தேசமெனும் குடும்பம்

சிங்கப்பூரின் வரலாற்றை மையமாகக் கொண்ட உருவாக்கபட்ட  Long Long Time Ago என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Jack Neo இயக்கிய இந்தப் படம் இரண்டு பகுதிகளாக உருவாக்கபட்டுள்ளது. 2016ல் வெளியான இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளது.

சீனக்குடும்பம் ஒன்றின் கதையைப் படம் விவரிக்கிறது. அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளின வழியே தேசத்தின் முக்கிய நிகழ்வுகளை அடையாளப்படுத்துகிறார்கள்.

1965ம் ஆண்டு ஜாவ் டி (Zhao di) என்ற கர்ப்பிணிப் பெண்  கணவரின் மூத்தமனைவியால்  துரத்தப்படவே தனது பெற்றோரிடம்  அடைக்கலமாகிறாள். வெறும் கையோடு வந்து நிற்கும் அவளை ஏற்கமுடியாது என குடும்பத்தினர் துரத்துகிறார்கள். தனக்குக்  குழந்தை பிறக்கும் வரை மட்டும் தங்க இடம் கொடுத்தால் போதும் நானும்  எனது பிள்ளைகளும் போய்விடுகிறோம் என மன்றாடுகிறாள். வீட்டில் இடமில்லை. ஆகவே அனுமதிக்க முடியாது என அவளது இரண்டாவது மற்றும் மூன்றாவது சகோதரர்கள் மறுக்கிறார்கள். சமையல் அறையின் மூலையில் தங்கிக்  கொள்கிறேன் என்கிறாள். அதைக் கூட ஏற்க மறுக்கிறார்கள்.

என்ன செய்வது எனத் தெரியாத பதற்றத்தில் அவளுக்குப் பிரசவ வலி ஏற்படுகிறது. இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று பெண் குழந்தை மற்றொன்று ஆண் குழந்தை. ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதால் இது வேறு எதற்குச் சுமை என கண்ணீர் விடுகிறாள்.

ஆண் குழந்தையின் பிறப்பை மட்டுமே குடும்பத்தினர் கொண்டாடுகிறார்கள். அத்துடன் மச்சத்துடன் பிறந்த பெண் குழந்தை துரதிருஷ்டமானது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது, யாருக்காவது தத்துக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்கள். வேறு வழியின்றி பெண் குழந்தையை வசதியான ஒரு குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கிறாள்.

பிழைப்பிற்கு வழி தெரியாமல் நிற்கும் போது சோயா பால் விற்பனை செய்யலாம் என ஆலோசனை சொல்லி உதவி செய்கிறான் உஸ்மான் என்ற மலாய் உணவு விற்பனையாளன்.

சோயா பால் தயாரித்து விற்க ஆரம்பிக்கிறாள். முறையான அனுமதி இல்லாமல் சிறுவணிகம் செய்யக்கூடாது என அரசு அலுவலர்கள் தடுக்கிறார்கள். கடையைச் சூறையாடுகிறார்கள்.

உஸ்மானின் உதவியோடு அவள் கொஞ்சம் கொஞ்சமாக சோயா பால் விற்பனையை அதிகரிக்கிறாள். புதிய வாடிக்கையாளர்கள் உருவாகிறார்கள்.  இந்நிலையில் சிங்கப்பூர் முழுவதும் மக்கள் பதிவேட்டுப் பணி நடைபெறுகிறது. அதில் குடும்பமே பதிவு செய்து கொள்கிறார்கள்.

