ஒரே மனிதன்

தி. சுபாஷிணி அவர்கள் காந்தி கல்வி நிலையத்தில் நடைபெற்ற புத்தக விமர்சனக் கூட்டம் ஒன்றினைக் குறித்து 2011ல்  இந்தப் பதிவினை எழுதியிருக்கிறார். அதை மீள்பதிவு செய்திருக்கிறேன்

••

வெங்கட் நாராயண சாலையில் தக்கர்பாபா தொழில் நுட்பப் பள்ளி வளாகத்தினுள் “காந்தி கல்வி நிலையம் உள்ளது..  இந்த கல்வி நிலையம் கடந்த 40 வருடங்களாக அங்கு செயல்பட்டு வருகின்றது. இங்கே ஒவ்வொரு புதன் மாலை 6.45க்கு தொடங்கி, 7.30 வரை ஒரு நூலைப் படித்துவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என “புதன் கிழமை புத்தக விமர்சன வட்டம்” தொடங்கி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வருகின்றது.

திரு. மணி அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர்தான் இன்றைய நூல் விமர்சகர். ஜான் ஹாவார்டு கிரிஃபின் எழுதிய “ப்ளாக் லைக் மீ” (BLACK LIKE ME) என்னும் ஆங்கிலப் புத்தகத்தை தெரிந்தெடுத்திருந்தார். இந்நூல் அவரது மகனுக்கு (அமெரிக்காவில்) துணைப் பாட நூலாக இருந்திருக்கின்றது. இதை இவர் படித்தவுடன் உடனே இங்குப் பகிர வேண்டும் என்று எண்ணியிருக்கிறார். இது 1957 ஆம் ஆண்டு வெளியான நூல்.

ஜான் ஹாவர்டு கிரிஃபின் ஒரு அமெரிக்கர். அமெரிக்காவில் ஒரு இதழில் பத்திரிகையாளராக இருக்கிறார், நாவலாசிரியரும் கூட.

1957 ஆம் வருடம். ஒரு கறுப்பரை 4 வெள்ளையர்கள் அடித்துத் துன்புறுத்தினர். ஆனால் சட்டம் கறுப்பருக்குச் சாதகமாக இல்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்ட கிரிஃபின், மிகவும் சங்கடப் பட்டார். அக்காலத்தில் அமெரிக்காவில் ‘கருப்பு வெள்ளை’ நிற வெறி நிலவியிருந்தது கருப்பு என்றுமே அடிமைச் சங்கிலியில் பிணைக்கப் பட்டு இருந்தது. கல்வி, சுகாதாரம் போன்றவை மறுக்கப் பட்ட காலம். கிரிஃபினுக்கு, “கருப்பு நிறம் என்பதால் மனித நேயத்திற்குத் தகுதியில்லாதது என்றும், அவர்கள் வாழவே அருகதை இல்லாதவர்கள் என்றும், என்றும் வெள்ளையருக்கு அடிமை என்பது போன்ற எண்ணங்களை வெள்ளையர்கள் தாம் பிறக்கும் போதே பார்த்து வளர்க்கின்றனர்” என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகிறது. இந்த அடிமைத் தனத்தை அவர்கள் எவ்வாறு நேர் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினார் கிரிஃபின். எனவே ‘நீக்ரோ’ இனத்தவருடன் நீக்ரோவாக இருக்கத் திட்டமிட்டார். கிரிஃபின் வெள்ளையர். எனவே தன் நிறத்தை மாற்ற முதலில் எண்ணினார். இதன் முதற்படியாக தோல் மருத்துவரிடம் சென்று தன் நிறத்தைக் கருப்பாக மாற்ற இயலுமா என வினவினார். அம் மருத்துவர் தன் வேறு சில மருத்துவ நண்பர்களோடு இணைந்து இவரது தோலை கருப்பாக மாற்ற ஒப்புக் கொண்டார். உடலில் வெளியில் தெரியும் பாகம் மட்டும் கருப்பாக மாற்ற முடிவுசெய்து, ஒரு சில சாயங்களைத் தயாரித்து, அவரைக் கருப்பாக மாற்றினார். அலர்ஜி ஏற்படாமலிருக்க மாத்திரைகளும் கொடுத்தனர்.

