வரைகிறான். இப்போது ஓவியம் வரையப்பட்ட நம் வீட்டுச் சுவர் அவனுடையதாகிவிட்டதே. அந்த ஓவியங்களைப் பாருங்கள். பதற்றமில்லாத கோடுகள். எல்லா உருவங்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.“

அவள் சொல்வது உண்மை என்பதைத் திருட்டுக் கொடுத்த வீட்டுக்காரனும் உணர்ந்தான். ஒவ்வொரு வீட்டிலும் திருடன் கையெழுத்துப் போட்டது போலவே அந்த ஓவியமிருந்தது.

திருட்டுக் கொடுத்த வீட்டின் மீதான பரிதாபம் கலைந்து போய், அவ்வீட்டின் ஓவியத்தைக் காண அண்டை அயலோர் வந்து கொண்டேயிருந்தார்கள். ஒவியத்தை வியந்து பேசினார்கள்.

யார் அந்தத் திருடன் எனக் கண்டறிய முடியவேயில்லை. காவலர்கள் ஒவியத்திறமை கொண்ட பலரையும் சந்தேகத்தில் வரவழைத்து விசாரித்தார்கள். ஒருவராலும் அது போன்ற நேர்த்தியான கோடுகளை வரைய முடியவில்லை. இரவுக்காவலை அதிகரித்துத் திருடனைப் பிடிக்கப் பலவிதங்களில் காவல்துறை முயற்சி செய்தது. ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவேயில்லை.

உள்ளூர் திருடர்களைக் கொண்டு அவனைக் கண்டறியவும் காவல்துறை முயற்சித்தது. அவர்களுக்கு ஏன் ஒரு திருடன் இப்படி ஓவியம் வரைகிறான் என்று புரிந்து கொள்ள முடியவேயில்லை.

செக்காலைத் தெருவில் வசித்த வணிகன் வீட்டில் திருடிவிட்டு அவன், தலை நிறைய மலர்கள் சூடிய ஒரு பெண்ணை வரைந்திருந்தான். ஆனால் அந்த ஒவியம் முழுமை பெறவில்லை. இதுவரை அவன் வரைந்த ஓவியங்கள் அத்தனையும் விடப் பேரழகுடன் இருந்தது . ஆனால் அது பாதியிலே நின்றிருந்தது.

அந்த ஓவியத்தைக் கண்ட ஒரு கிழவன் சொன்னான்

“இனி அவன் திருட மாட்டான்.“

ஏன் என்று பலரும் கேட்டார்கள். தனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்படித் தோன்றுகிறது என்றான் கிழவன்

கிழவன் சொன்னது போலவே  அதன் பிறகு திருடன் எங்கேயும் திருடவேயில்லை. எந்த வீட்டிலும் அவன் ஓவியம் வரையவுமில்லை.

ஏன் பேரழகான ஓவியத்தைப் பாதியில் நிறுத்தினான் என்றோ, யார் அந்தத் திருடன் என்றோ கடைசி வரை ஒருவருக்கும் தெரியவில்லை.

சில விசித்திரங்கள் கடைசிவரை புதிராகவே மிஞ்சிவிடுகின்றன. திருடனும் அப்படியே மாறிப்போனான்.

••

04.05.20

0Shares
0