லேர்மன்தேவ் என்ற ரஷ்ய தொலைக்காட்சிக்காக உருவாக்கபட்ட திரைப்படத்தைப் பார்த்தேன். மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப்படம்.
மிகையில் லேர்மன்தேவ்(Mikhail Lermontov) எழுதிய நம் காலத்து நாயகன் (A Hero of Our Time) படித்திருக்கிறீர்களா. ரஷ்ய நாவல்களில் மிகவும் தனித்துவமானது.
லேர்மன்தேவ் ரஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞர். ஒரேயொரு நாவல் தான் எழுதியிருக்கிறார். சில நாடகங்களையும் ஐந்து கவிதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். தனது 27வது வயதில் Duel எனப்படும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் லேர்மன்தேவ். புஷ்கினை தனது ஆதர்சமாகக் கொண்ட லேர்மன்தேவ் அவரைப் போலவே நேருக்கு நேராக நின்று துப்பாக்கி சுடும் சவாலில் இறந்து போனது துரதிருஷ்டமே.
லேர்மன்தேவ்வின் ஆதர்சம் அவரது அம்மா. தந்தை மிகவும் கண்டிப்பானர். அம்மாவின் அரவணைப்பிற்குள்ளாகவே வளர்ந்தவர். அம்மா தினமும் அவருக்குக் கதைகள் சொல்லுவார். பாட்டுப் பாடுவார்.
தான் கவிதைகள் எழுதுவதற்காக உந்துதல் அம்மா வழியே தான் கிடைத்தது என்கிறார் லேர்மன்தேவ். அம்மா இறந்தபிறகு அப்பா அவரைப் பாட்டி வசம் ஒப்படைத்துவிட்டுப் பிரிந்து போனார்.
பாட்டி மிகவும் வசதியானவர். ஆகவே லேர்மன்தேவின் பால்ய காலம் இனிமையாகக் கழிந்தது. லேர்மன்தேவின் தந்தை தனது மகனைக் கூட்டிக் கொண்டு போய்விடுவாரோ என்று பயந்து அவரது பாட்டி தனது சொத்து முழுவதையும் லேர்மன்தேவின் மீது உயில் எழுதி வைத்தார். ஒரே நிபந்தனை. அவர் எந்தச் சூழலிலும் தந்தையிடம் போககூடாது என்பதே.
பாட்டியின் வீட்டில் வளர்ந்த லேர்மன்தேவ் இசையிலும் நடனத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். பத்து வயதில் திடீரென அவருக்கு உடல்நலமற்றுப் போனது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து சிகிச்சை கொடுத்தாலும் குணமடையவில்லை. ஒரு ஜெர்மனி வைத்தியர் வருகை தந்து உணவு முறையை மாற்றியதோடு அவரை இயற்கையான சூழலுக்கு இடம்பெற வேண்டும் என்று காகசஸ் மலைப்பகுதிக்குப் போகச்சொன்னார். இயற்கை தான் லேர்மன்தேவை குணப்படுத்தியது.
தனது முதற்காதல் பனிரெண்டு வயதிலே துவங்கிவிட்டது. அழகான சிறுமி ஒருத்தியைக் காதலித்தேன் என்கிறார் லேர்மன்தேவ். அவளை மகிழ்ச்சிப்படுத்தத் தான் பாடியதாகவும் அவளுக்காகவே மலர்களைப் பறித்துக் கொண்டு காத்திருந்ததாகவும் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார்
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உந்தவே லேர்மன்தேவ் பாட்டியிடம் விடைபெற்று ராணுவ பயிற்சி கல்லூரிக்குச் சென்றார். அங்கே வாள் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடுவதில் முதலிடத்தில் வெற்றி பெற்றார். ஆகவே ராணுவத்தில் எளிதாக உயர் பதவி கிடைத்தது. வசதியான வீடு. வேலையாட்கள். அதிகாரம் என வாழ்ந்த லேர்மன்தேவ் ஒரு விருந்தில் யெகாடெரினா சுஷ்கோவா என்ற அழகியைச் சந்தித்தார்.
அவர் வாசித்த கவிதைகளைக் கேட்டு அவள் வியந்து பாராட்டினாள். அவள் மீதான காதலால் அவளைத் தனியே சந்தித்து உரையாட விரும்பினார். அந்தச் சந்திப்பில் யெகாடெரினா அவரைக் கேலி செய்வது போலப் பேசவே அவர் கோபமுற்று விலகிப் போனார்.
அதீதமான கோபம் கொண்ட லேர்மன்தேவ் தனது நண்பர்களிடம் கூடச் சண்டையிட்டார். சில நேரம் இந்தச் சண்டை பகையாக மாறியது. அலெக்சி மட்டுமே அவரைப் புரிந்து கொண்ட தோழனாக இருந்தார்.
புஷ்கின் இறந்த போது லேர்மன்தேவ் எழுதிய கவிதை நாடெங்கும் வாசிக்கப்பட்டுப் புகழ்பெற்றது. அதே நேரம் அவர் போதையில் எழுதிய The Call for the Revolution” கவிதை மன்னரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அரசிற்கு எதிரான கவிதையாக முன்னிறுத்தப்பட்டது. இதன் காரணமாக லேர்மன்தேவ் கைது செய்யப்பட்டதுடன் பதவி மாற்றப்பட்டுப் பெட்ரோபாவ்லோவ்ஸ்கயா கோட்டை முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்தப் பயண வழியில் லேர்மன்தேவ் நோயுற்றார். சில மாதங்கள் ஓய்விலிருந்தார். இரண்டு ஆண்டுகள் எளிய பதவி வகித்த பிறகு பாட்டியின் முயற்சியால் அவருக்கு உரிய பதவி கிடைத்தது.
பாட்டி மாதம் ஆயிரம் ரூபிள் அவரது செலவிற்கு அனுப்பி வைத்தார். குதிரைகள் வாங்குவது தான் லேர்மன்தேவின் விருப்பம். ஆகவே மிகப்பெரிய விலை கொடுத்து அழகிய குதிரைகளை வாங்கித் தனது லாயத்தில் வைத்திருந்தார்
பதினாறு வயதில் வர்வரா லோபுகினாவை என்ற இளம் பெண்ணைக் காதலித்தார். அவளுடன் நெருக்கமாக இருந்தார். அவள் திருமணம் செய்து கொள்ளத் தயாரான நேரத்திலே லேர்மன்தேவ் காரணமேயில்லாமல் அதை ஒரு கடிதம் மூலம் தடுத்து நிறுத்தினார். அந்த ஆத்திரத்தில் அவள் நிகோலாய் பக்மதியேவ் என்ற பிரபுவைத் திருமணம் செய்து கொண்டாள். அந்தத் திருமணம் லேர்மன்தேவை மிகவும் மனவருத்தமடைய வைத்தது. அவள் மீதான காதலை அவரால் விலக்க முடியவேயில்லை. அந்த துயரமே அவரை பிச்சோரின் என்ற நாயகனை உருவாக்க வைத்தது.
1838ல், லேர்மன்தேவ் புதிய படைப்பிரிவில் சேர நோவ்கோரோட் வந்தார் .
அப்போது தான் நம் காலத்து நாயகன் நாவலின் முதற்பகுதியை எழுத ஆரம்பித்தார். ஐந்து பகுதிகளாக உள்ள இந்த நாவல் பிச்சோரின் என்ற இளைஞனின் காதலைப் பற்றியது. ரஷ்ய இலக்கியத்தில் பிச்சோரின் மறக்கமுடியாத கதாபாத்திரம். இந்நாவலை ஆங்கிலத்தில் நபகோவ் மொழியாக்கம் செய்திருக்கிறார். அற்புதமான மொழியாக்கம்.
லேர்மன்தேவ் ராணுவ விருந்து ஒன்றில் சக அதிகாரியான மார்டினோவை இரக்கமின்றிக் கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமான மார்டினோ துப்பாக்கி சண்டைக்குச் சவால் விடுத்தார். இதன் இரண்டு நாட்களுக்குப் பிறகு மாஷுக் மலையின் அடிவாரத்தில் சண்டை நடந்தது. லேர்மன்தேவ் அப்போது மனக்குழப்பத்துடன் இருந்தார். மார்டினோவ் தான் முதலில் துப்பாக்கியை உயர்த்திச் சுட்டார். தோட்டா லேர்மன்தேவ் நேராக இதயத்தைக் குறிவைத்துப் பாய்ந்தது. அதே இடத்தில் இறந்து லேர்மன்தேவ் இறந்து போனார்.
புஷ்கினைப் போல தேசமே கொண்டாடும் கவியாக வர வேண்டும் என்று விரும்பிய லேர்மன்தேவ் புஷ்கினின் வாரிசாகவே இன்று கொண்டாடப்படுகிறார்.
லேர்மன்தேவ் திரைப்படம் அழகான கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. லேர்மன்தேவாக நடித்துள்ள Nikolay Burlyaev சிறப்பாக நடித்திருக்கிறார். தொலைக்காட்சித் திரைப்படத்தை எவ்வளவு நேர்த்தியாக, கவித்துவமாக இயக்கியிருக்கிறார்கள் என்று வியந்து போனேன்.
நம் காலத்து நாயகன் நாவல் பூ. சோமசுந்தரம் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகியுள்ளது.
••
08.05.20