கிரிஃபின் இப்போது ஒரு கறுப்பர். நேற்றுவரை அவர் எந்த எந்த இடங்களுக்குப் போனாரோ அங்கெல்லாம் சென்றார். எல்லோரும் இவரைக் கறுப்பர் என்றே நம்பினார். வெள்ளையரை அனுமதிக்கும் எந்த உணவு விடுதியும் இவரை அனுமதிக்கவில்லை. நேற்று வரை தங்கிய விடுதிக்கும் இவர் செல்ல முடியாது. என்ன செய்வது என்று புரியவில்லை. அந்த விடுதி வாயிலில் அமர்ந்திருந்த நீக்ரோ ஷூ பாலிஷ் போடுபவனுடன் இவரும் அமர்ந்து கொண்டார். அவர்கள் தங்கும் இடத்தில் இவர் தங்கினார். “பொதுக் கழிப்பிடம்” 2ம் கறுப்பருக்கென்று தனியாக கட்டி விடப்பட்டு இருக்கின்றது. ஒரு நிறத்திற்கு இத்துணை வெறுப்பு இருக்குமா? என்று எண்ணி எண்ணி மாய்ந்து போகிறார். மெது மெதுவாக கறுப்பர்களிடம் பழகுகிறார். மார்ட்டின் லூதர் கிங் பேசும் கூட்டங்களுக்குச் சென்று, அங்கு கேட்கவரும் கறுப்பு இனத்தவரின் உணர்வுகளைக் கவனிக்கிறார். அவர்களுடன் உரையாடுகிறார். தாங்கள் வெள்ளையர்களோடு போட்டி போட முடியாது. தகுதியில்லையென்றே எண்ணியிருந்திருக்கிறார்கள். கறுப்பர்களுக்கு என்று அமெரிக்காவில் தெற்குப் பக்கத்தை ஒதுக்கி வைத்திருந்தனர். வெள்ளையரின் மனப்பாங்கு, கறுப்பர்களை நடத்தும் விதம் ஆகியவற்றைக் கவனிக்கும் போது நம் நாட்டில் ஹரிசனங்களை சாதி இந்துக்கள் நடத்திய விதம் நினைவிற்கு வருகிறது.

தற்போது கிரிஃபின் ஒரு கறுப்பர். அவர் ஒரு பஸ்ஸில் ஏறிப் பயணம் செய்கிறார். இந்த பஸ் பயணம் பலவித அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறது. எந்தக் கறுப்பருக்கும் அவர் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் பஸ் நிற்காது. டிரைவர் விருப்பப் படும் இடத்தில் தான் இறங்க வேண்டும். ‘ஒரு கறுப்பன் சொல்லி நாம் கேட்பதா?’ இந்த எண்ணப் பாங்கு அவன் வளரும் போதே வளர்கின்றது. நீண்ட பயணத்தில் நீக்ரோவிற்கு ‘டாய்லட்’ செல்ல வேண்டும் என்றால் பஸ் நிற்காது. கறுப்பர்களுக்குத் தனி பகுதி. வெள்ளையர்க்குத் தனிப்பகுதி. இதெல்லாம் கவனிக்க கவனிக்க கிரிஃபின் உடைய மனம் கலங்குகிறது.

