கல்கத்தாவிலிருந்து அந்தக் கால்பந்தை வாங்கி வந்திருந்தார் மாமா. கதிருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. எப்போது விடியும் எப்போது மைதானத்திற்குக் கொண்டு போய் விளையாடலாம் என இரவெல்லாம் காத்துக் கொண்டிருந்தான். சேலஞ்ச் என்று எழுதப்பட்ட ஆரஞ்சு நிறப் பந்து. அது போன்ற ஒன்று யாரிடமும் கிடையாது. அந்தப் பெருமையோடு அதிகாலையில் மைதானத்தை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான்.
காந்தி மைதானம் மிகப்பெரியது. அதன் மேற்கு பக்கம் எப்போதும் பெரிய பையன்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். போட்டிகள் கூட அங்கே நடப்பதுண்டு. அதை வேடிக்கை பார்க்க கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. தனது ஆரஞ்சு வண்ணப்பந்தோடு கேலரியின் இரண்டாம் வரிசையில் போய்க் கதிர் உட்கார்ந்து கொண்டான். அவன் வயது பையன்கள் இன்னும் மைதானத்திற்கு வரவில்லை.
சிகரெட் பிடிப்பதற்காக ஒரு அண்ணன் மட்டும் தனியே அமர்ந்திருந்தார்.
திடீரென ஒரு சப்தம் கேட்டது
“புதுப்பந்தா..“
யார் கேட்கிறார்கள் என அறியாமல் கதிர் திரும்பிப் பார்த்த போது பச்சை நிற பனியன் அணிந்த முத்துராமன் நின்றிருந்தார்
ஆமாம் என்று கதிர் தலையாட்டினான்.
“தூக்கி போடு எப்படியிருக்குனு பாக்குறேன்“ என்றார் முத்து ராமன்
“புதுப்பந்து. நான் தரமாட்டேன்“ என்றான் கதிர்
“சும்மா போடுறா.. ஒரு கிக் பண்ணி பாத்துட்டு தர்றேன்“ என்றார் முத்துராமன்
தராமல் போனால் அடிப்பாரோ என்று பயந்த கதிர் பந்தைத் தூக்கிப்போட்டான். அவர் உருண்டோடிய பந்தை நோக்கிச் சென்று காலால் ஓங்கி ஒரு உதை கொடுத்தார். பறந்து சைக்கிள் ஸ்டாண்ட் பக்கம் போய் விழுந்தது. அங்கேயிருந்த இன்னொருவன் அதைக் காலால் வேகமாக எத்தினான். பந்து மேற்கு திசைநோக்கி பறந்தது.
கதிர் என் பந்து என் பந்து சப்தமிட்டபடியே ஓடினான். யார் யாரோ அவன் பந்தை எட்டி உதைக்க ஆரம்பித்தார்கள். மைதானத்திற்கு விளம்பிற்குக் கொண்டு போய் உதைத்து விளையாட ஆரம்பித்தார்கள். ஓங்கி ஒங்கி அவர்கள் பந்தை எத்துவதைக் கதிரால் தாங்கமுடியவில்லை. அவன் வீட்டுக்குப் போகணும் பந்தை குடுங்க என்று கத்தினான். யாரோ அதைக்கேட்டுச் சிரித்தார்கள்.
கால் மாறி கால்மாறி பந்து உருண்டோடிக் கொண்டேயிருந்தது. எவ்வளவு கேட்டும் எவ்வளவோ கெஞ்சியும் பந்தைப் பெற முடியவில்லை. ஆத்திரத்தில் ஒரு கல்லை எடுத்து விளையாடுகிறவர்கள் மீது எறிந்தான் கதிர்.
“கல்லைவிட்டு அடிக்கியா.. உனக்குப் பந்து கிடையாது போடா“ என்று ஒரு அண்ணன் கத்தியபடியே பந்தை ஓங்கி உதைத்தான்.
கதிர் கைக்குப் பந்து வரவேயில்லை. காலை ஆறரை மணிக்குக் கையை விட்டுப் போன பந்து வெயிலேறி பத்து மணியாகிய போதும் கிடைக்கவேயில்லை. பசியும் அழுகையுமாகக் கதிர் மைதானத்தில் நின்றிருந்தான்.
சுப்பு என்ற அண்ணன் ஓங்கி எத்தியதில் பந்து பறந்து மைதானத்தின் பின்னுள்ள சேப்பங்குளத்தில் போய் விழுந்தது. குப்பையும் கழிவுப்பொருளுமாகக் கிடக்கும் அந்தக் குளத்தருகே யாரும் போக மாட்டார்கள். ஒருமுறை அதில் பன்றி செத்து மிதந்தை கதிரே கண்டிருக்கிறான். குளத்தில் நாற்றம் தாங்க முடியாது. கொசுக்கள் அப்பிக் கொண்டிருக்கும்.
“பந்து வேணும்னா சேப்பங்குளத்துல இறங்கு “என்று கேலி செய்தபடியே தன் சைக்கிளை நோக்கிப் போனான் சுப்பு.
புதுப்பந்தை ஒரு முறை காலால் எத்தி கூட விளையாடவில்லை. ஆனால் இப்படிச் சேப்பங்குளத்தில் போய் விழுந்துவிட்டதே என்று கதிர் ஏங்கி அழுதான். பந்தை எப்படி எடுப்பது எனத்தெரியாமல் அழுகையோடு வீடு போய்ச் சேர்ந்தான்.
அம்மா அவனைத் தான் திட்டினாள். மாமா வெளியே போயிருப்பதாகவும் வந்தவுடன் பந்தை எடுக்கலாம் என்றாள். மதியச்சாப்பாடு நேரம் மாமா திரும்பி வந்தார். நடந்ததைச் சொன்னதும் அவரும் கதிரை தான் கோவித்துக் கொண்டார். பிறகு அவனைச் சைக்கிளை உட்கார வைத்துச் சேப்பங்குளத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். குச்சியை வைத்து எடுக்க முயன்றால் பந்து தண்ணீரில் மிதந்து போய்க் கொண்டேயிருந்தது. ஆள் உள்ளே இறங்க முடியாது. எவ்வளவு முயன்றும் அந்தப் பந்தை எடுக்க முடியவில்லை. அப்படியே போய்த் தொலையட்டும் என்று மாமா சலித்துக் கொண்டபடி அவனை வீட்டிற்கு அழைத்து வந்தார். கதிரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை.
பந்து கைவிட்டுப் போன வருத்தத்தை விடவும் தான் ஏன் சிறுவனாக இருக்கிறேன் என்பதை நினைத்துத் தான் கதிர் அதிகமாக அழுதான்.