1967ல் தேர்தல் வருகிறது. தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு நடைபெறுகிறது. அந்தக் காட்சியில் பெண்களுக்கான வாக்குரிமை பற்றி ஜாவ் பேசுவது முக்கியமான விஷயம்.  கட்டாய ராணுவ சேவையின் பொருட்டு லிம் என்ற அவளது இளைய சகோதரன் தேர்வு செய்யப்பட்டு ராணுவப் பயிற்சி பெறுகிறான். ராணுவத் தேர்வின் போது தமிழர்கள். சீனர்கள் என பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

காலம் மாறுகிறது. சிங்கப்பூர் தொழில்நகரமாக வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. சந்தையில் சிறுவணிகம் செய்கிறவர்களை பாதுகாக்க தண்டல் வசூலிக்கும் கும்பல் ஒன்று உருவாகிறது. அவர்கள் ஜாவ் டி கடையில் கட்டாய வசூல்  செய்கிறார்கள். கடன் வாங்கிய ஜாவ் டியின் சகோதரனை வீடு தேடி வந்து மிரட்டுகிறார்கள். அந்த கும்பலுக்கும் காவலர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. அதில் கும்பலின் தலைவனை ஜாவ் டி தன் வீட்டில் ஒளித்து வைத்து காப்பாற்றுகிறாள்.

ராணுவ சேவையிலிருந்து திரும்பி வரும் ஜாவின் சகோதரனை உஸ்மான் வரவேற்று மலாய் உணவினை ஆசையோடு தரும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது.

சிங்கப்பூரில் பெரிய தொழிற்சாலைகள் துவங்கப்படுகின்றன. உஸ்மானும் ஜாவ் டியும் இணைந்து ஒரு தொழிற்சாலையில் உணவகம் துவங்குகிறார்கள். அவளது சகோதரன் தொடர்ந்து சூதாடி கடனாளியாகிறான். அடிக்கடி பணம் கேட்டு ஜாவ் டியை தொந்தரவு கொடுக்கிறான். அவன் டாக்சி வாங்கப் பணம் தருகிறாள் ஜாவ் டி. இதற்கிடையில்  இனக்கலவரம் ஏற்படுகிறது. அதனால் உயிருக்குப் பயந்து தப்பியோடுகிறார்கள். முடிவில் இனக்கலவரம் அடக்கபட்டு சமாதானம் ஏற்படுகிறது

புதிய வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். இப்போது பெருமழையால் வெள்ளம் ஏற்படுகிறது. அதில் மாட்டிக் கொண்டு குடும்பமே அல்லாடுகிறது. பெரும் போராட்டத்தின் பின்பு மீட்கப்படுகிறார்கள்.

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகின்றன. தோட்டத்து வீட்டில் வாழ்ந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்பிற்கு மாறுகிறார்கள். முதற்பகுதி அத்தோடு நிறைவு பெறுகிறது.

சிங்கப்பூரின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை படம் நுட்பமாகச் சித்தரிக்கிறது. பன்மைத்துவம் நிறைந்த நாடாக சிங்கப்பூர் எவ்வாறு தொடர்ந்து இருக்கிறது என்பதையும் அழகாக விளக்குகிறார்கள்.

ஜாவ் டியின் கதையும் தேசத்தின் கதையும் ஒன்று தான். இருவரும் கடுமையாகப் போராடியே தனது வளர்ச்சியை, தனக்கான இடத்தை ஏற்படுத்துகிறார்கள்.

ஆவணப்படத்தினைப் போலவே கடந்தகால சாட்சியமாக உள்ள அரிய புகைப்படங்கள். தரவுகளைப் படம் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

படத்தில் சண்முகன் என்ற  தமிழ் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கிறது. ஒன்றிரண்டு தமிழ் வசனங்களும் உள்ளன. படத்தின் இறுதியில் தமிழ் பெண்ணுக்கும் சீன இளைஞனுக்குமான காதல் துவங்குகிறது.

Zhao di யின் கதை நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரான Pearl.S.Buck நாவலின் நாயகியை நினைவுபடுத்துகிறது. சீனக்குடும்பங்களில் உள்ள மரபான நம்பிக்கைகள். சடங்குகள். சூதாட்டத்தில் ஆர்வம். வணிகத்தில் சீனர்கள் காட்டும் அக்கறை. கடின உழைப்பு என ஒரு தளத்தில் சீன சமூகம் எவ்வாறு சிங்கப்பூரில் நிலை கொண்டது என்பதன் சாட்சியம் போலவும் உள்ளது.

••

0Shares
0