தன்னால் என்ன செய்ய இயலும் என்று யோசிக்கிறார்! ஒரு முறை வெள்ளைக்காரர்கள் கிரிஃபினுக்கு தன் காரில் இடம் கொடுக்கின்றனர். இவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இவருக்கு இடம் கொடுத்ததோ இவரை மனம் வதைத்து அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் என்று புரிந்தது. ஆனால் அவருக்கு இறங்க முடியாது என்பதை சாதகமாக்கிக் கொண்டனர். “கறுப்பு இனப் பெண்கள் வெள்ளையரின் ஆசைகளை நிறைவேற்றுபவர்கள். தங்கள் வறுமைக்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாராய் இருப்பார்கள். உன் மனைவி உன் பெண் எல்லோரும் இப்படித்தான்” என்று இவரை கிண்டல் செய்து கேலி செய்து மனம் மகிழ்ந்தனர். இன்னொரு முறை 55 வயது வெள்ளையர், பேரன் பேத்தி பார்த்தவர். ஒரு கம்பெனியை நிர்வகிப்பவர். அவரது கம்பெனிக்கு வேலைக்கு அமர்த்தும் நீக்ரோக்கள் இவரது உடல் ஆசைகளை நிறைவேற்றியே ஆகவேண்டும். அப்புறம்தான் வேலை நியமனம் என்றார், கிரிஃபினிடம். அவரால் எப்படி இப்படி மனம் கூசாமல் கூறமுடிகிறது என்று வேதனைப்படுகிறார். ‘உன்னிடம் இதுதான்’ என்று சொல்லிச் சொல்லி நீக்ரோக்களை முன்னேற விடாது செய்தனர். நாளடைவில் அதையே இவர்கள் நம்பவும் தொடங்கி அவர்களது எண்ணத்தில், இரத்தத்தில் அது ஊறிப் போய் விட்டது என்கின்றார்.

கிரிஃபினின் ஒரு வெள்ளிக் கிழமை நேரம். அன்று வங்கி மூடிவிட்டது. இனி  திங்களன்று தான் திறக்கும். இம்மாதிரி சமயங்களில் அங்கு கடைகளில் செக்குகளை வாங்கிக் கொள்வார்களாம். அந்த எண்ணத்தில் இவர் கஷ்டம் இராது என்று எண்ணிவிட்டார். அப்போது இவரது கையில் டாலரே இல்லை. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குகிறார். பணமாகத் தர வேண்டாம். ‘செக்’ கைவைத்துக் கொண்டு பொருளாகத் தாருங்கள் என்று கெஞ்சுகிறார். அவரது நிறம் ‘கருப்பு’ என்பதால் மறுக்கப் படுகிறது. அலைந்து அலைந்து ஓய்ந்த போது, ஒரு கத்தோலிக்க சர்ச் நடத்தும் கடையில் இவரது ‘செக்’ மதிக்கப் படுகிறது. அன்று இவர் அடைந்த மன வேதனையைக் கடலில் கரைத்தாலும் கரையாது.

1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிலிருந்து இருபத்தைந்து வரை இந்த கறுப்பு நிற சோதனையை மேற் கொள்கிறார். பின் நிறத்தை மாற்றுகிறார். 1958 ஆம் வருடம் ஜனவரி 4லிலிருந்து ஏப்ரல் 15 வரை இதை நூலாக வடித்து வெளியிடுகிறார். தொலைக்காட்சியில், செய்தித்தாளிலும், நேர்காணல்கள் வெளிவந்தன.

இதற்கு முன் இவர்கள் வீட்டுக்கு வந்த நண்பர்கள், உறவினர்கள் இந்த புத்தகம் வெளி வந்த பின் வருவதில்லை. வெள்ளையர் இனத்திலிருந்து இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார் என்று நூலைப் பகிர்ந்து முடித்தார் திரு.மணி அவர்கள். நூல் ஆசிரியரின் மன நிலையில் நின்று, உணர்வுப் பூர்வமாகப் பகிர்தல் இருந்தது. நாங்களும் உணர்ச்சி மேலிட அமைதியாய் இருந்தோம்.

••

நன்றி

https://subashinitirumalai.blogspot.com/

Archives
Calendar
September 2020
M T W T F S S
« Aug    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Subscribe

Enter your email address: